எகிப்திய பேரழகி

நாகூர் எழுத்தாளர்கள் பலருக்கு ஆசானாக இருந்து மறைந்த ஹஜ்ரத் , மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களுடைய இந்த சரித்திரக் கதை, ‘பிறை’ இதழில் ,நவம்பர் 1958 ல் , வெளிவந்தது. ‘நாகூர் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்ற நூல் வெளியிட மிகவும் ஆர்வம் கொண்டிருந்த மர்ஹும் ஜா·பர் முய்ஹித்தீன் மாமா அவர்களிடமிருந்து நான் விரும்பி பிரதியெடுத்தது. பதிவாக…

***
எகிப்திய பேரழகி

மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி)

“வருக வருக! எகிப்தின் பேரழகியே, வருக, வருக!” என்றான் கிலேபர். “உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வெகு நேரம் இந்தக் கூடாரத்தின் வாயிலில் காத்திருக்கிறேன்!”

பின்னர் தன் பணியாட்களைப் பார்த்து, “இன்னும் ஏன் அவளைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவளை விட்டு விடுங்கள். நம்மை விட்டு அவள் எங்கும் ஓடிப் போய் விடமாட்டாள். அவள் நம் அன்புக்குக் கடமைப்பட்டவள்!” என்றான்.

பாத்திமா நடுங்கினாள். அவள் அதரங்கள் புயலில் சிக்கிய இலைகளைப் போன்று துடித்தன. ஆனால் இந்தக் கலக்கத்தினிடையே ‘இந்தப் பிரெஞ்சுக்காரன் அரபிமொழி பேசுகிறானே!’ என்ற எண்ணமும் அவள் உள்ளத்தில் தோன்றத் தவறவில்லை.

“பாத்திமா! நீ ஏன் இப்படி நடுங்குகிறாய்? மெல்லிய – மென்மையான உன் உதடுகள் ஏன் இப்படித் துடிக்கின்றன? உனக்கு இங்கு எவ்விதத் துன்பமும் ஏற்படாது. பயப்படாதே! இங்கு வந்து உன்னை யாரும் துன்புறுத்த முடியாது. நீ என் அன்பிக்குரியவள்… உனக்கென்று ஒரு கூடாரம் தயாராயிருக்கிறது. அதில் உனக்கு வேண்டிய எல்லாம் இருக்கின்றன. ஆக வேண்டிய காரியங்களைப் பற்றி நாளைக்குப் பேசுவோம்!’ பல நாள் பழக்கப்பட்டவனைப் போன்று அவன் பேசினான்.

பாத்திமாவுக்கு ஓரளவு தைரியம் பிறந்தது. அலங்கோலப்பட்டிருந்த தன் துணியைச் சரிப்படுத்திக்கொண்டாள்.

”நாளைக்கு உன்னுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஒரு பெண்ணை இப்படி நடத்துவதுதான் பிரான்ஸ் நாட்டின் பண்பா? உன் கூடாரம் உன்னோடேயே இருக்கட்டும். அது எனக்கு வேண்டியதில்லை. அதில் நான் தங்கப் போவதுமில்லை. அந்தக் கூடாரத்தைப் பற்றி எனக்கு நிச்சயமாய் ஒன்றும் தெரியாது. அனால் அதில் கொடுமையான அநீதிகள் இழைகப்படுகின்றன என்று மட்டும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக நான் உன் கையில் சிக்கிக்கொண்டு விட்டேன்!”

கிலேபர் வெற்றிவீரனைப்போன்று சிரித்தான். திடீரென்று சிரிப்பை அடக்கிக்கொண்டு பாத்திமாவைப் பார்த்தான். அவள் கண்ணோரங்களில் கண்ணீர் மின்னிற்று. திரும்பிப் பார்த்தாள். பணியாட்கள் சென்றுவிட்டார்கள்.

“அசடுமாதிரி அழுகிறாயே!…அப்படியானால் உன் முடிவுதான் என்ன? நீ என்னிடமிருந்து தப்பி விடமுடியாது என்பதையும் மறந்து விடாதே! சொல், உன் நோக்கமென்ன?”

