தமிழினத் துரோகம் – ஏ.ஹெச். ஹத்தீப்

தமிழினத் துரோகம்

 – ஏ.ஹெச். ஹத்தீப்

சமநிலைச் சமுதாயம் – மார்ச் 2009 இதழிலிருந்து..

இலங்கைப் பிரச்னையை அலசும்போது அங்கே நிரந்தர அமைதியை நிறுவும் ராஜீவ் காந்தியின் நெடுநோக்கு முயற்சியையோ அல்லது அவரது கோரப் படுகொலையையோ தூரத் தள்ளிவைத்துவிட்டுத் தமிழீழ விவகாரத்தைப் புரிந்து கொள்ள முனைவது முற்றிலும் அரைவேக்காட்டுத்தனம்.

இலங்கையின் பாதுகாப்பு என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கும் நலனுக்கும் அச்சுறுத்தல் தருகிற எந்த நடவடிக்கையையும் தகர்க்கும் நோக்கில் அமைதிப்படையொன்றை அங்கே அனுப்பினார் ராஜீவ்.

சதாமிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தனது தேசத்தையே அமெரிக்காவுக்கு பலிகொடுத்து குவைத்திய முட்டாள்தனத்தைப் போன்று இலங்கை அரசும் ஏடாகூடம் செய்து விடக்கூடாதென்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் இந்தியா எடுத்த முயற்சியைத் துரதிர்ஷ்டவசமாக் சிங்களவர்களும், விடுதலைப் புலிகளும் ஒருசேர எதிர்த்த கொடுமையை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.

உலகமே எதிர்த்தாலும் தனது தாயகத்தைக் காப்பாற்றுவது ஒன்றே உயர்க் கர்மம் என்றெண்ணியதைத் தவிர வேறெந்தக் குற்றமும் ராஜீவ் செய்யவில்லை. அதுவும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் கலந்தாலோசித்த பின்னரே காரியத்தில் குதித்தார் இந்தியப் பிரதமர்.

அந்தக் கொடூரமான கொலைப்பழியைத் தூக்கி தி.மு.க மீது போட்டுவிட்டு அரசியல் ஆதாயம் தேடியவர்கள் இங்கே உண்டு. அவர்களுக்குத் துணை போனவர்கள் இங்கே உண்டு. பிரபாகரன் குற்றவாளி என்று நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை மேடை போட்டுக் கேலி செய்தவர்கள் இங்கே உண்டு. அதனால்தான் இந்தியாவை இளிச்சவாயன் என்று நினைப்பவர்களுக்கு இங்கே பஞ்சமில்லாமல் போயிற்று.

அந்தக் காலகட்டத்தில், இலங்கைக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீது, இராணுவ அணிவகுப்பின்போது ஒரு சிங்கள வெறியன் துப்பாக்கி பேனட்டால் கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டான். அந்தத் துர்ச்சம்பவம், சிங்கள இனம் இந்தியா மீது கடும் கோபம் கொண்டிருக்கிறது என்பதற்கான அப்பட்டமான அடையாளம். நல்லவேளையாக அவர் உயிர் தப்பினார்.

ஆனால் ஒரு தமிழ் மனிதவெடிகுண்டிலிருந்துதான் அவரை எவராலும் காப்பாற்ற முடியவில்லை. அதுவும் இந்தியாவில்; தமிழகத்தில். தமிழுக்கும் தமிழினத்துக்கும் அன்றைக்குக் கிடைத்த அவப் பெயரை இன்றளவும் நீக்க முடியவில்லை.

ஒரு தேசத்தின் பிரதமரை வெடிகுண்டு வைத்துக் கொல்வது தீரச்செயல் என்று வியந்த புண்ணியவான்கள் வாழ்ந்த புனிதபூமி இது. நாட்டுக்காக உயிர்த்தியாகம் புரிந்த ராஜீவைப் புகழ்ந்தால், மரணத்தைக் கட்டித் தழுவிய தணுவை என்னவென்று பாராட்டுவது? என்று குறுக்குக் கேள்வி எழுப்பிய தேசாபிமானிகள் நிறைந்த நாடு இது.

சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் போர் நிறுத்தம் நீடித்த சமயத்தில், திடீரென்று கொழும்புவில் தோன்றிய மாவீரன் பிரபாகரனிடத்தில் ஒரு வருத்தம் தெரிவிக்க மாட்டாரா என்ற ஏக்கத்தில், ‘ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தது பற்றி இப்போது நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று ஓர் இந்திய செய்தியாளர் கேள்வி எழுப்பினார். ‘அது முடிந்து போன கதை. இப்போது அதைப்பற்றிய கேள்வி தேவையில்லை’ என்று நெருப்பைக் கக்குவதைப் போல் வெறுப்பை உமிழ்ந்தார், பிரபாகரன்.

நூறு கோடி மக்களின் தலைவனின் கோரப்படுகொலைக்காக ஒரு விழுக்காடுகூட வேதனை தெரிவிக்காத அவரது அரக்கக் குணத்தை எண்ணி இந்தியத் தலைவர்கள் பொங்கி எழுந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும். தேச விசுவாசத்திற்கும் தேச துரோகத்திற்குமிடையே இங்கேதான் வித்தியாசம் வெளிப்படுகிறது.

தனது தளபதிகளில் பலபேரை பிரபாகரன் கொன்றிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அப்பாவி முஸ்லீம்களை வெவ்வேறு இடத்திற்குத் துரத்தியடித்திருக்கிறார். அவர்களது வழிபாட்டு இடங்களை உருத்தெரியாமல் நொறுக்கியிருக்கிறார். லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தியிருக்கிறார். என்ன அக்கிரமம் செய்தாலும் அபாரம் என்று கை தட்டுகிற கோமாளித்தனங்களாலேயே இன்றைக்கு அவரொரு கொடுங்கோலனாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.

ஈழத் தமிழ் மக்களை முற்றிலுமாக காப்பாற்ற வேண்டுமென்ற நிஜமான சிந்தனை இருக்குமேயானால் , ஐக்கிய நாடுகள் சபை அறைகூவல் விடுக்கத் தேவையில்லை. அமெரிக்கா அலற வேண்டியதில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் இயற்ற வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் தீ குளிப்புச் சம்பவங்கள், மனிதச் சங்கிலிகள், பேரூந்து எரிப்புகள், உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் எதுவும் எதுவும் தேவையில்லை. எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஏகோபித்த குரலில் வேலுப்பிள்ளை பிரபாகரா! என் ஈழத்துச் சொந்தங்களைக் காப்பாற்று! என்று பிரார்த்தித்தால், அதற்கு அவர் செவி மடுத்தால் போதும்; தமிழர்களுக்காக இங்கே யாரும் ஒப்பாரி வைக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

கண்ணீர் சிந்தவேண்டிய கட்டாயமெல்லாம் தமிழர்களைக் காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை ஊக்கப்படுத்தியதால்தான், இந்தப் பிரச்னையில் வானத்துக்கும் பூமிக்கும் எம்பிக் குதிக்கிற யாராவது ஒருவர், முதலில் பிரபாகரனைப் போர் நிறுத்தம் செய்ய அறிவுறுத்தியதுண்டா? ஐ. நா.சபையால் தீவிரவாதிகள் என்று பிரகனப்படுத்தப்பட்ட ஒரு கும்பலை எதிர்த்து, மக்களால் நிறுவப்பட்ட ஓர் ஆட்சி யுத்தம் புரிந்தால், குறுக்கே நின்று தடுத்து நிறுத்து என்று இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பது என்ன வகை ஜனநாயகம்? காஸா பகுதியில் இதே நிலை வியாபித்திருந்தபோது முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியான கேரளாவிலோ, மேற்கு வங்கத்திலோ ஏன் இந்த ஜனநாயகம் பேசப்படவில்லை?

