ஏற்கனவே நான் பல குழப்பங்களுடன் இருக்கிறேன். குழப்பங்கள் இருப்பதால் இருக்கிறேன் என்று ‘தத்துவார்த்தமாகவும்’ சொல்லலாம்! இப்போது இந்த பில்லா, மன்னிக்கவும், ‘பில் அல்லா’ குழப்பம் வேறு வந்து சேர்ந்து விட்டது. எல்லாம் இந்த ஜபருல்லா செய்த வேலை. அவர் பாட்டுக்கு , ‘ இறைவா! உனக்கு அல்லாஹ் என்று பெயர் சூட்டியது யார்?’ என்ற வில்லங்கமான எஸ்.எம்.எஸ்ஸை எனக்கு அனுப்பி வைத்துவிட்டார். நானும் சும்மா இராமல் பதிவாகவும் போட்டுவிட்டேன் (இதுதான் விதிங்குறது). பின்னூட்டமிட்ட தம்பி இஸ்மாயிலுக்கு பதில் சொன்ன அண்ணன் ஹமீது ஜாஃபர் ஒரு குழப்பு குழப்பினார். அதை எனக்கு தெளிவாக எழுதியனுப்புங்களேன் என்று கேட்டதற்கு ரொம்பத் தெளிவாக மேலும் குழப்பி ஒரு பதில் அனுப்பியிருக்கிறார் இன்று. உண்மையில் அவர் குழப்பவில்லை, அதிலும் ஜபருல்லா இடம் பெற்றதால் தானாகவே குழம்பிவிட்டது! ஐயாமார்களே, எனக்கு வேறு வேலை இல்லையா? இப்படியெல்லாம் என்னை இம்சைப்படுத்தலாமா? அதுவும் பதில் சொல்பவர்கள் மேலும் மேலும் கேள்விகள் பிறப்பதுபோல் எழுதியனுப்பினால் நானென்ன செய்வேன்? ஜபருல்லா கேட்ட கேள்வி அப்படியே இருக்கிறதே.. யாராவது சரியான பதில் சொல்லுங்களேன்.
ஒன்று சொல்கிறேன், என் அல்லாஹ் எல்லாரையும் ஒன்றாக நேசிக்கச் சொல்கிற அல்லாஹ்; துரோகங்களை மன்னித்துவிடச் சொல்கிற அல்லாஹ். அவ்வளவுதான். அவனுடன் எவ்வளவுதான் முரண்டுபிடித்தாலும் ‘புத்திகெட்டவன், நாளடைவில் சரியாயிடுவான்’ என்று அன்பு காட்டவே செய்கிறான். அவ்வப்போது உதவியும். அவனிடம் நான் கொண்டுள்ள நேசம் அளவில்லாதது. ‘Why I am not a Muslim?‘ படித்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டான்! அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தாதீர்கள். இந்தப் பதிவிற்கு பதில் சொல்ல நினைப்பவர்கள் நேரடியாக ஜாஃபர் நானாவை தொடர்புகொண்டு அவரையே குழப்புங்கள். என்னை விட்டுவிடுங்கள். ஹமீது ஜாஃபர் நானாவின் மின்னஞ்சல் முகவரி : manjaijaffer@gmail.com
*
பில் அல்லா
(அண்ணன் ஹமீது ஜாஃபரின் மின்னஞ்சல்)
அப்போது ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் கேட்ட கேள்விகளுக்கு தந்தை ஜெக்கரியாவால் பதில் சொல்ல இயலவில்லை. வேறு வழி தெரியாமல் அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு மௌலவி அப்துல் வஹ்ஹாப் பாக்கவியிடம் போனார். சாதாரணமாக யாரும் தன் பிள்ளையை அழைத்துக்கொண்டுபோனால் ‘இவனுக்கு நல்ல புத்தி சொல்லுங்க’ என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அவரோ, “ஹஜ்ரத், இவன் கையைப் பிடிங்க” என்றார். “ஏன் நானா?” என்று ஹஜ்ரத் கேட்டார்கள்;
“இவன் என் மவன்”
“தெரியுமே ஜஃபருல்லாவை. ரொம்ப நல்ல பிள்ளாயாச்சே.”
“நல்ல பிள்ளையா? மொதல்லெ இவன் கையை பிடிங்க”. கையைப் பிடித்தார்கள். “தயவுசெஞ்சி இவனை இஸ்லாத்துல சேர்த்து வூட்டுக்கு அனுப்பிவைங்க!”
ஹஜ்ரத்திடம் சேர்ந்த இரண்டாம் நாள், “ஏன் சாபு நானா, (அப்படித்தான் ஜபருல்லா ஹஜ்ரத்தை கூப்பிடுவார்) குர்ஆன்லெ இடைச் சொருகல்கள் ஏதாவது இருக்கிறதா” என்று கேட்டான் அந்த சிறுவன்.
“சரிதான், ஜக்கரியா சொன்னது சரியாத்தான் இருக்கும்போலிருக்கு! குர்ஆன்லெ ஏதுப்பா இடைச்சொருகல்? அல்லா சொன்னதுலெ ஒரு ஜேரு ஜெபருகூட மாத்தம் கெடையாதே!”
“அப்போ.. எல்லாமே அல்லா சொன்னதுதானா?”
