கமல் ஒரு மகான் ! – ஏ.ஹெச்.ஹத்தீப்

kamal-UPO

உன்னைப்போல் ஒருவன் – திரை விமர்சனம்

 ஏ.ஹெச்.ஹத்தீப்

இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “போதிய ஆதாரங்கள் இல்லை. நேரடி சாட்சிகள் இல்லை. குற்றத்தை சந்தேகமற நிரூபிக்கிற ஆவனங்கள் எதுவுமில்லை. என்றாலும் இந்திய வெகுஜனங்களைத் திருப்தி படுத்துவதற்காகவே குற்றம் சாட்டப்பட்ட அஃப்ஸல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்”என்று உலகமே முக்கின்மீது விரல் வைத்து வியக்கின்ற ‘அபார’மான தீர்ப்பொன்றை வழங்கிற்று. உச்சநீதிமன்றத்துக்கும் உன்னைப்போல் ஒருவனுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். இரண்டுமே சட்டத்தின் பார்வையில் குற்றமிழைக்கின்றன. ஒருவனைத் தண்டிப்பதற்கு ‘மக்கள் கோபத்தில் இருக்கிறாரர்கள்’என்று உணர்வது மட்டும் போதாது. ஒரு காரணத்துக்காக மக்கள் குஜராத்தில் சினம்கொண்டிருப்பார்கள். அதே காரணத்திற்காக காஷ்மீரில் மகிழ்ச்சியில் மிதப்பார்கள். மகாராஷ்டிரக்காரர்களும் பஞ்சாபைச் சேர்ந்தவர்களும் ஒரே தேசத்தவர்கள்போல் தோன்றினாலும் அவர்களுக்குள் அநேக மதமாச்சரியங்கள் உண்டு. தமிழக மக்களின் வெறுப்பையும் மத்தியப்பிரதேசத்தவர்களின் ஆத்திரத்தையும் ஒன்றாக முடிச்சுப்போடுவது தேசத்தின் நாடித்துடிப்பை உணராதவர்களின் கணிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய வெகுஜனம் ஒவ்வோர் இடத்திலும், ஒவ்வொரு தருணத்திலும் வெவ்வேறு காரணங்களுக்காக மகிழ்கிறார்கள் அல்லது இகழ்கிறார்கள்.இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், காமராசர், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஒப்பற்ற தலைவர்கள் அனைவருமே ஒருகாலக்கட்டத்தில் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள்தான். இல்லையெனில் அரசியல் சரிவுகளுக்கு அவர்கள் ஆட்பட்டிருக்கமாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் மக்களால் நேசிக்கப்பட்டனர் என்பது என்பது எப்படி அபத்தமோ அதுபோலவே ஒட்டுமொத்த தேசமுமே அவர்களை அரவணைத்துக்கொண்டது என்பதும் பச்சைப்பொய். எனவே ஒருவனைத் தூக்கிலிடுவதற்குத் தேவைப்படுவதெல்லாம் நேரடிச் சாட்சிகள் மற்றும் உறுதியான ஆதாரங்களே தவிர, மக்களிடம் அவ்வப்போது தோன்றி மறையும் உணர்ச்சிகள் அல்ல. நல்லவேளையாக, வெகுஜனங்களால் அவர்கள் தூக்கியெறியப்பட்ட சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ‘மக்களைக் குஷிப்படுத்த’ என்ற வாக்கியத்தில் மயங்கி தலைவர்களைச் ‘சிரச்சேதம்’ செய்கின்ற அபாரமான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பிக்காதது நாடு செய்த புண்ணியம்.

அப்படித்தான் இருக்கிறது ‘உன்னைப்போல் ஒருவ’னில் கமலஹாசனால் முன்மொழியப்பெற்ற ஆவேசக்கருத்தும். ‘ஆதாரங்கள் எதுவுமில்லை.ஆனால் தூக்குத்தண்டனை உறுதி’ என்ற விசித்திரமான தீர்ப்புக்கும் கமலின் முடிவுக்கும் அதிக வித்தியாசமில்லை. ‘மக்களைத் திருப்திப்படுத்த’ என்கிற அர்த்தமற்ற வார்த்தை ஜாலங்கள், ஆழ்ந்த அறிவு சார்ந்ததோ சட்டத்தின் உயிரோட்டத்தை அடிப்படையாகக்கொண்டதோ அல்ல. உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசராகட்டும் அல்லது அறிவுஜீவி எனப்புகழப்படும் கமலஹாசனாகட்டும் சராசரி அளவுகோளுக்கு அப்பாற்பட்டவர்கள்.தராசுகளின் கொள்ளளவில் அவர்கள் கட்டுப்படமாட்டார்கள்.அவர்கள் கூறுவது வேதவாக்கு. எதையும் கூறுவதற்கு முன்னால் ஒன்றுக்கு நூறுமுறை சிந்திக்க வேண்டிய கட்டாயமும் கடமையும் அவர்களுக்கு உண்டு.