அப்பேர்ப்பட்ட இலங்கையின் தேவக்குமாரனுக்காகத் தமிழகமே இப்போது திரண்டு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்திய தேசத் தலைவனை வெடிகுண்டு வைத்துத் தகர்ந்த பிரபாகரனின் பெயரைத் தங்களது குழந்தைகளுக்கு சூட்டி அழகு பார்க்கிறது. எப்போதாவது ஒருநாள் தனது தீவிரவாதக் கொள்கையையும், பரிவாரங்களையும் காப்பாற்ற இந்தியக் கரங்களால் மட்டுமே முடியும் என்று எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காத ஒரு போராளிக்காகச் சகோதர இந்தியத் தமிழர்களைப் பகைத்துக் கொள்கிற காட்டுமிராண்டித்தனம் இங்கே தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நேற்றுவரை போற்றியவர்களால் இந்தியத் தலைவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்படுகின்றன. நாளைக்கு பாராட்டப்போகிற அரசியல் நண்பர்களின் உருவபொம்மைகள் சிதைக்கப்படுகின்றன.

இங்குதான் இந்தியத் தமிழினத்தைப் பற்றி ஒன்றுமே புரியமாட்டேனெங்கிறது.

ஈழத்து அப்பாவித் தமிழ் மக்கள் எவ்விதக் குறையுமின்றிக் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் இந்தியாவிலிலுள்ள எவரும் மாற்றுக் கருத்து கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை, ஏன்? ஐ. நாவும் அமெரிக்காவும் கூட அதற்காக குரல் கொடுக்கின்றன. ஜனாதிபதி பிரதிபா பட்டீல், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, விடுதலைப் புலிகளால் தனது கணவரை இழந்து தாலியைத் துறந்த சோனியா காந்தி உள்ளிட்ட மத்தியத் தலைவர்களிலிருந்து, திராவிடக் கழகத் தலைவர் வீரமணி உட்பட அனைவரும் தமிழர் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருப்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், மத்திய அரசு லட்சுமணன் கோட்டைத் தாண்டுகிற விஷயத்தில் மட்டும் சற்றுத் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. அதுகூட தேசத்தின் நன்மையைக் கருதியே என்பதைச் சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொள்ள முடியும். அப்படியானால் தமிழகத் தலைவர்களுக்குப் புரியவில்லையா? அல்லது புரியாதவர்கள் போன்று மத்திய மாநிலை அரசுகளைச் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டுமென்ற தீய நோக்கத்துடன் ஆர்ப்பரிக்கிறார்களா? அதற்கு இந்த தருணத்தைத் தேர்ந்தெடுத்தற்கு ஒருவேளை வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக இருக்கலாமோ?

அப்படியானால் அழுவது, கதறுவது, ஒப்பாரி வைப்பது அனைத்துமே அரசியல்தானா? அல்லல்படும் ஈழத்தமிழனுக்காக இல்லையா?

சுமார் ஓராண்டு காலமாகவே தமிழகத்து அரசியலில் அணிகள் மாறத் துவங்கிவிட்டன.. ஐந்தாண்டுகளாக எதிராளியாக இருந்தவர்களுடன் இப்போது கை கோர்த்து நடக்கவேண்டிய நிர்ப்பந்தம். காங்கிரசுடனோ தி.மு.கவுடனோ கூட்டணியை முறித்துக் கொள்வதற்கான இரத்தத்தைச் சூடாக்கும் கொள்கை முரண்பாடுகள் எதுவும் தோன்றிவிடவில்லை. மக்களிடம் கூறுவதற்குக் கைவசம் இருப்பதெல்லாம் இலங்கைப் பிரச்சனை மட்டுமே. எல்லாத் துருவங்களையும் ஒன்றிணைக்கிற சக்தி இப்போதைக்கு அது ஒன்றுதான்.

அதனால்தானோ என்னவோ இந்த விவகாரத்தில் தமிழக எதிர்நிலை தலைவர்களின் பாஷைகள் அறவே தெளிவாக இல்லை. செல்வி ஜெயலலிதாவைத் தவிர இடதுசாரிகள் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பேசும் செந்தமிழ் மொழியிலேயே நரேந்திரமோடியின் இரத்தவாடை வீசுகிறது. இப்போதைய தமிழகத்து அரசியல்வாதிகளின் வார்த்தைகளில் நிதானமோ தமிழ்ப்பண்போ வெளிப்படவில்லை. பாரதி பாடினானே, ‘இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று. அந்த இன்பமுமில்லை; தேனுமில்லை. அமிலத்தில் மட்டுமே தோய்த்தெடுக்கப்பட்ட வெறும் வர்க்க வெறி மட்டுமே வெளிப்படுகிறது.

