நினைவுகள்+ : ஹாஜாஅலி

HajaAli

நினைவுகள்+ : ஹாஜாஅலி

 – தாஜ்

***

அன்புடன்… ஆபிதீன்

 நான் செளதியில் ‘தமிழ்ப் பூக்கள்’ என்கிற சிற்றிதழ் நடத்தியதை அறிவீர்கள். சிரிப்பீர்கள். ஆகட்டும். சிரிப்பிற்கிடையே நினைவுகள் சலனம் கொண்டால் போதும். ஹாஜா அலியை கொஞ்சமேனும் நினைவு கொள்ள முடியும். சரியா? இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக அறியலாம். தப்பில்லை. அறிய வேண்டியவர் அவர்!

 ஹாஜா அலி…. நேசத்திற்குறிய இணை! 1.இலக்கிய சகா! 2.நம்மை மாதிரியே மண்டைக்குள் பூச்சி கொண்டவர்! என்ன….. ஒரே விசயத்தை ரெண்டு தரம் சொல்கிறேனோ? சரி விடுங்கள். ஊர்… கூத்தாநல்லூர் தீர தமிழ் படித்தவர் கருத்தப்பா கல்லூரி திருநெல்வேலி பக்கம். கவிஞர் காமராசன் தமிழ் ஆசிரியர். நவீன கவிதைகளைத் தொட்டு இலக்கிய வாசனையை அவருக்கு நுகரக் காட்டியவர்! ஹாஜா அலி அவர் பங்கிற்கு படைப்புகளை புரட்டத் தொடங்கியதும் செய்த முதல் காரியம் கவிஞர் காமராசனையும் அவரது சகாக்களான ‘வானம்பாடி’களையும் கண்களுக்கும் கைகளுக்கும் எட்டாத தூரத்தில் தள்ளி வைத்ததுதான்!

அவர்… நவீன வாசிப்பில் காலத்தைக் கரைத்தவர்! கூடுதலாக வாழ்வையும் சொட்டு மிச்சமில்லாமல் கரைத்து தன் இறப்பை தானே எழுதியும் கொண்டவர்!

‘வடக்கு நோக்கி இருத்தல்’ சங்க காலத்தில் பிரபல்யமான உயிர் மாய்த்து கொள்ளும் முறை! தோல்விக்குப் பிறகோ மானம் பறிபோகும் பட்சமோ நாட்கணக்கில் தாகம் தணியாது/ உணவருந்தாது வடக்கு நோக்கி அமர்ந்திருந்து உயிரை விடுவது அது! அப்படிதான்… ஹாஜா அலி தனது உயிரை துச்சமாக்கியிருக்கிறார். – எல்லோரும் கையேந்தும் ‘எஜமான்!’ காலடிபட்ட நாகூர் கடற்கரையில்!

இயற்கையோடு இழைவதில் அவர் காட்டும் ஆர்வம் எப்பவும் அதிகம்! இரட்டிப்பு சந்தோஷம்!

இறப்புக்கு முந்தைய ஆண்டுகளில் தனது உணவு முறையின் வழமைகளை மாற்றிக்கொண்டார்! வேகவைத்து சாப்பிடச் சொன்ன விஞ்ஞானத்தை புறம் தள்ளி மூன்று வேளையும் பச்சைக் காய்கறிகள் என்று! அவர் இப்படி நவீன… ஆதி மனிதரானதில் எனக்கோ வியப்பு!! “என்னங்க?” “பழகிப் போச்சு தாஜ்!”

காலை உணவுக்கு கொஞ்சம் தேங்காய் துண்டு கேரட் இரண்டு, ஒரு தக்காளி! மதியம்… ஒரு கத்தரிக்காய், இரண்டு தக்காளி பாகற்காய், கொஞ்சத்திற்கு முட்டைக்கோஸ் செதில்கள்! இரவு… ஒரு பிடி அவல் கறந்த பால் ஒரு கப் இரண்டு வாழைப்பழம். ‘பூவன்’ அவர் விருப்பம்.

விருந்தென்றால்…. இளநீரில் தொடங்கி நொறுக்குத் தீனியென நெய்யில் வறுத்த முந்திரியில் மேய்ந்து பேரிச்சைப் பழத்தில் நகர்ந்து உணவாய்… ‘சாலட்’டில் வயிர் நிறப்ப (சில நேரம் ‘சாலட்’டிற்குப் பதிலாக முளைகட்டிய பாசிப்பயிர்!) கெட்டியான பாதம் பாலோடு அது முடிவதாக இருக்கும்.

