கீழே வருவது, நண்பன் ரூமியின் ‘பாட்-பூரி’ பற்றி நண்பர் கய்யுமின் ‘கமெண்ட். என்னை சும்மா இருக்க விட மாட்டேன் என்கிறார்கள் இந்த இரண்டு அழிவு ஜீவிகளும்! பத்தி கொளுத்தும் வரை பத்தி எழுத ரூமியை நானும் வேண்டிக் கொள்கிறேன். விதிங்க, எல்லாம் விதி !
***
நாகூர் ரூமியின் ‘பாட்-பூரி’
பாட்-பூரி என்ற தலைப்பில் நண்பர் நாகூர் ரூமி ‘கூடல் திணை‘ இணைய இதழில் மனதில் பட்டதை எழுத ஆரம்பித்திருக்கிறார். அதென்ன பாட்-பூரி? நம்பூதிரி பாட் – அம்ரீஷ் பூரி இரண்டையும் கதம்பச்சோறாக கலந்து பெயர் வைத்திருக்கிறாரா?
சோற்றில் சாம்பாரோடு ரசத்தையும் சேர்த்து ஊற்றிக் கலந்து அடிப்பாராம். மட்டன் குழம்பில் தயிர் அல்லது மோரை ஊற்றி ஒரு பிடி பிடிப்பாராம். தோசை, இட்லி, இடியாப்பம் வகையறாக்களை டீ தொட்டு சாப்பிடுவாராம். தத்துவார்த்த அடிப்படையிலான சாப்பிடும் முறை அது என்று விளக்கம் தருகிறார். ஒரு மனிதனின் வயிற்றுக்குள் போன பிறகு உணவுக்கு என்னவெல்லாம் ஆகும் என்பதை சாப்பிடும்போது வெளியிலேயே பார்த்துக் கொள்ளலாமாம்.
அவருடைய இந்த கட்டுரையை நான் படிக்காமலேயே இருந்து தொலைத்திருக்கலாம். அல்லது படித்துவிட்டு அந்த விபரீத பரிசோதனையை செய்யாமல் பேசாமல் இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது? நாமும் தத்துவார்த்த அடிப்படையிலான சாப்பிடும் முறையை கடைபிடித்து பார்க்கலாம் என்று முயன்று கெட்ட பெயர் வாங்கியதுதான் மிச்சம்.
நேற்று மதியம் விசேஷமாக ஹைதராபாத் பிரியாணி செய்து வைத்திருந்தாள் என் மனைவி. வீட்டிற்குள் நுழைந்த போதே வாசனை கமகமவென்று மூக்கைத் துளைத்தது.
அறிவு ஜீவிகள் வித்தியாசமான குணாதிசயங்கள் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்களாம். எங்கோ படித்த ஞாபகம். நாமும் எப்பத்தான் அறிவு ஜீவி ஆவது?
இன்று எப்படியாவது தத்துவார்த்த முறையில் சாப்பிட்டு பார்த்து விடுவது என்ற தீர்க்கமான முடிவோடு இருந்தேன். கையில் கிடைத்ததை எல்லாம் ஒன்றாக சாப்பாடுத்தட்டில் கொட்டி, பிசைந்து, ஒரு கலக்கு கலக்கி அப்படியே விழுங்க ஆயத்தமானேன்.
“வித்தியாசங்கள் மறைந்து எல்லாம் ஒன்றாகும் அற்புதம் உள்ளே மட்டும்தான் நடக்க வேண்டுமா? அது வெளியிலேயே நடந்தால் என்ன?” என்ற நாகூர் ரூமியின் நியாயமான கேள்வி என் மனதைத் தொட்டது. அறிவுள்ளவங்க சொன்னா அதுக்கு நிச்சயம் அர்த்தம் இருக்கத்தானே செய்யும்?”
இதோ சுடச்சுட பிரியாணி மேசையில் பரிமாறப்படுகிறது. பிரியாணிக்கு மேட்சிங்காக தாளிச்சா வேறு. ஊஹும் நான் இன்று தாளிச்சாவைத் தொடப்போவதில்லை.
“காலையிலே தோசைக்கு வச்சிருந்த சட்னி மிச்சம் மீதி இருந்தா போய்க் கொண்டு வா” குரலை உயர்த்தி மிடுக்கான தோரணையில் ஆணையிட்டேன்.
“இருக்கு. அது எதுக்கு இப்போ?” – இது என் மனைவி
“கொண்டுவான்னு சொன்னா கொண்டு வரணும். குறுக்கு மறுக்கா கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது”
பிரியாணியில் சட்னியை போட்டு ஒரு பிசை பிசைந்தேன். பிரியாணியின் நிறமே மாறிப்போனது. வெள்ளை நிறத்திற்கு அது கட்சி மாறி உப்புமாவைப்போல் காட்சியளித்தது.