“என் நோக்கத்தை நீ தெரிந்துதான் வைத்திருப்பாய். ஒன்று மட்டும் நான் கூற விரும்புகிறேன். என்னைப் கறைப்பட்டவளாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை”

“நீ விரும்பவில்லை, ஆனால் உலகில் விரும்பாதவை எத்தனையோ நடக்கின்றனவே!”

“அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என்றைக்கும் மாறாத கறையை என்மீது உண்டாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. எந்தக் கறையும் எனக்கு ஏற்படாது; ஏற்படக்கூடாது. என்னால் அதைத் தடுக்க முடியும். நான் எதையும் எதிர்ப்பேன்”

அவன் சிரித்தான் – ஒரு பேதை பிதற்றுகிறாள் என்று! அவள் விம்மினாள் – மானத்தை காப்பதற்கென்று!

“அப்படியானால் தற்கொலை செய்து கொள்ளத் துணிந்து விட்டாய்; அப்படித்தானே! என் பிடியிலிருந்து நீ தப்புவதற்கு அந்த ஒரே வழிதான் உண்டு!”

”அது என் சொந்த விஷயம். அதைப்பற்றிக் கேட்க நீ யார்?” நெருப்பைக் கக்கினாள் பாத்திமா.

“நீ துடுக்கான பெண்!” என்று அவன் ’தாஜா ’ செய்தான். உன் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உன் துடுக்குத்தனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை”

அதற்குப் பிறகு அவள் நிற்கவில்லை. பணியாட்களுக்குக் கட்டளை பிறப்பித்துவிட்டுப் போய் விட்டாள்.

எங்கேயோ ஒரு பள்ளியில் ’இஷா’த் தொழுகைக்கு ‘பாங்கு’ சொல்லப்படுவது மெதுவாகக் கேட்டது. அவளைச் சுற்றிலும் பயங்கர நிசப்தம் நிலவியது. அவள் இதயத்துடிப்புகூட அவள் செவிக்கு எட்டுவது போலிருந்தது. அத்தனை நிசப்தம். பிரத்தியேகமான ஒரு கூடாரத்தில் அவள்கொண்டு தள்ளப்பட்டிருந்தாள். கூடாரத்தில் பிரான்ஸிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த விசித்திரமான ஒரு விளக்கு தயங்கித் தயங்கி எரிந்து கொண்டிருந்தது. அதன் மங்கலான ஒளி கூடாரத்தில் வியாபித்திருந்தது.

பாத்திமா கண்ணோட்டமிட்டாள். மூலையில் ஒரு மேசை கிடந்தது. அதைச் சுற்றிலும் சில நாற்காலிகள். மேசையின் மேல் பெரிய பெரிய கண்ணாடிப் புட்டிகள் – மதுவகைகள் என்று பாத்திமா தீர்மானித்தாள். மேசைக்கடியில் சில காகிதங்கள் கசங்கிக் கிடந்தன – அவன் இந்த அறையில் கசங்கிக் கிடப்பதுபோல் போர்க்கருவிகள் மூலைக்கு மூலை காணப்பட்டன. அதோ ஒரு கத்தி! அவள் கண்கள் மலர்ந்தன. உயிரைக் காக்கும் நண்பனைப் போலவே அதை அவள் கருதினாள்- உயிரைக் காக்கும் நண்பனல்ல, மானத்தைக் காக்கும் வீரன்!

அரை வினாடியில் அவள் தீர்மானித்து விட்டாள். இந்தப் பிரெஞ்சுக்காரனுக்கு உடன்படுவதை விட, அவனுக்கு மனைவியாவதை விட, தற்கொலை செய்துகொள்வது எவ்வளவோ மேலான காரியம் என்று முடிவு கட்டிவிட்டாள். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவனைக் கொலை செய்துவிடவேண்டும். அதற்கு முனைய வேண்டும்.

புத்துணர்ச்சி பெற்ற பாத்திமா துள்ளி எழுந்தாள். கத்தியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். பின்னர் அது அவள் மடியில் அடைக்கலம் புகுந்தது.

பொழுது விடிந்தது.