“இப்படியெல்லாமென்றால்… வீட்டில் உள்ளவர்களுக்கு சிரமம் தருவதாக ஆகாதோ?” “இதில் என்ன சிரமம் தாஜ்… அதைச் சமை, இதைச் சமை என்று அவர்களை வருத்துவதுதான் சிரமம்!”

 விருந்தில் மட்டுமல்ல கொள்கை ரீதியாக ‘ஹை டச்’ வாழ்வு முறை அவருக்கு உகப்பானது. பக்கா கேப்பிடலிஸ்ட்! இப்பொழுதும்… காசு பணம் இல்லாதவர்தான் சௌதியில் கூட சொற்ப சம்பளத்திற்கு பணியெடுத்து திரும்பியவர்தான் மூன்று வருடம் குவைத்தில் வேலை செய்ததும் அப்படித்தான் கையகல நிலம்கூட வாங்கியவர் இல்லை ஆனாலும் அவர் கேப்பிடலிஸ்ட்! அதாவது…. அப்படி வாழ விரும்பியவர்.

பூர்வீகச் சொத்தை சிறுகச் சிறுக விற்றேனும் அப்படியொரு மேட்டுக்குடி தரம் அவருக்கு வேண்டும்! அப்படி முயன்றும் இருக்கிறார். நட்சத்திர ஹோட்டலின் ‘பார்’ சுகம்… அதை சாத்தியப்படுத்தும் கூறுகளில் ஒன்று அவருக்கு!

அங்கே போய் அமர்ந்தால் ‘எபோவ் ஹண்றட் இயர்ஸ் ஏன்சியண்ட் ஒயின்’தான் அவரது சாய்ஸ்! ‘பெக்’ மூவாயிரம்… நாலாயிரம்… என்றாலும் சரியே! உறுத்தாது. மாறாய்…. “நூறு வருஷத்துக்கு மேலான ஒயின் தா..ஜ்!” இனம் புரியாத மகிழ்ச்சியில் வியப்பார்!

சாதாரண தினங்களில் நண்பர்களோடு உட்காரும் ‘ஹாட் டிரிங்ஸ்’ பார்ட்டிகளிலும் உயர் ரகம்தான் அவரது தேர்வு. ஐஸ் க்யூப்/சாலட் கட்டாயம். “தாஜ்… சாலட் நிறைய சாப்பிடுங்க” “இதெல்லாம் நமக்கு சரிப்படாது… மிக்ஸரும் ஊறுகாயும்தான்!”

ஒரு ‘சுமால் பெக்’கிற்கு இரண்டு ஐஸ்க்யூப்! ஜில்லிட்ட கிளாஸை கையில் வைத்தபடி ‘சிப்’ பண்ணி பண்ணிப் பண்ணி (மிக ஜாக்ரதையாய்… இங்கிலீஸ்காரன் கோபித்துக் கொள்ளாத வண்ணம்) குறைந்த பட்சம் அரை மணி! அவ்வளவு நேரமும் அறிவின் ஜீவிதம் பெருக்கெடுக்கும். குடி இலக்கணம் மீறாத திருப்தியோடு அடுத்த ‘பெக்’கிற்கு!

மீண்டும்… அறிவின் ஜீவிதம் இன்னும் இன்னும் விசாலமாகும்! தன் மாமியாரின் ஆண் ஆதிக்கத்தை சப்புக் கொட்டி நுணுக்கமாய் வெளிப்படுத்துவார். விவரிக்கையில் வியந்து வியந்து போவார்! அந்த மாமியார் அவருடைய கேரியரில் ஹைகோர்ட் ஜட்ஜாக இருந்ததும் பட்டணத்தில் கார் ஓட்டியதும் அவரை எப்பவுமே உள்ளுக்குள் மிரட்டும் சங்கதி! நிஜத்தில்… அவரது வியப்புகள் அத்தனையும் வியப்பல்ல. அதில் பாதிக்குமேல் அவர் வெளிப்படுத்த முடியாத கோபத்தின் சுருக்கம்! அல்லது இயலாமையின் மாற்று!

சிலநேரம்… அவரது பேச்சு மாமியாரில் இருந்து திசை மாறி சந்து பொந்துகளில் புகுந்து விடும். அவர் பார்த்து வியர்த்த புளூ ஃபிலிம் அல்லது அசந்து போன மேற்கத்திய ‘வார்மூவி’ என்று. மிஸஸ் நாயகமான ‘ஜைனப்’ திருமணங்களை குறித்துக் கூட ஒரு முறை தன் ஆதங்கங்கத்தை அந்த போதையிலும் கோர்வையாகச் சொன்னார். மேற்கத்திய இதழாளர்கள் அது குறித்து முரண்பாடாய் சர்ச்சிப்பதில் அவருக்கு சங்கடம் இருந்தது. இதெல்லாம்… ‘திண்ணை’ கடைவிரித்து நேச குமாரெல்லாம் புஜம் தட்டியதற்கு பல வருடங்கள் முந்தைய சங்கதி!

