‘பஞ்சவடிப்பாலம்’ – ஆசிப் மீரான்

சென்றவாரம் , ‘ஆசியாநெட்Plus’ல் நான் பார்த்துச் சிரித்த ரகளையான படம் இந்த பஞ்சவடிப்பாலம். தவறவிட்ட நல்ல மலையாள சினிமாக்களுள் ஒன்று.  ‘பஞ்சவடிப்பாலம்’ பற்றிய சகோதரர் ஆசிப் மீரானின் பதிவை முன்பே பார்த்துண்டு. அது மீள்பதிவாக இன்று.  நேரம் கிடைத்தால் , பெரும் துயரை எழுப்பிய , பத்மஸ்ரீ திலகன் நடித்த , ‘பெருந்தச்சன்’  சினிமா பற்றி நானே எழுதலாம் பிறகு. வல்ல நாயன் அருளட்டும்.

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

***

panchavadippalam_s

‘பஞ்சவடிப்பாலம்’

 ஆசிப் மீரான்

…. கே.ஜி.ஜார்ஜ் மலையாளத்தில் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களில் ஒருவர். திரைப்பட நேர்த்தியும், அந்த ஊடகத்தின் வீச்சு பற்றிய பிரக்ஞையும் கொண்டு நல்ல படங்களை மலையாளத்திற்குத் தந்திருப்பவர். அவரது இயக்கத்தில் 80களில் வெளிவந்த படம்தான் ‘பஞ்சவடிப்பாலம்’

கேரள அரசியலை இவ்வளவு சாமர்த்தியமாக நக்கலடித்து முழுக்க முழுக்க நகைச்சுவை உணர்வோடு கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

கேரள அரசியல் என்றா சொன்னேன் – தவறு – இந்திய ஜனநாயக அமைப்பில் ஜனங்களைப் பார்வையாளர்களாக்கி அரசியல்வாதிகள் நடத்தும் ஆட்சி என்ற தெருக்கூத்தை அழகாக திரையில் விரித்திருக்கிறார் ஜார்ஜ் (மலையாளிகள் சொல்வது போலென்றால் ஜோர்ஜ்ஜ்;-)

12 ஆண்டுக்ளாக பஞ்சாயத்து தலைவராக இருக்கும் குருப்புவின்(கோபி) இருப்பை ஊரில் இருப்பவர்கள் புரிந்து கொள்ளும்படி ஏதேனும் செய்ய வேண்டுமென அதே பஞ்சாயத்தில் உறுப்பினரான நெடுமுடி வேணு தீர்மானிக்கிறார். ஆனால் அதற்காக ஏதேனும் திட்டம் வேண்டுமே?! காயலின் குறுக்கே இருக்கும் பஞ்சவடிப் பாலத்தை உடைப்பது என்று திட்டமிடுகிறார்கள். எனவே பாலம் உடைப்பு மற்றும் 12 ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கிறார்கள். பாலம் உடைந்த சப்தம் கேட்டதாக பாலத்தின் அடியிலுள்ள புறம்போக்கு நிலத்தில் வசிப்பவரை கள்ள சாட்சி செய்யச் சொல்லி, பொதுப்பணித்துறையின் பொறியாளரை முழுக்க ‘நீரில் நனைத்து’ அவரிடமும் சான்றிதழ் வாங்கி பாலம் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என்று பஞ்சாயத்து தீர்மானிக்கிறது. அதைக் கண்காணிக்க வரும் காவலர் பகலில் பேருந்தில் வருபவர்களை இறக்கி பாலத்தின் மேல் நடக்க விட்டு இரவில் பாரம் ஏந்தி வரும் லாரிகளைக் காசு வாங்கி பாலத்தின் மீது போக அனுமதிக்கிறார். இதற்கிடையில் எதிர்க்கட்சி இதற்கெதிராகக் குரல் கொடுக்க அவர்களை வீட்டிற்கழைத்து ‘சரக்கு’, சாப்பாடு என்று சொல்லி சரிக்கட்டுகிறார்கள். அப்படியே இருந்தால் மட்டும் போதாது என்பதால் இருக்கும் பாலத்தை உடைத்து புதியபாலம் அமைக்க அனுமதி வாங்கி அதன் மூலம் சம்பாதிக்க திட்டமிடப்படுகிறது. இதன் பின்னர் எதிர்க்கட்சி அதற்கு வைக்கும் முட்டுக்கட்டையும், அரசு இயந்திரம் செயல்படும் கோணங்கித்தனங்களும், காசு சமபாதிப்பது என்று வந்து விட்டால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரே குரலில் இணைந்து ஒலிப்பதுமாகக் காட்சிகள் அரங்கேறி பாலம் கட்டப்பட்டு திறக்கப்படும் நாளிலேயே பாலம் உடைவதுடன் படம் நிறைவுபெறுகிறது.

அப்பட்டமான அங்கதம் என்பது இதுதான். அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலிச் சாமியார்கள், பொது மக்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் என்று சகலரையும் விமர்சனம் செய்திருக்கிறார்கள் சகட்டுமேனிக்கு – முழுக்க முழுக்க நகைச்சுவையோடு.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக ஆளும்க்ட்சியைச் சேர்ந்தவரின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவரை எதிர்க்கட்சி கடத்திச் செல்வதும், ஆளும்கட்சி அவரை இன்னொரு பெண்ணை ஏற்பாடு செய்து மீட்டெடுப்பதும், காலையில் மீண்டும் எதிர்க்கட்சி அவரைக் கடத்திச் செல்வதும், ஆளும்கட்சி அவரைத் தெளியவைத்து பஞ்சாயத்து அலுவலகத்திற்குக் கொண்டுவருவதுமான காட்சிகள் குலுங்க வைக்கின்றன என்றால் அந்தளவுக்குக் கேவலமாக நமது ஜனநாயக்ம் இருக்கிறதென்பதும் உறைக்காமல் இல்லை.

