இஸ்லாமியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – மனுஷ்ய புத்திரன்

தினமணி – ரம்ஜான் மலர் 2002விலிருந்து, நன்றிகளுடன்..

*

வாழை மரம் இல்லாத கல்யாண வீடா? 
மனுஷ்ய புத்திரன்

ஒவ்வொரு சமூகப் பிரிவிற்கும் அது சார்ந்த கலாசாரத் திரைகள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்தத் திரைகளினூடாகவே அச்சமூகப் பிரிவு தன்னையும் பிறரையும் இனம் கண்டு கொள்கிறது. கலாசாரத் தனித்துவங்களைப் பேணுவது, விட்டுக் கொடுப்பது, தளர்த்திக் கொள்வது அல்லது அவற்றிற்குக் காலத்திற்கேற்ப புதிய தளங்களை அமைத்துக் கொள்வது என்பதாகப் பண்பாட்டு இயக்கம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஏதேனும் ஒரு சமூகம் நீடித்திருக்க வேண்டுமெனில் அது தன் அடையாளங்களைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது அவ்வாறு பேணப்படுகிற விஷயங்கள் அச்சமூகத்தின் ஆன்மாவின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலேனும் உதவுகிறதா என்ற கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொள்வது. மதம் சார்ந்த பண்பாடுகள் பல சமயங்களில் ஒரு உலகளாவிய தன்மையைப் பெற முயற்சிக்கின்றன. ஆனால் இது சாத்தியமில்லை என்பது திரும்பத் திரும்ப சரித்திரத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இறை நம்பிக்கையும் பண்பாடும் ஒரே நேர்க்கோட்டில் செல்வதல்ல. வெவ்வேறு மத நம்பிக்கைகளை உடையவர்கள் ஒத்த பண்பாட்டு அடையாளங்களைப் பேணுவதும் ஒரே மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பண்பாட்டு நிலைகளை மேற்கொள்வதும் எதார்த்தமாகும். இவ்வாறு இருப்பதின் வாயிலாகவே பண்பாட்டு இயக்கம் வளர்ச்சியும் புதுமையும் கொள்கிறது.

தமிழக முஸ்லிம்களைப் பொருத்தவரை அவர்களது மத நம்பிக்கை எவ்வளவு ஆழமானதாக இருந்தபோதிலும் அவர்களது பண்பாட்டு வாழ்க்கை தமிழ் வேர்களோடு தொடர்புடையதாகவே இருந்து வந்திருக்கிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் சடங்குகள், குடும்ப உறவுகளில் அதிகாரப் படிநிலைகள், பிற கொடுக்கல் வாங்கல்கள் அனைத்திலும் தமிழ்க் கலாசாரம் என்று வரையறுக்கக்கூடிய ஒரு பண்பினைப் பெரும்பாலான இஸ்லாமியர்கள் பின்பற்றுகின்றனர். தீவிர மதப்பற்றாளர்களுக்கு அல்லது அடிப்படைவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களுக்கு இந்தப் பண்பாட்டுத் தளம் சில சமயங்களில் உவப்பானதாக இருப்பதில்லை. அவர்கள் எப்போதும் ஒரு தூய்மையான இஸ்லாமிய வாழ்க்கை முறைப் பண்பாட்டைக் கனவு காண்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் முஸ்லிம் கல்யாண வீடுகளில் வாழை மரம் வைக்கக்கூடாது என்று ஜமாத்தில் முடிவு செய்தார்கள். இது எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. வாழைமரம் இல்லாத கல்யாண வீட்டைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அதற்குப் பிறகு “சீரியல்’ பல்புகளால் வாழைமரம் வடிவமைக்கப்பட்டுக் கல்யாண வீடுகளில் ஜொலிப்பதைப் பார்த்தேன். அதே போல பெண்கள் சினிமாவுக்குப் போகக்கூடாது என்று ஜமாத்தில் முடிவு செய்தார்கள். கொஞ்ச நாளில் எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்து சேர்ந்தன.

முஸ்லிம் பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திவிடும் பழக்கம் இன்றும் எவ்வளவோ ஊர்களில் இருக்கிறது. பல சமயங்களில் மதரீதியான சட்ட திட்டங்களும் ஒழுக்க நெறிகளும் தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே வியாக்கியானம் செய்யப்பட்டு அவர்களின் அதிகார மண்டலங்களில் பிரயோகிக்கப்படுகின்றன. அவ்வாறு பிரயோகிப்பவர்கள் தங்களது சமூக வளர்ச்சிக்கு ஏதேனும் நன்மை செய்கிறோமா அல்லது தீங்கு இழைக்கிறோமா என்று கேட்டுக்கொள்வதே இல்லை. இன்று முஸ்லிம்கள் தங்களது அடையாளத்தைப் பாதுகாப்பது பற்றி, மதவாத வன்முறையை எதிர்கொள்வது பற்றிக் கவலையுடன் இருக்கிறார்கள்.

