‘கரை தேடும் ஓடங்கள்’ – நாகூர் ரூமியின் முன்னுரை

usha

சந்தியா பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கும் , சகோதரி ராமசந்திரன் உஷாவின்  “கரை தேடும் ஓடங்க’ளுக்கு (‘கலைமகள்’ நடத்திய  நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது) நண்பன் நாகூர் ரூமி அளித்த முன்னுரை. உஷாவுக்கு வாழ்த்துக்கள். பதிவிடக் கேட்டதும் உடனே அனுமதியளித்ததற்கு நன்றிகளும்.

*

கரை தேடும் ஓடங்கள்

முன்னுரை – நாகூர் ரூமி

 

 
எல்லா உறவுகளுமே  பணத்தை அடிப்படையாக வைத்த உறவுகள்தான் என்று சொல்வார்கள். நூற்றுக்கு தொன்னூறு விழுக்காடு  அது உண்மையாகிப் போவதைத்தான் நாம் நம் அன்றாட  வாழ்வில் பார்க்கிறோம். அதிலும் சம்பாதிக்கச்  செல்பவர்கள் பெண்கள் என்றால்? பிரச்சனைக்கே புதுவித  நிறம் வந்து விடுகிறது.  அப்படிப்பட்ட ஒரு பிரச்சனையை, மூன்று பெண்களில் பிரச்சனைகளை, மிக அழகாகப் பேசுகிறது இந்த குறுநாவல்.

 
உஷாவிடமிருந்து இப்படி ஒரு படைப்பு வர முடியும் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தருகிறது. இந்த கதையில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஒன்று முஸ்லிம் சமுதாயத்தினர் பேசும் மொழி சார்ந்தது. இன்னொன்று இந்தக் கதை எடுத்துக் கொண்ட பிரச்சனை சார்ந்தது.

 
முஸ்லிம்கள் பேசும் மொழியை ஒரு முஸ்லிம் எழுதினால் அது சரியாகவும் நம்பகத்தன்மையோடும் இருக்கும். ஏனெனில் அவர்கள் ரத்தத்தோடு கலந்த மொழி அது. மற்றவர்களுக்கு அது ஒரு யுத்தியாகிப் போகும் அபாயம் உண்டு.

 
மற்ற படைப்பாளிகளால் அந்த மொழியைக் கொண்டு வர முடியாதா என்றால், முடியும். ஆனால் அதற்கு அந்த படைப்பாளி அசாத்திய  நேர்மையும் திறமையும் கொண்டவராக இருக்க வேண்டும். அந்த இரண்டு அரிய தன்மைகளும் உஷாவுக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது.

 
‘கொட்டாயில’ பார்த்தாதான் சினிமா நன்றாக இருக்கும் என்று ஒரு இடத்தில் பெண்கள் பேசிக்கொள்வதாக வருகிறது. அந்த சொல்லை மிகச்சரியாக ஒரு படைப்பினுள் புகுத்துவதற்கு அந்த சொல்லைப் பயன்படுத்தும் சமுதாயத்தின் கலாச்சாரத்துக்குள் புகுந்தால்தான் முடியும். முஸ்லிம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மிக நுட்பமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் உஷா என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்தான்.

 
மொழியைவிட மேலான  விஷயம் இந்த படைப்பு எடுத்துக் கொண்ட கரு. பெண்கள் சுயமாக சம்பாதிக்க வெளிநாடு செல்வது, அதையொட்டி அவர்களுக்கு ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்.

 
அமீரா, ஆயிஷா, இந்து இந்த மூன்று பெண்களும்தான் இக்கதையின் கதாநாயகிகள். அமீரா குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு அரபு ஷேக்குக்கு நான்காவது மனைவியாக ஒப்புக்கொண்டு போகும் இளம் அழகி. விட்டுவிட்டு ஓடிவிட்ட கணவனால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக ஆயா வேலை பார்க்க வந்த ஆயிஷா. காதல் திருமணம் செய்து கொண்டு சம்பாதிக்க துபாய்க்கு வந்த இந்து.

 
இறந்து விட்ட வயசான  கணவனைக் கொன்றதாக வேண்டுமென்றே மற்ற மனைவிகளால் குற்றம் சாட்டப்பட்டு பெற்ற பிள்ளையைப் பிரிந்து நான்காண்டுகள் சிறையில் வாடும் அமீரா. பாலியல் வன்முறைக்கு இலக்காகாமல் தப்பித்து வந்துவிட்ட இந்து. இம்மூவரும் விமானத்தில் தோழிகளாகிறார்கள். சென்னை வந்திறங்கியதும்தான் காதல் கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் தன்னைக் கைவிட்டு விட்டது இந்துவுக்கு உரைக்கிறது. அமீராவோடு ஆயிஷா வீட்டில் தஞ்சம் கிடைக்கிறது இந்துவுக்கு.

 
அதன் பிறகு, சாப்பிட, கணவனைத்தேட என்று அவளுக்கு ஏற்படும்  பிரச்சனைகள். சொத்தை அனுபவிக்கத் துடிக்கும்  குழந்தைகளாலும், திரும்பி வந்துவிட்ட அயோக்கியக் கணவனாலும்  ஆயிஷாவுக்கு ஏற்படும் பிரச்சனைகள். விருப்பத்துக்கு மாறாக, மறுபடியும் கல்யாணம் செய்து வைக்க முயலும் நாத்தனாரால் அமீராவுக்கு ஏற்படும் பிரச்சனைகள்.

