ஹத்தீப் சாஹிபின் அரசியல் புதினம் : பொதுப்புத்திக்கு ‘செம அடி’ – கவிஞர் நந்தலாலா

‘உலக அமைதிக்காக – மனிதகுல சுபிட்சத்திற்காக’ என்ற பொய்ப் போர்வையில் தத்தமது இனங்களுக்காகவும் மதங்களுக்காகவும் இருட்டில் நிகழ்த்தப்பட்டு, இருட்டிலேயே புதைக்கப்பட்ட சில கோர சாகசங்களை இந்நூல் வெளிச்சமிடுகிறது’ என்று முன்னட்டையில் கூறப்படும் ‘தேவை மனித நேயம்’ (என்ன தலைப்பு இது!) உண்மையாகவே படு சுவாரஸ்யமாக இருக்கிறது. துரோகங்கள் விதைக்கப்படும், அமெரிக்க அதிபர்களை ஒஸாமா சந்திக்கும் , அந்த பத்தாம் அத்தியாய உரையாடலுக்காகவே ஒரு பரிசு உங்களுக்கு கொடுக்கலாம் ஹத்தீப் சாஹிப் அவர்களே… ‘மெய்யறிவு’ இதழால் சிறந்த புதினமாக 1000 ரூபாய் பரிசு பெற்று, மணிமேகலைப் பிரசுரத்தால் விரும்பி வெளியிடப்பட்ட நூலுக்கு கவிஞர் நந்தலாலா அளித்துள்ள அணிந்துரையை இப்போது பதிகிறேன். ஹத்தீப் சாஹிப் எழுதி , வெளியிடாமல் இன்னும் வைத்திருக்கும் எல்லா நாவல்களிலிருந்தும் (சத்யமேவ, மனிதம், ராஜமுத்திரை, இனிய பொய்க்காதல்,சொர்க்கம், ஆசிரமத்து தேவதை என்ற தலைப்புகளில் எழுதிக் குவித்திருக்கிறார் மனிதர்) சில சில பகுதிகளை விரைவில் இங்கே பதிய இயலும் என்றும் நம்புகிறேன். எழுதுவதையெல்லாம் இ-மெயிலில் அனுப்பி வைப்பதாக ‘ப்ராமிஸ்’ பண்ணியிருக்கிறார் ஹத்தீப் சாபு (‘Send’ பட்டனைத்தானே அழுத்த வேண்டும் ஆபிதீன்?). அது கிடக்கட்டும், ஈழம் பற்றி அவர் எழுதிய சமநிலைச் சமுதாயக் கட்டுரை என்னாச்சு என்கிறீர்களா? அடுத்த பதிவு அதுதான், இன்ஷா அல்லாஹ்.

***

தேவை மனித நேயம்  – ஏ.ஹெச். ஹத்தீப்

கவிஞர் நந்தலாலாவின் அணிந்துரை…

வரலாறு என்றாலே ராஜராஜ சோழனும் குதிரைகளின் காலடியும் கச்சையணிந்த பெண்களும் என்பதாகவே தமிழனின் பொதுப்புத்தி அமைந்துள்ளது. அந்தப் புத்தியியின்மீது விழுந்துள்ள ‘செம அடி’தான் இந்தப் புதினம். இந்த வரலாற்றுப் புதினம் தமிழுக்கு ரொம்ப புதுசு.

இந்திரா பார்த்தசாரதியின் ‘தந்திர பூமி’ கூட இந்திய அரசியலைக் களமாகக் கொண்ட ஒரு நாவல். ஆனால் ஹத்தீபின் தேவை மனித நேயம்’ உலக அரசியல் தளத்தில் நிகழ்பவை. ஹத்தீபின் இந்தப் புதினவகை அல்லது புனைகதை முறை தமிழுக்கு ஒரு நல்வரவு என்றுதான் சொல்ல வேண்டும். 

உலக பயங்கரவாதமே இதன் பின்னணி. அமெரிக்க அதிபர் புஷ்ஷூம் அவரது அதிகாரக் காவலர்களும் சரிபாதிக் கதாபாத்திரங்கள். மீதிப் பாதியை அல்-காயிதாவின் ஒஸாமாவும் அவரது பரிவாரங்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். தத்தமது சாகஸங்களை நியாயப்படுத்துகிற இரு சாரருமே சுயநலம் கலந்த போலிகள் என்பது புரியும்போதுதான் மனிதகுலத்துக்கு விடிவுகாலம். புஷ்ஷின் வல்லரசு ஆணவமும், ஒஸாமாவின் மதவெறிப் பகையும் எவ்வளவு அறிவீனமானவை என்பதை உலகம் புரிய வேண்டிய காலம் இது.

இலட்சியத்திற்காக ஒருவன் சாகலாம். கொன்று குவிப்பதையே எவனாவது லட்சியமாகக் கொள்ள முடியுமா?