”இரவு நன்கு தூங்கினாயா, பாத்திமா?” என்று கேட்டான் கிலேபர்.

“ம்!” என்றாள் பாத்திமா. இயன்ற அளவுக்குத் தன் உணர்ச்சியை மறைத்துக் கொண்டாள்.

“பிரெஞ்சு முதுமொழி ஒன்றுண்டு. ‘இரவு என்பது மனிதனுக்கு நல்ல தீர்மானத்தைக் கொடுக்கிறது’ என்று சொல்வார்கள். நீ இன்றிரவு என்ன தீர்மானம் பண்ணினாய்?”

“அது போகப் போகத் தெரியும்” என்றாள் பாத்திமா.

“பேரழகியே! நீ கோபப்படுவதுகூட அழகாகத்தானிருக்கிறது!”

“அந்த அழகை அழித்துவிடத் தீர்மானித்து விட்டேன்!”

“அதை பலவந்தமாக அடைய நான் முற்பட்டால்?”

“அது நடக்காத காரியம்!” தொண்டை தெறிக்கும்படி கத்தினாள் பாத்திமா. “ என் உடலில் அணுவத்தனை உயிருள்ளவும் நான் எதிர்த்து நிற்பேன்!”

அவன் சிரித்தான்.

“என் கையில் பல வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை நீ மறந்திருக்க மாட்டாய் என்று எண்ணுகிறேன்”

பெண்புலி சீறிற்று : “அவர்களை எனக்குத் தெரியும். அநியாயக்காரர்கள்; கெய்ரோவில் நடந்த கொடிய அட்டகாசங்களுக்கு மூலமானவர்கள். அவர்களால் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. நான் உண்மையில் தேசப்பற்றுள்ள பெண்மணி!”

கிலேபர் தணிந்து பேசினான்.

“அப்பப்பா! எத்தனை கோபம்! முகம் சிவந்து விட்டதே!..அவர்கள் கிடக்கிறார்கள். சரி, உன் முடிவு என்ன? உன் தீர்மானத்தைப் பற்றி ஒன்றுமே நீ சொல்லவில்லையே!”

பாத்திமா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டாள். புன்னகையை வலுக்கட்டாயமாக உண்டாக்கிக் கொண்டாள்.

”எனக்கு அவகாசம் வேண்டும். இன்றிரவு நான் எதையும் சிந்திக்கவில்லை. நான் சிந்தித்து முடிவு காண்பதற்கு அவகாசம் வேண்டும்!”

“தாராளமாகத் தருகிறேன்!” என்ற கிலேபர் போய்விட்டான்.

2
அது கூடாரம்தான். என்றாலும் அவளுக்கு அது இரும்புக் கம்பிகள் பொருந்திய சிறையைப் போன்று காட்சியளித்தது. சிறைவாயிலில் இருப்பதுபோல் இந்தக் கூடாரத்தின் வாயிலிலும் ஒரு காவல்.