அப்படி அவர் சொன்ன எல்லாமும் இன்றைக்கு மறந்து போனாலும் புளூ ஃபிலிம் பற்றிய சிலாகிப்புகள் கொஞ்சமும் மங்கக்காணோம்! வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் அதைத் தேடி இருக்கிறேன். கிட்டவே இல்லை. அவரே…. மனப்பரப்பில் தயாரித்த தயாரிப்பாக இருக்குமோ என்னவோ!

இப்படியான விவரிப்பைக் கொண்டு அவரை வேறு கோணத்தில் பார்த்துவிட முடியாது. இதே ஹாஜா அலி சில நேரம் சுத்த ஆன்மீக உரு கொண்டு மிரள வைத்திருக்கிறார்!

எத்தனை விதமான ஹதீஸ்கள் உண்டோ அத்தனையும் அத்துப்படி அவருக்கு! ஆறு மாத ‘தப்லீக்’கெல்லாம் சாதாரணம்! மாமியாரிடம் முரண்டுபடும் போதெல்லாம் அந்த மஹா தப்லிக்தான் இடைக்கால விடுதலை! நோன்பு காலங்களில் அவர் கொள்ளும் ‘சீதேவித்தனம்’ நம்மைக் கிறங்கடிக்கும்! அந்தப் பொழுதுகளில் அருகாமையில் காணும் பள்ளிவாசல் அவருக்கு வீடாகிப் போகும்! அப்போதெல்லாம் குரான் அவரை ஈர்த்து விடும். எத்தனை முறைதான் அதை அவர் படிப்பதாம்!?

நோன்பு முப்பது நாளும் நகர்ந்து ‘ஈதுல் ஃபித்ர்’ பண்டிகை கழிந்தது மேற்கே… மூன்றாம் பிறை தெரிவது உறுதியானதும்தான் வாழும் உலகிற்கே வருவார்! “இந்தக் கடவுள்….?” “விடுங்க தாஜ்…” “இல்லை ஒரு தெளிவுக்காக…” “பேசவும் விவாதிக்கவும் எத்தனையோ விசயம் இருக்கிறப்போ அது எதுக்கு இப்ப? கடவுள்தானே…. இருந்துட்டுப் போகட்டும் விடுங்கள்”

அவரிடம் என் உரிமையென்பது சில கட்டுக்குட்பட்டது. பெரும்பாலும்… அவர் பேச கேட்பவன்தான் நான்! நாச்சியார் கோவில் ஹாஜா மொஹிதீன் என்றொரு நண்பர்! அவரிடம் நிறைய உரிமைகள் எடுத்துக் கொண்டு பழகுபவர். வாழ்வின் யதார்த்தத்தை விட்டு மேல் நோக்கி பறக்க எத்தனிக்கும் ஹாஜா அலியின் சேட்டைகளை முகத்திற்கு முகம் சாடுவார். சாடி என்ன செய்ய…? பாசத்தின் பச்சிளம் குரலாய் அதை செவிமடுத்து பல்லெல்லாம் தெரிய அழகாய் சிரித்து வைப்பார். பதில் கிடையாது.

பெரும்பாலும் எல்லாவற்றிற்கும் அவரிடமிருந்து சிரிப்புதான் பதிலாக வரும். ஒவ்வொரு தரமும் அவர் சிரிக்கும் சிரிப்புக்கு வேறு வேறு அர்த்த பாவங்கள்! சிகெரெட் புகையை உள்ளிழுத்தவாக்கில் அவர் சிரிக்கிறபோது… அந்தச் சிரிப்பு அழகு கூடிவிடும்! தூங்கும் நேரம் போக பிற எப்பவும்… அவரது விரல்களுக்கிடையே சிகரெட் கங்கு புகைந்தபடியேதான்! சராசரியாக பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை புகைக்கும் நான் அவர் முன் ஒன்றுமில்லை!

 சிகரெட் புகைத்தபடியே மிகுந்த உரிமையுடன் ஆதங்கம் பெருக கண்டிப்புடன் ஒருதரம் ஒன்றைச் சொன்னார்! மறக்கவே முடியாது. “தாஜ் ஏன் நீங்கள் இத்தனை சிகரெட் பிடிக்கிறீர்கள்? உடலுக்கு கெடுதல் இல்லையா?” நான் வாயடைத்துப் போனேன்! அதான் ஹாஜா அலி!!

