மீரா – தான்சேன் சந்திப்பு

அசோகமித்திரனின் இந்தக் கதைக்கும் எங்கள் நாகூருக்கும் தொடர்பு உண்டு. தர்ஹா குளுந்தமண்டபத்தில் உட்கார்ந்து கதை எழுதினாரா அ.மி? அல்ல. அதை பதிவின் முடிவில் சொல்கிறேன். ’18வது அட்சக்கோடு’ நாவல் பற்றி  நண்பர் தாஜூக்கு கடுமையான அபிப்ராயம். இருந்தாலும் இந்தக் கதையை மட்டும் ‘outstanding’  என்று தனியே எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு தெரியாமல் கதையை எடுத்து, தட்டச்சு செய்து, பதிவிடுகிறேன் – பரிகாசம் ஒரு கத்தி போன்றது என்று காட்ட. நாகூருக்காக எதையும் செய்வேனாக்கும்! என்ன, ஹஜ்ஜுப் பெருநாளுக்கு எதாவது எழுத வேண்டுமா? அதற்கு நீங்கள் இங்கே ஓடுங்க. கவிஞர் ஜஃபருல்லா குழப்பியது அங்கேதான் இருக்கிறது. இது சுட்ட இறைச்சிக்கான இடம். தெரியும்தானே?

‘குர்பானி’க்கு எதை கொடுக்குறீங்க, ஆடா, மாடா? என்று ஒரு நண்பர் கேட்டதற்கு துபாய் ஹமீதுஜாஃபர் சொன்னார்: ‘என்னெயே கொடுத்துக்கிட்டிருக்கேனே..!’ என்று. பெருநாள் வாழ்த்துக்கள்!

***

மீரா – தான்சேன் சந்திப்பு
அசோகமித்திரன்
இந்தியா டுடே . செப்டம்பர் 2, 1998

*

நான்கு மாதங்கள் முன்பு என் அக்கா இறந்து போனாள். கடைசி வரை அவளறிந்த பாட்டுகளைப் பாடிக் கொண்டு, ஒன்றிரண்டு புதுப் பாடல்களைக் கற்றுக்கொண்டு, உடல் நிலையும் குடும்ப நிலையும் அனுமதித்த நாட்களில் அருகில் ஏதாவது சங்கீதக் கச்சேரி நடந்தால் அதைக் கேட்டு விட்டு, கடைசியாக மார்பில் நீர் கோத்துக்கொண்டு நியூமோனியா சுரம் கண்டு இறந்து போனாள். என் இசைப் பயணம் அவ்வளவு தொடர்ச்சியாக நடைபெறவில்லை. சிறுவர்களாக இருந்தபோது நாங்கள் வெளியே எங்கு போனாலும் சேர்ந்தே போவோம். எந்த வீட்டுக்குப் போனாலும் எங்களைப் பாடச் சொல்வார்கள். இன்னொரு முறை சொல்லத் தேவையில்லாமல் உடனே ஏதாவது பாட்டுப் பாடுவோம். அப்போதெல்லாம் சினிமாப் பாட்டுக்கள் அதிகம் இல்லை. அநேக பாடகர்கள் தனிப் பாடல்களாக இசைத் தட்டுகளில் பாடியிருப்பார்கள். இப்படி எம்.எஸ். சுப்புலெட்சுமி இசைத்தட்டு ஒன்று வெளிவந்தால் அடுத்த வாரம் என்.சி. வசந்த கோகிலத்தின் இசைத்தட்டு வரும். அதையடுத்து டி.கே.பட்டம்மாள், குமாரி சூடாமணி.. சில நேரங்களில் ஒரே பாட்டையே இருவர் தனித்தனியாகப் பாடியிருப்பார்கள். யார் பாடியது மிகச் சிறப்பானது என்று விவாதம் நடக்கும். இது தவிர , முழு நாடகங்களே ஐந்தாறு இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்டு விற்கப்படும். எங்கள் வீட்டு கிராமபோனுக்கு ஓய்ச்சல் ஒழிவே கிடையாது.

“ராஜ புத்திர ராணியான நீ எப்படி ஒரு முகலாயனிடமிருந்து ரத்தின மாலை வாங்கி கொண்டாய்?”

