கலைஞரும் நவீன தமிழ் இலக்கியமும்

இது இரண்டாவது பாகம் போலும்! ஏற்கனவே ‘திண்ணை’யில் ‘கருணாநிதியும் நவீன இலக்கியமும்’ எழுதிய நண்பர் தாஜ். இப்போது இந்த கட்டுரையையும் அனுப்பியிருக்கிறார். ம்…. கல்யாண சுமைகள் போய்விட்டால் கலாட்டா பண்ண ஆரம்பித்து விடுகிறார்கள்! யோவ், என்னை சும்மா இருக்க விடமாட்டாயா?

*

கலைஞரும் நவீன  தமிழ் இலக்கியமும்.
தாஜ்..

கொஞ்சம் பேசிவிடுகிறேன்…

ஜெயகாந்தனையும், சுஜாதாவையும் என் கல்லூரி பருவத்தில் வாசித்து ஓய்ந்த பிறகு, குறிப்பிட்ட சில வருடங்கள் வேறு திசைகளில் மும்முரமாகிவிட்டேன். ஆண்டுகள் கழித்து ராஜ நாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ வழியாக ஜானகிராமன், புதுமைப் பித்தன், க.நா.சு., மௌனி, நகுலன், சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், அம்பை, வெங்கட் சாமிநாதன் என்று கிளம்பி சிற்றிதழ்களில் சஞ்சாரம்செய்து இன்னும் சில சிகரங்களிடமும் வியந்து நவீன கவிதைகளையும், அப்படியான சிறுகதைகள், நாவல்களையும் அடையாளம் கண்டுகொண்டேன். அதன் அழகியல் வியாபகம் என்னை ஆட்டிப்படைத்ததை சொல்லி மாளாது! அதனூடான கவர்ச்சி, இன்னும் கூட என்னை வசீகரிக்கிறது!

சிற்றிதழ்களில் சஞ்சரித்ததாக குறிப்பிட்ட ‘அந்தக் காலகட்டம்’ கலைஞர் தன் அரசு கட்டிலில், உயர்ந்த ஸ்தானத்தில் அமர்ந்து நாட்டையும் மக்களையும் பரிபாலணம் செய்த காலக்கட்டம்! மஹா வேலைபளு கொண்ட அந்த தருணங்களிலும்கூட அவர் தனக்கு இஷ்டமான இலக்கிய கூறுகளுடன் தாராளமாக புழங்கினார்! தினைக்கும் எழுதுகிற முரசொலி கடிதம் போக, திருக்குறளுக்கு உரை, தன் வாழ்க்கை வரலாற்றைத் தொட்டுக்காட்டிய  நெஞ்சுக்கு நீதி,  திரையுலக சங்கதிகளாக திரைக்கதை – வசனம்,  மேலே  அவ்வப்போது நகர மேடைகளில் பட்டி மன்றத் தலைமை,  கவியரங்கத் தலைமை என்று வியக்கவைத்துக் கொண்டிருந்தார்!! அப்படி வியக்கவைத்த நேரங்களில், இடையிடையே நவீன தமிழ் ஆக்கங்களை, அதன் கீர்த்திகளை லேசாக பிறாண்டியும் வைப்பார். அந்த மேடைகளில், தமிழால் அவரை  அலங்கரித்துப் பார்க்கும் தமிழ்த்துறைச் சார்ந்த  வல்லுனர்களுக்கு கலைஞரின் இந்த வகைப் பிறாண்டல் இதம் தரக்கூடியது. பகுதி நேர வேலையாக அவர்கள் செய்யும் ஒன்றை, கலைஞர் பிறாண்டுவதில் மஹா ஆனந்தம்!  கலைஞரும் கூட, தன்னை அலங்கரிப்பவர்களின் மன சந்தோஷத்திற்கு வேண்டியும் அதை தட்டாது செய்யக் கூடியவறாக இருந்தார் என்பதும் உண்மை!