ஏன்? அவர் இத்தைய வடிவங்களையெல்லாம் கொண்டாரென தெரியாது. வழிமுறையாய் தன்னை சீவிக் கொள்பவர்களால்தான் இப்படி கச்சிதமான தடுமாற்றங்களை தொடரவும் முடியும். என் கவிதைகளில் ஓரிண்டு அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதில் ஒன்று….

நிலைப்பாடு

 —————

குடும்பத்திற்குள் / நடந்து பழக / வயசு போதாது!  /எந்நேரம் அசந்தாலும் / தலைவாசலின் / மேல் நிலை / உச்சத்தைக் கிறங்கடிக்கும் / கீழ் நிலை எப்பவும் / காலைப் பதம் பார்க்கும் / குனிந்தே நிமிர வேண்டும் / படுக்கை அறைக்கு / நுழையும் அவசரத்தில் / பக்க வலமாய் இடிபட / விண்ணென விலா நோகும் / சமையலறைக் கதவை / இழுத்துத் திறக்கிறபோது/ திரும்பவும் மூடிக்கொள்ள / நிலை தடுமாற வைக்கும் / பார்த்துப் பார்த்து / நடந்தாலும் / உள்கட்டு / வெளிக்கட்டு / கழிப்பறைப் படிக்கட்டும் / தடுக்கி வழுக்க / குப்புறத் தள்ளும் / காற்றுக்காகத் திறக்கும் / ஜன்னல் நிலைக்கதவும் / கையைக் கடித்துவிடும்.

 —

இந்தக் கவிதையை எழுத நான் பெற்ற அனுபவத்தை அவரும் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் இத்தனைக்கு ரசித்திருக்க முடியாது. வாழ்வின் குழப்பங்களை பூரணமாகச் சொல்லாவிடினும்… யோசிக்கிறபோது குறைந்த பட்சம் அந்தக் கவிதை சுட்டும் சிடுக்குகளை அவர் எதிர் கொண்டிருக்க வேண்டும். அது போதாதா ஒருவன் சிதைய?

நல்ல நண்பர். இன்று இல்லைதான்… உருண்டுவிட்டது அவர் இல்லாமலாகி எட்டு வருடங்களும் சில மாதங்களும்! இன்னமும் மறக்க முடியவில்லை. அன்பு வலியது!

சௌதியின் முதல் தமிழ் இதழான தமிழ்ப் பூக்களுக்கு நான்தான் ஆசிரியர்! ஹாஜா அலி எனக்கும் இதழுக்கும் தோள் கொடுத்த அனுசரணை! ஆனாலும் அந்த இதழ் அவருக்கு திருப்தி தரவில்லை. சரியாகச் சொன்னால் அவரது பார்வையில் ‘தமிழ்ப் பூக்கள்’ அய்யோ பாவம்! அ

ன்றைக்கு நான்… இலக்கியப் பொடியன்! அரை ட்ரவுசர்! எழுத்தின் வாசனை… புதிய சங்கதி. நிறைய படங்கள் கொண்ட ஏதோ ஓர் மாதத்து தமிழ்ப் பூக்களை பார்த்தவர்…. “தாஜ்… சினிமா பத்திரிகை நடத்தலாம் நீங்கள். எல்லா அம்சமும் உங்களிடம் இருக்கிறது.”என்றார்.

ஹாஜா அலியின் சொல்லை கேட்டிருக்கலாம். அப்போது புத்தியில்லாமல் போய்விட்டது!

பீற்றிக் கொள்கிற அளவுக்கு ஏகப்பட்ட நடிகர் நடிகைகளின் பழக்கம் கிட்டியிருக்கும். அதுகளுக்கு பினாமியாகி சினிமா எடுத்து…. கார்/ பங்களா/ பொண்டாட்டிகள்/ சின்ன வீடு/ குட்டி வீடு/ குஞ்சு வீடு ஏக்கர் கணக்கில் நிலங்கள் என்பதுடன் ‘சீ’ கணக்கில் கடனாளி முத்திரை கொண்ட தடபுடலான வாழ்வை தவற விட்டுவிட்டேன். யோசிக்கும் தோறும் வருத்தமாகவே இருக்கிறது.

தமிழ்ப் பூக்களில் அவர் எழுதியது கொஞ்சம். அவர் எழுதாதற்கு அந்த இதழின் போதாமை மட்டும் காரணமல்ல. அவர் அதிகம் எழுதாதவர். சரியாக சொன்னால்….எழுத முயலாதவர். தவறி எழுதினாலும் அத்தனை சீக்கிரம் அடுத்தவர்களின் பார்வைக்கு வைத்துவிட மாட்டார்! வீண் அச்சம் அதிகம். எங்கே தன் எழுத்து விமர்சகர்கள் பார்வையில் வீழ்ந்து கற்றோர் சபைமுன் கைகட்டி நிற்கவேண்டி வருமோ… என்பது மாதிரியான அச்சம்.