“அவர்கள் சாதுக்கள்.  என் கிரிதர கோபாலனுக்கென கொடுத்தார்கள்”

“சாதுக்களா? அது டில்லி பாதுஷா அக்பரும் அவருடைய அரசவைப் பாடகன் தான்சேன் என்றும் உனக்குத் தெரியதா?”

“அவர்கள் எல்லா பக்தர்கள் போலத்தான் இருந்தார்கள்..”

“குலத் துரோகி! உன்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போட வேண்டும். இனியும் நீ இங்கிருக்கக் கூடாது. போ இந்த நாட்டை விட்டே!”

எங்கள் வீட்டுக்குக் கடைசியாக வந்திருந்த இசைத்தட்டு நாடகமான ‘மீரா’வின் இப் பகுதி எனக்கும் என் அக்காவுக்கும் தாங்கமுடியாத துக்கத்தைக் கொடுத்தது. வசுந்தரா தேவிதான் மீராவாக நடித்திருந்தாள். எங்களுக்கு அது நிஜ மீராவின் குரலைக் கேட்பது போலவே இருந்தது. அந்த ராஜபுத்திர ராணியைக் கஷ்டத்தில் சிக்க வைத்த அக்பர் மீதும் தான்சேன் மீதும் மிகுந்த கோபம் கொண்டோம்.

இன்னும் சிறிது காலம் கழித்து ‘மீரா’ என்றொரு தமிழ் சினிமாப் படம் பார்த்தோம். அதில் மீராவாக நடித்த நடிகையின் பெயர் வசுந்தரா என்று போட்டிருந்தாலும் கிராமபோன் நாடக வசுந்தரா அளவுக்கு  உருக்கமாக நடிக்க முடியவில்லை. இந்தப் படத்திலும் அக்பர், தான்சேன் வந்தார்கள். இதைத் தவிர என் அக்காவின் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அக்பரின் படம் இருந்தது. அக்பரின் மீசை எங்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை. ‘மீரா’ திரைப்படத்தில் இருந்த தான்சேன் நல்லவன் போலத் தோன்றியது. ஹைதராபாத்தில் ‘தான்சேன்’ என்ற பெயரிலேயே ஒரு இந்தி சினிமா வந்த போது அவ்வளவு தூரம் போய்ப் பார்க்க எங்களுக்கு ஆசைதான். ஆனால் பஸ் கட்டணமே இருவருக்கும் முக்கால் ரூபாய்க்கு மேலாகிவிடும். ஹைதராபாத்துக்கு வரும் இந்திப் படங்கள் ஆறு மாத காலம் அங்கு ஓடிவிட்டு எங்களுக்கு வரும். அங்கு ஓகோவென்று ஓடிய படங்கள் இங்கு அனாதையாகக் காட்சியளிக்கும். படம் முழுக்க மழை பெய்வது போலிருக்கும். ஐந்தாறு இடங்களிலாவது காட்சிகள் தத்தித் தத்தி ஓடும். பாடல் காட்சிகள் வரும்போது எல்லாப் பாட்டுக்களுமே சமையல் அறையில் கடுகு தாளிக்கும்போது பதிவு செய்யப்பட்டது போலிருக்கும். எங்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றியிருக்காது. எல்லாக் குறைகளையும் கற்பனையால் இட்டு நிரப்பிக் கொள்ளும் வயது.

வெள்ளி, ஞாயிறு எங்கள் பள்ளி வாராந்தர விடுமுறை நாட்கள். கடைசியாக எங்களுக்கு வந்து சேர்ந்த ‘தான்சேன்’ படத்தைப் பார்க்க ஒரு வெள்ளிக்கிழமை அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒன்பதணா வாங்கிக் கொண்டு பார்க்கச் சென்றோம்.

‘தான்சேன்’ ஓடிய மனோகர் டாக்கீஸ் எங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர். நாங்கள் அதைப் போய்ச் சேர்ந்தடைந்த போது மணி இரண்டு. இரண்டரை மணி ஆட்டத்துக்கு முப்பது நிமிடமாவது முன்னால் போக வேண்டாமா? ஆனால் கொட்டகை நிசப்தமாக இருந்தது. பகல் ஆட்டத்திற்கான அறிகுறி ஏதும் இல்லை.