கலைஞரின் இந்த பிறாண்டலினால், முகம் சுழித்த நவீன இலக்கிய அனுதாபிகள் யார் யாரென எனக்குத் தெரியாது.  ஆனால், அதில் ஒருவனாக  நான் இருந்தேன்  என்பது மட்டும் நிச்சயம்! இந்த பிறாண்டலின் நீட்சி, விட்டுவிட்டு தொடர்ந்த நேரத்தில்… நவம்பர்-1992/ சுபமங்களா இதழில் கலைஞரின் நேர்காணல் வந்திருந்தது. அதில் ஒரு கேள்வியாக,  நவீன இலக்கியம் சார்ந்து அவரிடம் கேட்கப்பட்டது.  அதற்கான அவரது பதில், என்னை கூடுதலாக  யோசிக்க வைத்தது. வழக்கமாதிரி அவர் நவீன இலக்கியத்தைப் பிறாண்டியோ சாடியோ இருப்பாரேயானால்  நான் அந்த கேள்வி பதிலை தாண்டியிருப்பேன். மாறாய்,  ‘ஆங்கில கலப்பு கொண்ட நடையில் எழுதப்படும் ஆக்கங்களே நவீன இலக்கியம்!’ என்கிற தொனி அவரது பதிலில் மிகைத்திருக்கவே அப்படியோசிக்க வேண்டிதாகிவிட்டது. அப்படியானால்.. இத்தனைகாலமும் ஓர் தவறான புரிதலோடுதான் அவர் நவீன இலக்கியத்தை அனுகியிருக்கிறார்! சாடியிருக்கிறார்! கலைஞருக்கா இப்படியொரு சறுக்கல்? நம்பவே முடியவில்லை!!

இத்தனை காலமும் நவீன இலக்கியத்தை அவர் பிறாண்டி கொண்டிருந்ததற்கு பதில் செய்யும் சரியான தருணம் இதுவெனத் தோன்ற,  அவரது தவறான புரிதலை  முன்வைத்தும், அவரது நேர்காணலில் இலக்கியம் சார்ந்த சில நெருடலுக்குமாக பதில்எழுதினேன். டிசம்பர்-92/சுபமங்களா இதழில் அது பிரசுரம் ஆனது. அவருக்கு மறுப்பு எழுதினேன் என்றாலும்… அவரது ஆளுமையின், அனுபத்தின் கால்தூசுக்கு நான் சமமாக மாட்டேன் என்பது  அப்போதும் தெரியும்,  இப்போதும் தெரியும்.  நவீன இலக்கியத்தின் மீது கொண்ட நிஜமான ஈடுபாடு பொருட்டே அப்படி முனைந்தேன். இதையொட்டிய நிகழ்வாக, மேலிடத்திலிருந்து சிலர் எனக்கு மறுப்பு செய்தார்கள்.  இன்னொரு பக்கம் இலக்கிய சகாக்கள் என்னை தட்டியும் கொடுத்தார்கள்! சகாக்களில் வேறு சிலர் மிகுந்த உரிமையோடு, “அவரைப் போயி….! ஏய்யா உனக்கிந்த வீண் வேலை?” என்றார்கள்.

இதையெல்லாம் தாண்டிய நிகழ்வாக  நான் கருதுவது, அன்றுதொட்டு  கலைஞர்  நவீனஇலக்கியத்தை மறந்தும் துவேசிப்பதே இல்லை. இடைக்காலத்தில்  ‘நவீன இலக்கியத்தின் உலக மகா சக்தியும், நோபலுக்கான (ஜஸ்ட் மிஸ்டு!) ‘மகா காவியம்’ எழுதியவரும், தமிழ் நவீனத்தின் தந்தையும்/அத்தாரிட்டி மற்றும் டிக்டேட்டருமான திருவாளர் ஜெயமோகன், கலைஞரின் எழுத்து மீதும், அந்த எழுத்தை  மெச்சியவர்கள் மீதும் விழுந்து பிடித்து குதறியபோதும்கூட, கலைஞருக்கும்  அவரது சகபாடிகளுக்கும் ஜெயமோகன்தான் இலக்கானாரே தவிர, நவீன இலக்கியம் அங்கே இலக்காகவில்லை. மேலாய், கலைஞருக்கான என் மறுப்புக்கு பிறகு,  அவரது பக்கமிருந்தே  நவீன இலக்கியம் சார்ந்த விழுது  ஒன்று வீரியத்தோடு இறங்கி எல்லோரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது! கலைஞர் அதனைத் தடுக்கவில்லை, மாறாய் வரவேற்கவே செய்தார்! நவீனத்துவம் கொண்ட அந்த வீரியமிக்க விழுதின் பெயர் கனிமொழி!!