நான்… நேர் எதிர் ‘அச்சமென்பது மடமையடா’ ஜாதி Yes… அச்சமே இல்லாத எழுத்தாளன்(?) நிஜத்தில்… என் எழுத்துதான் அவர்களை பயமுறுத்தும்! கற்றோர்…. என் முன் வந்து நின்று “என்ன தம்பி…. இலக்கணம் பிசக இத்தனை தப்பும் தவறுமாய்…. ஒற்றெழுத்து, குறில், நெடில் குறித்தெல்லாம் கவனமில்லாமல்?” என்று கேட்கும் பட்சமும்… “இன்னும் ஆபிதீன் திருத்தலிங்க” என்பேனே தவிர பயந்துவிட மாட்டேன். திருமூலரே வந்து கேட்டாலும் அதுதான் பதில்! என்ன வேண்டிகிடக்கிறது பயம்? அடங்காத மனைவியைக்கூட சேர்த்து கொள்ளலாம்! இந்தத் தமிழை… கட்டி மாரக்க முடியலீங்கலே சாமி… என்பேன்!

ஹாஜா அலி படைப்பென்று எது ஒன்றையும் பூரணமாக எழுதி நான் வாசித்ததில்லை. நிஜத்தில் அப்படி ஒன்று இல்லவும் இல்லை. தமிழ்ப் பூக்களுக்கு என்று எப்பவாவது ஒரு கட்டுரை ஒரு கவிதை புனை பெயரில் ஒரு சிறுகதை தமிழ்ப் பூக்களை தாண்டி நண்பர்களுக்கு கடிதங்கள்! அவ்வளவுதான்.

டிஜிடல்  செய்யப்பட்ட ‘நவீன இலக்கிய’ கீ போர்டில் சரியான வாசிப்பாளன் ரீங்காரம் எழுப்பினால் என்ன மாதிரிகளான ரிதங்கள் வர்ணம் பிரிந்து நம் காதுகளை சிலிர்க்க வைக்குமோ அப்படியானது அவரின் கடிதவரிகள்! நிஜத்தில்… அவரது கடிதங்கள்தான் அவரது இலக்கிய முகவரியென்பேன்!

இங்கே ஒரு ரகசியத்தை சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் மன்னிக்கனும். உங்களது கடித வரிகளிலும் அந்த ரீங்காரத்தை கேட்டிருக்கிறேன் ஆபிதீன்!

தமிழ்ப் பூக்களுக்கு அவர் அதிகம் எழுதவில்லை என்றாலும்… அன்றைக்கு சௌதியில் கிடைத்த தமிழ் இதழ்களை ஆய்ந்து சில நல்ல எழுத்துகளை… தேர்வு செய்து தமிழ்ப் பூக்களின் பிரசுரத்துக்காக தருவார். எனக்கும் பிற தமிழ்ப் பூக்கள் நண்பர்களுக்கும் நல்ல எழுத்துகளை காண்பிப்பார் சந்தோஷமாய்!

இங்கே நல்ல எழுத்துகள் என்பது… குறைவான தளத்தில் அடர்த்தியான பொருள் தரும்/ அதாவது… கவிதை வயப்பட்ட/ லாவகமான/ ரசிக்கக்கூடிய/ வாசிப்பில் கொஞ்சமும் இடறாத எழுத்து என்று… பொருள் கொள்ளலாம்.

தொடக்கத்திலிருந்து முப்பது பக்கத்திற்கு முற்றுப் புள்ளியே இல்லாத/ படிக்கிறபோது மூளை நரம்பெல்லாம் முறுக்கிக் கொள்கிற நாவல்களை அவர் படித்திருந்தாலும் அதையெல்லாம்… எங்களுக்கு அறிமுகப்படுத்தமாட்டார். பதிப்பகங்கள் என்றால் கூட ‘வாசகர் வட்ட’மும் ‘க்ரியா’வும்தான்!

அவருக்கு… நவீன இலக்கியம் என்பது உயர்ரக சாக்லெட்டாக தேனாய் தித்திக்க வேண்டும். வாசிக்க வாசிக்க மூளையில் கரைய வேண்டும். ஜானகிராமன் மாதிரி… வெங்கட்ராம் மாதிரி…. சுந்தர ராமசாமி மாதிரி… அசோகமித்திரன்/ கந்தசாமி / லா.ச.ரா மாதிரி!