அந்தக் கொட்டகைக்கு ஒரு காவல்காரன் கூடக் கிடையாது. அருகிலிருந்த வெற்றிலை பாக்குக் கடையில் விசாரித்தோம். அந்தப் படத்துக்கு அது நான்காவது நாள். கூட்டமே இல்லை. அநேகமாக அன்றோ, அடுத்த நாளோ தூக்கி விடுவார்கள். “படம் நன்றாகவே இல்லை” என்று சொன்னான்.

“சைகல் நடித்திருக்கிறாரே?”

“இருந்தால் என்ன? அதனாலேயே படம் மோசம்”

ஆனால் படத்தைப் பார்த்து விட்டுப் போவதில் உறுதியாயிருந்தோம். எங்கள் ஊரில் தினசரி இரு காட்சிகள்தான். வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் மூன்று காட்சிகள். நாங்கள் வந்ததாலோ என்னவோ வெள்ளியும் இரண்டு காட்சியாகி விட்டது.

என்ன செய்யலாம் என்று யோசித்தோம். வீட்டுக்குப் போய் மீண்டும் ஆறு மணி ஆட்டத்துக்கு வர நேரம் இருந்தது. ஆனால் வீட்டுக்குப் போய் விட்டால் மறுபடியும் அனுமதி கிடைப்பது உறுதியில்லை. ஆதாலால் அங்கேயே காத்திருந்து மாலை ஆட்டத்தைப் பார்த்து விட்டுப் போவதென்று தீர்மானித்துக் கொண்டோம். தான்சேன் பற்றி நானும் என் அக்காவும் தெரிந்து கொள்ள அப்படம் தவிர வேறு வழியில்லை.

மனோகர் டாக்கீஸ் பக்கத்தில் ஒரு சிறு சந்து இருந்தது. அங்கு சினிமாக் கொட்டகையின் விளம்பரத் தள்ளு வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு தள்ளு வண்டிக்கருகில் நான் உட்கார்ந்தேன். இன்னொன்றுக்கு அருகில் என் அக்கா உட்கார்ந்தாள். நான்கு மணி நேரம் அப்படியே உட்கார்ந்தோம். மாலை ஆட்டத்திற்குக் கூடப் பெரிய கூட்டம் இல்லை. வந்திருந்த சிலரும் வழி தவறி வந்தவர்கள் போலிருந்தார்கள். அந்த சினிமாவுக்கு அந்த நாளில் நான்கு மணி நேரம் காத்திருந்து பார்த்தவர்கள் நாங்கள் இருவர் மட்டுமாகத்தான் இருக்கும்.

சினிமா தொடங்கியபோது எங்கள் வயிறும் அசாத்தியமாகக் கிள்ளத் தொடங்கியது. பகல் ஒருமணிக்கு சிறுது மோர் சாதம் அவசரமாகச் சாப்பிட்டது. அந்தப் படத்தை அவ்வளவு பசியுடன் பார்த்தவர்களும் நாங்கள் இருவராகத்தான் இருக்க வேண்டும்.

சினிமா எங்களுக்கு நன்றாகவே இருந்தது. சைகல்தான் தான்சேன். ஆகவே தான்சேன் சின்ன வயதிலிருந்து கடைசிவரை ஒரு ஐம்பது வயது மனிதரைப் போலவே இருந்தான். எல்லா இந்தி சினிமாக்களில் உள்ளது போலவே இதிலும் நிறையப் பேச்சும் பாட்டும். தான்சேன் பாடும்போது மட்டும் மான்கள் ஓடி வரும். மயில்கள் தோகை விரித்துச் சிலிர்த்துக் கொள்ளும். விளக்குத் திரிகள் தானாகப் பற்றிக் கொள்ளும். ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கும் சதுரக் கல் கரைய ஆரம்பித்து விடும். தான்சேன் அக்பரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஒரு பாட்டுப் பாட, அந்தப் பாட்டின் ராகத்தில் தீவிரத் தன்மையால் அவனுக்கு கடுமையான வெப்ப நோய் கண்டு விடுகிறது. எந்த மருந்தும் பயன் தருவதில்லை. குற்றுயிரும் குலையுயிருமாக அவன் பிறந்த கிராமத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறான். அங்கு அவனுடைய இளம்பிராயத்துத் தோழி ஒரு பாட்டுப் பாடுகிறாள். அது மேக மல்ஹார் ராகம். வானம் பொத்துக்கொண்டு மழை பொழிகிறது. தான்சேன் நோய் தீர்ந்து விடுகிறது. இப்போது அவனும் அவளும் சேர்ந்து பாடுகிறார்கள். படம் முடிகிறது. ஆனால் மீரா எங்கே?