பதிவுக்காக பத்தொன்பது நினைவுகளுடன்… 

தாஜ்

***

தாஜின் சுபமங்களா (டிசம்பர் – 1992)  கடிதம் :

தமிழின் நவீன இலக்கியத்தோடு மு.கருணாநிதி அவர்களுக்கு தொடர்பு கிடையாது என்ற ஒரு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு மு.க. பதில் அளித்திருக்கிறார். பதில் யோசிக்கத் தகுந்தது.

தமிழ் சிறுகதைகளிலும் – நாவல்களிலும் இடைச்சொருகலாய் அதிகமான ஆங்கில கலப்பை சுட்டிக் காட்டியிருக்கிறார். அது நவீன இலக்கியம் என்றால்… அது மாதிரியான நவீன இலக்கியம் செய்யவில்லைதான் என்பதாக சொல்லி இருக்கிறார். சுட்டிக்காட்டியிருப்பது சரியே. இப்படிப்பட்ட கலப்பை, பல எழுத்தாளர்கள் அதீதமாய் செய்துகொண்டு  இருப்பதும் உண்மை. ஆனால் மு.க. அவர்களின் கூற்றுப்படி அப்படி எழுதும் எழுத்தை வைத்து, அந்த ஆக்கங்களை யாரும் நவீன இலக்கியம் என்பதாக சொல்வது கிடையாது.

நவீன இலக்கியம் பாசாங்கு அற்றது, பிரச்சாரமற்றது, அழகியலையும் – கலைநேர்த்தியையும் உள்ளடக்கியது. மொத்தத்தில் மொழியின் கீர்த்திக்கு பட்டைத் தீட்டிக் கொண்டே இருப்பது.

இப்படி ஒரு தன்மையில் மு.க. இலக்கியம் படைத்திருக்கிறாரா என்றால் ஒரு வரியில் இல்லை என்றிடலாம்.  என் எழுத்துக்களில்  தலைவைத்துப் படுக்காதவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அவர் சொன்னாலும், என் இல்லை… இல்லைதான். ஆனால் தமிழ் மொழிக்கு   அவர் ஆற்றிய தொண்டையும்,   அதன் கீர்த்திக்கு அவர், அவரது பாணியில் செம்மைப் படுத்தியதையும் இதன் பொருட்டு குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

தமிழின் நவீன இலக்கியத்திற்கு வித்திட்டவர்களின் பட்டியலில் திராவிட இயக்கங்களில் சார்பில் மு.க. நிச்சயம் உண்டு. அவரது ஆரம்பகால இலக்கிய ஈடுபாடுகளின்போது அவர் தன் பங்கிற்கு திரைக்கதை வசனம் என்கிற ஸ்தானத்தில் சினிமாவிலும் நாடகத்திலும் தன் திறைமையை காட்டியிருக்கிறார்.  தமிழை  பழமையில் இருந்து  குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு உந்தி முன்னே நகர்த்தி இருக்கிறார். தமிழ் சினிமா சமஸ்கிருதத்தை தமிழ் என்று நம்பிக் கிடந்தது போக, தமிழை முழுவதுமாய் பேச கற்றுக்கொண்டதற்கு காரமாணவர்களில் மு.க.வும் ஒருவர். மறுக்க முடியாது.

இந்த நிஜங்களுக்குப் பிறகும் அவரது சிறுகதைகள், சமூக – சரித்திர நாவல்கள் குறித்த என் மதிப்பீட்டை என்னால் மாற்றிக் கொள்ள இயலாது.

மு.க.வின் சிறுகதைகள் அவரது பிரச்சாரத்திற்கான களம் மட்டுமே. மிகையான எதுகை மோனை வர்ணனைகளே கதையை நடத்தும். நாவல்களும் அப்படித்தான்.  நாவல் என்பதற்காக கொசுறாய் பிரச்சாரமும், எதுகை மோனை வர்ணனைகளும் கொஞ்சம்தூக்கலாய் இருக்கும். அவரது சரித்திர நாவல்கள் குறித்து தனியாக எதுவும் சொல்லவேண்டி இருக்காது. ஒரு சின்ன உண்மைத் தடயத்தைப் பற்றிக்கொண்டு கல்கியும், சாண்டில்யனும் மிதந்து பறந்த கற்பனை உலகத்தில் மு.க.அவர்களும் தன்பங்கிற்கு அப்படி ஒரு வலம் வந்திருந்தார். அவ்வளவுதான்.

