இனப்படுகொலைக்கு எதிராக ஒரு வழக்கு

மறக்கவியலாத ‘முஸல்(மான்) வேட்டை’யை ‘விவாதிக்கும்’ சமயம் கண்டிப்பாக இதுவல்ல. எனவே இந்தப் பதிவு. மக்கள் தொலைக்காட்சியின் (15/2/2009) ‘சங்கப்பலகை’யில் , மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் திரு புரூஸ் ஃபெயினுடன் தோழர் தியாகு நடத்திய உரையாடல். அந்த அமெரிக்கர் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுவதால் ‘ம.தொ.கா’ தந்த தமிழாக்கத்தைப் பதிகிறேன். தகவல் பிழையிருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்துகிறேன். நன்றி.

**

brucefein_4wp

இனப்படுகொலைக்கு எதிராக ஒரு வழக்கு

தியாகு : சங்கப்பலகை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரு புரூஸ் ஃபெய்ன் அவர்களே !

புரூஸ் ஃபெய்ன் : என்னை அழைத்தமைக்காக மிகவும் நன்றி!

சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் எதிராக நீங்கள் தொடுக்க எண்ணியிருந்த இனக் கொலை வழக்கு பற்றி எங்கள் நேயர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். தமிழர்களுக்கு உதவும் பொருட்டு நீங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி குறித்து நாம் பேச வேண்டும். நீங்கள் விடைதர வேண்டிய முதல்வினா , சட்டவகையிலும் அரசியல் வகையிலும் ‘இனக்கொலை’ என்ற சொல்லுக்கு நீங்கள் தரும் இலக்கணம் அல்லது வரையறை என்ன?

இனக்கொலை என்றால் என்ன என்பதை சட்டவகையில் விளக்குவதற்கு இரு ஆவணங்கள் உள்ளன. முதலாவதாக , 1948ஆம் ஆண்டின் இனக்கொலை தொடர்பான உடன்படிக்கை. அது ஒரு ஒப்பந்தம். 1994ல் அமெரிக்கா இதற்கு…  இஸ்ரேல் ஸ்ரீலங்கா ஆகிய அரசுகளும் இதை ஏற்றுக் கொண்டன. இதில் இனக்கொலை என்பதற்கான பொது இலக்கணம் உள்ளது. இந்த உடன்படிக்கையின்படி ஒவ்வொருநாடும் இனப்படுகொலைக்கு எதிராக சட்டமியற்ற வேண்டும். இனக்கொலையை தண்டிக்க வேண்டும். கோத்தபய, பொன்சேகா ஆகியோரை கூண்டிலேற்றும்படி நாம் அமெரிக்க அரசைக் கூறுகிறோம் என்பதால் அமெரிக்க நாட்டின் சட்ட நடைமுறையை தெரிந்து கொள்வோம். இனக்கொலை என்பது ஒரு மக்கள் இனத்தை அம்மக்களின் இனம், இனக்குழு, மதம் அல்லது தேசீய இனத்தைக் காரணமாக வைத்து முழுமையாகவோ பெருமளவிலோ அழிக்க முயல்வதாகும். இதற்காகவே நீதியியலுக்கு புறம்பாக கொலை செய்தல், சித்திரவதை, காணமல் போகச் செய்தல் ஆகிய வழிகளிலோ பட்டினி போடுதல் , மருந்து கிடைக்காமல் செய்தல் , உறைவிடம் கிடைக்காமல் செய்தல் , ஓயாமல் புலம்பெயரச் செய்தல் , தலைக்குமேல் கூரையின்றி திறந்தவெளியிலும் மரத்தடியிலும் வசிக்கச் செய்தல் போன்றவழிகளிலோ மக்களைத் திட்டமிட்டு ஒழித்துக் கட்ட முயல்வதாகும். இனக்கொலை என்பதற்கான இந்த விளக்கத்தின் அடிப்படையில் கால வரிசைப்படியான ஒரு நிகழ்ச்சித் தொகுப்பை வரைந்துள்ளோம். இலங்கையில் 2005 நவம்பரில் மகிந்த ராஜபக்சே வகையறா ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடந்தவற்றை இதில் பட்டியலிட்டுள்ளோம். இந்தக்  காலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று முதல் 6 பேர்வரை கொல்லப்பட்டுள்ளார்கள், அல்லது காணாமல் போயுள்ளார்கள். அந்த நாட்டில் ஏதோ ஒரு வகையில் இனக்கொலை நடைபெறாத நாளே இல்லையெனலாம். இந்த கொலைபாதகச் செயல்களுக்கும் தமிழ்ப் புலிகளுடன் நடைபெறும் போருக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம். இவ்வாறு கொல்லப்படுபவர்களெல்லாம் எப்படிப் பார்த்தாலும் போர்க்களத்திற்கு அப்பாற்பட்ட சாமான்ய குடிமக்களே. வகுப்பறைகளிலும் தேவாலயங்களிலும் கோயில்களிலும் புலம்பெயர்ந்தோர் முகாம்களிலும் இருந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தக் கொலைகளை எதை தமிழ் பயங்கரவாதத்திற்கு எதிர்வினையென்று விளக்க வழியில்லை.