பாத்திமா வேதனைப் பட்டாள். தன் அழகு இத்தனை பெரிய விபரீதமாக முடிந்து விடும் என்று அவள் கனவில் கூட எண்ணிப் பார்க்கவில்லை. “பாத்திமா! உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். பசியே எடுக்காது. அவ்வளவு அழகாயிருக்கிறாய் நீ!” என்று ஹஸன் கூறியதை இப்போது அவள் எண்ணிப் பார்த்தாள். உண்மையிலேயே அவள் ஒரு பேரழகிதான். இல்லா விட்டால் இரண்டு இளங்காளைகளை அவளால் ஒரே சமயத்தில் கவர முடியுமா? அவளைப் போலவே மர்தானும் அவள்மீது காதல் கொண்டிருந்தான். ஹஸனைத்தான் அவள் அதிகமாக விரும்பினாள். ஆனால் அவன் செய்யும் தொழில் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் பிரெஞ்சுக்காரனின் ஒற்றன். பாத்திமாவின் தந்தை கூட பிரான்ஸ் ஏகாதிபத்திய வெறியர்களின் வெறியுணர்ச்சிக்கு இரையாகி விட்டார். இதற்குக் கூட ஹஸன்தான் காரணம். பாத்திமாவின் தந்தை நாட்டுப் பற்று கொண்டவர். தீவிரவாதி என்பதை ஹஸன் பிரெஞ்சுக்காரர்களிடம் கூறி அவர் உயிருக்கு உலைவைத்து விட்டான். இதை அவன் பாத்திமாவின் உள்ளத்தைத் துன்புறுத்துவதற்காகவோ, அவளை அழுது புலம்பச் செய்ய வேண்டும் என்பதற்காகவோ செய்யவில்லை. அவன் தன் கடமையைச் செய்தான். கெய்ரோவில் யார் யார் நாட்டுப் பற்றில் ஊறிப் போயிருக்கிறார்கள் என்பதை பிரெஞ்சுக்காரர்களுக்குத் தெரியப்படுத்தினான். ஆனால் அது இத்தனை பெரிய விளைவை உண்டாக்கி விடும் என்று கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை. அவனும் கெய்ரோவில் பிறந்தவன்தான். இங்குதான் படித்தான்; வளர்ந்தான். ஆனால் இப்போது அவன் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒற்றனாகப் பயன்படுகிறான். தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் இழிய தொழிலைப் பார்க்கிறான்.

அவன் பாத்திமாவை உள்ளன்போடு நேசித்தான்; அவள் மீது கலப்படமற்ற காதல் கொண்டிருந்தான். அவனது காதலை அவளால் ஏற்க முடியவில்லை. தேசாபிமானம் குறுக்கே நின்றது.

நேற்றுக் காலை அவன் பாத்திமாவைக் காணவந்த போது அவள் முகம் ஏன் அப்படி விகாரமாய் இருந்தது? உதிரத்தில் தோய்ந்து எடுத்தாற்போல் அவள் கண்கள் சிவந்திருந்தன.

“பாத்திமா! உன்னை ஒன்று கேட்க வேண்டும். அதற்குத்தான் இங்கு வந்திருக்கிறேன். சுற்றி வளைக்காமல் உண்மையைக் கூறு. நான் கேள்விப்பட்டது உண்மையா?” புதிர் போட்டான் ஹஸன்.

“கேள்விப்பட்டீர்களா? என்ன கேள்விப்பட்டீர்கள்? கெய்ரோவின் மண்ணில் கிலேபர் என்ற பிரெஞ்சு நாயின் அட்டகாசம் துவங்கப் போகிறது என்றா? இதுவரை இங்கு நடந்த அட்டகாசம் போதாது என்று எண்ணுகிறானா அவன்?..

அவன் குறுக்கிட்டான் – “பாத்திமா! வார்த்தையை அளந்து பேசு. உணர்ச்சி வசப்பட்டு விடாதே! நான் யார் எனபதையும் மறந்து விடாதே!”

”எப்படி மறக்க முடியும்? அதுதான் தெரிகிறதே! எனக்கு மட்டுமல்ல. கெய்ரோவிலுள்ள எல்லோருக்கும் உங்களைப் பற்றித் தெரியும். நீங்கள் கிலேபரின் ஒற்றன் என்பதைப் பால்குடி மறக்காத குழந்தையும் அறிந்து வைத்திருக்கிறது. இதைப் போய் பெருமையாகக் கூறுகிறீர்களே! உண்மையில் இது பெருமைப்பட வேண்டிய செயலல்ல; வருந்த வேண்டிய ஒன்று. பிறந்த மண்ணை அந்நியனுக்குக் காட்டிக் கொடுப்பது பெருமைக்குரிய செயலா? உங்களுக்கு வெட்கமில்லை? இந்தத் தொழிலில் இருப்பதைவிட செங்கடலிலோ நைல் நதியிலோ விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாமே!”

ஹஸன் பல்லைக் கடித்தான்.

“நீ வரம்பு மீறிப் பேசுகிறாய் பாத்திமா! இதன் விளைவு என்னவாகுமோ..”

“என்னவாகப் போகிறது? இனிமேல் ஒன்றும் ஆவதற்கில்லை. என் தந்தைக்கு ஏற்பட்ட கதி எனக்கும் ஏற்படலாம். அவ்வளவுதான். இதற்கு நான் அஞ்சவில்லை.”

