பெண்களூரும் ‘பயல்கள்’ பற்றிய சந்தேகமும்

‘பெண்களூர்’ – எழுத்தாளர் ரவிச்சந்திரன் (1001வது சுஜாதா!) எழுதியது. அதில் சந்தேகமில்லை. ஆனால் அட்டகாசமான இந்தப் ‘பயல்கள்’ பற்றித்தான் சந்தேகம். நண்பர் தாஜ் , ‘பயல்கள்’ எழுதியது ஹாஜாஅலியாகத்தான் இருக்க முடியும் என்று 95% நம்புகிறார். நான் 5%தான் நம்புகிறேன். ஏனெனில் ‘பயல்கள்’ஐ நான் எப்போதோ படித்த ஞாபகம் – வேறு ஒரு எழுத்தாளரின் பெயரில். அது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரையாகவும் இருந்த ஞாபகமும் கூட. ஹாஜாஅலி விதவிதமான புனைபெயர்களில் எழுதியிருக்கிற (‘சில சமயம் சம்ஸ்கிருதத்திலேயும் பெயர் வச்சுக்குவார்!’ – தாஜ்) காரணத்தாலேயே ‘பயல்கள்ஐயும் அவர்தான் எழுதியிருக்கக்கூடும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? அதுவும் , ஹாஜாவே ‘பயல்கள்’ எழுதியவரின் பெயரை குறிப்பிடாதிருந்தபோது என் சந்தேகம் அதிகமாகிறது. இன்னொருத்தர் ‘ஹக்’கை தனதாக ஏற்றுக்கொள்ள ஹாஜாஅலி விரும்ப மாட்டார் தாஜ். இன்னொருத்தருடையதுதானா? யாராவது சந்தேகம் தீருங்களேன் ப்ளீஸ்..

***

hajaliimage3

ஹாஜா அலி: நினைவுகளும் பதிவுகளும் – 3

தாஜ்

 

அன்புடன்..
ஆபிதீன்….
நினைவுகளும் பதிவுகளுமென
ஹாஜா அலியை
தொடர்ந்து நான் எழுப்பிக் கொண்டிருக்க
தட்டாது பதிந்து கொண்டிருக்கிறீர்கள்.
அவர் உயிர் பெற்று எழுந்தால்…
என்னைவிட்டு
உங்களிடம்தான் நாணிக் கோணி
கைக் குலுக்குவார்!
என்னை…
தனியே அழைத்துப் போய்
தாஜ்….
“ஏன் இந்த வேலை?”யென
சிரிப்பார்.
அந்தச் சிரிப்புக்கு
பல அர்த்தம் இருக்கும்.
என்னைச் செல்லமாக
கடித்துக் கொண்டதையும் தாண்டி!  

உலகம் காசை நோக்கி
நாலுகால் பாய்ச்சலில்
பாய்ந்து கொண்டிருக்க….
நமது உலமும், தேடலும்
வேறாக இருப்பதில்
அலுக்கவே மாட்டேன் என்கிறதே ஆபிதீன்…
ஏன்?

இந்தப் பதிவில்
இரண்டு கட்டுரை பதிந்திருக்கிறேன்.
இரண்டும் ஹாஜா அலியின் தேர்வு.
தமிழ்ப் பூக்கள் இதழில் வெளிவந்தது.
காலம்: 1982

1. பயல்கள்
2. பெண்களூர்

பெண்களூர் / இரவிச்சந்திரன் /
குங்குமம் – 1980-ல் பிரசுரமானதுயென
தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஹாஜா அலி.
இரவிச்சந்திரன்…
கடந்த இருபது ஆண்டுகளாக
எழுத்தின் பக்கம் காணாமல்போன வசீகரம்!
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்
R.P.ராஜநாயஹம் ப்ளாக்கில்
இரவிச்சந்திரன் குறித்த
செய்திகள் காண
ஆவலாகப் படித்தேன்.
இரவிச்சந்திரன் காணவில்லை என்பதைதான்
அவரும் முத்தாய்ப்பாக எழுதியிருந்தார்.
பயல்கள் குறித்து…
இப்படித் தெளிவான குறிப்புகள் எதுவும் இல்லை.
‘யாரோ’ எழுதியதாக மட்டும்
குறிப்பிட்டவராக ஹாஜா அலி நகர்ந்து இருக்கிறார்.
அது ‘யாரோ’ எழுதியது அல்ல.
சுவைத்து சுவைத்து
வார்த்தைகளைக் கூட்டி எழுதப் பழகிய
ஹாஜா அலியின் எழுத்தே அது!!