இவ்வகையிலான கொலைகளை போர்நடத்துவதன் ஒரு பகுதியென்று சொல்ல முடியாதா?

முடியவே முடியாது.  வேறு ஒரு நாட்டில் நடந்த இனக்கொலை பற்றிச் சொல்வதானால் சூடான் நாட்டின் அதிபர் பஷீர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனக்கொலை குற்றம் சுமத்தப்பட்டபொழுது அவர் இப்படித்தான் தன்னைக் காத்துக் கொள்ள வாதிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிராகவே போர்புரிவதாக அவர் சொன்னார். வழக்கு தொடுத்தவர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு என்று சாக்கு சொல்லி இனக்கொலை செய்வதே உண்மையான உள்நோக்கம் என்று எடுத்துக் காட்டினார்கள். பயங்கரவாதம் என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இது ஒரு சிறந்த முன்னுதாரணம். நான் தொடுக்கிற வழக்கிலும் இந்த வாதம் , இந்த சமாதானம் ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஊதியாக நம்புகிறோம்.

இந்த வழக்கிற்கு முன்னுதாரணங்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள்.

கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் இயற்றப்பட்ட இனக்கொலை பொறுப்புச் சட்டத்தின்படி தொடுக்கப்படும் முதல்வழக்காக நம் வழக்கு அமையும். இனக்கொலை என்பது அன்றாடம் நிகழக்கூடிய வாடிக்கையான குற்றமன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மிகச்சிலரே இக்குற்றம் புரிய வாய்ப்புள்ளது. மிகச்சிலரே இந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கின்றனர். இனம், மதம் போன்ற காரணங்களுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்படும்போதே இந்த வழக்கிற்கான தேவை வருகின்றது. நாம் தொடுக்கவிருக்கின்ற வழக்கு ஒரு முன்னோடியாக அமையும். கோத்தபய ராஜபக்சே ஒரு அமெரிக்க குடிமகன். சரத் பொன்சேகா அமெரிக்காவின் ‘பச்சை அட்டை’ வைத்திருப்பவர். அமெரிக்க குடிமக்கள் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளாவது இதுவே முதன்முறையாக இருக்கும். அமெரிக்க நீதிமன்றங்களின் மேலுரிமைக்கு இவர்களை உட்பட்டவர்களாக்குவது இதுவே. ஸ்ரீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சேயும் இனக்கொலை குற்றவாளிதான் என்று கருதுகிறோம். ஆனால் இப்போதைக்கு நாம் அவர்மீது வழக்குத் தொடர விரும்பவில்லை. ஏனென்றால் அவர் அமெரிக்க குடிமகன் அல்லர். செய்நுட்ப வகையில் அவர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரமுடியும் என்றாலும் கூட அவருக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்பதால் விட்டுவிடுகிறோம்.