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஈழத்துப் பிரச்னையில் பாரதீய ஜனதாவை ஒதுக்கிவைக்க வேண்டியதில்லை என்று அறிவுரை கூறுகிறார் ஒரு செய்தியாளர். இதுபோன்ற அற்புதமான யோசனைகளை மீடியாக்காரர்கள் வெளிப்படுத்தப் போய்த்தான் நாடு வெகு வேகமாக சீரழிந்து கொண்டிருக்கிறது. தனது கட்சியின் கொள்கை காரணமாகவே பா.ஜ.க. தள்ளியே நிற்கிறது என்பதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாமல், குழம்பிப் போய்க்கிடக்கிறார்கள் பத்திரிகைகாரர்கள்.

இலங்கையில் கொல்லப்படுபவர்கள் ஒருவேளை கிருஸ்தவர்களாக இருந்திருந்தால் அமெரிக்கா தலையிட்டு அவர்களைக் கைத்தூக்கிவிட்டிருக்கும்’ என்று வெடிக்கிறார் தமிழகத்துப் பெருந்தலைவர்களில் ஒருவரான ராமதாஸ். இந்தியப் பேரரசில் அங்கம் வகித்துக் கொண்டே ஆரோக்கியமோ, சுகாதாரமோ இல்லாத சொற்களால் மத்திய அரசை அர்ச்சிக்கிறார் அவர்.

தமிழ்த் தேசிய கட்சியிலிருந்து காங்கிரஸூக்குத் தாவி, அங்கேயும் நிரந்தரமாகக் காலம் தள்ளாமல் தனிக்கட்சி துவங்கி, அதிலும் தங்காமல் இப்போது ஈழத்துப் போராளிகளுக்காகத் தனி ஆவர்த்தனம் வாசிப்பது நெடுமாறன் போன்ற அரசியல் துறவிகளுக்கு வேண்டுமானால் சரியாகப் படலாம். பாஸ்போர்ட்டே இல்லாமல் சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்குச் சென்று கள்ளத்தனமாக பிரபாகரனைச் சந்தித்துவிட்டு வந்த வை.கோ கூட நெடுமாறன் ரகம்தான். அவர்களுடன் சேர்ந்துகொண்டு திருமாவளவன், ராமதாஸ் போன்றோர் கூட ஈழத்துத் தமிழர்களின் வேதனையைத் தடுப்பதற்குப் பதிலாக நிலைமையை மிகவும் மோசமடையவே செய்யும்.

இவர்கள் அனைவரும் ஈழத்துத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

விடுதலைப்புலிகள் வேறு; ஈழத்துத் தமிழர்கள் வேறு, ஒன்றோடு ஒன்றைப் போட்டுப் பின்னிக் கொள்வதாலேயே ஈழத்தமிழர்கள் மிகவும் ஆபத்தான இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஓர் அன்னிய அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் நடைபெறுகிற போராகக் கருதாமல் இனப்படுகொலை என்று வர்ணம் பூசி எவ்விதப் பயனுமில்லை.

இங்கே தலைவர்கள் பிடிவாதம் பிடிக்கும் ஒவ்வொரு வினாடியும் அங்கே எண்ணற்ற தமிழன் உயிர் துறக்கிறான். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள மறுத்து, வேறு திசையில் கவனத்தைத் திருப்புவதுதான் தமிழனத் துரோகம்.

