‘துக்ளக்’ வழங்கும் தீபாவளி பட்டிமன்றம் – சத்யா

‘துக்ளக்’ வழங்கும் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்

thuklaksathya
-சத்யா

‘துக்ளக்’ 21/10/2009 இதழிலிருந்து, நன்றிகளுடன்…

***

தமிழக முதல்வர் கலைஞருக்கு தி.மு.க.வும் தமிழக அரசும் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு விருதுகளை வழங்குகின்றன. அவர் முன்னிலையில் கட்சியினரும், கவிஞர்களும், பேச்சாளர்களும் அவரை எவ்வளவு புகழ்ந்தாலும், அவருக்கு முழு திருப்தி ஏற்படுகிறதா என்று தெரியவில்லை.எதற்கு சந்தேகம்? ஐஸ் வைப்பது என்று முடிவு செய்த பிறகு அதில் சிக்கனம் எதற்கு? தாரளமாக இப்படிப் புகழ்ந்தால் கலைஞர் மறுக்கவா போகிறார்? தீபாவளி சமயத்தில் டி.வி சேனல்கள் ஒளிபரப்புகிற பட்டிமன்றங்களுக்கு சவால் விடும் வகையில் ‘துக்ளக்’கும் களத்தில் குதிக்கிறது.

***

நடுவர் : நேயர்களுக்கு வணக்கம். கலைஞருக்கு விருது கொடுக்கிற மாதிரி ஒரு மகிழ்ச்சியான விஷயம் உலகத்தில் வேறு எதுவுமே இருக்க முடியாது. என் வாழ்க்கையில் பெரும்பகுதியை நான் கலைஞரைப் பாராட்டுவதற்காகவே செலவிட்டிருக்கிறேன். ‘கலைஞரின் புகழுக்குக் காரணமாக இருப்பது அவரது அரசியல் பணிகளா, இலக்கிய-சமுதாயப் பணிகளா?’ என்ற அருமையான தலைப்பை கலைஞரே தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார். கடலின் அளவைக் கூட அளந்து விடலாம். கலைஞரின் சாதனைகளை அளந்து விட முடியாது. இருந்தாலும் நம்முடைய பேச்சாளர்கள் எப்படி அளக்கிறார்கள் என்று பார்ப்போம்.

பேச்சாளர் : கலைஞர் வேறு, தமிழ் வேறு என்று பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பதே தவறான தகவல். தமிழுக்கு வயது 86-தான். கலைஞர் பிற்ந்தவுடன் செய்த முதல் வேலை, தமிழுக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததுதான். கலைஞரால்தான் விருதுகளே பெருமை அடைகின்றன. நீயே தமிழனுக்கு வழங்கப்பட்ட விருது. உனக்கு எதற்கு இன்னொரு விருது? நீயே உலக ரத்னா. உனக்கு எதற்கு பாரத ரத்னா? உடன்பிறப்புக்கு நீ எழுதும் கடிதத்திலேதான், நாங்கள் பகவத் கீதையும், பைபிளும், குர்-ஆனும் கற்றுக் கொள்கிறோம். நான் கனவில் காந்தியைக் கண்டபோது அவர் என்ன கேட்டார் தெரியுமா? ‘என்னை ஆளாக்கிய கலைஞர் எழுதிய ‘உளியின் ஓசை’ சி.டி கிடைக்குமா?’ என்றுதான் கேட்டார். அதுதான் கலைஞரின் இலக்கிய சாதனை.

நடுவர் : வெங்கடாசலபதியை தரிசிக்க திருப்பதி செல்ல வேண்டும். யேசுபிரானைப் பிரார்த்திக்க ஜெரூசலம் செல்ல வேண்டும். அல்லாவைத் தொழ மெக்கா செல்ல வேண்டும். மூன்று தெய்வங்களையும் ஒரே சமயத்தில் வணங்க கோபாலபுரம் சென்றால் போதும். அண்ணாவையும், பெரியாரையும், காந்தியையும், நேருவையும் ஒரே சமயத்தில் பார்க்க அறிவாலயம் வர வேண்டும். அதுதான் கலைஞர் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற வசதி. கலைஞர் தகரத்தைத் தொட்டால் தங்கம். மண்ணாங்கட்டியைத் தொட்டாலும் மந்திரி. அடுத்த பேச்சாளரை அழைக்கிறேன்.

