பேராண்மையை முன்வைத்து…- தாஜ்

தனது இளைய மகளின் கல்யாண வேலைகளுக்கிடையிலும் (தாஜ் வயசை சொல்லிட்டேனோ?) , நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ‘பேராண்மை’ சினிமா விமர்சனத்தை ‘உடனே’ எழுதியனுப்பிய நண்பர் தாஜுக்கு நன்றிகள். ‘தேங்ஸ் கவிராஜா’ என்று மெஸ்ஸேஜ் அனுப்பினால், ‘யோவ்.. நான் தாஜாவே இருந்துட்டுப் போறேன். என்னை விடு’ என்கிறார். எப்படி விடுவது?  ‘கவிதை’ எழுதாதவரை அவர் கவிராஜாதான்!

***

பேராண்மையை முன்வைத்து.

தாஜ்

அன்புடன்….
ஆபிதீன்.

சினிமா பார்த்து…
ரசித்து… எழுதி
மாதங்களாகிறது.
‘நான்
கடவுளை’
க் கண்டு
மகிழ்ந்து எழுதிய பிறகு
இப்போதுதான்
இந்தப் பக்கம் வருகிறேன்.
இடைப்பட்ட நாட்களில்…
படம் காணவும்தான் ஏது நேரம்!
‘அகோரி’யாக அல்லவா
அலைந்து திரிகிறேன்!
காதைக் கொடுங்கள்
நர மாமிசம்தான்… எத்தனை ருசி!

ஆபிதீன்…
‘சினிமா’ குறித்து….
நீங்கள் எழுதுவதே இல்லை.
எழுத்து ‘ஹலால்’தானே?
இந்தப் பக்கத்தை நீங்கள்
வெற்றிடமாய் விடுவதில்
யார் யாருக்கு
ஆதங்கம் இருக்குமோ தெரியாது.
நிச்சயம் எனக்குண்டு.

நீங்கள் கண்டுகளித்த
சினிமாக்களின்
செழுமையான வசீகரத்தை
நீங்கள் சுட்டிக்காட்ட… நான்
‘பின்னாடி’ பாத்து ரசித்த அந்த சில
பழைய மலையாளப் படங்களை
பதிவின் அவசியம் கருதியேனும்
எழுதனும் நீங்கள்.
எனக்குத் தெரியும்…
அந்தப் பதிவில் கட்டாயம்
மறைந்த தாரகை ஸ்ரீவித்யா
உயிர்த்தெழுந்து வருவார்!
பாக்கியமென நானும் ரசிப்பேன்.
இடம் தருவீர்களா? மாட்டீர்களே!

சமீபத்தில்…
உலகம் அழிகிற ‘2012’ படத்தை
குழந்தையாய்
பார்த்து ரசித்ததாக
‘செல்’லில் ‘சொல்’னீர்கள்.
இங்கே, அதை ‘ருத்ரம்’ என்றும்
‘அரக்கம்’ என்றும் சொகிறார்கள்.
இந்த உலகம் அழிவதென்பது….
எப்படி ருத்ரமும் அரக்கமும் ஆக முடியும்?
அதுதான் எத்தனை இனிய ருசிகரமான நேரம்!
ரசித்ததாக நீங்கள் சொன்னதுதான் சரி.

என் கிணற்றுக்குள் நான்
தாவுவதற்கு முன்னால் ஒரு கேள்வி…
‘மாயன் காலண்டர்’ ஏமாற்றிவிடாதே ஆபிதீன்?

*

பேராண்மையை முவைத்து
அந்தப் படத்தைப் பற்றி கொஞ்சமும்
அதன் இயக்குனரைக் கூடுதலாகவும்
தாராளமாக வியக்கலாம்!!
அந்தப் படத்தின் விசாலத்தை
கணக்கில் கொள்வோமெனில்…
தகும்.

வியப்பது ஒன்றும் நமக்கு புதிதல்ல.
நாலு சண்டை, ஆறு பாட்டு கொண்ட
அத்தனைப் படங்களையும்…
அதனதன் இயக்குனர்களையும் 
நாம் வியக்காத வியப்பா! 

திரைமொழியின்
அரிச்சுவடி அறியா
இயக்குனர்களுக்கும்
அவர்களின்
‘சகலகலா’ சித்திரங்களுக்குமாக
நாம் கொடுக்கும் முதல் மரியாதை
அபரிமிதமானது!
மிகுந்த நாகரீக சமூகமாக
உருமாறிவிட்டோமோ நாம்?