குறிப்பாக கமலுக்கு.

ஏனெனில் அவர் விரல் சொடுக்கும் நேரத்தில் மக்களைச் சென்றடைகிறார். ஈட்டியைவிட ஆழமாக அவரது கருத்துக்கள் நெஞ்சில் பாய்கிறது.ஐந்து வயது குழந்தைமுதல் எழுபதுவயது முதியவர்வரை திரைப்படம் என்ற சக்திமிக்க மீடியாவால் ஈர்க்கப்பட்டவர்கள். எனவே எண்ணித் துணிகக் கர்மம் என்று சுட்டிக் காட்டுவது உசிதம்.

சுமார் பத்தாண்டுகளுக்குமுன், ‘குருதிப்புன’லில், ‘தீவிரவாதிகளுக்குள்ளிருந்தே அவர்களை எதிர்ப்பவன் உருவாக வேண்டும்’ என்ற ஒரு கருத்தை முன்வைத்தார் கமல். அது ஒரு சொதப்பல் என்றே தோன்றிற்று. தீவிரவாதத்தின் மூர்க்கத்தையும் வீரியத்தையும் பற்றி விரிவாக உணர்ந்துகொள்ள முடியாத பக்குவமின்மையும் பலவீனமுமே அதற்குக் காரணங்கள் எனக்கூறலாம். ‘பயங்கரவாதிகள் திருந்த வேண்டும்’ என்று எளிமையாகச் சொல்லவேண்டியதை அப்போது அவர் கடுமையாக, மக்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாத ‘சங்கேத பாஷை’யில் சொல்லிவிட்டார் என்றே கருத வேண்டியிருக்கிறது. தீவிரவாதிகள் திருந்த வேண்டும் என்பதைக்காட்டிலும் அவர்கள் முற்றிலுமாக ஒழிய வேண்டும் என்று எடுத்துரைப்பது நன்று. சாலச் சிறந்தது. காரியச் சாத்தியமிக்கது. எதார்த்தமானது.

திருந்துவதும் திருத்துவதும் தீவிரவாதிகளின் அகராதியில் இடம் பெறாத சொற்கள்.

இவற்றைப் பின்னர் புரிந்துகொண்டாரோ என்னவோ ஒரு மாமங்கத்துக்குப்பின்னர், இப்போது ‘உன்னைப்போல் ஒருவன்.’ வெகுஜனங்களே வீறுகொண்டு வெகுண்டெழுந்து தீவிரவாதிகளை வேரறுக்க வேண்டுமென அறிவுறுத்துகிறார். ‘அஃப்ஸல் குருவுக்கு மரணத் தண்டனை வழங்காவிடில் இந்திய வெகுஜனமே குற்றம் சாட்டப்பட்டவரைத் துவம்சம் செய்துவிடும் என்று தனக்குத்தானே கற்பித்துக் கொண்டு உச்சநீதிமன்றம் சற்றும் முதிர்ச்சியற்று நடந்துகொண்டதைப்போன்று இப்போது புரட்சிநாயகன் கமலே ‘சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்’ என்று மக்களை ஆசீர்வதிக்கிறார். அதன் விளைவுகளைச் சற்றும் உணராமல் மக்களை உசுப்புகிறார். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கு இதுதான் உருப்படியான செயல் என்று ஈனஸ்வரத்தில் முனகுகிறார். தீவிரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்டப்போவதாகச் சூளுரைத்துக்கொண்டு இன்னொரு புதிய பயங்கரவாத வர்க்கத்துக்குப் பிறப்புக்கொடுக்கப் பகீரதப் பிரயத்தனப்படுகிறார்.

ஒரு விஷயத்திற்காக அவரைப் பாராட்டியே தீரவேண்டும்: பயங்கரவாதத்துக்கெதிராக ஒவ்வொரு மனிதனும் ஏதாவது செய்தாக வேண்டிய தருணமிது என்று அவர் ஆழமாக எடுத்துரைக்கிறார். ஆனால் காவல்துறையினர் உட்பட ‘எல்லோருமே துப்பாக்கி ஏந்துங்கள்’ என்பதை ஏற்பதற்கில்லை. இன்னும் சொல்லப்போனல் பயங்கரவாத வளர்ச்சிக்கு ஒருவகையில் காரணகர்த்தாவான போலீஸ்காரர்களின் கைகளில் காரியத்தை ஒப்படைப்பதுகூட ஒரு கொடுஞ்செயல். தீவிரவாதம் பிறந்ததற்கும் வளர்ந்ததற்கும் விரிந்துபரவியதற்கும் அதிகார வர்க்கம் முக்கியக் காரணம் என்பதைக் குருதிப்புனனில் அழுத்தத் திருத்தமாகச் சொல்லிவிட்டு, இப்போது அதற்கு நேரெதிர்த்திசையில் பயணிக்கப் பார்க்கிறார் கமல்.