இரண்டு வரி நேர்சீராய் எழுதி
அது பத்திரிகையில்
பிரசுரமும் ஆகிவிட்டால்…
‘நானும் என் எழுத்தும்’ என
அவனே அவனைக் குறித்து
புராணம் பாடத் தொடங்கும் காலத்தில்
தன் எழுத்தை வெளிக்காட்ட
அச்சப்படும்
ஹாஜா அலியை மாதிரி
இன்னொருவரைக் காண முடியாது.

தன் எழுத்தை
சொந்தம் கொண்டாட
அவர் இப்படி
பயப்படவும் காரணமுண்டு.

அவரது விரல் நுனியில்
எழுத்து பூத்து மணக்கிற தருணத்தில்
சௌதியில் பஞ்சம் பிழைக்கும்
பணியில் இருந்தார்.
ரொம்பவும் சாதாரண பணி.
பத்தோடு பதினொன்னு!
அவர் பணியெடுத்த
அமெரிக்கன் கேம்பில்
அவரையும் சேர்த்து சுமார்
முன்னூற்று சொச்சம்
தஞ்சை மாவட்டத்து ராவுத்தர்கள்.
அத்தனைப் பேர்களும்
கிட்டத்தட்ட
செக்குமாட்டுத் தனத்தை
சுவீகரித்தவர்கள்.
இவர்கள் யாரையும்
நிமிர்ந்து கூட
பார்க்கமாட்டார் ஹாஜா அலி!
பணி முடிந்த நேரத்தில்
கைலி சகிதமாய்
தொப்பியோடு திரியும் காட்டு ஜந்துக்கள்!
அதுமாதிரியே அவர்களும்!
அவர்களுக்கு ஹாஜா அலி
வினோதமான ஐந்து.

ஹாஜா அலியைப் பார்க்க
ஒரு தரம்…
அவரது கேம்பிற்கு போய் இருந்தபோது
என்னைவிட வயதில் மூத்த
ஓர் தஞ்சை மாவட்ட ராவுத்தர்
மெதுவாய் என்னிடம் வந்து…
தூர எனக்கு காப்பி கலக்கிக் கொண்டிருந்த
ஹாஜா அலியைக் காட்டி
“எப்படி இந்தப் பைத்தியத்தோடு
பழகுகிறீர்கள்?” என்றார்.
அப்படியான
சகஜங்கள் வளையவந்த
பணியிடத்தில்தான் அவர் காலம் கழித்தார்.
இன்னொரு விசயம்…
அந்த ராவுத்தர்
தொடர்ந்து அரை மணி நேரமாவது
என்னிடம் பேசி இருந்தால்….
ஹாஜா அலியிடமே போய்
“எப்படி இந்தப் பை……”
வியப்பை வெளிப்படுத்தி இருப்பார்!

அவரிடம் மொழி ஆளுமை
பூத்து, மணம் பரப்பி
‘என்னைக் கோர்த்து அழகுபாரேன்’
என்ற நாட்களில்
எப்போதேனும் ஏதேனும் எழுதுவார்.
அதை கணையாழிக்கோ/
போட்டிகள் வைக்கும் வாராந்திரிகளுக்கோ
அனுப்பியும் வைப்பார்.

ஒரு தரம்…
தகவல் குறிப்புகள் பகுதிக்கு
நாலுவரி எழுதினார்.
‘சௌதியில்
பிறமதத்தினர் பிராத்தனை செய்ய
ஆலயம் இல்லை!
அவர்கள் தங்களின் ஆன்மீக
கடனைக் கழிக்க என்ன செய்வார்கள்?’
– இதுதான் அவர் எழுதிய தகவல் குறிப்பின் சாரம்.
அந்த நான்குவரியைக் கண்டுக் கொண்ட
முன்னூற்று சொச்ச ராவுத்தர்களும்
ஹாஜா அலியை
உண்டு இல்லையென்று பண்ணிவிட்டார்கள்.
ஒரு துலுக்க ராஜ்ஜியத்தில்…
ஒரு துலுக்கன் கொள்கிற சிந்தனையா இது?
வெலவெலத்துப் போய்விட்டார் மனிதர்!