“உண்மை! நீ ஏன் அஞ்சப்போகிறாய்? உனக்கு இன்னும் சில தினங்களில் வாழ்வின் துணைவன் கிடைக்கப் போகிறான். மர்தானைக் கணவனாக அடையப் போகிறாய். அவன் இது விஷயத்தில் என்னை விட பாக்கியசாலி. நான் தான் ஏமாந்து விட்டேன், இல்லை, ஏமாற்றப்பட்டு விட்டேன். நீ என்னை ஏமாற்றி விட்டாய்”

ஒரு கணம் பாத்திமா மரமானாள். அவள் முகத்தில் துயரம் படர்ந்தது.

“ஏன் பேசாமலிருக்கிறாய்? ஏதாவது பேசி என் மனதைப் புண்படுத்தேன்! என்னைத் துன்புறுத்துவதற்காகத்தானே நீ பிறந்திருக்கிறாய்!”

பாத்திமா பேசவில்லை. அவள் கண்கள் பேசின; கெஞ்சின – புரியாத மொழியில்.

“பாத்திமா! என்னைப் பார். உன்னை நான் காதலித்தேன். உன்னோடு “இன்பவாழ்க்கை நடத்த ஆசைப் பட்டேன். அந்த நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் நீ என் ஆசையில் மண்ணைப் போட்டு விட்டாய்; என் கனவைக் குலைத்து விட்டாய்; என் இதயத்தைப் பிளந்து விட்டாய்; போதாததற்கு அந்த இதயப்புண்ணை கிண்டிக் கிளறுகிறாய் எதை எதையோ கூறி! பாத்திமா, நான் விடமாட்டேன். பழியெண்ணம் எனக்கு உண்டாகி விட்டது. உன்னை நான்தான் அடைய வேண்டும். வேறு யாரையும் அடைய விட மாட்டேன்.. உன்னை நான் காதலித்ததற்கு இதுதான் பரிசா? என் காதலை நீ மறுக்கிறாயா?”

பாத்திமாவின் வதனம் வாடிற்று.

“இல்லை, இல்லை. ஒரு போதும் கிடையாது. ஆனால்… ஆனால்.. உங்களிடம் முன்னரே கூறியிருக்கிறேன்..”

“ என்ன கூறியிருக்கிறாய்?”

“ நான் நாட்டுப் பற்றுள்ளவள். நீங்கள்…நீங்கள்..”

“நான் தேசத்துரோகி. அப்படித்தானே?”

அவள் பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக விம்மினாள். சற்று நேரம் அமைதி. அவள் கண்ணீர் மல்கிய கண்களால் அவனைப் பார்த்தாள்.

“ உங்களிடம் நான் கெஞ்சினேன்; மன்றாடினேன் – கிலேபரிடமிருந்து விலகிவிடுமாறு. ஆனால் நீங்கள் கேட்கவில்லை; என் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கவில்லை.”

ஹஸன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். உண்மையத்தான் அவள் கூறினாள். தேசத்துரோகத்தை விட்டுவிடுமாறு. அவள் எத்தனை தடவை கண்ணீருடன் கெஞ்சியிருக்கிறாள்! அவள் கண்ணீர் அவன் உள்ளத்தைத் தீய்த்தது. அவள் வேண்டுகோள் அவன் கல்நெஞ்சத்தைக் கரைத்தது. ஆனால் அந்த உத்தியோகத்தை அவனால் விட முடியவில்லையே! அவனால் அதிலிருந்து எப்படி நீங்க முடியும்? அதற்கு கிலேபர் இடம் தருவானா? கண்டிப்பாய்த் தர மாட்டான். பல்லாண்டுகள் பிரெஞ்சுக்காரர்களின் ஒற்றனாயிருந்த அவனை கொன்றாலும் கொல்வார்களே தவிர வேலையிலிருந்து விலக அனுமதி தர மாட்டார்கள். மனித இனமே சந்தேகத்திற்கு அடிமைப் பட்டதுதான். இந்த நியதிக்குப் பிரெஞ்சுக்காரர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அவன் வேலையிலிருந்து விலகிவிட்ட பின்னர் அவர்களின் விரோதிகளுக்கே ஒற்றனாக மாறிவிட முடியாதா? கிலேபர் என்ன, அவன் தலைவன் நெப்போலியன் கூட இந்தச் சந்தேகத்திற்குக் கட்டுப்பட்டவன் தான். சந்தேகத்தின் காரணமாக எத்தனை ஒற்றர்களைக் கொன்று குவித்திருக்கிறான்! இப்போது அவன் இங்கு இல்லை. பிரான்ஸ¤க்குத் திரும்பி விட்டான். அவன் புறப்படும்போது படைத்தலைவன் கிலேபருக்குக் கூறிய சில வார்த்தைகளை ஹஸனால் மறக்கவே முடியவில்லை.

