தேசத் துரோகம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அடுத்தநாள் வெளியான தினமணியின் தலையங்கம் இது. ‘மதச்சார்பற்ற நாடு’ என்ற தனிச் சிறப்புடன் தலைநிமிர்ந்து நின்ற இந்தியாவை தலைகுனிய வைத்த தினம் ‘டிசம்பர் 6′. அன்றுதான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் மிருக வெறியும் ஆளுங்கட்சியின் கோழைத்தனமுமே அதற்குக் காரணம் என்பதைச் சுட்டிக் காட்டும் தலையங்கம்’ என்கிறது தினமணி. தினமணி வைரவிழா மலர் 1994லிருந்து..

***

தேசத் துரோகம்

தினமணி ( (7/12/1992)

ஞாயிறன்று அயோத்தியில் நடந்த அட்டூழியம் நமது தேசத்தின் கவுரத்துக்கே இழுக்காகும். ஒரு மதத் தொடர்பான இலக்கை அடைவதற்கு ஏமாற்று வேலை, மிருக வெறிச் செயல்கள் ஆகியவற்றில் இறங்கக்கூடிய, தயாரான நிலையில் இந்தியாவில் முக்கிய எதிர்க்கட்சி இருக்கிறது என்பதை நாட்டுக்கு அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஆளுங்கட்சியோ முதுகெலும்பு இல்லாமல் செயல்படுவதில் புதிய சாதனை நிகழ்த்தியிருக்கிறது. தன்னுடைய கையாலாகாத்தனத்தை செயலற்ற, கையைக் கட்டிக் கொண்டிருக்கும் உத்தியாக காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொண்டிருக்காவிட்டால், மதில்மேல் பூனையாக நடந்து கொள்ளுதல், நாச வேலை இவற்றின் மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்று பாரதீய ஜனதா கட்சி நம்பியிராவிட்டால் கடந்த சில வருஷங்களாக மசூதி, கோவில் என்ற பெயரில் நீடித்து வந்த பிரச்சினை இந்த அளவுக்கு பூதாகரமாக உருப்பெற்றிருக்காது. ஞாயிறன்று நடந்த அறிவுக்கு ஒத்துவராத, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்களால் ஏற்கனவே வகுப்புவாத, தீவிரவாதப் போக்கால், நலிந்த நிலையில் உள்ள நமது சகோதரத்துவ உணர்வு இன்னும் பாதிப்புக்குள்ளாகும் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகமில்லை.

அயோத்தியில் நடந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பா.ஜ.க. தலைவர்கள் கையை விரிக்கலாம். ஆனால், அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பும் அளவுக்கு யாரும் அறிவில்லாதவர்கள் அல்ல. அயோத்தியில் நடந்த அட்டூழியங்களும், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றின் தலைவர்களின் சொல்படி நடப்பதற்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை கடைசி நாள்களில் நடந்த சம்பவங்களும் உறுதிசெய்கின்றன. தங்களது சிந்தனையைக் கட்டுப் படுத்தும் பொறுப்பை தீவிரவாதிகளிடம் விட்டுவிட்டார்கள் என்பதை அதற்கடுத்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் உறுதிசெய்கின்றன.

உச்ச நீதிமன்ற ஆணை மீறப்படாது என்று உ.பி. முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த உறுதி மீறப்பட்டுவிட்டது. அரசியல் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பும் வெட்கமில்லாமல் கைகழுவி விடப்பட்டது. அதற்குப் பிறகு, முதல்வர் பதவியிலிருந்து விலகுவதைத் தவிர கல்யாண் சிங்கிற்கு வேறு வழியில்லை. சங்கிலித் தொடர்போல் நடந்த சம்பவங்கள் அவர்கள் கையைமீறி நடந்ததாக கூறும் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உச்ச நீதிமன்றம் கோரியபடி பிரமாண வாக்குமூலங்களை தாக்கல் செய்துவிட்டு இத்தைகைய எதிர்பாராத சம்பவத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினால் அதையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மிகவும் அச்சம் தருவது என்னவென்றால் இந்த நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு மாநில முதல்வரும், அவரது கட்சியும் ஏமாற்றுவதையே தங்களுடைய நடைமுறை உத்தியாகக் கொண்டிருப்பதும், தாங்கள் நிச்சயமாக அமல்படுத்த விரும்பாத நீதிமன்ற ஆணையை அமல்படுத்துவோம் என்று உறுதியளிக்கும் ஆணவப்போக்கும்தான்.

ஞாயிறன்று நடந்த சம்பவங்கள் பிரதமர் நரசிம்ம ராவின் அரசியல் அறிவுக் கூர்மைக்கு பெரும் பாராட்டு என எடுத்துக் கொள்ளமுடியாது. முடிவு எடுக்காமல் இழுத்துப் போகும் போக்கை அவர் புதிய நிர்வாக கலாசாரமாக உயர்த்தியிருக்கிறார். ஆனால், தேசத்துக்கு ஏற்படும் பேரழிவைத் தடுக்க பிரதமர் ஒருவர் உறுதியாகச் செயல்பட வேண்டிய நேரத்தில் தவறிவிட்டார் என்பதுதான் அவருக்கு இறுதியாகக் கிடைத்த லாபம். இந்த முதுகெலும்பில்லாத கோழைத்தனம் இந்தியாவால் தாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு பெரும் பளுவைத் தந்திருக்கிறது.

அரசியல் லாபத்திற்காக ஆசைப்படுகிறவர்கள் கொள்கைப் பிடிப்பற்ற கும்பலினால் வழிநடத்தப்படுகிற தலைவர்கள் ராவும், டாக்டர் ஜோஷியும் என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டார்கள். இத்தைகையவர்களை சரித்திரம் மன்னிக்காது. நிலைகுலைந்து போயிருக்கிற இந்த நாட்டின் நம்பிக்கை மீண்டும் நிலைப்படுத்தப்பட வேண்டும். இதனை ‘புதிய கரசேவை’ – ஆக்கபூர்வமான கரசேவை ஒன்றினால்தான் சாதிக்க முடியும். இந்தக் கரசேவைக்கு குடியரசுத் தலைவர் தலைமை தாங்க வேண்டும். தவறுகளைச் சீர்செய்யும் நடவடிக்கையாக தேசிய ஒற்றுமை, அயோத்தியில் சமரசத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். துரோகம் இழைக்கப்பட்ட இந்த நாட்டுக்கு ராவ்களும், ஜோஷிகளும் , கல்யாண் சிங்குகளும் இதனை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

**

நன்றி : தினமணி, தாஜ்

**

பார்க்க : பாபர் மசூதி – விக்கிபீடியா &  ஒரு 9324 வருஷத்துக் கதை! – பா. ராகவன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s