‘ஜனநாயகம்’,’அமைதி’,’பயங்கரவாதத்திற்கு எதிரி’ போன்ற சொற்களின் புனிதத்துக்குள் அமெரிக்க அதிபர் ஒளிந்து கொள்வதும்…’இறை ஆணை’,’இஸ்லாமியரின் வாழ்வுரிமை’, ‘கலாச்சாரப் பாதுகாப்பு’ – போன்ற பிரதிவாதப் பதுங்கு குழியில் ஒஸாமா மறைந்து கொள்வதும்..எவ்வளவு போலியானது என்பதை இந்தச் சிறிய புதினம் வெளிக் கொணரும்போது உண்மையிலேயே ஹத்தீப் என்கிற படைப்பாளி வென்று நிமிர்ந்து உயர்கிறார்.

பாத்திரங்களை உயிரோடும் உயிர்ப்போடும் படைப்பது வேறு; உயிருடன் இருப்பவர்களையே பாத்திரமாக்குவது வேறு. வாழ்பவர்களைக் கதாநாயகர்களாக்கும்போது மிகுந்த ஜாக்கிரதையுணர்வு வேண்டும். அதுவும் இந்த நூலில் இடம் பெறுபவர்கள் தினந்தோறும் மீடியாக்களில் உலா வருபவர்கள்.

ஏதோவொரு கிராமத்தில் வசிக்கும் அம்மாசிக் கிழவனைப் பாத்திரமாக்குவதற்கும் , புஷ் – ஒஸாமா போன்ற நிஜப்புருஷர்களைப் படைப்பதற்குமிடையே மிளிரும் வேறுபாட்டை, கஷ்டத்தை உணர்ந்த போதுதான் இந்தப் புதினத்தின் மீது எனக்கோர் ஈர்ப்பு ஏற்பட்டது.

பயங்கரவாதத்தில் பலவகை உண்டு. அரசு அங்கீகரித்தவை; ஐ.நாவின் ஆசி பெற்றவை; மதம் ஆதரித்தவை; இனத்தால் ஏற்கப்பட்டவை – இப்படி அநேக வகை. இவற்றினூடே ஒளிந்து கிடக்கும் ஒற்றுமையையும் வேற்றுமையையும் தெளிவாக எடுத்துக் கூற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு என்னை ஆளாக்காமலேயே உங்களால உணர முடியும். ஆனால் எல்லா வன்செயல்களும் மனித குலத்திற்கு எதிரானவை என்பதை சுதந்திரச் சிந்தனையுள்ளவன் உரக்கச் சொல்லியே ஆகவேண்டும். ரொம்பவும் சத்தமிட்டுக் கூறும்போது பிசிரடிக்காமல், தெள்ளத் தெளிவாக, நம்பகத்தன்மை தகர்ந்து விடாதபடி எடுத்துரைப்பது முக்கியம். இந்த ஆழ்ந்த புரிதலுக்கு ஹத்தீப் பழக்கப்பட்டவராதலால், ‘மனிதம்’ மெல்ல, ஆனால் வலிமையாகப் பேசுகிறது. நிகழ்வுகள் உள்ளே இழுத்துக் கொள்கின்றன. படு சுவாரஸ்யமான உரையாடல்கள்.

திக்ரித்தில், அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையைக் கண்டு ‘ஐ விட்ன்ஸ்’ ஒருவர் – தாரீக் அல் தராஜி – குமுறுவதும் பின்னர் அவரே அல்-காயிதா பயங்கரவாதத்தை முறியடிப்பதும் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாத வன்செயல்கள் நிகழ்த்தப் படும்போதெல்லாம் அகிம்சாமூர்த்தி காந்தியின் முகம் உள்ளத்தில் நிழலாடுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பயங்கரவாதிக்குள்ளிருந்து அகிம்சாமூர்த்திகள் பிறக்க வேண்டும். அதுதான் உலகம் வெப்பமயமாவதைத் தடுக்கும் ஒரே வழி. ஒரே தீர்வு. ஒரே உபகரணம்.

ஏனெனில் எ·ப்.பி.ஐயும் சி.ஐ.ஏவும் தடுக்க முடியாததை , காப்பாற்ற முடியாததை, சாதிக்க முடியாததை ஓர் அன்புள்ளம் வெற்றி கொண்டதே என்பதே இந்நூலின் சாரம். நூலாரிசிரியர் நம்முன் வைக்கும் வாதம். இறுதியில் உலகம் ஏற்றுக் கொள்ளப்போகும் பிரத்தியட்ச நிஜமும் அதுதான்.

இந்தப் பேருண்மையை உலகின் இன்றைய நடப்பு விஷயங்களோடு இத்தனை நேர்த்தியோடும், நுட்பத்தோடும் விளக்கி ‘அன்பென்று கொட்டு முரசே’ என்று உரக்க முழங்கும் நூலாசிரியர் ஹத்தீபை என்ன சொல்லிப் பாராட்டுவது?