ஜானகிராமன்/ வெங்கட்ராம் பற்றி அலசும் போது… “எழுத்தில் காமரூப மின்னல் வெட்டுக்கள் அவசியம்தானா?” “அதிலென்ன தப்பு?” “அது செக்ஸ் இல்லையோ?” என்றால் எழுத்தில் அத்தகைய பூச்சு வேலைப்பாடு எத்தனைக்கு அவசியமென ஹாஜா அலி வகுப்பு எடுக்கத் தொடங்கிவிடுவார்!

இப்படி…. இலக்கியத்தின் வெவ்வேறு முனைகளில் அவர் எடுத்த வகுப்புகள் அதிகம்! நினைவில் சப்பணமிட்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட் சித்தாந்தம் அவருக்கு எட்டிக்காய்! ‘க….’ என்று தொடங்கும் முன்னமேயே முகத்தை திருப்பிக் கொள்வார். அமெரிக்காவின் வெற்றுத் தும்மலுக்கும்கூட கிறங்கி கவிழ்ந்து போவார். ஏனாம் அப்படி? என்றால்… “தடைகளற்ற சுகந்திரத்தின் தாய் பூமி அது!” என்பார்.

சோவியத் எழுத்தாளர்களை அவர் சிலாகித்து ரசித்தது கிடையாது. ஆனால்… அங்கே இருந்து தப்பி ‘யூரோப்’பிற்குள் தஞ்சமாகி எழுதும் சோவியத் எழுத்தாளனின் எழுத்துக்கள் அவருக்கு மகிமையானது. அதுவும் குறிப்பாய் அந்த எழுத்தாளன் சோவியத்திலிருந்து தப்பித்தவனாக இருக்க வேண்டும்.

அவரது… உதாரண இலக்கியமெல்லாம் மேலைநாட்டுடையதாகவே இருக்கும். ‘குட்டி இளவரசன்’ அவர் ரசனைப்பட்டியலில் நிரந்தர இடம் பிடித்தவொன்று! இசைகூட அப்படிதான் மேலையிசைதான்! வாரா வாரம் டாப் டென் வரிசையில் நிற்கும் பாப் சிங்கர்களின் பெயர்கள் அத்தனையும் அவரது உதடுகளின் வெடிப்பில்!

அவரை நான் கடைசியாக சந்தித்தது என் வீட்டில். சௌதி/ மலேசியா/ ஹாங்காங்/ திரும்பவும் மலேசியா என்று பறந்து பறந்து சம்பாதித்த அழகில் ஊரில் வந்து பெண்டாட்டி நகை நட்டுகளை விற்று வாழ்வை சமன் செய்து கொண்டிருந்த காலம்.

அவரது சொத்தென்று மீதமிருந்த வீட்டுப் பாகத்தை வாங்கி கொண்ட அவரது அண்ணன் இன்னும் பணம் தரவில்லை… என்பதான புகாருடன் அந்தச் சந்திப்பில் ரொம்பவும் குறைப்பட்டார். எ

ன்னைப் பார்க்க வந்த போது தனது மகனையும் அழைத்து வந்திருந்தார்! பையன் அவரை மாதிரியே! சுருள்கொண்ட தலைமுடியோடு வெளியே தலைகாட்டிக் கொண்டிருக்கும் தொற்றுப்பல் சகிதமாய் அப்படியே குட்டி ஹாஜா அலி! அச்சு முகம்!! ஏழாவது படிக்கத் தக்க வயது. இரண்டாவது மனைவியுடன் அவர் சந்தோஷித்து இருந்தற்கான ஒரே ஆதாரம்!

அவரின் இரண்டாவது திருமணத்தில் பங்கெடுத்த அவரது நண்பர்களில் நானும் ஒருவன். சின்ன சைஸ் ராஜாஜி மண்டபம் மாதிரியான வீட்டில் தங்கவைத்து உபச்சாரம்! ஓய்வுப் பொழுதில் அங்கே வந்தார் ஹாஜா அலி. பேசிக்கொண்டே வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துப் போனார். தெருவின் மொத்த நீளமும் பார்க்க வியந்தேன்! அத்தனைக்கு அதிகம்! ஒரு கிலோ மீட்டர் குறையாது! பெரிய பெரிய மாளிகைகள் வேறு!