“அந்த ஊறுகாயை எடு”
அதோடு ஊறுகாயையும் போட்டு குழப்பினேன். இப்பொழுது பிரியாணி சிவப்பு நிறத்துக்கு மாறி தக்காளிசாதம் போல் காட்சி தந்தது. நன்றாக பிசைந்து உள்ளே தள்ள ஆரம்பித்தேன். தொண்டைக் குழிக்குள் இறங்க மறுத்தது. முகத்தை அஷ்டகோணலாக்கி, மூக்கை பிடித்துக்கொண்டு ஒருவாறு பிளேட்டில் இருந்த அனைத்தையும் காலி செய்துவிட்டேன்.
இப்பொழுது என் மனைவியின் முகத்தையும், என் மகள் மோனாவின் முகத்தையும் ஓரக்கண்ணால் நோட்டமிட்டேன். அவர்கள் என்னைப் பார்த்த பார்வை என்னை நெளிய வைத்தது. எனக்கு நட்டு கிட்டு லூஸாகி விட்டது என்று நிச்சயம் அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.
“நல்லாத்தானே இருந்தாரு. இந்த மனுஷனுக்கு என்னாச்சு?” என்று என் மனைவி நினைத்திருப்பாள்.
எனக்கு தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்ட போதிலும் நாகூர் ரூமியின் தத்துவார்த்த முறை சாப்பாட்டுமுறையை கையாண்டு நாமும் நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொண்டோமே என்ற ஆத்ம திருப்தி ஏற்பட்டது. பாவம். அவரது நிலைமையை நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.
ஒருவிதத்தில் எனக்கு சந்தோஷமாக இருந்தது. நல்லவேளை இந்த பரிசோதனையை வீட்டில் செய்து பார்த்தேன். ஹோட்டலில் சாப்பிடும்போது இதை முயன்று பார்த்திருந்தால் என்னை ‘ஒரு மாதிரி’ என்று முடிவே செய்திருப்பார்கள்.
“இந்த மாதிரி கட்டுரை வந்தா, படிச்சோமா, ரசிச்சோமா, மறந்தோமா என்று இருக்காமா உனக்கு எதுக்கு இந்த விபரீத புத்தி?” என்று என் மனசாட்சி என்னை எச்சரித்ததை பத்திரமாக குறிப்பெடுத்து வைத்துக் கொண்டேன்.
**
நன்றி : ‘நாகூரி’ அப்துல் கய்யும் | E-Mail vapuchi@gmail.com
**
நாகூர் ரூமியின் ‘பாட்-பூரி’ – கூடல் திணை
அ. முஹம்மது இஸ்மாயில் said,
22/11/2009 இல் 07:25
நானும் கையும் காகா மாதிரி தான் பாட் -பூரியா? அது என்ன அம்ரீஷ் பூரி , ஓம் பூரி தெரியும்.. அது என்ன பாட்- பூரி என்று படித்து பார்த்தேன். நல்ல வேலை, காகா மாதிரி ஆசிட் டெஸ்ட் எல்லாம் செய்து பார்க்கவில்லை.
மிஸ்டர் பீன் படத்தில் அவர் ஆபிஸுக்கு லேட்டாயிடிச்சுன்னு, சுடுதண்ணி, சீனி, பாலை எல்லாத்தையும் சேர்த்து வாயில ஊத்திகிட்டு துடிப்பாரே அத மாதிரி இருந்துச்சு, அந்த சாப்பாடு மேட்டர்.
பிரியாணிக்கு சட்னி, இடியப்பத்துக்கு தொட்டுக்க தேத்தணி.. மர்ஹபா..! கியா டேஸ்ட் ஹே..!
எனக்கு தெரிஞ்சு ஒருத்தரு தேத்தணில உப்பு ரொட்டி தொட்டு திங்கிறதுக்கு பதிலா பொறிச்ச மீனை தொட்டு திண்டாரு.
Taj said,
23/11/2009 இல் 13:42
ருமியின் சூஃபிச அணுகளுக்கு அளவே இல்லை!
முசாஃபிர்கள்/ ராபிச்சைக்காரர்கள்
மற்றும் வாழ்வில் நலிந்தவர்களென
அத்தனை பேர்களும்
அன்றைக்கும் இன்றைக்கும்
பின் எப்படித்தான் சாப்பிடுகிறார்களாம்??
– தாஜ்
nagoori said,
25/11/2009 இல் 23:43
முசாஃபிர் என்றால் நாடு விட்டு நாடு சுற்றும் பிரயாணி என்று பொருள். என்னையும், ஆபிதீனையும் சொல்லுகிறார் என்று புரிகிறது.
அப்போ ராப்பிச்சை? ஆங்,, புரிஞ்சுப் போச்சு! யோவ் ரூமி. உன்னைத்தான்யா..
ஆளை விடுங்கப்பா. நா இந்த ஆட்டத்துகு வரலே…