விதிங்க, எல்லாம் விதி! – தாஜ்

எழுத்து – எழுத்தாளன் – வாசகன்

தாஜ்

அன்புடன்
ஆபிதீன்…

உங்கள் தகவலைக் கிரகித்தபோது
கழுத்துமுட்டும் புதைகுழியில் நான்!
கவலை வேண்டாம்
தலைதான் இன்னும் வெளியே இருக்கிறதே!

வாழ்வோடு விளையாடும் விளையாட்டு
அலுக்கவே மாட்டேன் என்கிறது!
அந்த மாய விளையாட்டில்
பாதாளம் காணாதவரை
ஓயமாட்டேனோ என்னவோ.

‘எழுத்தில்
எதையாவது சொல்லித் தொலையா’வுக்குப் பிறகு
உதட்டோரம் தேன் பூச்சாய்
‘வாசகர்கள் எதிர்பார்ப்பாக்கும்’
சொன்னீர்கள்.

சந்தோஷம் தந்த இந்த தகவலை
இன்னொரு அன்பாகப் பார்க்கிறேன்!
‘கற்ற இந்த எழுத்து ஒன்றையாவது
உருப்படியாய் ஒப்பேற்றப் பார்..’
சொல்லாமல் சொல்லும்
உங்கள் அன்பு…
சிரமம் பாராது!
அப்போதைக்கு அப்போது
கட்டி என்னை மேலே இழுக்கும்
வாழும் அன்பு அது!
 
இதற்கு என் கைமாறுதான் என்ன?
ஓர் அசட்டுச் சிரிப்பை
‘செல்’லில் சிணுக்கலாம்.
அல்லது…
எது குறித்தாவது
எழுதுவது மாதிரி எழுதி விடலாம்.
இப்போதைக்கு…
அந்த மாதிரி ‘பாவ்லா’வே மெத்தச் சரி.

என் எழுத்தென்பது
நாலரையும் ஏழரையையும்
இழுத்துவைத்து முடிச்சுபோட்டு விடுவது.
இப்போதும் அப்படிதான்.
இதற்கெல்லாமா வாசகர்கள்?
பாவம்தான் அவர்கள்.
எழுதிவிடலாம் எழுதி
எனக்கென்ன சிரமமில்லை
நிஜமாக பாவம்தான் அவர்கள்.

*
என்ன எழுதுவது?
எது குறித்து எழுதுவது?

பறப்பது எளிதென்றாலும்
உந்தி உயர எழும்புவது எளிதல்ல.
 
இதில் சிக்கல் என்பது…..
எல்லாவற்றைப் பற்றியும்
எப்பவோ…
யார் யாரோ…
வண்டி வண்டியாய்
எழுதி தீர்த்து விட்டார்களே! என்பதால்தான்.

மாறும் உண்மைகள் பேசும்
விஞ்ஞானம் ஒன்றை தவிர!
நம்ம பெருசுகள்!
எதையும் பாக்கி வைக்கவில்லை!

இன்னும் சொல்லப்படாதது
ஏதாவது இருக்குமெனில்…
அவைகளின் கூறுகள்
மொத்தமும் மழுங்கிப் போனதாக இருக்கும்.
அல்லது….
இன்னும் முழுமையாய் தொடக்கம் கொள்ளாததாக.

இந்த பேருண்மைக்குப் பிறகும்
மூலத்தைத்தேடி எவரும்
முயற்சிப்பது கிடையாது!
சரியாகச் சொன்னால்….
எல்லோரும் சேர்ந்து
அவற்றை எல்லாம் அழித்துவிட்டோம்!

படைப்பாளிகளின் வித்தைகளூடே
வளரும் மொழி
குயுக்தியான மோகப் பின்னல்கள் கொண்டது.
அதன் விழிகள் அசையும் துடிப்பு
ஆயிரம் சைககள் காட்டுவது.
வாசகர்கள் போதை கொள்வது
இதன் ஊடாகத்தான்.
அதன் பின்னல்களில் அவர்கள்
வலிய சிக்கிக் கொள்வதென்பது
தவிர்க்க முடியாததும் கூட!

தவிர,
படைப்பாளிகள் காட்டும்
வாழும் உதாரணங்களில்
தங்களைப் பொருத்தி
வாசகர்கள் மேலும் கிறங்கி விடுவார்கள்.
‘எத்தனை பெரிய எழுத்தாளர்’ வியப்பும்
அவர்களிடம் மேலிட
சாமி கொண்டவர்களாய்
சரியச் சாய்வார்கள்!
 