எனக்கும் என் அக்காவுக்கும் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. பசி. வீட்டுக்குப் போனவுடன் அப்பா அம்மா இருவரிடம் இருந்தும் நிறைய வசவு கிடைக்கும். அடி கூட விழலாம். ஆனால் இவ்வளவு அபாயங்களுக்கிடையில் இந்தத் ‘தான்சேன்’ படம் பார்க்க வந்த காரணம் நிறைவேறவில்லை. படத்தில் மீரா பற்றிப் பேச்சு மூச்சு இல்லை. ஒருவேளை இதே படம் தமிழ் மொழியில் இருந்தால் அதில் மீரா வருவாளோ? ஏன் ‘மீரா’ இசைத்தட்டு நாடகத்திலும் ‘மீரா’ தமிழ்ப் படத்திலும்  மீராவின் பூஜைக்கு வரும் அக்பரும் தான்சேனும் ‘தான்சேன்’ படத்தில் அப்படிச் செய்வதில்லை?

எங்களுக்கு மீராவும் தான்சேனும் சந்திப்பது தவறாகத் தோன்றவில்லை. மீராவும் எடுத்ததெற்கெல்லாம் பாடுவாள். தான்சேனும் அப்படித்தான் போலிருந்தது. மீரா பாடுவது எங்களுக்குப் புரிகிற மாதிரி இருந்தது. தான்சேன் நீட்டி முழக்கிப் பாடியதில் ஒரு சொல்லையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. என் இந்த இந்தி சினிமாவில் தான்சேன் மீராவைப் பார்க்கப் போகவில்லை?

மீரா பாடுவது நாடெல்லாம் பிரசித்தமாகி அக்பரும் தான்சேனும் மாறுவேடத்தில் அவள் பாட்டைக் கேட்க வந்ததாக இன்னொரு தமிழ்க் கதைப் புத்தகத்திலும் கண்டிருந்தது. நானும் என் அக்காவும் அதுதான் உண்மை என்று நிச்சயமாக இருந்தோம். ராஜபுத்திரர்களும் முகலாயர்களும் விரோதிகள். அக்பரும் தான்சேனும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இசை என்னும்போது , அது கிருஷ்ணமூர்த்தி இசையாயிருந்தால் கூட, அவர்களுக்கு பேதமெல்லாம் அகன்று விடுகிறது. நானும் என் அக்காவும் ஐந்தாறு மீரா பஜன்களைக் கற்றுக் கொண்டோம்.

அந்தப் பாட்டுக்கள் எல்லாமே கூட்டமாகச் சேர்ந்து பாடுவதற்காகவே இயற்றப்பட்டவை என்றால் அந்த நாளில் எல்லாருமே எம்.எஸ் சுப்புலெட்சுமி போலப் பாடினார்களா? மீரா எந்தப் பாட்டு பாடிக் கொண்டிருந்தாலும் அக்பரும் தான்சேனும் மாறுவேடத்தில் அதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள்? நாங்கள் பெரியவர்களாகி  வெவ்வேறு ஊர்களில் வசிக்க நேர்ந்த நாட்களில் கூட நாங்கள் மீராவைப் பார்ப்பதற்காகத் ‘தான்சேன்’ சினிமாவைப் பலமணி நேரம் பசியோடு காத்திருந்து பார்த்தது நினைவுக்கு வரும். வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ மீராவின் பாட்டு யாரால் பாடப்பட்டாலும் நான் அப்படியே நின்று விடுவேன். என்னை விட என் அக்காவுக்கு லயிப்பு அதிகம். ஒரு முறை ஒரு கச்சேரியில் ஒருவர் ஆர்தாஸின் ‘ஹே கோவிந்த ஹே கோபால’ பாட்டுப் பாடியபோது அவளுடைய கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்து கொண்டிருந்தது. மீரா பாட்டின் போதும் அப்படித்தான் இருக்கும். கிட்டத்தட்ட அம்பது வருடங்களுக்கு எங்களுக்கு மீரா- தான்சேன் – அக்பர் பற்றி ஒரே மாதிரிக் கற்பனைத் தோற்றம் இருந்தது. அத்துடனேயேதான் என் அக்கா இறந்திருப்பாள்.