இந்த வழக்குகளின் தனித்துவம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை இருவகைகளில் வேறுபட்டதாகும். முதலாவதாக மற்றநாடுகளில் இனப்படுகொலை என்பது வழக்கத்திற்கு மாறான வழக்கத்திற்கு மாறான ஒரு பிறழ்வாகவே நடைபெற்று வருகிறது. அது காலத்தின் பொதுவான போக்கிலிருந்து விலகிச் செல்வதாக அமைந்தது. எடுத்துக்காட்டாக ஹிட்லருக்கு முந்திய ஜெர்மனியில் யூதர்கள் மற்றநாடுகளைக் காட்டிலும் சமூகத்தில் மற்றவர்களுடன் இணைந்திருந்தார்கள். ஆகவே 60 லட்சம் யூதர்கள் ஜெர்மனியில் இனப்படுகொலைக்கு ஆளானது ஒரு விதிவிலக்காக நிகழ்ந்தது. ஆனால் இலங்கையில் இப்படியில்லை. இனப்படுகொலை வித்துக்கள் பொதிந்திருப்பதை நாம் கண்டுபிடித்தோம். ஸ்ரீலங்கா என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் மகாவம்சத்தின் கதைகளும் தர்மபாலாவின் போதனைகளும் இனக்கொலைக்கே வழிகாட்டுபவையாக உள்ளன. சிங்கள பௌத்தர்களின் இயேசு கிருஸ்துவும் மோசஸ¤ம் நபிகள் நாயகமும் எல்லாமே இந்த தர்மபாலாதான். அவரது கருத்துக்கள் இலங்கைத்தீவின் இனத்தூய்மையை வலியுறுத்துகின்றன. ஒவ்வொருநாளும் பௌத்த பிக்குகள் மக்களிடையே சிங்கள பௌத்த வெறியை ஊட்டி வளர்க்கிறார்கள். இவ்வாறு , இனப்படுகொலை வழிபாட்டுக்கு உரியதாக்கப் படுகிறது. ஆகவேதான் தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்படுவதற்கு ஒருவகையில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் பங்காளியாக ஆகிறார்கள். இது முதலாவது தனித்தன்மை. இரண்டாவதாக , இதற்கு முன் நடைபெற்றுள்ள இனப்படுகொலைகளைப் பார்த்தால் மிகக் குறுகிற காலத்திற்குள்  பெருந்தொகையினர் கொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.  ஜெர்மனியில் குறுகியகாலத்திற்குள் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் இலங்கையில் இப்படியில்லை. இங்கே இனப்படுகொலை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொருநாளும் ஐந்தாறு பேர் கொல்லப்படுகிறார்கள், அல்லது காணாமல் போகிறார்கள். இப்படியே பல்லாண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. 1982, 1983ல் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதும் பத்தாயிரக்கணக்கான இல்லங்களும் கடைகளும் அழிக்கப்பட்டதுமான நிகழ்வுகளும் உண்டு. இந்த நீண்ட இனப்படுகொலையின் தொடர்ச்சியாகத்தான் ராஜபக்சே அரசாங்கத்தின் இனக்கொலை குற்றங்கள் நடைபெறுகின்றன. இதுதான் இப்போது நடைபெறும் இனப்படுகொலையின் பின்னணி .  இந்த ஆட்சியின் கடந்த மூன்றாண்டு காலத்தில் கொலை , சித்திரவதை , ஆள்கடத்தல் போன்றவை அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கிகளோடு வந்து சுட்டுத் தள்ளுவதும் வெள்ளை ஊர்தியில் கடத்திச் செல்வதும் தொடர்ந்து நிகழ்கின்றன. இவ்விதம் கடத்திச் செல்லப்படுபவர்கள் திரும்பி வருவதே இல்லை. இது புதுவிதமான இனப்படுகொலை. ஆனால் கொடுமையில் மற்ற இனப்படுகொலைகளுக்கு சற்றும் சளைத்ததல்ல. இதுவும் கொடிய குற்றமே. குறிப்பாகச் சொன்னால் இது பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் வேதனையையும் நீட்டித்து விடுகிறது.

நீங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர என்ணியுள்ளீர்கள். இதற்கு உறுதியான சான்றுகள் தேவைப்படுமே..நீங்கள் எவ்வாறு அவற்றை திரட்டப் போகிறீர்கள்?