படைப்பாளியின் ‘ரீமிக்ஸ்’ கொண்ட
எழுத்து குறித்து
வாசகர்களுக்கு உறுத்துவதே இல்லை.
ஆய்ந்து சொன்னால்…
அவர்கள் அது குறித்து யோசிப்பதும் இல்லை.
அதெல்லாம் அவர்களுக்கு பொருட்டும் இல்லை!

படைப்பாளிகள் பொடி வைத்து மேவும்
நீளப்போக்கான பளிங்குத் தரையில்
சுருண்டுவிட விரும்பியே
வாசகர்களும் வாசிக்கிறார்கள்!

காலம் காலமாய்
நாம் அறிந்த
‘முயற்சி திருவினையாக்கும்’
என்கிற ஒற்றை வாக்கியத்தை
பேச்சாலும் எழுத்தாலும்
‘நம்பிக்கை புகட்டும்’ வியாபாரிகள்
கைகளில் எடுத்துக் கொண்டு
கால்காசுக்கு உதவாத
உதாரணங்களால் இட்டு நிரப்பி
புத்தகம் செய்கிறார்கள்.
வருஷம் தவறாமல் வாசகர்களும்
வாங்கிதான் வாசிக்கிறார்கள்!

தீர சொல்லப்பட்ட கடவுளர்களை
இன்னும் அழிபடாத மூலங்கள்
காபந்து செய்யதபடி இருப்பினும்…
பலநூறு எழுத்தாளர்களின் வழியே
எல்லாக் கடவுளர்களும்
புதிது புதிதான மகத்துவங்களுடன்
எழுந்தருளிக்கொண்டே இருக்கிறார்கள்!!
எந்தக் குப்பைகளையும்
காசு கொடுத்து வாசிக்க
வாசகர்கள் அசருவது இல்லை!

கலைநுட்பம் கைகூடிய
படைப்பாளிகளே ஆனாலும்
அவர்களால் ஒருபோதும்
அவர்களைத் தாண்ட முடியாது!
எழுத்தாளர்களது
மண்டைகளின் கொள்ளளவுதான்
அவர்களது எல்லை!

கருப்பு கண்ணாடி போட்ட நிலையில்
படைப்பாளி
தான் கண்டவைகள் அத்தனையையும்
கருப்பாக எழுத நேரும் கொடுமைகள்
எழுத்துலகில் சாதாரணம்!
அவனது மண்டை நரம்பில்
எது ஒன்று சுளுக்கி இருந்தாலும்
அதன் பாதிப்பு
அவனது எழுத்தில் மேவி
வாசகர்களை ஒப்புக்கொள்ள வைக்கப் படுத்தும்.

வாசிப்பில்
வாசகர்கள்தான்
ஜாக்கிரதை கொள்ளவேண்டும்.
படைப்பாளிகளிடம் குறைவாக ஏமாற
இந்த ஜாக்கிரதையை விட்டால்
வேறு வழியேயில்லை.

இலக்கியத்தை முன் வைத்து
எதையெதையோ கூட்டி
படைப்பாளிகள் சமைக்கும்
நவீன படையல்களின் ருசியில்
நாவில் ஜலம் வழிய…
சென்னை ராயப்பேட்டை
பைலட் திரையரங்கிற்கு அருகே
ஓரு புத்தக கடையை
குறிவைத்து தேடிப்போவது
எண்பதுகளில் எனக்கு வழக்கம்.
புத்தகங்களை நான்
தேர்வு செய்யும் வேகத்தையும்
தூக்க முடியாது தூக்கி திரும்புவதையும்
பார்க்கச் சகிக்காமல்
அந்தப் புத்தகக் கடையின்
உரிமையாளர்களில் ஒருவர்
மனித நேயத்தோடு… 
‘தாஜ்…
இந்த புத்தகங்கள் இல்லாமலேயே,
இவைகளை வாசிக்காமலேயே,
சிறப்பாக வாழமுடியும் , தெரியுமா?’ என்றார்.
அந்த மஹா உண்மை உறைக்காது போக
மாறாய் நான் முகம் சிவந்தேன்.
அவர் சட்டென எதிரியாகியும் போனார்.

‘அன்றைக்கு…
விழுந்து விழுந்து புத்தகங்கள் வாங்கின காசில்
கால்காணி காடு வாங்கிப் போட்டிருந்தால்
இன்றைக்கு கைகொடுத்திருக்கும்’
காலம் தாழ்ந்து
இந்த நினைவெழும் நாட்கள் தோறும்
அவர் எனக்கு
உற்ற நண்பராக வாமனம் கொள்கிறார்!