மினி ராஜாஜிஹாலை அறியும் ஆர்வத்தில்… “இந்த மாளிகை யாருடையது?” “என் தாய்வழி மாமாவுக்கு சொந்தமானது” “எத்தனை பேர் வசிக்கிறார்கள் இங்கே?” “ஒரே ஒருவர் மட்டும்” எனக்கு அதிர்ச்சி! அதைக் காட்டிக் கொள்ளாமல்… “நிஜமாகவா!” “இந்தத் தெரு பூராவும் உள்ள பெரிய வீடுகள் அத்தனையிலும் கூட அதே நிலைதான். “வேலையாட்கள்தான் வசிப்பார்கள்” “மாளிகைகளுக்கு சொந்தக்காரர்கள்?” “எல்லோருக்கும் சென்னை/ சிங்கப்பூர்/ மலேசியா/ இந்தோனேஷியாக்களில் வீடுண்டு அங்கேதான் அவர்கள்!” “இங்கே வரமாட்டார்களா?” “வராமல் எப்படி? விடுமுறைகளில் வந்து போவார்கள்” “கேட்க கஷ்டமாக இருக்கிறது ஹாஜா!” “தாஜ்… இந்த தெருவில் உள்ள அத்தனை வீட்டுக்குமோர் கதையுண்டு” “அதை எழுதுவதற்கென்ன?” “எழுதலாம்! அடுத்த நாள்… நான் உயிரோடு இருக்க மாட்டேன்!” “ஓ…!” “இல்லை தாஜ்… எழுதுவேன்! நிச்சயம் எழுதுவேன்! நான் இறப்பதற்கு முந்தி அது நடந்தேறும்!”

அதை எழுதினாரா என்று தெரியாது. நிச்சயம் எழுதியிருக்க மாட்டார். ஒரு கவிதை எழுதவே குறைந்தது ஒரு வருட காலம் வேண்டும்! இத்தனைக்கும் அந்தக் கவிதை ஆறேழு வரிகளைத்தான் கொண்டிருக்கும்!!

பையை எடுத்துக் கொண்டு காய்கறி மார்க்கெட்டுக்குப் போய் கண்ணில் பட்ட கறிகாய்களை எல்லாம் வாங்கிவந்தேன். எனக்கும் அவரது பையனுக்கும் அசைவம். அவருக்கோ… வாங்கிவந்த கறிகாய்களை கழுவி சுத்தபடுத்தி உணவு மேசையில் கடை பரப்பி வைத்தேன். அதனை சிரத்தையுடன் செய்த என் சின்ன மகள்.. சமையல் கட்டின் சுவர் மறைவில் அவர் தின்பதைக் காண காத்திருந்தாள்!

ஹாஜா அலி உணவு மேஜையைப் பார்த்து சிரித்தார். ரொம்ப அவசியமாய் ஒரு வாழைக்காயை எடுத்து கடித்து மென்று சாப்பிடத் தொடங்கினார். சமையல்கட்டில் குமட்டல் சப்தம் கேட்டது. நாங்கள் பேசிக்கொண்டே சாப்பிட்டோம். அவரது பையன் சாப்பிட்டு முடித்து எழுந்து கையலம்பப் போனான்.

“பையனுக்கு இன்று பள்ளிக்கூடம் விடுமுறையா?” “இல்லை தாஜ்… படிக்கலை அவன்!” “படிக்கலைனா?” “படிக்க வைக்கலை!” “என்னது… படிக்க வைக்கவில்லையா?” “பள்ளிக் கூடத்தில் படிக்க வைத்தால்தான் படிப்பா தாஜ்?” “பள்ளிக் கூடத்திற்கு வெளியே… ஏதேனும் வேறு முறையிலான படிப்பா?” “இல்லை தாஜ்…. அவன் படித்துக் கொள்வான்” நான் வியந்து போய்… புரியாதவனாக… “என்ன சொல்றிங்க?” “அவனுக்கு வேண்டிய கல்வியை அவனுக்கு தேவைப்படும் நாளில் தேடிக்கொள்வான்!” “அப்போ…..!!” “இந்தப் பள்ளி கல்வி அவனுக்கு வேண்டாம்” தொடர்ந்து பேச முடியவில்லை மௌனமாகிவிட்டேன்.

ஜே.கிருஷ்ண மூர்த்தியின் அறிவார்ந்த பரப்பில் ஆனந்தமாக உலாத்தியிருக்கிறேன். அவரது இயற்கையோடான கல்வி முறை எனக்கு உகப்பானது. நமது கல்வி முறையை ஜே.கிருஷ்ண மூர்த்தி அசட்டை செய்ததும் தெரியும். அதற்கு வலுவான காரணங்கள் உண்டு!

ஹாஜா அலிக்கும் ஜே.கிருஷ்ண மூர்த்தியை நிரம்ப பிடிக்கும். அறிவேன். அவரது எழுத்துக்கள் அனைத்தையும் நிச்சயம் படித்திருப்பார். சந்தேகமே இல்லை. அதையொட்டித்தான் மகனின் பள்ளிப் படிப்பை உதாசீனம் செய்துவிட்டாரோ? புரியவில்லை.