தற்செயலாகச் சில நாட்கள் முன்பு அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் இலக்கிய வெளியீடு ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இந்தியாவின் பக்திப் பாடல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிருந்தார்கள்.

மீராவின் பாடல்களும்தான். எல்லாக் கவிஞர்கள் பற்றியும் சுருக்கமாகக் குறிப்பு தரப்பட்டிருந்தது. மீரா பற்றியும் இருந்தது. ஏனோ எனக்கு அது சரியாகப் படவில்லை. மீராவைப் பற்றிய ஆதார பூர்வமான வரலாற்றுக்காகத் தேடி அலைந்தேன். வரலாறும் வாய் வழிக் கதைகளும் இவ்வளவு மாறுபட முடியுமா என்று வியக்க வேண்டியிருந்தது. மீரா – தான்சேன் பற்றிக் கர்ண பரம்பரைக் கதை ஆழ்ந்த அர்த்தங்களும் உயர்ந்த நோக்கங்களும் உணர்த்துவதாக இருந்தாலும் அது நிஜமல்ல. பதிமூன்று வயதில் பட்டத்துக்கு அக்பர் வந்த ஆண்டு கி.பி. 1556. அதன் பின் குறைந்தது பதினைந்து இருபது ஆண்டுகள் கழித்துத்தான் தான்சேன் அவருடைய சபையில் சேர்ந்திருக்க முடியும். அதன் பிறகு இருவரும் மாறுவேடம் பூண்டு யார் பாடுவதைக் கேட்கப் போவதாய் இருந்தாலும் அது 1580க்குப் பிறகுதான் இருக்க வேண்டும்.

மீரா இறந்த ஆண்டு கி.பி. 1547.

(END)
*

நன்றி : அசோகமித்திரன், இந்தியா டுடே, தாஜ்

*

தொடர்பு இதுதான். ‘பாடிக்கலந்த பக்த மீரா‘வின்  கிருஷ்ணன் வேறு யாருமல்ல , நாகூர் ஆண்டவர்தான் என்று ‘வரலாறு’ எழுதியிருக்கிறார் எம்.ஏ. ஹைதர் அலி! நூல் : காருண்ய ஜோதி நாகூர் பாதுஷா நாயகம். நன்னூலகம் வெளியீடு. ‘சாஹே மீரா..’ என்று ஈயம் ஹனிஃபா பாடியதில் குழப்பமா? ‘நாகூர் ஆண்டவர்’ என்று மரியாதையாக எளியோர்களால் அழைக்கப்படும் எங்கள் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் பிறந்தது 1504-ம் ஆண்டு (ஹிஜ்ரி 910) . அதனாலோ? விட்டால் , பக்கத்து வீட்டு மீரான் மொய்தீன் கூட பக்த மீராவுக்கு உறவுதான் என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது! நந்த நந்தன…

***

எண்கள் – அசோகமித்திரன் சிறுகதை

அசோகமித்திரன் நேர்காணல் : அம்ருதா (பாலுசத்யா)

4 பின்னூட்டங்கள்

 1. 26/11/2009 இல் 14:55

  நீங்க சொன்ன மாதிரி ஜபருல்லாஹ் நானா குழப்புனதை படித்து விட்டு தெளிவு பெற்றேன்.

  நான் அதை என் பதிவில் போட்டு கொள்ளலாமா? – இன்னார் எழுதியது என்று நன்றி தெரிவித்து தான் –

  உண்மையில் பக்த மீரா கதை தான் குழப்பமா இருந்தது.

 2. 26/11/2009 இல் 14:56

  பெருநாள் வாழ்த்துகள்

 3. ஆபிதீன் said,

  26/11/2009 இல் 15:35

  ஓ, தாராளமாக போட்டுக் கொள்ளுங்கள். ஜாஃபர்நானாவின் வலைப்பதிவுக்கு சுட்டியையும் கொடுங்கள்.

 4. nagoori said,

  26/11/2009 இல் 21:03

  யார் இந்த மீராபாய்? நம்ம ஊரு டீக்கடை காதர் ஹுசைன்பாய்க்கு சொந்தமா என்று கேட்கிறார் என் நண்பர்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s