நெப்போலியன் படைத்தலைவனைத் தன் அருகில் அழைத்தான். “கிலேபர்! நீ உண்மையோடு நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்படாதபடி பார்த்துக் கொள். உன்மீது எனக்கு சந்தேகம் உண்டாகுமாறு எதையும் நீ செய்யக் கூடாது. தெரிந்ததா? நினைவிருக்க்ட்டும்!” என்றான். அவன் கிலேபரை சுத்த அயோக்கியன் என்று எண்ணியிருக்க வேண்டும். அவன் பெண்ணுக்காக தன் கடமையையும் தவறவிடத் தயாராயிருப்பவன் என்று நெப்போலியனுக்குத் தெரியாதோ என்னவோ! நெப்போலியன் இங்கு இருக்கும்போது  எகிப்தில் பல கலகங்கள் நிகழ்ந்தன. இது குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இப்போது அவன் போய் விட்டான். கிலேபரைத் தன் பிரதிநிதியாக அமர்த்திவிட்டு! நெப்போலியன் போயிருக்க மாட்டான்தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எகிப்தின் மீது தன் ஆட்சியைச் சுமத்த முடியாது என்று  அவன் உணர்ந்து கொண்டுவிட்டான். இனிமேல் எகிப்து மண்ணில் எத்தனை தலைகள் உருளப் போகின்றனவோ! எத்தனை மாதரசிகள் கற்பழிக்கப் பட்டுத் தற்கொலையை நாடப் போகிறார்களோ!

“ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? நான் ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடன் எதையும் நான் சொல்லவில்லை!” என்றாள் பாத்திமா.

ஹஸன் பெருமூச்சு விட்டான். பாத்திமாவின் மீது அவனுக்குள்ள காதல் ஒருபுறம், பிரெஞ்சுக்காரர்களின் அடக்குமுறை மறுபுறம். அவன் வேதனைப் பட்டான். “சரி பாத்திமா! நான் வருகிறேன்” என்றவன் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் நடக்க ஆரம்பித்து விட்டான்.

சூரியன் உச்சியில் நின்று எரித்தது. சூரியனை விட வேகமாகக் கொதித்தது பாத்திமாவின் உள்ளம்.

அதே தினம் மாலைநேரம். பாத்திமா ஏதேதோ சில சாமான்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப முற்படும்போது இருள் கவிந்தது. எங்கேயோ ஒரு பள்ளில் ’பாங்கு’ சொல்லப் படும் இனிய குரல் காற்றில் கலந்து மெதுவாகத் தவழ்ந்து வந்தது. பாத்திமாவின் இதயத் துடிப்பு தெளிவாகக் கேட்டது. அவள் உள்ளத்தில் அச்சம் குவிந்தது. மங்கிய ஒளியில் நீண்டவழியில் அவள் நடந்து கொண்டிருந்தாள். கிலேபரின் கற்பனைத் தோற்றம் அவள் மனத்திரையில் பூதம் போல் தோன்றிச் சிரித்தது.

