சகோதரர் ஹத்தீப் சாஹிபின் ‘தேவை மனித நேயம்’ நாவலைப் பாராட்டி எழுதியிருந்தார் (மஞ்சக்கொல்லை) ஹமீதுஜாஃபர் நானா. அவருக்கு ஹத்தீப் சாஹிப் எழுதிய பதிலை – ஜாஃபர்நானாவின் அனுமதியுடன் – பதிகிறேன்.
**
அன்பு மஞ்சை ஜாஃபர் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களது இ-மெயில் கண்டேன்.
2004-05 வாக்கில் உலகத்தில் தாக்கம் ஏற்படுத்திய தலைவர்களுள் புஷ், கண்டலிஸா, சத்தாம், ஒஸாமா, அய்மான் அல்-ஜவாஹிரி போன்றவர்கள் முதன்மையானவர்கள் மட்டுமல்ல; முக்கியமானவர்களும்கூட. இவர்களது கூட்டு முயற்சியால் உலகலாவிய பயங்கரவாதம் இன்னும் 50 ஆண்டுகளுக்கு ஒழிக்கமுடியாத, குறைந்தபட்சம் கட்டுப்படுத்தமுடியாத ஒரு பூதமாக உருவெடுத்துவிட்டது. உலக அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் அரிய தொண்டாற்றிய அத்தகைய ‘சர்வ வல்லமை’ பொருந்திய சர்வதேசக் கதாநாயகர்கள் பற்றி ஒரு லவங்கம் அளவேனும் தமிழ் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்ற ஆவலும் உந்துதலுமே ‘தேவை:மனிதநேயம்’ நூல். அதில் ‘கற்பனை’ என்று கணிக்கமுடியாத பல விஷயங்கள் இருப்பது போலவே உண்மை என்றும் விளங்கிக் கொள்ள முடியாத பல நிஜங்களும் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணத்திற்கு: அமெரிக்கவினால் ஃபலூஜாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு ரசாயனத் தாக்குதலை ‘திக்ரித்’தில் என்று மாற்றியிருக்கிறேன். இடம் கற்பனை. நிகழ்ச்சி நிஜம். எந்தக் குற்றத்திற்காக சத்தாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டாரோ அதே குற்றத்தை அமெரிக்க செய்திருக்கிறது என்று பதிவு செய்வது எனது கடனாகத் தோன்றிற்று. மற்றவர்களை விசாரிப்பதற்கோ தண்டிப்பதற்கோ அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் சாலமன் அமைச்சரவை அல்ல.அமெரிக்காவுடனான முதல் யுத்தத்தில் மூத்த புஷ்ஷுக்கு வசமாகப் பாடம் கற்பித்த சத்தாமை, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இளைய புஷ் பழி தீர்த்துக்கொண்டார் என்பதே நிஜ வரலாறு.
ஆனால் ஒஸாமாவோ அய்மானோ மனிதகுலம் மன்னிக்க முடியாத மார்க்க மாமேதைகள் என்பதையும் நான் குறிப்பிடத் தவறவில்லை. “அமெரிக்கர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்கள் ” என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அளவுக்கு ஒஸாமா தகுதி படைத்தவரோ அல்லது மார்க்கத்தின் அனுமதி பெற்றவரோ அல்ல என்பதும் உலகத்துக்குச் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒரு செய்தி. பழிக்குப் பழியை இஸ்லாம் அனுமதிக்கிறது என்றாலும், கொலையுண்டவரின் வாரிசுக்கும் கொலையாளிக்குமிடையேயுள்ள ஓர் உரிமைப் பிரச்னையை ஒஸாமாவோ அல்லது அவரது உத்தரவு பெற்றவரோ கையிலெடுத்துக் கொள்ளமுடியாது. கொலையுண்டவனின் வாரிசுக்காரன் கொலையாளியை மன்னிக்க விரும்பினால், இஸ்லாமிய அரசே அதில் தலையிட முடியாது என்பது சட்டம்.
அதுவே அந்தப் புதினத்தின் அல்லது வரலாற்றின் சிறப்பு என்று நான் கருதுகிறேன்.
அன்புடன்
ஏ.ஹெச்.ஹத்தீப்
E- Mail : hatheeb@gmail.com
*
நன்றி : ஹமீது ஜாஃபர், ஹத்தீப் சாஹிப்
மறுமொழியொன்றை இடுங்கள்