உண்மைதான். வழக்கு விசாரணை என்று வரும்போது முழுமையான சான்றுகள் தேவைப்படும். நாம் இன்னும் அந்தக் கட்டத்திற்கு வரவில்லை. குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு நாம் தொகுத்துள்ள சான்றுகளிலேயே சில வாக்குமூலங்கள் இடம் பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாக , ராஜபக்சே, பொன்சேகா படையினரால் திரிகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தகப்பனார் அளித்துள்ள வாக்குமூலம் நம்மிடம் உண்டு. அவர் இப்போது இலங்கையில் உள்ளார். இனப்படுகொலை வழக்கிற்கான அறிக்கையை அடுத்தவாரம் வெளியிடுவோம். மேலும் பலர் சாட்சியமளிப்பதற்கு முன்வருமாறு ஊக்கப்படுத்துவோம். ராஜபக்சே அரசாங்கத்தின் அத்துமீறலை கண்டித்துப் பேசுகின்றவர்கள் யாரானாலும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையம் ஆனாலும் , படையினரை குற்றம் சொல்கின்றவர் ஆனாலும்…. எல்லாவற்றையும் மறுதலிப்பதும் திருப்பி அடிப்பதும்தான்  ராஜபக்சேயின் வழக்கமாக உள்ளது. எல்லோரையும் அவர்கள் புலிகள் என்கிறார்கள். நாங்களெல்லாம் வெள்ளைப் புலிகளாம். அவரது பரப்புரை எவ்வளவு நச்சுத்தன்மை கொண்டது என்பதை அறிந்துள்ளோம். சாட்சியம் அளிப்பதற்கு எவ்வளவு துணிச்சல் தேவைப்படுகிறது என்பதும் புரிகிறது. என்றாலும் அவர்களையெல்லாம் அமெரிக்கா வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்படி ஊக்கப்படுத்துவோம். கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகின்றவர் ஆனாலும் இதே தமிழ்நாட்டில் அகதி முகாமில் இருப்பவரானாலும் வேறு இடங்களின் வாழ்ந்து வருகின்றவர் ஆனாலும் அவர்கள் தைரியமாக முன்வந்து சாட்சியம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இனக்கொலை குற்றவாளிகள் தங்களுக்கு எதிராக சாட்சியம் அளிப்பவர்களையெல்லாம் கொன்று போடுவோம் என்ற அச்சுறுத்தல் நிலைதான் உள்ளது. சட்டத்தில் சுற்றுச் சான்று என்ற ஒன்று உள்ளது. அந்த அடிப்படையிலும் இனக்கொலை குற்றச்சாட்டை மெய்ப்பிக்க முடியும். நேரடிச் சான்று கிடைக்காதபோது சுற்றுச்சான்றை அடிப்படையாக வைத்து குற்றத்தீர்ப்பை வழங்கலாம். சாட்சிகள் கொல்லப்படும் ஆபத்து இருப்பதாகச் சொல்லி விளக்கமளிக்க முடிந்தால் சுற்றுச் சான்றே முக்கியமானதாகிவிடும். ஏனென்றால் நமக்குத் தெரிந்ததுதான் , இலங்கையில் எல்லாச் செய்திகளும் திட்டமிட்ட முறையில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. தமிழ் பகுதிகளிலிருந்து உண்மை அறிய வழியேதுமில்லை. பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை அமைப்புகள் , அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் , மனிதாபிமான உதவி அமைப்புகள் எதுவும் இப்பொழுது அங்கே இல்லை. எல்லாவற்றையும் அரசு வெளியே அனுப்பி விட்டது. கண்காணிப்புக் குழு எதுவும் இல்லாத நிலையில் அங்கே நடக்கிற உண்மை நிலைகளை அறிய வழியில்லை. எல்லா தகவல் வழிகளையும் அடைத்துவிட்டு அரசு அங்கே என்ன செய்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஏதோ கெட்டது நடக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.

அமெரிக்காவில் இவ்வாறு வழக்கு தொடர்வதற்கு உங்களுக்கு அரசின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்று நினைக்கிறேன். அல்லது அரசியலால் வழக்கு தொடர வேண்டும்.