எழுதுவதை வெளிப்படுத்தவும்
அதில் தன் சொந்தப் பெயரை
போட்டுக் கொள்ளவுமே
தயக்கம் கொள்ளும் அவருக்கு
வலிய
இப்படியொரு சங்கடம்.
அதனால்தான் என்னமோ
தன் எழுத்தை
தன் எழுத்தென்று சொல்லிக் கொள்ளவே
நிரந்தரமாக பயந்தவரானார்.

ஆக…
பயல்கள்
ஹாஜா அலியின் எழுத்தே.
ஏதோ ஒரு வாராந்திரிக்கு
அவர் எழுதி வெளிவந்த கட்டுரையே அது.

ரெட்டைவால் ரெங்குடு
சுட்டிப் பயல்
குட்டீஸ் – என்றெல்லாம் நாம்
செல்லமாக அழைக்கும்
பயல்களை…..
ஹாஜா அலி
பார்த்திருக்கும் அழகு விசேசமானது.
கவிதையும்/
வார்த்தை மிடுக்கும் கொண்டது.
அதன் நடை நடையால் ஆனதல்ல!
பாய்ச்சல் தனம் கொண்டது!
ஒரு வார்த்தையில் இருந்து
இன்னொரு வார்த்தைக்கு தாவுகிறபோது
இடையில்…
இரண்டு மூன்று வரிகளே நழுவி விடுகிறது!

கொஞ்சம் அதிகமாகத்தான்
சொல்கிறேனோ என்னமோ!
சரியாகச் சொன்னால்…
வார்த்தைகளைச் சீவி/ கூர் மழுங்க தேய்த்து
லாவகமாகச் செப்பனிட்டு
கட்டுரையென
பளிங்குத் தரையில்
உருட்டிக் காண்பித்திருக்கிறார்.
அது தாண்டிக் குதித்து
உணர்வில் ‘கல கலா’ சப்தம்!

நான் பல முறை படித்த
இந்த ‘பயல்கள்’ அபூர்வத்தை
உங்கள் முன் வைப்பதில் மகிழ்வுண்டு.
இன்னொரு ‘குட்டி இளவரசன்’
நீங்களே சொல்லக் கூடும்!

தாஜ்
 
*
 
பயல்கள்

பயல்!
ஒரு ஆனந்தமான ஐந்து.
பயல்கள்…
பல சைஸ்களில் கிடைக்கிறார்கள்.
ஆனால்…
எல்லாப் பயல்களுக்கும்
ஒரே ஒரே குணம் பொது.
ஒவ்வொரு நாளின்
ஒவ்வொரு மணியின்
ஒவ்வொரு நிமிடத்தின்
ஒவ்வொரு வினாடியையும் அனுபவிப்பது.

நாளின் கடைசி நிமிடம் வந்ததும்
படுக்கப் போகும்படி
பெரியவர்கள் விரட்டும் போது
சப்தத்துடன்
ஆட்சேபம் செய்வது.
கத்தல்!
அதுதான் அவர்களின்
ஒரே ஆயுதம்.

பயல்கள் எங்கு பார்த்தாலும்
காணப்படுவார்கள்.
உயரத்திலே, அடியிலே
உள்ளுக்குள்ளே,
ஏறிக்கொண்டு,
தாவிக்கொண்டு,
ஓடிக்கொண்டு,
குதித்துக்கொண்டு….

பயல்களைத்
தாயார்கள் நேசிக்கிறார்கள்.
சின்னப் பெண்கள் வெறுக்கிறார்கள்.
அக்காக்களும் அண்ணன்களும்
பொறுத்துக் கொள்கிறார்கள்.
பெரியவர்கள்
அலட்சியப்படுத்துகிறார்கள்.
தெய்வங்கள் பாதுகாக்கிறார்கள்.

பயல் என்பவன்…
முகத்திலே
அழுக்குப்படிந்த சத்தியம்;
விரலிலே
காயம்பட்டுக் கொண்டிருக்கும் அழகு;
முடியிலே
சர்க்கரை பிசுபிசுக்கும் அறிவு;
பையிலே
தவளை வைத்துக் கொண்டிருக்கும்
நம்பிக்கை நட்சத்திரம்.