கவிஞர் நந்தலாலா / மாநில துணத் தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்

**

புதினத்திலிருந்து கொஞ்சம் புதினா…

மன்னராட்சி நடைபெறும் அனைத்து அரபு நாடுகளிலும் கொகய்ன் போதைப் பொருள் கடத்துவதைவிடக் கொடுமையான, கடுமையான குற்றம் ‘வெளியாட்’களின் அரசியல் பார்வை. அரசியல் குறுக்கீடு. எல்லாவற்றையும் விட அரசியல் விமர்சனம். ஒருவகையில் இஸ்லாத்தில் இறைவனுக்கு இணை வைப்பது எவ்வளவு கொடுங்குற்றமோ, மகா பாவமோ அது போன்றே அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவது அல்லது கிளர்ந்தெழச் செய்வது அல்லது இரண்டும்…ஒஸாமாவின் தந்தை முஹம்மது பின் லாடன் பிழைப்புத் தேடி ஏமனிலிருந்து சவூதிக்கு வந்தவர். பிழைப்புக் கிடைத்து விட்டால் சாப்பிட்டுக் கொழுக்க வேண்டியதை விடுத்து சிம்மானசனத்தை ஓரக்கண்ணால் பார்ப்பதெல்லாம் வந்தேறிகளுடைய வேலையல்ல. மண்ணின் மைந்தர்கள் அரசுக் கவிழ்ப்பு அல்லது அரசு விரோதச் செயல்களில் இறங்கும்போதுகூட மறைவான இடத்திலே, இருட்டிலே சத்தமில்லாமல் சிரச்சேதம் செய்யப்படுவது சர்வ சாதாரண நிகழ்வுகள்.’ (பக் : 69)

‘என்னுடைய இருபத்து நான்கு ஆண்டு கால ஆட்சியில் ஈராக் மக்களை உளப்பூர்வமாக நேசித்ததையும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் தலை வணங்க மறுத்ததையும் தவிர வேறொன்றும் குற்றம் புரிந்ததில்லை. நமது பிராந்தியத்தினுள் அமெரிக்காவை நுழையவிடுவதில்லை’ என்பது மட்டும் தான் எனது பிரதானக் கொள்கை. அதற்கு இடம் கொடுத்த குவைத்தை நாம் எதிரியாகக் கருதினோம். அமெரிக்கர்கள் உள்ளே நுழைந்தால், என்ன விளைவுகள் ஏற்படுமென்பதற்கு துருக்கி, சவூதி, ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் அரபு மக்களிடையே ஏற்பட்டுள்ள கலாச்சாரக் சீரழிவே முக்கிய சாட்சிகள். முதன் முதலில் கலாச்சார மாற்றம், அப்புறம் மதமாற்றம். இதுதான் அவர்கள் பாணி. உதாரணத்திற்கு ஸ்பெயின்… நமது மண் புனிதமானது. மார்க்கம் புனிதமானது. கொள்கை புனிதமானது. கலாச்சாரம் புனிதமானது. இவற்றை அழிக்க யார் முயற்சித்தாலும் முதற்போர் வீரனாக நான் உயிர் துறப்பேன். நமது சிறப்புகளைத் தியாகம் செய்துவிட்டு சுகபோகத்திற்காக உயிர் வாழ்வது முஸ்லீம்களின் அடையாளமல்ல. சகோதரர்களே, அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்ள நான் தீர்மானித்தால், இந்த மத்திய கிழக்குப் பகுதியிலேயே நான்தான் மாபெரும் சக்தியாக உருவாக்கப்படுவேன் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். சரணாகதி அடைபவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிப்பதில்லை’ – சதாம் (பக். 39).

பின்னிணைப்பில் உள்ள ஒரு டஜன் சுட்டிகளில் ஒன்றே ஒன்று :

http://www.hiddenmysteries.org/conspiracy/conspiracy/bushcocaine.html

 

**

தொடர்புக்கு (சதாமுடன் பேச அல்ல!) :

A. H. Hatheeb Sahib , 16  Mohideen Palli Street, Nagore – 611002

Tel : 0091 4365 250218, Mob : 0091 9944884080

**

வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம் – சென்னை 17

தொலைபேசி : 2434 2926, 2434 6082

**

நன்றி :

ஹத்தீப் சாஹிப், நந்தலாலா, மணிமேகலைப் பிரசுரம்

2 பின்னூட்டங்கள்

  1. jeyakumar said,

    12/07/2009 இல் 10:07

    Hatheeb Sahib’s this article must be an interesting one.. The intro and ‘Pudhina’s” which sprinkled in the bottom says that.. Let me buy when I am in India… Gandhiyan thoughts lost its value in power hunger world… They may come to that end only after losing everything under the sky…

  2. jeyakumar said,

    12/07/2009 இல் 10:08

    Sorry for English typing.. I am in public booth now.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s