இதற்கு நிகராகவோ இதைவிடவோ அவர்கள் கவலைப்பட வேண்டிய விஷயம் தங்களது சமூகத்தைச் சேர்ந்த மனித வளத்தையும் அதன் படைப்பாற்றலையும் எவ்வாறு மேலும் சக்தி வாய்ந்ததாகவும் நவீன காலத்திற்குப் பொருந்துவதாகவும் மாற்றுவது என்பதுதான்.
இன்றளவும் இஸ்லாமிய மக்கள் பொதுக் கல்வியைப் பற்றி அக்கறையின்மையுடனே இருக்கிறார்கள். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவர்களைக் காட்டிலும் காலங்காலமாகப் பின் தங்கியிருந்த ஒடுக்கப்பட்டிருந்த சமூகப் பிரிவுகள் இன்று கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதில் தங்களது இடத்தைப் பெற்று வருகின்றன. ஆனால் பெரும்பாலான முஸ்லிம் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் பள்ளி இறுதி வகுப்பைக் கடப்பதே இல்லை. வர்த்தகம் அல்லது உடல் உழைப்புச் சார்ந்த தொழில்களை நோக்கியே அவர்கள் பெரிதும் தள்ளப்படுகின்றனர்.

பெண்களின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம். பெண்களைப் பொதுக்கல்விக்கு அனுப்புவது அவர்களது ஒழுக்கக் கேட்டிற்கு வழிவகுக்கும் என்று நம்புகிற பெற்றோர்கள் இன்னும் இருக்கிறார்கள். இது சமூகத்தின் ஒரு பாதியைக் குரூரமாகச் சிதைப்பதாகும். இவ்வாறு கல்வியை அலட்சியப்படுத்துவதால் பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் அவர்களது பங்களிப்பு பெரிதும் பலவீனப்படுகிறது. அவர்களது இடம் பின்னோக்கித் தள்ளப்படுகிறது. முஸ்லிம்களின் பாதுகாப்பு பற்றி ஆவேசமாகப் பேசும் எந்த மதத் தலைவரும் அரசியல்வாதியும் கல்வியின்மையால் அச்சமூக மக்கள் அடைகிற பாதுகாப்பின்மையைப் பற்றிப் பேசுவதில்லை.

இவ்வாறு பொதுக் கல்வியை விலக்குவதால் பொது நீரோட்டம் சார்ந்த எல்லா விஷயங்களிலிருந்தும் முஸ்லிம்கள் அந்நியப்படுகின்றனர். அவர்கள் பொது நீரோட்டம் சார்ந்த ஊடகங்களில் வேற்று மனிதர்களாகவும் வேடிக்கைப் பொருள்களாகவும் சித்தரிக்கப்படுவதைக் காணலாம். இதற்குள் ஒரு பண்பாட்டு அரசியல் இருக்கிறது என்றபோதும் இஸ்லாமியர்கள் அதற்கான தோற்றங்களை ஏற்படுத்தித் தருகிறார்கள் என்பது உண்மையே. ஏன் இன்றளவும் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த ஒருவர் ஒரு பொது நீரோட்டம் சார்ந்த ஊடகத்தை நடத்த முடியவில்லை? இஸ்லாமியப் பின்புலத்திலிருந்து வரும் பத்திரிகைகள் ஏன் இந்த அளவுக்குத் தமிழ்த் தன்மையை மொழி ரீதியாகவும் வெளிப்பாட்டு ரீதியாகவும் முற்றாக இழந்து அந்நியத்தன்மையைப் பேண வேண்டும்? கலை, இலக்கியங்களில் அவர்களது பங்களிப்பு இந்த அளவு பலவீனமாகப் போனதற்கு என்ன காரணம்?

இஸ்லாமியர்கள், நவீன உலகின் தேவைகளையும் அதன் இயங்கு முறைகளையும் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அவர்களைப் பொருத்தவரை இந்த உலகத்தைவிட மறு உலகம்தான் முக்கியம் என்ற கருத்தாக்கம் திரும்பத் திரும்பப் போதிக்கப்படுகிறது. மனிதர்கள் வாழக்கூடிய எல்லா உலகங்களும் முக்கியமானவைதான்.

இன்று உலகளாவிய நுகர்வு கலாசாரம் பரவிக்கிடக்கிறது. எந்தப் பண்பாடும் இதற்கு விதிவிலக்காக இல்லை.

நவீன உலகின் எல்லா நுகர்வுக் கலாசாரக் கூறுகளையும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நவீன வாழ்வியல் மதிப்பீடுகளையும் அது உருவாக்கும் தனிமனித சுதந்திரத்தையும் ஏற்க மறுக்கிறார்கள். இதன் மூலம் தங்களுடைய இருப்பிற்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள். கல்வி பொதுக் கலாசார நீரோட்டத்தோடு ஆரோக்கியமான கொடுக்கல் வாங்கல், கடவுள் நம்பிக்கையையும் மத அடிப்படைவாதத்தையும் பிரித்துப் பார்க்கும் நோக்கு ஆகியவை இருந்தால் மட்டுமே இஸ்லாமியர்கள் இன்றைய உலகத்தின் சவால்களை எதிர்கொள்ள முடியும். அவர்களது குழந்தைகள் நாளைய உலகின் சவால்களை எதிர்கொள்வார்கள்.

*

நன்றி : தினமணி, மனுஷ்யபுத்திரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s