பயல்,
பல பொருட்களின் கதம்பம்.
குதிரையின் பசி,
கத்தி விழுங்குகிறவனின்
ஜீரண சக்தி,
பாக்கெட் சைஸ்
அணுகுண்டின் வீரியம்,
பூனையின் துறுதுறுப்பு,
சர்வாதிகாரியின் சுவாசப்பை,
கனகாம்பரத்தின் கூச்சம்,
இரும்புப் பொறியின் திமிர்,
மாதா கோவில்
மெழுகுவத்தியின் உற்சாகம்
இவ்வளவும் சேர்ந்த பயல்,
ஒரு வேலையில்
முழுமூச்சாய் இறங்கும் போது
அவனுக்கு ஒவ்வொரு கையிலும்
ஐந்து பெருவிரல் முளைக்கிறது.

பயலுக்குப் பிடித்தமானது…
ஐஸ்கிரீம், கத்தி, வாள்,
காமிக் புத்தகம்,
அடுத்த தெரு பையன்,
கட்டை, தண்ணீர்,
பெரிய சைஸ் பிராணிகள், அப்பா,
ரயில்,
தீயணைப்பு இஞ்சின்.

பயலுக்குப் பிடிக்காதது…
கையைப் பிடித்துக் கொண்டு கூட வருவது,
தினம் தினம் ஸ்கூல்,
படமில்லாத புத்தகம்,
சங்கீதப் பாடம்,
வெள்ளைச் சட்டை,
சலூன், சிறுமிகள்,
பெரியவர்கள், பாடுகிற நேரம்.

பயலைப் போல் சீக்கிரமாய்
எழுந்துக் கொள்கிறவர்களும் கிடையாது
லேட்டாய்
சாப்பிட வருகிறவர்களும் கிடையாது.
மரங்களையும், நாய்களையும்,
காற்றின் அசைவுகளையும்
அவனைப் போல்
ரசிக்கிறவர்களும் கிடையாது.

ஒரு துருப்பிடித்த கத்தி,
பாதி சாப்பிட்ட ஆப்பிள்,
மூன்றடி நீள நூல்,
இரண்டு பபுள்கம்,
மூன்று ஒரு பைசாக் காசு,
ஒரு கவண்கல், இன்னதென்று
கண்டுபிடிக்க முடியாத
ஏதோவொரு கட்டி,
ரகசிய அறைகளும்
ரகசிய எண்களும் கொண்ட
சூபர்ஸானிக் மோதிரம் – இவ்வளவையும்
அவனைப் போல
ஒரே ஒரு சட்டைப் பைக்குள்
திணித்துக் கொள்ள
யாராலும் முடியாது!

பயல்,
மாயாஜால சக்தி கொண்டவன்.
அவனை நீங்கள்
சமையல் அறையிலிருந்து
விரட்டி வெளியேற்றலாம்…
இதயத்திலிருந்து
விரட்டி வெளியேற்ற முடியாது.
அவனை நீங்கள்
முன்னறையிலிருந்து துரத்தலாம்
மனசிலிருந்து துரத்த முடியாது.
சரணாகதி செய்வதே மேல்.

பயல்,
உங்களை வெல்கிறவன்.
உங்கள் சிறை அதிகாரி.
உங்கள் எஜமான்.
உங்கள் குரு.
பூனையைத் துரத்தும்
ஆழாக்கு சைஸ்
சத்த மூட்டை!

இருந்தாலும்,
ஒரு நாளின்
பொழுதெல்லாம் கழித்து,
உங்கள் எதிர்பார்ப்புகளும்
கனவுகளும்
துண்டு
துண்டாக
சிதறிச் சோர்வுடன்
வீடு திரும்பும்போது
பயல்…
ஜிவ்வென்று உங்களைக்
குஷிப்படுத்தி விடுவான்!
இரண்டே இரண்டு
மந்திர வார்த்தைகள் மூலம்!!
‘ஹை அப்பா….’

***

பெண்களூர்!
இரவிச்சந்திரன்

பெங்களூரின் விசேஷமே பெண்கள்.
ஏரியாவிற்கு ஏரியா
இந்த ஜெண்ட’ரின்’ வடிவம்
வேறுபடுகிறது.

குடகுப் பெண்கள்
மகா சோஷியல்.
உடம்பு அற்புதமாக இருந்தாலும்
முகத்தில் நந்தித்தனம்,
ஓடிப்பிடித்தே விளையாடலாம்.

மல்லேஸ்வரத்தில்
மாமிகள் அதிகம்.
முக்காடு குறையாக
முழுக்கப் போர்த்தி இருந்தாலும்
வனப்பு தெரிகிறது
நேர்த்தியான புடவையில்.

தாவணி என்பது
வசீகர உடை.
நான் சர்வாதிகாரி ஆனால்
“தாவணியே தேசிய உடை.”

