ஜபருல்லாவுடன் உட்கார்ந்தேன்; உட்காரணும்!

மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினராக மேலும் மூன்று வருடம் பதவி நீட்டிக்கப்பட்ட கவிஞர் ஜபருல்லா நானாவுக்கு வாழ்த்துக்கள். இரண்டு மாதத்திற்கு முன்பே இங்கே வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும் நான். இயலவில்லை. ரொம்ப ‘பிஸி’ . ஆமாம் , உட்கார்ந்திருந்தேன்! ‘உட்காருவது’ ஒன்றும் சாதாரண விசயமல்ல என்பதற்குத்தான் இந்தப் பதிவு. ஊர் போனால் தினமும் அவருடன் ‘உட்கார்ந்து’ அரட்டையடிப்பது என் வழக்கம். என் மொபைலில் பதிவு செய்த உரையாடலின் ஒரு பகுதி இது. நண்பன் நாகூர் ரூமியின் நூலான ‘சூஃபி வழி’ வெளியான சமயத்தில் பேசியது. ‘அந்த சூஃபி சொன்னது, இந்த சூஃபி சொன்னதுண்டு போவுது புத்தகம். இவரோட ‘சூஃபிஸம்’ என்னா?’ என்று, பேச்சு சூஃபிஸம் பக்கம் போனது. ஜபருல்லா என்னவோ ‘சாய்மா நாற்காலி’யில் படுத்துக்கொண்டேதான் – சிப்ஸ் சாப்பிட்டபடி – பேசினார். நீங்கள் நின்றுகொண்டு படிக்கலாம் – உட்கார!

குறிப்பு : ரசூல் (ஸல்) அவர்கள் மேல் ஜபருல்லா நானா கொண்டிருக்கும் பிரியத்தை உணர்ந்து இதை படிக்க வேண்டும். Michael H. Hart’ன் ‘The Hundred’ நூலில் , மனித சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்ற முதல் மனிதராக ரசூல் (ஸல்) அவர்களைக் குறிப்பிட்டிருப்பதை ஒருவர் மிகப் பெருமையுடன் சுட்டிக் காட்டியபோது, ‘ஓய்.. நம்ம ரசூலுல்லா நூத்துல ஒரு ஆளுண்டு அவன் குறைச்சி சொல்றான். அப்படியல்ல; அஹ ஒரு uncomparable personality’ என்றவர்.

*

ஜபருல்லா : ‘சஃப்’ன்னா வரிசை. ‘சுஃப்’ன்னா திண்ணை. சூஃபிகள்ண்டா அங்கே நிறைய பேரு இருப்பாங்க, கூட்டமா. சஹாபாக்கள் (திண்ணைத் தோழர்கள்)ங்குறது ‘சுஃப்’லேர்ந்து வருது. ஒரு கான்செப்ட்-ஐ பத்துபேரு இருபது பேரு எடுத்துக்கிட்டாங்க அப்படீன்னா அவங்க சூஃப் (கூட்டம்). சரி,  ஹிரா குகையிலெ போயி ரசூலுல்லா உட்கார்ந்தாங்கள்லெ? அப்ப அஹ சூஃபி. குர்-ஆன் வர ஆரம்பிச்ச பிறகு அஹ சூஃபி அல்ல.

நான் : ஏன்? எப்படி?

அஹல்ற சிந்தனை முடிஞ்சி போச்சில்லே? இப்ப, அல்லாட்டேர்ந்துல வருது அஹலுக்கு! சூஃபிண்டா அவங்களுக்குக் சுயசிந்தனை இருக்கனும். அது வெளியிலேர்ந்து வராது, ‘மெஹ்ராப்’லேர்ந்து வரும்.

மெஹ்ராப். அதாவது, ‘சுரங்கம்’. அப்படித்தானே?

ஆமா. அதனாலெதான் அல்லாஹ்வை வெளிலே எங்கேயும் நீங்க பார்க்க முடியலே. நம்ம உள்ளேதானே இருக்கான். இத தமிழன் நல்லா சொன்னான், ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’ண்டு

சிவவாக்கியார்..

ம்ம்.. அவர்தான்.

ஏன் நானா, கீழக்கரை சையது ஆஷியா உம்மா உண்மையிலேயே பெரிய ஆளா?

யாரது?

அவங்க ஒரு பெரிய சூஃபி அப்படீண்டு சொல்றாங்களே. குணங்குடியப்பாவை விட அவங்க விசேஷமானவங்கண்டு பிரமீள் சொல்றான். ‘பாதையில்லா பயணங்கள்’ கட்டுரையிலெ அப்படி குறிப்பிடுறான்.

சூஃபிண்டா யார்ண்டு நீங்க தெரிஞ்சிக்கணும் அப்படீன்னா , முதல் ingredients… மனிதப்பிறப்பு மட்டுமல்ல; மிருகங்கள், அசிங்கமா இருக்குறவங்க எல்லோரையும் அன்பாலே ஆகர்ஷிக்கிறவன்தான் சூஃபி.

அன்புதான் பிரதானம் அவங்களுக்கு?

ஆமா. அது இல்லேண்டா அவன் மனுஷன்கூட அல்ல. அதுக்கும் கீழே உள்ளவன்.

வள்ளலாரை சொல்லலாமா?