மு.க. அவர்களின் ‘குறளோவியம்’ குறித்து  இங்கே குறிப்பிடாமல் விடுவது சரியாக   இருக்காது.  அவரது ஆர்வமான பணிகளில் இதுவும் ஒன்று என பேசப்படுகிறது. ஆனால் குறளோவியத்தை எழுத அவர் கையாண்ட யுக்தி நினைவுகூறத் தக்கது.  குறளோவியத்தை குங்குமத்தில் வாரா வாரம் எழுதியபோது  அந்தந்த வாரத்து  அரசியல் நிகழ்வுகளில் தனக்கு சாதகமான அம்சங்களை பொழிப்புரையில் முதன்மைப்படுத்தி தனது குறளோவியத்தை தீட்டினார் என்பதை மறந்து விட இயலாது.

மு.க. தான் படைத்ததாக நம்பும் அவரது நவீன இலக்கியத்தை – இன்றைய – திறனான – நவீன இலக்கியம் சார்ந்த ஒரு வாசகன் – பத்து நிமிடம் நெளியாமல் வாசிக்கக்கூடுமென்றால்… அந்த வாசகனின் மனோவலிமையை என்னால் வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது.

தமிழில் நவீன இலக்கியத்திற்கு வித்திட்டவர்களில் திராவிட இயக்கங்களின் சார்பில் மு.க. அவர்கள் உண்டு என்பதை சொல்லி இருந்தேன்.  பிறகு ஏன் அவர்  குறிப்பிடத் தகுந்த நவீன இலக்கியம் செய்தார் இல்லை என யோசிக்கும் போதே, ஆரம்பக் கட்டத்திலேயே நவீன இலக்கிய ஈடுபாடுகளில் அவர் தடைப்பட்டுப் போனதும் அறிய முடிகிறது. இப்படி அவர் தடைப்பட்டு போனதற்கு என்ன காரணங்களாக இருக்கும் என யோசித்தால்… நியாயமான காரணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் தெரிய வருவதை அறிய முடிகிறது.

தமிழக அரசியல் இயக்கத்தில் மு.க.தன்னை தலைவராக தயார் பண்ணிக் கொண்டு இருந்தபோதும், பின் தலைவராக அவர் விளங்கிய போதும் அவர் தம் எழுத்து முழுக்கமுழுக்க சமூக சீர்திருத்தத்தையும் – பிரச்சாரத்தையுமே  கொண்டிருக்க வேண்டிய  ஒரு மறைமுக நிர்பந்தம்  அதற்கு இருந்து வந்ததை நாம் உணர முடியும். கொள்கை வயப்பட்ட பிரச்சார எழுத்து, இலக்கியத்தை பின்னுக்குத் தள்ளியது என்பதையும் நாம் உணரமுடியும்.

தமிழின் நவீன இலக்கியம், மேற்கத்திய நவீன இலக்கியங்களின் வீச்சால் இங்கே உதயமான மாற்றம் என அறியப்படுகிறது. மேற்கத்திய நவீனங்களில் முழுகி முத்துக்குளித்த நம்ம வர்கள், ஒருவித சுய ஆதங்கத்தில், தமிழின் தொன்றுதொட்ட இலக்கிய முகலட்சணத்தை மாற்றி அமைத்தார்கள் என்பதையும் நாம் அறிவோம். சம்பந்தப்பட்டவர்களிடம் வாய்த்த மேற்கத்திய பாஷையின் புலமையும் ஞானமும் நம் இலக்கிய மாற்றத்திற்கு பெரியதொரு காரணமென்றும் அறிகிறோம். அப்படி ஒரு புலமை – அப்படி  ஒரு ஞானம்  மேற்கத்திய பாஷையில் மு.க. அவர்களுக்கு சந்தர்ப்பவசத்தால் கைக்கூடாது போனது என்பதையும் நாம் அறிவோம். இந்த தடங்கள் கூட ஒரு காரணமென என்ன முடிகிறது.

இன்னொரு காரணத்தைக் கூட அழுத்தமாக சொல்லலாம். இந்தக் காரணம் ரொம்பவும் யதார்த்தமானது; சரி என்றும் நம்பக்கூடியது.