இன்னொரு கோணத்தில்…
அந்த இயக்குனர்கள்
மகா சமர்த்துகள்!
திரைச் சந்தையில் வைத்து
ரசிகர்களின் பர்ஸை
அறுவடை செய்வது முதல்
தங்களின் பக்கம் அவர்களை 
அணி திரளச் செய்வது வரை
சாதித்தவர்கள் அவர்கள்!

அவர்கள் சிந்திக்காது போனால்….
படத்திற்குப் படம்
அரிவாள்களின் எழுச்சிகளையோ
நடனங்களில் கிளர்ச்சிகளையோ
நாம் அனுபவிப்பது எப்படி?
புதுப்புது நாயகிகளும்தான் நமக்கேது?

*
நாம்
இன்னும் பயணிப்போம்.
குப்பை மேடுகளில் முகம் சுளித்து…
குண்டு குழி சகதிகளையும் தாண்டி
எதிர் திசையில் தூரம் நடக்கலாம்.
சோர்வே என்றாலும்…
தூரம் நடப்பது நல்லது.
நல்ல காற்று நிச்சயம்!

வியாபார முகாந்திரங்கள் கெடாது
சொல்ல வந்த செய்திகளை
பிரமாண்ட வீச்சில்
அழகாய் அழுந்தச் சொல்லி
முகம் காண்பித்து வளரத் தொடங்கியிருக்கிற
‘மாற்று சினிமா’
இன்றைக்கு நம்மை
நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
அது தரும் அழுத்தம்
கண்ட நாளுக்குப் பிறகும்
நாட்கணக்கிலும் தொடர்கிறது.

இதன் ‘பேட்டர்ன்’ நிஜத்தில்
ஹாலிவுட்டுக்கு சொந்தமானது.
நம் இயக்குனர்கள்
அச்சு அசலாய் நகலெடுத்து
அதன் சதுரத்திற்குள்ளும்
வட்டத்திற்குள்ளும்
தங்களது செய்திகளைத் தீட்டி
கலாசார முலாம் பூச்சோடு
முன்வைக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

டிஜிட்டல் தொழில் நுட்பம்/
கிராஃபிக் நேர்த்தி என்பதான
திரைப் பட நவீன விசேஷங்கள்
நாளும் பெருகித் தழைத்து
இவர்களின் ஆளுமைக்கு
அபாரமாக கைகொடுக்கிறது.

மணிரத்தினம் தொடங்கி
கமல் / பாலா / அமீர் /செல்வராகவன் /
ஜனநாதன் என்று முடிகிறது.
இந்தச் சின்ன பட்டியலில்
என் இஷ்ட தங்காரை
நான் சேர்க்க விரும்பியும்
என்னால் இயலவில்லை.
பிரமாண்டம் என்பது
தங்கர் பச்சனுக்கு அன்னியம்.
திரையில் அழகைப் பெரிதாய்
செதுக்க நினைப்பவர் அவர்!
பழைய பாலுமகேந்திராவுக்கு
பக்கத்து இருக்கைகாரர்!
ஆமாம்… எங்கே அந்த பாலுமகேந்திரா?

இந்தப் பட்டியலில்…
கமல் எப்படி?
சிலருக்கு நான் கேள்வியாகலாம்.
எனதான உணர்தலின் விழிப்பில்
அவரை ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும்… எப்படி?
என்பீர்களேயானால்….
அவர் சார்ந்த சினிமாக்களில்
கமலின் ஈடுபாடுகளை / மேலாதிக்கத்தை
பத்துப் பக்கத்திற்கு குறையாமல்
எழுத வேண்டியிருக்கும்!
தாங்குவீர்களா?
பாவம் நீங்கள்.
நான் மாட்டேன்.

தமிழ் திரையில்….
பிரமாண்டத்திற்கு பேர்போன
இயக்குனர் எஸ்.சங்கர் த கிரேட்
என் பட்டியலில் இல்லை.
கவனித்திருப்பீர்கள்.
இந்தப் பட்டியலில் அவரை ஏற்றினால்….
ரஜினி, விஜயகாந், விஜய், தலை, இன்னும்
லிட்டில் ஸ்டார் பட இயக்குனர்களையும்
தட்டாது இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டியிருக்கும்!
அநியாயத்திற்கு துணை போகலாம்..
இது மாதிரி அநியாயத்திற்கெல்லாம்
என்னால் துணை போகவே முடியாது.
‘கியாமத்து’ நாள் நிச்சயம் உண்டு!
அதில் கேள்விகளும் உண்டு!