அடுத்து சிறிது நேரத்தில் அவள் மீது பல பூதங்கள் பாய்ந்தன. ஒன்று அவள் வாயைத் தன் கையால் பொத்திற்று. மற்றொன்று அவளைச் செந்தூக்காகத் தூக்கிற்று. அவள் பூதங்கள் என்றுதான் எண்ணினாள். ஆனால் பூதம் இப்படித்தானா நடந்து கொள்ளும்? பிரெஞ்சு மொழி பேசுகிறதே இந்தப் பூதம்..! ஆம், அவர்கள் கிலேபரின் கையாட்கள். பாத்திமாவின் பேரழகைக் கேள்விப்பட்ட அவன் அதை அனுபவிக்கத் துணிந்து விட்டான்!

பாத்திமா பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டாள். அவள் பணம் கொடுத்து வாங்கியிருந்த சில கனிகள் தரையில் விழுந்து உருண்டன. பட்டுப்போன்ற அவள் கூந்தல் மண்ணை முத்தமிட்டது. பாத்திமா பலம் கொண்டமட்டும் அலற எண்ணினாள். அவள் வாயைப் பொத்தியிருந்த முரட்டுக்கரம் அதற்கு இடம் தரவில்லை!

3

நடுநிசி. பலர் குறட்டை விடும் சத்தம் ஒன்றாகச் சேர்ந்து அருவருப்பை உண்டாக்கிற்று. கூடாரத்தின் விளக்கும் அணைந்து விட்டது. பாத்திமா மடியைத் தொட்டுப் பார்த்தாள். ஒருகணம் மகிழ்ச்சி, மறுகணம் இனமறியாத நடுக்கம். அவள் கொலைக்கல்லவா துணிந்து விட்டாள்!

அடிமேல் அடிவைத்து மெதுவாக முன்னேறினாள். அவள் கால்களும் கரங்களும் கடும் குளிரால் தாக்கப்பட்டாற்போல் நடுங்கின. கூடாரத்தின் வாயிலில் காவல் காத்து நின்றவன் , நின்றபடி மெல்லிய குறட்டை விட்டான். அவனுடைய நீண்ட கத்தி தரையில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தது!

பாத்திமா கிலேபரின் கூடாரத்தை அடைந்து விட்டாள். அன்று ஏனோ வாசலில் யாரும் இல்லை. கத்தியை எடுத்துப் பிடித்துக் கொண்டாள். அவள் உடல் முறுக்கேறியிருந்தது.

இந்த இக்கட்டான நேரத்தில்தான் அந்தப் பயங்கர சம்பவம் நடந்தது. கூடாரத்தினுள் யாரோ அலறினார்கள். அந்த அலறல் தேய்ந்து மறைந்தது. திடீரென்று ரத்தநெடி வீசிற்று. அவள் ஓரடி பின்வாங்குவதற்குள் அவளுக்கு மயக்கம் வந்து விட்டது.

மயக்கம் தெளிந்து கண்ணைத் திறந்ததும் அவள் ஹஸனைத்தான் கண்டாள். அவன்மீது அங்கங்கே ரத்தக் கறைகள் சிரித்தன.

“பாத்திமா! கிலேபரைக் கொன்று விட்டேன். அவன் கூடாரத்தைக் காத்தவன் விலகின நேரம் பார்த்து உள்ளே நுழைவதற்குள் போதும் போதும்  என்றாகிவிட்டது. அவன் தொலைந்தான். இன்றிலிருந்து இந்த வினாடியிலிருந்து நான் புதுமனிதன். இனி நான் பிரெஞ்சுக்காரனின் ஒற்றனல்ல – கெய்ரோவின் தேசாபிமானி!”

பாத்திமாவின் பெரிய கண்கள் அகன்று விரிந்தன. அவற்றிலிருந்து வெற்றியின் அறிகுறியாய் இரண்டு வைர மணிகள் உருண்டு விழுந்தன!

(முற்றும்)

1 பின்னூட்டம்

  1. 23/01/2009 இல் 09:31

    ஆச்சர்யப்படக்கூடாது என்று ஹஜ்ரத் அவர்கள் சொன்னதையும் மீறி ஹஜ்ரத் அவர்கள் அருமையான கதைகள் எல்லாம் எழுதியிருக்கிறார்களே என்று ஆச்சர்யப்ப்டுகிறேன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s