 
கடைசியில் அமீராவும் இந்துவும் தற்கொலை செய்து கொள்ள
முடிவெடுக்கிறார்கள். இங்கேகூட தற்கொலை இஸ்லாத்தில் ஹராம் என்பதையும் தெளிவாக்கிவிடுகிறார் உஷா. வேறுவழியின்றி அந்த இரண்டு பெண்களும் அப்படி ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

 
கடைசியில் இந்த  விஷயம் தெரியவரவே, தன் சொத்தை ஜமா’அத்துக்கு எழுதி வைக்க முடிவு செய்து, அமீராவுக்கும் இந்துவுக்கும் மறுவாழ்வு கொடுக்க முடிவெடுக்கிறாள் ஆயிஷா.

 
இப்படி முடிகிறது கதை. இதில் நெருடலான விஷயம் என்று நான் கருதுவது தற்கொலைக்கு அந்தப் பெண்கள் எடுக்கும் முடிவுதான். மதரீதியாக இதை நான் சொல்லவில்லை. இலக்கிய ரீதியாகத்தான் சொல்கிறேன். ஒரு நல்ல இலக்கியம் வாழ்க்கையை அதன் நிஜத்தில் மட்டும்தான் காட்ட வேண்டும் என்பதில்லை. எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலுயுறுத்தும் உரிமை அதற்கு உண்டு. அந்த வகையில் எதிர்மறையான கருத்துக்களை என்னால் ஆதரிக்க முடியவில்லை. ஆனால் கதைப்படி அந்த இரண்டு பெண்களும் தற்கொலை செய்துகொள்ள எடுக்கும் முடிவுதான் மறுவாழ்வு கொடுக்கும் முடிவை ஆயிஷா எடுக்கத் தூண்டுகிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

 
எந்தப் பிரச்சனை  வந்தாலும் சந்திப்போம் என்று அந்தப் பெண்கள் முடிவெடுத்திருந்தால் இன்னும் உற்சாக மூட்டுவதாக இருந்திருக்கும்.

 
எனினும், சொல்முறையிலும், உரையாடல்களிலும், விவரணைகளிலும் எளிமையும் அழகும் உஷாவின் எழுத்தில் கைகூடி இருக்கிறது.

 
அமீராவுக்கும் இந்துவுக்கும்  ஏற்படும் பிரச்சனகைள் பயங்கரமானவை. அவற்றைப் பற்றி இந்த சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு பெண்ணின் உணர்வுகளை மதிக்காத சமூகமாய் ஒரு புறம் வெளிநாடு இருக்கிறது. ஆனால்  அப்பெண்களின் தாய்நாடும் அப்படித்தானே இருக்கிறது? இதுதான் பெண்களின் வாழ்வில் நேர்கின்ற கொடுமை. அதை மிக அழகாக இந்த படைப்பு வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

 
அமீராவுக்கு உபரியாக  ஒரு பிரச்சனை. அதாவது நல்ல மனங்களின்  உதவியால் சிறையிலிருந்து குற்றமற்றவள் என்று விடுதலை செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்படும் அமீராவுக்கு அந்த வயசான கணவனுக்கு அவள் பெற்றுக் கொடுத்த சை·ப் என்ற ஆண் குழந்தை திரும்பக் கொடுக்கப்படவில்லை. இதுதான் நடப்பு, இந்த நடப்பின் பின்னால் எத்தனை பெரிய அநீதி நிகழ்த்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 
பெண்களின் விஷயத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இந்த உலகம் காட்டுமிராண்டித் தனமாகவே இருக்கும்? உஷாவின் படைப்பு நம்முன் எழுப்பும் பிரதான கேள்வி இதுதான். இதற்கு பதில்  சொல்ல வேண்டியதும், பண்பாடு காக்க வேண்டியதும் ஆண் சமுதாயத்தின் பொறுப்பு.

 
கதையின் முடிவில்  ஒரு திரைப்படத்தனம் இருந்தாலும், பெண்களின் பிரச்சனையைப் பற்றி ஒரு பெண்ணே எழுதிய முக்கிய  படைப்பாக இதை நான் கருதுகிறேன். Straight from the horse’s mouth. சகோதரி உஷாவுக்கு என் வாழ்த்துக்கள். இதுபோன்ற, இதைவிட சிறப்பான பல படைப்புகளை அவர் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.

 
அன்புடன்

நாகூர் ரூமி

**

நாவலின் பின் அட்டைக் குறிப்புகள் :

பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்த பெண்களின் பிரச்சனையை மிக அழகாகவும் நுட்பமாகவும் சொல்லும் நாவல் இது. குறிப்பாக முஸ்லிம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மிக நுட்பமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் உஷா. நாவலின் எளிமை கருவின் தீவிரத்தன்மையை எந்த விதத்திலும் குறைக்கவில்லை.
ஆணாதிக்கத்தின் மனசாட்சியை — அப்படி ஒன்று இருக்குமானால் — நிச்சயம் இது உலுக்கும். ஜாதி மதம் கடந்ததாக உள்ள மனித நேயத்தை வளர்க்கும் இக்கதையின் வரும் பெண்களின் பாத்திரங்கள் ஆச்சயரியமூட்டத்தக்கவை. அதே சமயம் போற்றத்தக்கவையும்கூட.

 *

நன்றி : ராமசந்திரன் உஷா, நாகூர் ரூமி, ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமம், சந்தியா பதிப்பகம்.

1 பின்னூட்டம்

  1. 23/08/2009 இல் 13:07

    வாழ்த்துகள் உஷா.
    இந்த செய்தியை எங்களுக்குச் சொன்ன திரு நாகூர் ரூமிக்கும் நன்றி..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s