***

ஏப்ரல் 2009ல் வாசகி ஸ்ரீவித்யாவின் எதிர்வினை :

மார்ச் 2009 இதழில் ஏ.ஹெச். ஹத்தீப் எழுதிய கட்டுரை வாசித்தேன். ‘விடுதலைப் புலிகள் வேறு, ஈழத் தமிழர்கள் வேறு. இதைப் புரிந்து கொள்ள மறுப்பது தமிழனத் துரோகம்’ என்று எழுதியிருப்பதை தமிழுணர்வு உள்ள யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உலகெங்கிலும் (கனடா, லண்டன், ஸ்வீடன் உட்பட) ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கில் திரண்டு புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தே, தனி ஈழத்துக்கான தாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். புலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கான போராட்டத்தில் களத்தில் உள்ளனர். இவர்கள் இல்லையெனில் இலங்கையில் தமிழினமே அழிந்திருக்கும். நண்பர் செய்தி ஊடகங்களிலிருந்து விலகியே இருக்கிறாரோ என்று எண்ண வேண்டியுள்ளது. 80களிலிருந்தே உலகளாவிய ஊடகங்கள் பலவும் சிங்களே அரசின் இனவெறியை, பயங்கரவாத நடவடிக்கைகளைப் பதிவு செய்து வருகின்றன. இலங்கை அரசியலமைப்பில் தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வழியே இல்லை. ஏனெனில், ‘சிங்கள பவுத்தர் மட்டுமே அதிபராக முடியும்’ என்கிறது அவர்கள் சட்டம். இந்நிலையில் அறவழிப் போராட்டங்கள் நடத்தில் அவை கடுமையான வன்முறையால் ஒடுக்கப்பட்ட பிறகே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் எடுக்க நேரிட்டது. இதுதான் இலங்கையின் அரச பயங்கரவாத வரலாறு. புலிகள் தற்போதும் போர் நிறுத்தத்திற்கு தயார் என் இம்மாதத் துவக்கத்தில் அறிவித்தும் சிங்கள அரசுதான் அதனை ஏற்கவில்லை. முன்பும் பலமுறை அமைதிக்கான நோர்வே முயற்சி உட்பட அனைத்தும் சிங்கள அரசாலேயே மீறப்பட்டன. சிங்கள அரசின் நோக்கம் தமிழின அழிப்பே. புலிகள் மீதான வெறுப்பால் நண்பர் ராஜீவ் காந்தியை மகத்தான் மக்கள் தலைவராகக் காட்ட முற்படுகிறார். இந்திய, சிங்கள் ராணுவக் கொடூரங்களை அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது. ‘பிரபாகரன் அரக்க குணம் படைத்தவர்’ என்கிறார். அப்படியென்றால் சிங்கள அரசு அன்பே உருவான புத்த அரசா? ஈழ மக்கள் 30 ஆண்டுகளுக்க்கும் மேலாக அவலங்களைச் சந்தித்து வருகின்றனர். ஆனால், பாவம் தமிழ் பேசுபவர்களிடையே சிலருக்கு இது புரியவில்லை. மதம் குறுக்கிட்டு விடுகிறது. பாலஸ்தீன மக்களைப் போலவே வதைகளுக்கு ஆளாகும் ஈழத் தமிழர் அனாதையாக உள்ளனர். புலிகள் தவிர அவர்களைப் பாதுகாக்க யாருமில்லை என்பதே நிதர்சனம். ஈழ மக்களுக்காகப் பேசிவரும் தமிழகத் தலைவர்களிடம் நரேந்திரமோடியின் இரத்தவாடை வீசுவதாக கூறுகிறார். நரேந்திர மோடிக்கு விருந்தளித்தும் நட்பு பாராட்டுவதும் ஜெயலலிதா என்பதை நினைவுபடுத்துகிறேன். இன்றளவும் ஒரு சிங்களப் பெண்ணையாவது புலிகள் துன்புறுத்தியதில்லை. இதனைப் புரிந்து கொள்ளும் மாண்பு பலரிடம் இல்லை. ‘முழுக்க முழுக்க மக்கள் போராட்டம் என்பதைக் கொச்சைப்படுத்து முன், இரத்தவாடை வீசும் இலங்கை வரலாற்றை ஊன்றிப் படிக்குமாறு நண்பரைக் கேட்டுக் கொள்கிறேன்.

 – ஸ்ரீவித்யா, கூடலூர், நீலகிரி மாவட்டம்.

**

நன்றி : ஏ.ஹெச். ஹத்தீப், ஸ்ரீவித்யா, சமநிலைச் சமுதாயம்.

**

ஒரே ஒரு சுட்டி : http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_20.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s