பள்ளிப் படிப்பை அசட்டை செய்த அதே கிருஷ்ண மூர்த்திதான் வேறு வழியில்லாமல் தான் சார்ந்தப் பள்ளிகளில் அரசு பாடதிட்டங்களுக்கு வேறு வழியின்றி ஒப்புதலும் செய்தார். ஆனால் ஒன்று ஹாஜா அலியின் இந்த முடிந்த முடிவை எந்த வகையிலும் ஜே.கிருஷ்ண மூர்த்தி ஏற்கமாட்டார்.

ஹாஜா அலி தன்னை மாய்த்துக் கொண்டபோது… நான் துபாயில் இருந்தேன். அவரது வீட்டாரிடமிருந்து அந்த துக்கச் செய்தி வந்ததை என் மனைவி டெலிபோனில் சொன்னாள். அவர் இறப்பதற்கு முந்தைய வாரம்… ஆபரேசனுக்காக சேர்க்கப்பட்டிருந்த தஞ்சை மெடிக்கல் காலேஜில் இருந்து யார் கண்களிலும் படாமல் எங்கு தேடியும் கிடைக்காமல் தப்பித்து தலைமறைவாகிவிட்டாராம்! துணை செய்தியாகச் சொன்னாள்! அழமுடியவில்லை. வேலை முடிந்து ரூமுக்குப் போய் முயற்சிக்கலாம். அன்பானவர்களின் நசிவும், இழப்பும் அதிகத்திற்கு சோகம் தரவல்லது அழமுடியும்.

ஏழு மணிக்கு ரூம் போனபோது ரூம்மேட்டுகள் டி.வி. சீரியலில் சீரியஸாக இருந்தார்கள். மருமகளுக்கு துரோகமும் சதியும் செய்யும் ஓர் குடும்பத்தில் ஒரு அப்பாவியான கதாநாயகி பழி சுமந்து கொண்டிருந்தாள். எல்லோர் கண்களும் கலங்கிக் கொண்டிருந்தது. எங்கே நான் அழுவது! இரவு தூங்கப் போகும் தருணம் போர்வைக்குள் நினைவுகளை மீட்டிப் பார்த்தேன். அப்பவும் அழுகை வரவில்லை தூக்கம்தான் வந்தது.

மூன்று வருடம் கழித்து ஊர் வந்தபோது கூத்தாநல்லூர்/ நாகூர்/ அவரது உடலை கண்ணியப் படுத்திக் காத்து உரியவர்களிடம் ஒப்படைத்த நாகூர் தொகுதி எம்.எல்.ஏ/ ஹாஜா அலியின் மனைவி/ மகன்/ நண்பர்கள் என்று பலரையும் சந்தித்தேன். பேசவும் பேசினேன். ஹாஜா அலியின் உடலை நாகூரிலிருந்து எடுத்து வந்து கூத்தாநல்லூரில் அடக்கம் செய்ததுவரை உடன் இருந்த அவரது நண்பர் ஒருவர் சௌதியில் பணிபுரிந்துக் கொண்டிருக்க போனில் பிடித்து அளவளாவினேன். எல்லாவற்றையும் சொன்னார்.

சம்பாத்தியமில்லாத மருமகனை மனிதனாகவே மதிக்காத ஹாஜா அலியின் மாமியார் தகவலில் பெரிய இடம் பிடித்தார்!

சொல்லலாம்… சொல்லனுமென்று ஏகத்திற்கு எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது. என்றாலும் ஹாஜா அலியை எழுப்பி நிறுத்தி காட்டிவிடும் ஆசையின் ஆசையில் எழுதியிருக்கிறேன் எழுதியிருக்கிறேன்… இத்தனை நீளத்திற்கு!

***

குறிப்பு: தொடர்ந்து…. ‘ஆபிதீன் பக்கங்களில்’ ஹாஜா அலி அறிமுகப் படுத்திய எழுத்துக்கள்/ அவரது சொந்த எழுத்துக்கள்/ அவர் எழுதிய கடிதங்களென்று கைவசம் உள்ளவைகளை பதிய எண்ணமும் உண்டு. நம்பலாம். வரும். அவர் நினைவாக!

– தாஜ்

***

 நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்   | satajdeen@gmail.com

2 பின்னூட்டங்கள்

 1. haja mydeen said,

  16/03/2012 இல் 03:39

  taj, you know better than me about hajali, still hert me why cont we save him .

  • தாஜ் said,

   09/02/2013 இல் 19:43

   ஹாஜா….
   இன்றைக்குத்தான் (9.2.2013)
   உங்களது வரிகளை வாசித்தேன்.
   சந்தோஷமாக இருந்தது.
   இன்னும் அவரைப்பற்றி எழுதணும்.
   அதில் உங்கள் பங்கை நிச்சயம் எழுதுவேன்.
   நீங்கள் இல்லாமல் ஹாஜா அலி ஏது?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s