பேச்சாளர் : புத்தன் போதி மரத்தடியில் ஞானம் பெற்றான். போதி மரமோ கலைஞரின் காலடியில் ஞானம் பெற்றது. இந்த வரலாற்றை மாற்ற நினைத்தால் எதிர்கால சமுதாயம் உங்களை மன்னிக்காது. கலைஞர் மூச்சு விட்டால் முல்லைப் பெரியாறே சாம்பலாகி விடும். அவரிடமா விளையாடுகிறீர்கள்? வள்ளுவர் திருக்குறளில் 133 அதிகாரங்களை உருவாக்கினார். கலைஞர், தன் குடும்பத்திலேயே அதற்கும் மேற்பட்ட அதிகாரங்களை உருவாக்கிக் காட்டியிருக்கிறார். பாளையங்கோட்டை சிறையில் பல்லிக்கே பயப்படாதவரை, கரப்பானுக்கே கலங்காதவரை, காவிரிப் பிரச்னையில் தோற்கடித்து விட முடியுமா? கலைஞரின் சின்னம் மட்டுமல்ல, அவரே சூரியன்தான். அவரைத்தான் அகில இந்திய அரசியல் சுற்றி வர வேண்டும்.

நடுவர்: சூரியனே கலைஞரைத்தான் சுற்றுகிறது. புவி ஈர்ப்பு விசையையும் ஈர்க்கும் ஆற்றல் கலைஞருக்கு உண்டு. என் தலைவன் கலைஞர் உலகில் கற்பதற்கு எதுவுமே பாக்கியில்லை என்பது உலகின் குறை. பல்கலைக்கழகங்களே கலைஞரைப் படித்துத்தான் பட்டம் பெற வேண்டும். நான் கம்பனைக் கண்டதில்லை. ஷெல்லியைக் கண்டதில்லை. கலைஞரின் பேனா மூடிக்குள் இருவரையும் கண்டேன். எங்கள் இறைவா, உன் நெஞ்சுக்கு நீதி, சுப்ரீம் கோர்ட்டுக்குப் பாடம். பராசக்தி வசனம், பாருக்கே வேதம். நீ, நீயாகவும் வாழ்கிறாய், அண்ணாவாகவும் வாழ்கிறாய், பெரியாராகவும் வாழ்கிறாய். எப்படி உன்னால் மட்டும் இப்படியெல்லாம் ஒரே சமயத்தில் கண்டபடி வாழ முடிகிறது? அடுத்த பேச்சாளரைக் கேட்போம்.

பேச்சாளர் : திருக்குறளை தமிழனுக்கு அடையாளக் காட்டியதே கலைஞரின் குறளோவியம்தான். மறுக்க முடியுமா? பகுத்தறிவு உணர்வோடு திருக்குறளைத் திருத்திய தீரம் கலைஞருக்கு மட்டும்தான் இருந்தது. ஆகாயம் கூட உன் புகழை அண்ணாந்து பார்க்கிறது. அண்ணாவின் இதயத்தையும், பெரியாரின் உள்ளத்தையும், காயிதே மில்லத்தின் நெஞ்சத்தையும், தமிழ் சிம்மாசனத்தில் அமர்த்தியவன் நீ. இன்றைய தினம் குப்பனும் சுப்பனும் ‘மானாட மயிலாட’ பார்த்து நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்றால், அதைவிட மக்கள் தொண்டு வேறென்ன இருக்க முடியும்? ஆணும் பெண்ணும் நடனம் ஆடும்போது தமிழ் வளரும் என்பதைக் கண்டறிந்த ஒரே தலைவன் கலைஞர்தான். ஏழையின் சிரிப்பில் இயறகையையும், குடும்பத்தினரின் சிரிப்பில் கோடீஸ்வரர்களையும் கண்டவர் கலைஞர். அதுதான் கலைஞரின் சமுதாயப் பணி.

நடுவர்: வீட்டிலிருந்து பொருள் எடுத்து வந்து கொடுப்பவன் கொடையாளி. ஆனால், வீட்டையே எடுத்துக் கொடுப்பவர் கலைஞர். காவிரியை கர்நாடகாவுக்குக் கொடுத்தாய். பாலாறை ஆந்திராவுக்குக் கொடுத்தாய். முல்லைப் பெரியாறை கேரளாவுக்குக் கொடுத்தாய். உன்னை விடவா கர்ணன் கொடையாளி? கர்ணம் இன்று இருந்திருந்தால், கொடைத் தன்மையைக் கொடுக்கும்படி கலைஞரிடம் கையேந்திருப்பான். நீ தலைவர்களின் தலைவன். பகுத்தறிவில் பெரியாருக்கும் பெரியார். அறிவில் அண்ணாவின் அண்ணன். அவ்வளவு ஏன்? ஆதாமுக்கே அண்ணன். நீ விழித்தால்தான் இங்கு காலண்டர் கிழியும். நீ நடந்தால்தான் இங்கு கடிகாரம் சுற்றும். நீ மூச்சுவிட்டால் காற்றே காணாமல் போகும். நீ வாய் திறந்தால் வங்கக்கடலே வற்றிப் போகும். அடுத்த பேச்சாளரை அழைக்கிறேன்.