நல்லா சொல்லலாம். வள்ளலார் நல்ல ஒரு சூஃபி. புத்தன்தான் ஒரு அரைப்பைத்தியம்.

நேத்து புத்தன் சூஃபிண்டு சொன்னீங்களே! சூஃபியாயிட்டிங்களோ?

ஓய், முதல்லெ அவன் அரைப்பைத்தியம். அப்புறம் மாறுனான். போதிமரத்துலெ உட்கார்ந்தான், போதி மரத்துலெ உட்கார்ந்தாங்குறதல்ல, அங்கெ போயி உட்கார்ந்த பிறகுதான் அவனுக்கே தெரிஞ்சிச்சி. போதிமரம் ஒண்ணும் செய்யலே. நிண்டுக்கிட்டு அலைஞ்சிக்கிட்டிருந்தப்போ அவன் பைத்தியமா இருந்தான். உட்கார்ந்த உடனேதான் ஞானம் வந்திச்சி. உட்காரணும்! எஜமான் (ஷாஹூல் ஹமீது பாதுஷா) எல்லா ஊரும் போனாங்க. அவங்கள யாருக்கும் தெரியலே. இங்கெ (நாகூர்லெ) உட்கார்ந்தாங்க. எல்லாருக்கும் தெரிஞ்சிபோச்சி!

அட, நல்லாயிருக்கே!

ஆமாங்கனி, உமக்கு ஒரு இடம் இருக்கனும், நிலை இருக்கனும். சுத்திக்கிட்டே இக்கிறவன் அரசியல்வாதி. சுத்திக்கிட்டேயிருந்து மறைஞ்சி பொய்டுவான். ஒரு இடத்துலெ நிலையா உட்காரணும். பெரிய விஷயம் இது.

அப்ப நம்ம ‘எஜமான்’ வேற ஊருலெ உட்கார்ந்திருந்தா அந்த ஊருக்கு பெருமை போயிருக்கும், நம்ம ஊரு ஒண்ணுமே இல்லை.சரிதானே? அஹ இல்லேண்டாத்தான் ஊரு இல்லையே!

ஜபருல்லா : கரெக்ட். சூஃபிகள் என்னா பண்ணுவாங்க.. மொத்த மனிதவர்க்கத்துக்கும் (செய்திகளை) சொல்லுவாங்க. முஸ்லிமுக்கு ஹிந்துவுக்குண்டு சொல்லமாட்டாங்க. மனிதநேயம்தான் பிரதானம் அவங்களுக்கு. அதாவது எனக்கும் கொஞ்சம் வச்சிகிட்டு மத்ததுக்கு கொடுங்குறது சாதாரண  மனிதத்தன்மை. இன்னொருத்தனுக்கு கொடுக்குறதுனாலெ எனக்கு மகிழ்ச்சி வந்திச்சின்னா அது கடவுள் தன்மை. இன்னொருத்தன் சாப்பிடும்போது எனக்கு பசி போச்சின்னா அதுதான் கடவுள் தன்மை. அதனாலெதான் கடவுளுக்கு தேவை கிடையாது. உதாரணமா.. புத்தமதத்துலெ சேரணும்டு யாரும் சொல்லலே. புத்தனா ஆவனும்டுதான் சொன்னாங்க. அதுதான் உண்மை. அப்படி பார்த்தீங்கன்னா மானிடரின் லட்சியம்ங்குறது கடவுளாவுறதுதான். ரசூலுல்லா நடுவுலெ இருக்குறதாலெ , நாம அப்படி சொல்றதில்லே. ‘ஹக்’ வேறே, ‘ஹல்க்’ வேறேண்டு சொல்றோம். ‘ஹல்க்’குண்டா மனிதர்கள். ஆசாபாசம் உள்ளவங்க. ‘ஹக்’குண்டா அல்லாஹ். உண்மையானவன். உண்மையானவன் அப்படீன்னா பொய் என்ற எதிர்ப்பதம் இல்லாதவன். அவன் நம்மள படைச்சதே அவனோட சேர்றதுக்குத்தான்!’

**

பேச்சு நீண்டது….பிறகு பதிவிடுகிறேன். நான் கொஞ்சம் உட்கார வேண்டும்!

**

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்

முகவரி :
இஜட். ஜபருல்லாஹ்
14, புதுமனைத் தெரு
நாகூர் – 611002

1 பின்னூட்டம்

 1. nagoori said,

  18/12/2009 இல் 20:00

  எங்கோ படித்தது….
  ——————————

  சூஃபி என்றால் யார்?
  தன் உள்ளத்தை இறைவனின் உறைவிடமாக உணர்பவன்.

  சூஃபியின் விருப்பம்?
  போலித்தனத்தை உள்ளத்திலிருந்து அகற்றி விட்டு இறைவனைத் தனக்குள் கண்டுபிடிப்பது

  சூஃபி போதிப்பது?
  பரம ஆனந்தத்தை

  சூஃபி நாடுவது?
  ஞான ஒளி

  சூஃபி காண்பது?
  மனச் சாந்தி

  சூஃபி பிறருக்கு அளிப்பது?
  எல்லா உயிர்களிடத்தும் அன்பு

  சூஃபி அடைவது?
  அன்பென்னும் மகா சக்தி

  சூஃபி கண்டுபிடிப்பது?
  இறைவனை

  சூஃபி இழப்பது?
  தன்னைத் தானே

  – ஹஸ்ரத் இனாயத் கான்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s