சங்கரின் பிரமாண்டம் என்பதெல்லாம் சரி
மணி ரத்தினத்தின்
பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால்…
ஜனநாதனின் ஈ, பேராண்மை…
பாலவின் நான் கடவுள், பிதாமகன்…
கமலின் ஹே ராம்….
அமீரின் பருத்தி வீரன்…
மாதிரியெல்லாம் கூட வேண்டாம்.
மூன்றாம் உலக மக்களிடையே
சகஜமாகிப் போன ரவுடியிஸத்தை
செல்வராகவன் புதுப் பேட்டையில்
ஆய்ந்து சொல்ல முனைந்த முயற்சியின்
தங்க முடிச்சுகளை கண்டு கொண்டு…
அப்படியோர் மையம் நோக்கிய விஸ்தீரணத்தை
சங்கர் தந்தாலே போதும்.
மாற்று சினிமா
அவருக்குப் பிடிபட்டுப் போனதென
சூடம் அணைத்து சத்தியம் செய்ய தயார்!

பில்லியன்களின் தகிப்பு
எந்நேரமும் இருக்கு என்பதற்காக
கோடிகளில் நடனக் காட்சிகள்
மில்லியன்களில் கிராஃபிக் ஷாட்கள்
ரஹ்மான், சுஜாதா, நம்பர் ஒன்
கேமராமேன் இத்தியாதிகளுடன்
மிரட்டும் மிரட்டுதலையே
மாற்று சினிமாக இன்னும் நம்புவதை
அவர் கைவிட வேண்டும்.

*


பேராண்மையை முன் வைத்து
இன்று பரவலாக பேசப்படுகிற
அதன் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனை
கொஞ்சம் பார்க்கலாம்.

எந்தவொரு டாம்பீகமான
பின்புலமும் இல்லாமல்
இயற்கை திரைப்படம் வழியே
நம் பார்வையில் சிக்கிய இவர்
இன்றைக்கு பல படிகளை கடந்தவராக
உயர்ந்து நிற்கிறார்!

இயற்கை / ஈ / பேராண்மை
இந்த மூன்று திரைப்படங்களிலும் 
தன் ஆளுமை கொண்டு
அவர் பரிணமித்திருக்கிற அகலமும்
ஆழமும் நம் கவனிப்பிற்குரியது.

இயற்கை:

விபரம் அறியாத ஒரு பெண்ணின்
சிக்குண்ட காதல் சோகத்தை
விரிந்த கடலையும்
அதன் ஓயாத அலைகளையும்
அதில் மிதந்து நகரும்
ஜட வஸ்துகளையும் யுக்திகளாக்கி
அவர் சொல்லிய கதை
தர்க்க நியாயத்திற்கு அப்பாற்பட்ட சரி.
அந்தத் திரைப்படத்தை
வியந்த அத்தனை பேர்களும்கூட
கேள்விகளே இல்லாமல்
‘யார் இவர்?’ என மட்டுமே
தலையுயர்த்திப் பார்த்தனர்!

ஈ:

அறிவு சார்ந்த உலகில்
அரக்கங்கள் விதிவிலக்கல்ல.
அதுவோர் தின சங்கதி!
அடிமட்ட ஏழைகளின் உயிர்
பரிசோதனைக்கூட எலிகளாக /
தவளைகளாகிப் போக
கேட்பாரற்ற இந்த அராஜகத்தை
கோட்டுச் சித்திரமாய்
ஜனநாதன் விளக்கி இருந்த விதம்
வல்லமை கொண்டது.

அவர் ஒரு பேட்டியில்…
‘இந்தக் கொடுமை குறித்து
உலக அளவில்கூட இன்னும்
எந்த ஒரு திரைப்படமும்
பேசவில்லை’ என்றிருந்தார்.
அவர் பெருமை கொள்வது சரியே.

பேராண்மை:

தமிழ்த் திரையில்
இன்றுவரை சொல்லப்படாத /
முயற்சிகள் செய்யாத
சில விசயங்களை இதில்
ஜனநாதன் பதிவாக்கியிருக்கிறார்!

1.மலைவாழ் மக்களின் யதார்த்தம்.
அந்த மக்களில் ஒருவனாக கதாநாயகன்!

2.மாணவிகளை வீராங்கணைகளாக
உயர்த்தியிருக்கும் முற்போக்கு.

3.தாய் நாட்டிற்காக மாணவிகளின் தியாகம்.

4.மதம், இனம் கடந்த/ மனங்கள் மட்டுமே
கண்டு கொள்ளும் விதமாய் மெல்லியதோர் காதல்.

5..கம்யூனிச சித்தாந்தத்தை
தூக்கிப் பிடித்திருக்கும் தீரம்.