வேறு பல நாடுகளைப் போலவே அமெரிக்காவில் கூட அரசுதான் குற்றவழக்கு தொடரமுடியும். ஆகவே நாங்கள் அரசின் நீதித்துறையிடமிருந்தும் அயலுறவு துறையிடமிருந்தும் ஒப்புதல் வாங்க வேண்டியிருக்கும். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊக்கமும்கூட தேவைப்படுகிறது. இனப்படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட அமெரிக்க குடிமகன் மீது நடவடிக்கை எடுக்க அரசின் ஒத்துழைப்பைப் பெற்றாக வேண்டும். ஸ்லோபோதான் மிலோஸ்விக் (Slobodan Milosevic) , பஷீர்  …  போன்றவர்கள் மீது  இனக்கொலைக் குற்றத்திற்கான வழக்கு தொடுக்கிறோம். ஆனால் குற்றவாளி அமெரிக்க குடிமகனாக இருக்கும்போது அலட்சியமாக இருந்து விடுகிறோம். அமெரிக்காவில் இன்னொரு வழியிலும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். தனிப்பட்டவர்கள், திரிகோணமலையில் கொல்லப்பட்ட ஐவரின் குடும்பத்தினர் அல்லது, பாதிக்கப்பட்ட  எவரும் இழப்பீடு கூறி உரிமையியல் வழக்கு தொடுக்கலாம். பாதிக்கப்பட்டவர் அமெரிக்காவில் இல்லையென்றாலும் குற்றம் புரிந்தவர் அமெரிக்கராக இல்லாத போதும் கொடுமை நிகழ்ந்த இடம் அமெரிக்காவில் இல்லையென்றாலும் இவ்வாறு உரிமையியல் வழக்கு தொடர முடியும். இதற்கு அரசிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை.  நாம் நேரடியாக நீதிமன்றத்தை அணுகலாம். முப்பது முதல் நாற்பது நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யலாம். ராஜபக்சே மீதும் பொன்சேகா மீதும் வழக்கு தொடரலாம். கலிபோர்னியாவில் இருக்கும் அவர்கள் வீட்டை விட்டு இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கலாம்.

ஆகவே இரண்டு வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம் என்கிறீர்கள். குற்றவியல், உரிமையியல் இருவகையிலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம், அப்படித்தானே?

ஆமாம், அப்படித்தான்.

நீங்கள் இதற்காக நீண்ட நாட்களாய் உழைத்துள்ளீர்கள். அரும்பாடுபட்டு ஏராளமான ஆவணங்களைச் சேகரித்து உள்ளீர்கள். ஆயிரம் பக்கத்திற்கு மேல் வரக்கூடிய இந்த ஆவணங்களை எப்போது அரசிடம் தரப்போகிறீர்கள்? அல்லது ஏற்கனவே தந்து விட்டீர்களா?

அடுத்த வாரம் தந்து விடுவோம். அதனை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறோம். இதனை மூன்று நான்கு மாதங்களாக தயாரித்து வருகிறோம். இனக்கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை நீட்டிப்பதற்கான மிக விரிவான சான்றாக அது அமையும். இது 1948லிருந்து ஆரம்பமாகும். தமிழ் மக்களின் வாக்குரிமை குறைப்பு, குடியுரிமை குறைப்பு ஆகியவற்றிலிருந்து இது ஆரம்பமாகிறது. வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் சட்டக் கண்ணோட்டத்திலும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளுக்கு இது மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக அமையும் என்று நம்புகிறோம். இன அழிப்புக்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு தமிழனின் கையிலும் இந்த ஆவணம் இருக்க வேண்டும்.

இனப்படுகொலைக்கு அடிப்படையான இனச்சிக்கல் தீர்வதற்கு உங்கள் முயற்சி எவ்வகையில் பயன்படும் என்று நினைக்கிறீர்கள்?