மகத்துவம் அறியாத
கன்னடக்கிளிகள்
பெட்டிகோட் – ஜம்பரில் இருந்து
சொய்யாவென்று
புடவைக்குள் புகுந்துவிடுகிறார்கள்.

மவுண்ட்கார்மல் –
மஹாராணி ஊர்வசிகள்
என்ன கண்டிஷன் போட்டாலும்
கல்யாணம் செய்துகொள்ள
ரெட்டை ரெடி!

தியேட்டர்களில்
பெண்களுக்கு உடன் டிக்கட்?
அந்த பிசினஸே இங்கில்லை.
வாடி க்யூவில்.
லேடீஸ் சீட்டில்
ஒற்றைக்கன்னி இருந்தால்
ஜோராய்
தொடை ஸ்பரிசிக்க உட்காரலாமே.
பத்தினித்தனத்தைக் காட்ட
பஸ்ஸைத்
தேர்ந்து எடுக்கிற
மதராஸ்தனம் இங்கில்லை.

சிக்பெட்டில் நுழைந்ததும்
“சூடா ஆந்திரா,
கேரளா, தமிழ்நாடு” என்று
விபசாரத்திற்கு ஏக உபசாரம்.

செகண்ட் ஷோ முடிந்து
திரும்புகிற கும்பலில்
HouseWives என்கிற
தனிவர்க்கம். ஹ!
என்ன அழகான
யாரோ மனைவிகள்.
‘மாற்றான் மனைவியை
ரசிப்பதில் பரமசுகம் இருக்கிறது’
என்றெழுதிய
தி.ஜானகிராமன் ஞானி.

சகல மனித ஜாதிகளும்
தென்படுவது ப்ரிகேட் ரோடில்.
அனாடமி செய்ய
வாகாய்க் குறைந்த துணி.
ஏராள முதுகு.
பாளமாய் இடுப்பு.
தாராள மார்புகளில்
இளமை ஊஞ்சலாடுகிறது;
பிரேசியர் மைனஸ்.

ஆயிரம் பெண்கள்
அரை விடியலில்
விட்ட தொட்ட குறை
மேக்கப்பில்
விரைவது ஃபாக்டரிக்கு.
அவர்களிடம் இருக்கிற
சொந்தக் கதையோ
மஹா சோகக் கதை.

தனித் தமிழிலில் விளையாடும்
அல்சூர்ப் பெண்களைத்
தத்தம் தாய்மார்கள்
பொத்தி வளர்க்கிறார்கள்.

செலவு செய்ய தயார் எனில்
கேர்ள் ஃபிரெண்ட்ஸ்
கிடைக்கிற நகரம்.

கமர்ஷியல் தெருவில்
போவது ஆணா, பெண்ணா?
தடவினால் ஒழியத்
தெரியாது.

ஜெயநகர் வசதிப் பெண்கள்
புஷ்பவதி ஆனதுமே
புருஷன் கிடைத்துப்
போய்விடுகிறார்கள்.

கண்டீரவா ஸ்டேடியம்;
ஆலிலை அடிவயிற்றுப் பெண்கள்
ஐஸோமேட்ரிக்
பயிற்சி செய்து
உடலைச் சுடச்சுட
வைத்திருக்கிறார்கள்.

மான் ஜாதி, மயில் ஜாதி,
குதிரை & பத்மினி ஜாதி என்று
சூத்திரம் வகுத்த
வாத்ஸ்யாயன் புண்ணியவான்
பெங்களூர் வந்தால்…
ஆயிரம் உண்டிங்கு
பெண் ஜாதி என்று
மாற்றி எழுதிவிட்டு
ஓடியே போய்விடுவான்.

– இரவிச்சந்திரன் / குங்குமம் – 1980

***

தொகுப்பும் / தட்டச்சும்:  தாஜ் ( தமிழ்ப்பூக்கள்)

E- Mail : satajdeen@gmail.com

***
ஒரு சுட்டி : சுரேஷ் கண்ணனின் பதிவில் இரவிச்சந்திரன் சிறுகதை (சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே)

3 பின்னூட்டங்கள்

  1. 22/07/2013 இல் 20:09

    பெண்களூர் பெயர் அட்டகசாம். (நான் மட்டும்தான் எழுத்துப்பிழை விடுறேனா?)

  2. md. yoosuf said,

    25/08/2013 இல் 11:34

    எனக்குமே அந்த நம்பிக்கை இல்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s