தமிழக அரசியலில் அவரது பங்கு மிகப்பெரியது. என்றாலும் தான் நம்பும் இலக்கியப்பணியில் ஈடுபடவும் செய்கிறார். தாண்டி, நவீன இலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபாடு கொள்வதற்கும், சிரத்தையோடு கவனம்செய்வதற்கும், அப்படி ஒருபடைப்பை படைப்பதற்கும் நேரமின்மை காரணமாகி இருக்கலாம். யதார்த்ததில் அவருக்கு இதற்கெல்லாம் நேரமில்லாமல் போய் இருக்கும் என்பதை நாம் நன்கு யூகிக்கவும் முடிகிறது.

மு.க., நவீன இலக்கியத்தோடு தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருப்பாரானால் சிகரத்தைத் தெடும் சில படைப்புகளை நமக்கு தந்திருக்கக் கூடும். நம்புவோம்.

நவீன இலக்கியமும், மு.க. அவர்களும் அன்னியப்பட்டு போனதற்கு சில காரணங்களை எட்டியவரை உணர்ந்து அடுக்கினோம். இதில் ஏதேனும் ஒன்றோ, அல்லது  அத்தனையும் சேர்ந்த ஒரு நிலைகூட காரணமாகி இருக்கலாம். அல்லது… மு.க. அந்த குறிப்பிட்ட பதிலில் தொனித்த இலக்கிய மயக்கம் கூட ஒரு காரணமாகலாம்.

மு.க. வாழ்கிற காலத்திலேயே இதை எழுதியதில் எனக்கு ஒரு நிம்மதி. அவர் நினைத்தால்… என் யூகங்களை பொய் என்று மறுக்க வாய்ப்பிருக்கிறது. எனது இந்தக் கட்டுரையை தாண்டி, இது குறித்த வாழும் நிஜத்தை, என் மதிப்பிற்குரிய மு.க. அவர்களிடமே தெரிந்துகொள்ள எனக்கும் ஆசை.

***

நன்றி: தாஜ் , தமிழ்ப்பூக்கள்
E- Mail : satajdeen@gmail.com

3 பின்னூட்டங்கள்

 1. 12/04/2013 இல் 17:25

  மு.க. தான் படைத்ததாக நம்பும் அவரது நவீன இலக்கியத்தை – இன்றைய – திறனான – நவீன இலக்கியம் சார்ந்த ஒரு வாசகன் – பத்து நிமிடம் நெளியாமல் வாசிக்கக்கூடுமென்றால்… அந்த வாசகனின் மனோவலிமையை என்னால் வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது.
  இன்று இன்னும் பொருந்தும். 92இல் சுபமங்களா நேர்காணல் நான் படிக்காமல் இருந்திருக்க மாட்டேன். ஆனால் நினைவில்லை. ஒருவேளை மு.க. பேட்டி என்பதற்காகவே புறக்கணித்திருக்கலாம்.
  ஆனால் அவர் படைத்த கடைசி நவீன இலக்கியம் இப்படியாகும் என்று யாரும் நினைக்கவில்லை.