ஆனால் இந்தப் படத்தில் அவர் ஏதோ ஒரு நல்ல விஷயம் சொல்ல விரும்புகிறார். அதற்காகப் பிரயாசைப்படுகிறார். அவர் சிரமப்படுவதை நன்றாக உணர முடிகிறது.

ஆனால், வெகுஜனம் வாளேந்த வேண்டும் என்பது சரியான பாதையல்ல. ஒரு சராசரி இந்தியன் வெடிகுண்டு தயாரித்து, மனித நடமாட்டங்கள் மிகுந்த பகுதிகளில் வைத்துவிட்டு, காவல்துறை ஆணையரைக் கைப்பேசியில் அழைத்து, விவாதங்கள் புரிந்து, கோவை மத்தியச்சிறைவாசிகளை அழைத்துவரும்படி நிபந்தனை விதித்து, அவர்களை வெடி வைத்துச் சிதறடிக்க சினிமாவிலேயே இரண்டு மணி நேரம் பிடிக்கிறதென்றால், உண்மையான தீவிரவாதிகளுக்கு ஒரு வினாடி போதும். ஏனெனில், அவர்களுக்கு மதம் இல்லை. மார்க்கமில்லை. சட்டமில்லை. இதயமில்லை. மனிதாபிமானமில்லை. “சுடு” என்று உத்தரவு வந்தால், “நிறுத்து” என்று மறுஆணை வரும்வரை சுடுவதைத் தவிர அந்தக் கயவர்களுக்கு வேறு எந்த எழவுமில்லை. சதா இயந்திரத் துப்பாக்கிகளின் ஸ்ட்ரிக்கரில் விரல் பதித்துக் கொண்டிருக்கும் இதயமற்ற இயந்திரங்களை ஒழித்துக்கட்ட கமலின் இந்தப்புது அவதாரம் போதாது.

“பயங்கரவாதிகளின் இதயத்தோடு பேச வேண்டும்” என்கிறார் இங்கிலாந்து பிரதமர் கார்ட் ப்ரவ்ன். “அவர்களது குடும்பத்தினர் வாழும் சூழலை மாற்றியமைக்க வேண்டும். அவர்களது குழந்தைகளுக்கு உயர்க்கல்வி அளிக்க வேண்டும் ”என்று பரிந்துரைக்கிறது 565 பக்கங்கள்கொண்ட 9/11 அமெரிக்க ஆணைய அறிக்கை. தீவிரவாதத்தை ஆராய்ச்சிசெய்த அனைத்து உளவியல் நிபுணர்களும் ‘உன்னைப்போல் ஒருவன்’ கமலுக்கு எதிரான கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.

எனவே இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு கமல் முடிவெடுக்க வேண்டும். அவர் ஒரு சிருஷ்டிகர்த்தா. புதுமையான, அற்புதமான கருத்துக்களுக்கு வடிவம் கொடுப்பவர். அவர் சராசரி மனிதரல்ல. அவரொரு மகான்.

மகான்களின் தவறுகள் மன்னிக்கப்படுவதில்லை.

**

நன்றி :

ஏ.ஹெச்.ஹத்தீப் | E- Mail : hatheeb@gmail.com

***

இப்போதைக்கு ஒரே ஒரு சுட்டி! :

உன்னைப்போல் ஒருவன் பாசிசத்தின் இலக்கியம்!! – வினவு

2 பின்னூட்டங்கள்

 1. Jawahar said,

  06/10/2009 இல் 05:56

  எதிர்க் கருத்துக்களைச் சொல்லும்போது உணர்வுக் கலப்படமின்றி சொன்னால் அவை சேர வேண்டிய மனங்களில் சேர்ந்து சிந்திக்கவும் வைக்கும். அதை வெகு சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு ஒடுக்குவது தாற்காலிகமானதுதான். ஆனால் பதிலுக்கு அடிக்காமல் சமாதானத்துக்கு அழைத்துக் கொண்டே இருந்தால், அதை பயம் என்று தவறாகக் கருதிக்க் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அடிக்க முடியும் என்று காட்ட வேண்டும். அதற்கப்புறம் சமாதானத்துக்கு அழைக்க வேண்டும். அப்போதுதான் அந்த சமாதானம் பயத்தில் வந்ததல்ல, பிரியத்தில் வந்தது என்பது புரியும்.

  http://kgjawarlal.wordpress.com

 2. M.ABDUL KHADER said,

  18/10/2009 இல் 14:09

  Dear Hatheeb sab,

  Sariyaga soneergal magaan galin thavarugal mannaikkappaduvathillai.

  Anbudan
  Nagore M.ABDUL KHADER
  DAMMAM, KSA


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s