“ஒரு வார்த்தைகூட விடாம எல்லாம் அல்லா சொன்னதுதான்.”
“அப்படின்னா, ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருநாமத்தால் ஆரம்பிக்கிறேன்’ என்று சொல்றீங்களே, அதெயும் அல்லா சொல்லிருந்தான்னா அல்லாவுக்கு அல்லா யாரு? அவன் எந்த அல்லா பெயரால் ஆரம்பிக்கிறான்? இப்பொ நாம சொல்றது இந்த குர்ஆனைத் தந்த அல்லா பெயரால் ஆரம்பிக்கிறதா? இல்லை , அல்லா ஒரு பெயரால் ஆரம்பிக்கிறானே அல்லாவுக்கு அல்லா பில் அல்லா. அந்தப் பெயரால் ஆரம்பிக்கிறதா?”
இந்த கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்கள் ‘வலா ஹவ்ல வலா கூவ்வத்த’ என்று சொன்னார்கள். ஆனால் ஹஜ்ரத் அவர்களோ, “நீ கேட்டது நல்ல கேள்விதான். சரி, குர்ஆனில் எத்தனை அத்தியாயம் இருக்குன்னு உனக்கு தெரியுமா?”
“114 அத்தியாயம் இருக்கு.”
“ஒரு அத்தியாயத்திற்கு ‘பிஸ்மி’ கிடையாது. தெரியுமா உனக்கு?”
“அப்டீன்னா ஒரு ‘பிஸ்மி’ கொறச்சலா இருக்கனும்.”
“இல்லை. சரியாவே இருக்கு.”
“அது எங்கே இருக்கு?”
“அதைதான் நீ கண்டுபிடிக்கனும். அறிவு தானாகாவா வரும்? குர்ஆனைத் தமிழில் எடுத்து ஓது, ஆனால் எனக்கு ஒரு உறுதிமொழி தரனும், நீ ஓதிக்கிட்டே வரும்போது நீ கேட்ட கேள்விக்கு விடை தெரிஞ்சிடும், ஆனால் அதோடு நிறுத்திவிடக் கூடாது. முழுசா நீ படிச்சுப் பார்” என்றார்கள் ஹஜ்ரத்.
அன்று படிக்கத் தொடங்கிய ஜபருல்லா இன்றும் படித்துக் கொண்டிருக்கிறார். பல முறை படித்துவிட்டார். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப்புதுக் கருத்துக்கள், மேம்பட்ட அறிவுகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
**
நன்றி : ஹமீது ஜாஃபர்
***
குறிப்பு:
‘பிஸ்மி’ – ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்’ என்பதன் சுருக்கம். அ.அ.நி.அ.அ.பெ.ஆ!
‘வலா ஹவ்ல வலா குவ்வத்த’ : துன்பம் தரும் விஷயத்தைக் கேள்விப்படும்போது சொல்வது. (அல்லாஹ்வைத்தவிர எந்த ஆற்றலும் யாருக்கும் இல்லை)
அ. முஹம்மது இஸ்மாயில் said,
23/12/2009 இல் 16:04
ஆபிதின் நானா அல்லாட பில் அல்லா என்பதை பத்தி இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்கள் காட்டுபள்ளியில் நடந்த பயானில் சொன்னது நினைவுக்கு வருகிறது.
அவர்கள் குரான் ஷரீஃபை படிக்க ஆரம்பித்தது எவ்வாறு என்றும் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் என்ற வார்த்தை அல்லாஹ் சொன்னதா என்பதற்கான விளக்கத்தையும் அந்த மஜ்லிஸில் அருமையாக விளக்கினார்கள்.
அந்த பயான் சம்மந்தமான செய்திகளை நான் ஒரு பதிவிட்டிருக்கிறேன்.
http://nagoreismail786.blogspot.com/2009/12/blog-post_23.html
ஆபிதீன் said,
24/12/2009 இல் 05:31
நல்லது இஸ்மாயில், நான் புரிந்துகொண்டதை உங்களின் பதிவில் பின்னூட்டமிட்டிருக்கிறேன்.
அ. முஹம்மது இஸ்மாயில் said,
26/12/2009 இல் 00:54
நானா,
ஒரு குழப்பம் நிகழ்ந்து விட்டது.
நான் பதிவிட்டது அந்த ‘பில் அல்லா’ பற்றி அவர்கள் பேசிய பயான் நிகழ்ச்சி பற்றிய என் ஞாபகங்களைத் தான்.
‘பில் அல்லா’ பற்றி இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்கள் கொடுத்த விளக்கத்தை அல்ல.
அதாவது குரான் ஷரீஃபில் இருக்கும் 114 அத்தியாயத்தில் ஒரு அத்தியாயத்திற்கு மட்டும் பிஸ்மி ஆரம்பமாக இல்லாவிட்டாலும் குரான் ஷரீஃபில் வசனங்களின் நடுவே ஒரு இடத்தில் பிஸ்மி வருவதால் மொத்தம் 114 பிஸ்மிகள் வந்து விடுகிறது.
அந்த ஒரு பிஸ்மி சுலைமான் நபியின் வரலாற்றில் அவர்கள் எழுதிய ஒரு கடிதம் பிஸ்மி சொல்லி ஆரம்பிப்பதாக இருக்கும்