அதைப்போலவே நம்பிக்கையிலா தீர்மானத்தின் போது எதிரில் ஒரு பெண் உறுப்பினர் இருக்கும் எண்ணம் கூட இல்லாமல் வேட்டியை உயர்த்திக் காட்டும் உறுப்பினரின் செய்கை கேரள சட்டமன்றத்தில் நடந்தேறிய காட்சியினை நினைவுக்குக் கொண்டு வந்தது. நாம் தேர்ந்தெடுக்கும் கொள்கைக்குன்றுகளீன் லட்சணம் எப்படி என்பதை சந்தி சிரிக்கும் வகையில் காட்சியாக்கியிருப்பார் ஜோர்ஜ்ஜ்.

பஞ்சாயத்து தலைவராக கோபி், அவரது அரசியல் ஆலோசகர் மற்றும் அல்லக்கையாக நெடுமுடி வேணு, எதிர்க்கட்சி தலைவராக திலகன், பெண் உறுப்பினராக சுகுமாரி, சுகுமாரியின் கணவராக எதிர்க்கட்சியிடம் காசு வாங்கிக் கொண்டு தகவல் சொல்லும் உளவாளியாக ஜகதி, மந்திரியின் பிரசங்கம் கேடக் காத்திருக்கும் ஊனமுற்றவனாக ஸ்ரீனிவாசன் என்று ஒரே கலக்கல் கூட்டம். பெரும் நட்சத்திரப்ப் படையோ தனியாக நகைச்சுவை காட்சிகளை அமைக்க வேண்டிய அவசியமோ இல்லாமல் முழுக்க முழுக்க சந்தி சிரிக்க வைக்கிறது இந்திய அரசியல்.

இந்த கேலிக் கூத்தை அழகான திரைக்கதையாக்கி தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறார்கள். வசனங்களில் வலிந்து திணித்த நகைச்சுவை ஏதுமில்லாமல் இருந்தும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன என்பதுதான் இந்திய அரசியலின் சிறப்பு.

முன்பெல்லாம் மலையாளத்தில் ப்ரியதர்சன், சத்யன் அந்திக்காடு புண்ணியத்தில் கலப்படமில்லாத அசல் நகைச்சுவைப்படங்களைப் பார்த்து சிரித்த நாட்கள் இப்போதைய மலையாளப் படங்களில் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தப் படம் பார்க்க நேர்ந்தது அந்த ஏக்கத்தை இன்னமும் அதிகப்படுத்தி விட்டது என்பதுதான் உண்மை.

– ஆசிப் மீரான் –

***

தொடர்ந்து , நண்பர் முபாரக் – ‘பண்புடன்’ குழுமத்தில் :

….அதன் பிறகு புதிய பாலம் கட்டவிடாமல் தடுக்க எதிர்க்கட்சியினர் பல தகிடுதத்தங்களையும் செய்து, பின்னர் பாலம் கோயிலுக்கருகில் இருக்கிறது, சர்ச்சுக்கு அருகில் வேண்டும் என்று மதப்பிரச்சினையை ஊதிவிடுவார்கள். பின்னர் இரண்டுக்கும் பொதுவான இடத்தில் பாலம் கட்டும் ஒப்பந்தம் பஞ்.தலைவர் கோபியின் ஆதரவாளருக்கு வழங்கப்படும்.  பாலம் முடிந்து திறப்பு விழா அன்று, பாலத்தைக் கட்டியவருக்கும், கோபியின் மகளுக்கும் திருமணம் முடிந்து அப்பாலத்தில் யானைமீது ஊர்வலம் செல்வார்கள். பாலம் இடிந்துவிடும். எல்லாரும் தப்பித்துவிடுவார்கள். படத்தின் ஆரம்பம் முதல் அனைத்து நிகழ்வுகளிலும் பார்வையாளனாக சித்தரிக்கப்படும் ஊனமுற்ற ஸ்ரீனிவாசனின் பலகை மட்டும் ஆற்றில் மிதந்து போகும்.  ஜனநாயகத்தின் ஊனமுற்ற பார்வையாளர்களான மக்கள் திரள் இங்கனமே மூழ்கடிக்கப்படுகிறது என்பதை அற்புதமாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர். இதில் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரப்படைப்பு ஊனமுற்றவராக வரும் ஸ்ரீனிவாசன் தான்.  ஊனமுற்ற நிலையில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு எந்த ஊழல்களிலும் ஈடுபடாமல், அதிகாரத்தின் சுரண்டல்களினால் உயிரிழக்கும் ஊனமுற்றவர் – நம்மைப்போலவே.

***

நன்றி : ஆசிப் மீரான் , முபாரக்

2 பின்னூட்டங்கள்

 1. 30/05/2012 இல் 09:53

  ஆபி, ஆசிப் நன்றி.

  • abedheen said,

   31/05/2012 இல் 16:45

   அட, அஸ்மா மாதிரியே ‘ஆபி’ங்கிறீங்களே..! நன்றி ராசா…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s