 2. kulachal yoosuf said,

  14/04/2013 இல் 09:52

  *கலைஞரைப் பொறுத்தவரைக்கும் பழந்தமிழிலக்கியங்களில் ஆழ்ந்துக் கரைந்தவர். இதில் நவீனத்துவத்திற்கான இடமில்லை. நவீனம் என்ற சொல்லாடலுக்கான திட்ட வட்டமான பொருளில்தான் இலக்கியத் தினுள் அது பேசப்படுகிறதா என்றால் இல்லை. ஒரு அரசியல்வாதி என்ற நிலையில் வெகுசனங்களுக்கான மொழிதான் அவருக்குத் தேவைப்பட்டது. என்னுடைய வாசிப்பனுபவங்கள் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் நவீன மொழியமைப்பின்மீது ஆர்வம்கொண்ட ஒரு மனநிலைக்கு வந்து சேர்ந்திருந்தேன். பிறகு, கலைஞர் போன்ற எழுத்தாளர் களிடமிருந்து விலகினேன். ஆனால், முறை சார்ந்தக் கல்வியாளனாக இல்லாத நிலையில் எனக்குத் தமிழ்மீதும் தமிழிலக்கியங்கள் மீதும் ஆர்வம் ஏற்படக்காரணமாக இருந்தவர் கலைஞர்தான் என்பது மறுக்கவியலாத உண்மை. நவீனத்துவப் படைப்பாளிகள் வழியே என்போன்றவர்களுக்கு இலக்கிய ஆர்வம் முளைவிட்டிருக்குமா என்றால், ஒருபோதும் சாத்தியமில்லை. வள்ளுவனை, இளங்கோவனை, கம்பனை, பாரதியை எல்லாம் இன்றைய கவிஞர்களுடனும் கருத்தியலுடனும் ஒப்பிடுதல் சரியாக இருக்குமா? அவரவர்களுக்கான முறையியலாகவும் அந்தந்தக் காலகட்டங்கள் மற்றும் சமூகத் தேவைகள் சார்ந்தும் மதிப்பிடலாமே தவிர, அரசியலையோ பிற மதிப்பீடுகளையோ முன்நிறுத்தி இலக்கியத்தை அணுகுவது தவறான விடயம். தமிழில் அதிகமும் இன்று யதார்த்தப் படைப்புகளின் வாசகர்கள்தானே தவிர நவீனம் அல்லது பின் நவீனம் சார்ந்த வாசகர்கள் அல்ல. வெகுசனங்களிலிருந்து தங்களை அன்னியப்படுத்துவதன் மூலம் தங்கள் மேட்டிமைத்தனத்தை பறைசாற்றிக்கொள்ளும் போக்கும் தவறான ஒன்றுதான்.

  *நான் கழகக் கண்மணியல்ல!

  • தாஜ் said,

   14/04/2013 இல் 12:09

   குளைச்சல், முதலில் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நான் என் கல்லூரி பருவத்தில் இருந்து கதர் அணிகிறவன். காமராஜ் மற்றும் மூத்த காங்கிரஸ்வாதிகளின் பாதிப்பு. இன்றைக்கும் கதர்தான் மேலும் கீழும். முன் போல் அவ்வளவாக பரவலாக கதர் கிடைப்பதில்லை. அதனால் கைதறி என்று பரிமாணம் கொண்டிருக்கிறேன். நான் வெளிநாட்டில் சுமார் பதினைந்து ஆண்டுகள் வலம் வந்தவன். அங்கே கதரோ, கைத்தறியே கிடைக்காது. பணியின் நிமிர்த்தமாக பேண்ட் வேறு கட்டாயம். வேறு வழியின்றி இப்படியான நேரங்களில் அணிகிற இந்த வெள்ளை மேலாடை நண்பர்களால் கிளில் செய்யப்படுகிறது. அந்தப்படம்… பதினைந்து வருடப் பழசு. சரியா? இரண்டாவது… கலைஞர். எனது கட்டுரையிலேயே நான் நிறைய தெளிவை வைத்திருக்கிறேன். போதாததற்கு.. நண்பர் கிரிதரனுக்கு பதில் செய்யும் போக்கில் நிறைய சொல்லியும் இருக்கிறேன். பிடிக்கிறதோ இல்லையோ, கல்லூரிவரை பய்ந்தமிழைத்தான் கட்டாயமாகப் படிக்கிறோம். தவிர்க்கவே முடியாது அதனை அனுபவிக்கவும் செய்கிறோம். கல்லூரிக் காலத்திலும் கல்லூரிக் காலத்திற்குப் பிறகான காலத்திலும் அனுபவ பெருவெளியில் பல புதுமைகளை நுகர்கிறேம். மோகிக்கிறோம். அதில் மொழியும் ஒன்று. அத்தகைய மோகிப்பை முன்வைத்து பேசுவதுதான் என் கட்டுரை. அது எப்படி தவறாக முடியும்? நீங்கள் இன்று கிருஷ்ணனின் பதிவில், ஆங்கில இலக்கண மரபை சாடி இருந்தீர்கள். ரசித்தேன். அப்போ… ஆங்கிலத்திற்கு ஒரு நீதி தமிழுக்கு இன்னொரு நீதியா? பழந்தமிழை நல்லவேளை எழுத்தோடு விட்டார்கள். சமூகத்திலும் அப்படித்தான் பேசுவேன் என்று அதன் அனுதாபிகள் கிளம்பினால்…நாடே ஓர்திறந்தவெளி நடைச்சுவை மேடையாகிப் போகும். தவறுக்கு … (தவறு இருப்பின்) மன்னிக்கவும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s