புத்தகங்களை
தொடர்ந்து வாசிக்கும் பேர்வழியென்று
காலத்தை உதாசினம் செய்ததாலோ என்னவோ
இன்றைக்கும்…
அது என்னை மன்னிப்பது இல்லை!
அதனிடம் சரணடைந்தெல்லாம் ஆகிவிட்டது
இறங்கவே இல்லை அது!

‘டேய்… உருப்படுற வழியைப்பாரு.
இப்படி சதா படிச்சிகிட்டே இருக்காதே
அறிவு அறுத்துடும்.’
என் பாட்டியின் அன்றைய கூப்பாடு இது!
கேட்டேனா நான்?
கேட்டிருக்கலாம்.

ஆபிதீனிடம்
எழுத்து குறித்து பல முறை
பலகோணங்களில் கேட்டிருக்கிறேன்.
அழுந்த விரக்தியோடு
பதில் சொல்வார்.
ஆனாலும் நகைச்சுவை பின்னும்!

‘ஒன்னுமில்லையா…
எதிலும் ஒன்னுமில்லையா’ என்பார்.
அவரது பக்கங்களில்…
அவருக்குப் பிடிக்காத விளையாட்டையெல்லாம்
விளையாடிக் கொண்டிருப்பதைப் பற்றி…
‘ஏங்க?” என்றால்…
‘எதிலும் ஒன்றுமில்லை என்பதை…
நம்மை மாதிரி வாசகர்களும்
தீர அறிய வேண்டாமா!’ என்பார்.

எழுத்து/ எழுத்தாளர்களை முன்வைத்து
வாசகர்கள் ஒன்றைத் தெளிவுற வேண்டும்.
மதம் தொட்டு
மண் / பொன்/ பெண் மட்டுமல்ல
எழுத்தும் போதைதான்!
லாகிரிகளை மிஞ்சும் லாகிரி!
எதையும் மிதமாக அணுகுவதே இதம்.

‘எழுத்தாளன் – எழுத்து’ போதையை
கைவிட முடியாதவர்களுக்கு
ஓர் உபாயமும் உண்டு!
படித்துக் கொண்டிருப்பது எத்தனை
மகத்துவங்களாக இருப்பினும்
அதனை மூடிக் கடாசிவிட்டு
வெளியேருங்கள்.
புதிய கண் கொள்ளுங்கள்.
அண்டம் தழுவிய ‘பெரும்வெளி’
உங்களுக்கு திறக்கும்!

அதுதான்
எல்லோருக்குமான
பெரிய எழுத்துப் புத்தகம்!!
தீராத பக்கங்களை கொண்டது.

வானமும் மண்ணும்
மலையும் மடுவும்
கடலும் அலைகளும் சாதாரணமல்ல!

காற்றில் எழுதியபடிக்கு இருக்கும்
அடர்ந்துயர்ந்த மரங்களின் கிளைகள்
வெறும் வியப்பு மட்டுமல்ல!

பறவைகளின் சப்தமொழிகள்
உலக மொழிகளின்
தவிர்க்க முடியாத உன்னதம்!
உள் வாங்கிப் பாருங்களேன்
சிலிர்க்காமல் முடியாது!

இந்த மனிதர்களையும் மிருகங்களையும்
வாசிப்பதென்பது வேறு வேறல்ல.
எல்லாம் ஒன்றுதான்!
ஒன்றின்.. இரண்டு பக்கங்கள்!
வாசிக்க வாசிக்கத்தான் புரிய வரும்.

எதிர் கொள்ள நேரும்
இடி/ மின்னல்/ மழை/ நிகழ்த்தும் சிலிர்ப்பை
எந்தவொரு எழுத்தோ… எழுத்தாளனோ
யுகத்திற்கும் தரமுடியாது.

பேருண்மைகளை தரிசனம் கொண்டு
அனுபவிக்கும் நொடிகளிலெல்லாம்….
நேற்றுவரை மெச்சிய
எழுத்தும்-எழுத்தாளர்களும்
நிச்சயம் நம் காலடி
மண்ணுக்குள் புதைந்துப் போவார்கள்.
*
‘சரி தாஜ்….
பிறகு நீங்கள் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?’
சரியான கேள்வி.
வாசகர்களா கேட்பது….?
நன்றாக கேளுங்கள்.
புத்தியில் உறைக்க கேளுங்கள்.
விதிங்க
எல்லாம் விதி!

***

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்
E-Mail : satajdeen@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s