பேச்சாளர் : தலைவா, உன்னை மனதால் நினைத்தாலே நான் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வளவு இனிப்பு, உன்னைப் பற்றிய நினைப்பு. உன் பேச்சு நடையில், மாநில அரசு இயங்குகிறது. எழுத்து நடையில் மத்திய அரசு இயங்குகிறது. நீ பிரதமருக்கு கடிதம் எழுதினால், அமைச்சரவை அதிர்கிறது. தந்தி அனுப்பினால் டெல்லியில் பூகம்பம் ஏற்படுகிறது. குடும்பத்தோடு நேரில் சென்றால், மத்திய அரசே நடுங்கிப் போகிறது. சட்டசபையில் நீ பேசினால்தான் ஜனநாயகத்தால் மூச்சுவிட முடிகிறது. நீ எழுதினாய் பராசக்தி. அதனால்தான் தமிழகம் பெற்றது அபார சக்தி. நீ எழுதினாய் திரும்பிப் பார். தமிழகம் எங்கும் தோன்றியது டாஸ்மாக் பார். உன் கைகளுக்கு ஏழு பிறவியிலும் முத்தம் கொடுக்கும் பேறு எனக்குக் கிடைக்க வேண்டும். அதுதான் உன் அரசியல் சாதனைக்கு நான் செய்யும் கைம்மாறு.

நடுவர் : கலைஞர் பிறந்திருக்காவிட்டால் , தமிழன் இன்னும் இருட்டில்தான் தடுமாறிக் கொண்டிருப்பான். கலைஞர் பிறந்த பிறகுதான், ஒளி தர வேண்டும் என்ற பொறுப்புணர்வே சூரியனுக்கு வந்தது. கலைஞர் பெருமானே, உன் மீது கொண்ட பொறாமையால், இயற்கை உன்னை வஞ்சித்து விட்டது. சாக்ரடீஸூம், ஷேக்ஸ்பியரும், பெர்னாட்ஷாவும் உனக்கு முன்னால் பிறந்ததால், சிந்தனையாளர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டு விட்டார்கள். இது இறைவன் செய்த படைப்புச் சதி. மனோகராவிலும், மந்திரி குமாரியிலும் நீ சொல்லாத கருத்துக்களையா அவர்கள் சொல்லிவிட்டார்கள்? அண்ணா இன்று உயிரோடு இருந்திருந்தால், உன்னை தலைவனாக ஏற்றிருப்பார். பெரியார் இன்று இருந்திருந்தால் துணை முதல்வரைப் பாராட்டி விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருந்திருப்பார். அடுத்த பேச்சாளரே, வருக!

பேச்சாளர் : 14 வயதிலேயே ஹிந்தி அரக்கியை வடநாடு வரை விரட்டிச் சென்ற வீரம், கலைஞரின் வீரம். உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று முழங்கியபடி உயிர் நீத்த தம்பிகளின் ஒரே அண்ணன் நீ. உன்னுடைய அத்தகைய தியாகப் பணிகள் தொடர்வதற்காகவாவது. ‘உயிரை விடத் தயார்’ என்று இன்னும் பலகோடி நூறாண்டுகளுக்கு ஹிந்தி ஆதிக்க வெறியர்களை நீ எச்சரிக்க வேண்டும். நீ நெருப்பை எரிப்பவன். தென்றலைக் குளிர்விப்பவன். அழகிரி சொன்னதைச் செய்தாய். ஸ்டாலின் சொன்னதைச் செய்தாய். கனிமொழி சொன்னதைச் செய்தாய். சொன்னதைச் செய்பவன் நீயன்றி வேறு யார்?

நடுவர் : நீ பகுத்தறிவின் உச்சம். எதிரிகள் உனக்கு துச்சம். நீ செல்வது – அண்ணாவே பயந்த – அண்ணா வழி. அதன் மூலம் எதிரிகளை அழி. உன் நாவும் பேனாவும் உனக்கு துணை. உலகில் யார்தான் உனக்கு இணண? நீ அனுப்பினாய் இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு. இனி ராஜபக்க்ஷே ஒரு புழு. நீ எதைத் தொட்டாலும் வெற்றிதான். இடைத் தேர்தலிலும் வெற்றி. உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி. வறுமையை ஒழிப்பதற்கு வாக்களியுங்கள் என்று கேட்பது அரசியல் மரபு. ஆனால் நீயோ, கவர் கொடுத்து, ஒருநாள் வறுமையை ஒழித்துவிட்டுத்தான் ஓட்டே கேட்கிறாய். அதனால்தான் வெற்றி தேவதை உனக்கு அடிமையாகி விட்டாள்! வணக்கம்

**

நன்றி : ‘துக்ளக்’ / சத்யா

2 பின்னூட்டங்கள்

 1. srini said,

  22/10/2009 இல் 15:29

  paguthuarivu kadavul kalaignara allathu periyara adutha pattimanra sorry
  kalaignarmanra thalaippu

 2. Taj said,

  25/10/2009 இல் 13:35

  கடலின் அளவைக் கூட அளந்து விடலாம். கலைஞரின் சாதனைகளை அளந்து விட முடியாது!
  Nijam!!
  Valzha Tamilaham!!!
  – Taj


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s