6.ஹாலிவுட் நடிகர்களை தமிழில் திரையில் நுழைத்து
அவர்களை சர்வ தேச பயங்கரவாதிகளாக நடிக்க
வைத்திருப்பதின் ஊடாக… ‘அமெரிக்கர்கள்தான்
அந்த பயங்கரவாதிகள்’ எனச்
சொல்லாமல் சொல்ல முயலும்
ஆண்மை.

7.அடர்ந்த இந்திய காடுகளின் முழு பின்னணி!  

8.இட ஒதுக்கீட்டுச் சர்ச்சையை, திரையில் இடம்பெற
செய்திருப்பதும்/ இட ஒதுக்கீட்டின் பயனாய்
நாயகன் உயர் கல்வி கற்று, துறைச் சார்ந்த 
திறமையில் உயர்ந்து நிற்பதுமான
யதார்த்தத்தை சொல்லி இருப்பது.

9.பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைப்
போக்கும், அவர்களை இன்னும் அடிமை என்கிற
ரீதியில் நோக்கும் உயர் வர்க்கத்தின்
கோணங்கித் தனத்தையும் காட்சிப்படுத்தி இருப்பது.

10.சென்சாரின் கத்தரிகோலுக்கு அநியாயமாய்
இரையான கருத்தாக்கங்கள் போக,
மீதத்தை ஒருசேர திரைமாலையாய்
தொகுத்திருக்கும் நேர்த்தி!
 
இத்தனை சிறப்பு அம்சங்கள் கொண்ட
இந்த மாற்று சினிமாவில்
குறைகள் இல்லாமலில்லை.
வியாபார முஸ்தீபுகளும் கூட
மிக நுட்பமாக பின்னப்பட்டிருப்பதை
மறுக்க முடியாது.

கதாநாயகனை கோமணத்தோடு
காட்சிப்படுத்தியிருப்பதையும்
மாணவிகளை வீராங்கனைகளாக
சண்டைக் களத்தில் இறக்கிவிட்டிருப்பதையும்
இதன் பின்னணியில் பார்க்கலாம்.

ஒரு நாட்டின் ராக்கெட் மாதிரியான
விஞ்ஞான வளங்களை
அழிக்க / அல்லது முடக்க
சர்வதேசத் தீவிரவாதிகள்
சம்பந்தப்பட்ட அந்நாட்டிற்கே நேராக வந்து
செயல்படுவதை ஒப்ப முடியாது.
அந்நாட்டிற்கு சொந்தமில்லாத பக்கத்து தீவுகளில்
இருந்துதான் இப்படியெல்லாம் செயல்படுவார்கள்.
இன்னும் சொன்னால்… 
இன்றைக்கு இதற்கெல்லாம் ஏகப்பட்ட
சாட்டிலை சர்வீஸ் தாராளமாக கிடைக்கிறது!
இனாமாகக் கூட…
இந்தியா இப்படி புலிகளை அழிக்க வில்லையா என்ன?

இப்படியெல்லாம்…
குறைகளைத் தேடிக்கண்டு
இந்த இயக்குனரை
அல்லது இவரையொத்த இயக்குனர்களை
வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவதும் ஆகாது.
ஓர் புரிதலில் இவர்களை
தட்டிக் கொடுத்தே ஆகவேண்டும்.
அல்லாது போனால்…
பிரமாண்டம் கூடிய
மாற்று சினிமா
அர்த்தம் இழந்துவிடும்.
பின்னர்
மாற்று சினிமாவின் இயக்குனர்களாக நமக்கு
சங்கர் , பேரரசு, சாமிகளே மிஞ்சுவார்கள்!
 
அதுதான்… அப்படித்தான்…
என்றாகிப் போகும்பட்சம்
கதாநாயகன் ஒரு விரலை உயர்த்த
ஏழெட்டு பயில்வான்கள் பறந்து
‘டைவ்’ அடித்து
தூரப்போய் விழுவதைக் கண்டு நாம்
‘சும்மா அதிருதில்ல!’
சொல்லிச் சொல்லி திரிய வேண்டியதுதான்.

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்
E-Mail : satajdeen@gmail.com

***

மேலும் பார்க்க :

பேராண்மை : திறனாய்வு –  நா.வைகறை (கீற்று) 

பேராண்மை: இதுவரை பேச மறந்த செய்திகளை பேசும் படம் – சிவசு.முகிலன் (கீற்று)

பேராண்மை – மங்கிய புகை மூட்டமாய் மார்க்சியம்…. – சுகுணா திவாகர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s