இவ்வழக்கு தொடுப்பது மட்டுமே இனச்சிக்கலுக்கு தீர்வாகி விடாது என்பதை நன்கு அறிவோம். இதனால் அவர்கள் எதையும் கைவிடப் போவதில்லை. உண்மை நிலவரத்துக்கு ஏற்ப செயலுக்கு உகந்த ஒரு இலக்கையே  நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். சர்வதேசிய சமுதாயத்தையோ வேறு ஒரு நாட்டையோ ஐநா அமைப்பையோ அணுகுவதால் இப்போது எந்தப் பயனுமில்லை. எத்தனையோ ஆண்டுகளாக புலம்பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்கள் இந்த துயரத்தை உலகுக்கு உணர்த்துவதில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன். அது எவர் செவியையும் எட்டவில்லை.  ஆகவே இந்த இனக்கொலை வழக்கை மக்களுக்கு அறிவூட்டும் கல்விப்பணியாகவும் கருதுகிறோம். கோத்தபய ,ராஜபக்சே , பொன்சேகா ஆகிய மூவரையும் தண்டிப்பதற்காக மட்டுமே நாம் இதைச் செய்யவில்லை. சர்வதேச சமுதாயம் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கும் சிங்கள பவுத்த இனவெறி மனப்போக்கு எப்படி இயங்குகிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கும் இந்த இனக்கொலை வழக்கு துணை செய்யும். இந்தோனேஷியவிலிருந்து கிழக்கு திமோரும் எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியாவும் செர்பியாவிலிருந்து கொசோவாவும் பிரிந்து சென்றது போன்ற ஒரு தீர்வு ஏன் தேவைப்படுகிறது என்பதை இது விளங்கச் செய்வதற்கான அடித்தளமாக இவ்வழக்கு அமையும். இவையெல்லாம் அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவை. இங்கு ஓயாமல் நிகழும் இனப்படுகொலையைப் பார்த்து இதயம் வெடிக்கிறது. கொத்து குண்டுகள் வீசப்படுகின்றன. தினமும் பத்து பதினைந்து பேர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள். அகதி முகாம்களின் மீது குண்டு வீசப்படுகின்றன. அதே நேரத்தில் நாம் உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் உடனே நின்று விடப்போவதில்லை. இலங்கையிடம் பெட்ரோல் இல்லை. அணு ஆயுதங்களும் இல்லை. அமெரிக்காவின் கவனத்தைக் கவரக்கூடிய எதுவும் இல்லை. அதன் கவனமெல்லாம் இப்போது காஸாவிலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்திலும் குவிந்துள்ளது. யுரேனியம் அணு ஆயுதங்கள் ஆகியவற்றைப் பற்றித்தான் அதற்குக் கவலை. ஈராக், ஆ·ப்கானிஸ்தான் அதற்கு முக்கியம். எப்படியானாலும் ஸ்ரீலங்காவிற்கு அதனால் முதல் முக்கியத்துவம் தர முடியாது. ஆகவேதான் நமது பணியை செய்வதற்கு ஒரு ஆயத்த காலம் தேவைப்படுகிறது. இந்த முயற்சியிலிருந்து ஒரு தெளிவு பிறக்கும்.

தியாகு : நன்றி திரு ·பெய்ன் அவர்களே! எங்களுக்கு நீங்கள் தந்த அறிவு வெளிச்சத்திற்காக நன்றி. கோத்தபய, பொன்சேகா ஆகியோரை இனக்கொலை குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றி அவர்களின் உண்மை நோக்கத்தை உலகின் பார்வையில் தோலுரித்துக் காட்ட நீங்கள் மேற்கொண்ட பாடுகளுக்காக உலகத் தமிழர் சார்பில் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டதிற்கு இது பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம். நன்றி.

புரூஸ் ·பெய்ன்: நன்றி!

***

நன்றி : மக்கள் தொ.கா, தியாகு, திரு. புரூஸ் ·பெய்ன்

**

* ‘முஸல்(மான்) வேட்டை’ – சேரனின் ஒரு கட்டுரை

**
தொடர்புடைய சில சுட்டிகள்:

1 லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் : தமிழ் | ஆங்கிலம்

2. ‘ஈழம், இனி தடுப்புமுகாம் – அகதிமுகாம் வடிவத்தில் ?’ – நாகார்ஜூனன்

3. நண்பர் H. பீர்முஹம்மது அனுப்பிய ஒரு சுட்டி (வீடியோ) :

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s