‘இறையருட் கவிமணி’ பற்றி நாகூர் ரூமி

‘என் ஆசான்’ என்ற தலைப்பில் நண்பர் அப்துல் கையும்,  ‘இறையருட் கவிமணி’ கா.அப்துல் கபூர் அவர்களைப் பற்றிய சிறந்த பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.  சுட்டி: இங்கே . பார்த்து விட்டீர்களா? அவர்களைப் பற்றிய சாகித்ய அகாதெமியின் நூலுக்கு (ஹ.மு.நத்தர்சா எழுதியது)  ரூமி எழுதிய மதிப்புரையை இப்போது வாசிக்கலாம். அன்பிற்குரிய கல்லூரித் தோழன் புஹாரியின் ‘அன்புடன்’ குழுமத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ரூமி பதிந்தது. இப்போது கேட்டால் தனக்கு ஞாபகம் இல்லை என்கிறார் . குழம்புகிறதே…’இம்மை வாழ்வின் சோதனையில் இதயப் பொறுமை தந்திடுவாய் !’

– ஆபிதீன் –

***

நாகூர் ரூமி :

அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலகுமுமோ ரிறையின் இனிய பேர் போற்றி இந்த இரண்டு வரிகளைப் படித்தவுடன் என் மனதில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷ உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு நன்றியுணர்ச்சி என்றுகூட அதைச் சொல்லலாம். முஸ்லிம்கள் எந்தக் காரியத்தையும் தொடங்கும்போது அரபியில் ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்’ என்று சொல்வார்கள்.’இறைவனின் பெயரைக் கொண்டு தொடங்குகிறோம்’ என்று பொதுவாகப் பொருள்தரும் அந்த வாக்கியத்தை இவ்வளவு அழகாகக் கவிதையில் பார்த்தபோது, இனி இப்படியேகூடத் தொடங்கலாம் என்று தோன்றியது. இந்த இரண்டு வரிகளும் மார்க்கப் பற்று மிகுந்த ஒரு கவிஞரை எனக்கு அடையாளம் காட்டின.

அந்த அறிஞர்தான் ‘இறையருட் கவிமணி’ என்ற புகழ்ப்பெயருடன் அறியப்படும் கா.அப்துல் கபூர். அவரைப் பற்றிய சாகித்திய் அகாதெமியின் வெளியீடு இந்த நூல்.

அதை முழுவதும் படித்துப் பார்த்தபோது சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதைப் பகிர்ந்து கொள்வதுதான் இந்த மதிப்புரையின் நோக்கம்.

பேராசிரியர்,எழுத்தாளர், கவிஞர், குழந்தை இலக்கியம் படைத்தவர், கல்வியாளர், பேச்சாளர், மார்க்க அறிஞர், பக்தி இலக்கியகர்த்தா, பத்திரிகையாளர், பன்மொழி வல்லுணர் என பன்முகம் பளபளக்கும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஒளிர்ந்த அவர்
திருவிதாங்கோட்டில் 1924ல் பிறந்து 2002ல் மறைந்தவர்.

1946ல் இருந்து 67வரை சென்னை, வாணியம்பாடி, திருச்சி, உத்தம பாளையம், அதிராம்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்த கல்லூரிகளில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும், முதல்வராகவும், கீழ்த்திசை மொழித்தலைவராகவும் இருந்திருக்கிறார். 1967க்குப் பிறகு வண்டலூர் பிறைப்பள்ளி முதல்வராகவும், கும்பகோணம் அல் அமீன் உயர் நிலைப்பள்ளி நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், சென்னைப் பல்க்லைக்கழக செனட் உறுப்பினராகவும், கேரளப் பல்கலைக்கழக் பாடநூல் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.

உர்து முஷாயிரா பாணியில் முதன் முதலாக தமிழ்க் கவியரங்கை வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் 1948ல் அறிமுகம் செய்து வைத்தவர் என்ற பெருமையும், முதன் முதலாக ஒரு கல்லூரியின் முதல்வாராகப் பொறுப்பு வகித்த தமிழ்ப் பேராசிரியர் (ஹாஜி கருத்த ராவுத்தர் கௌதியா கல்லூரி, உத்தமபாளையம்) என்ற பெருமையும் இவரையே சேரும்.

முன்னாள் ஆளுனர் பி.சி.அலெக்சாண்டர், மதியழகன், பேரா.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் இவரோடு உடன் பயின்ற மாணவர்கள். கலைமாமணி மணவை முஸ்தபா, சிற்பி,சாதிக் பாட்சா போன்றோர் இவருடைய மாணவர்கள். பன்னிரண்டு கவிதை நூல்களும் ஆறு உரைநடை நூல்களும் எழுதிய இவர் குழந்தை இலக்கியத்தில் பாரதிக்கும், பாரதிதாசனுக்கும், கவிமணிக்கும் அடுத்த இடத்தில் இருப்பவர். ‘அரும்பூ’ என்ற குழந்தைகளுக்கான பாடல்களின் தொகுப்பு இவருக்கு அந்த புகழைக் கொடுக்கிறது.

நண்பன் என்ற கையேட்டுப் பிரதியில் முதல் கவிதை எழுதி இலக்கிய வாழ்வைத் துவக்கிய இவர், பின்பு ‘மதிநா’ என்ற ஒரு மாத இதழை சிறப்பாக நடத்திக்காட்டினார். ‘மதிநா’ என்ற பெயர் முஹம்மது நபியவர்கள் அடக்கமாகியுள்ள புனித நகரான மதினாவைக் குறிப்பதாகவும் மதி, நா ஆகிய இரண்டையும் குறிப்பிடுவதாகவும் அமைக்கப்பட்டது அதன் சிறப்பு. இந்த இதழின் மூலமாகத்தான் தோப்பில் முகமது மீரானின் படைப்புகள்
பிரபலமடைந்தன.

உரை நடை நூல்கள்

‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற இவருடைய நூல் சென்னை, அண்ணாமலை மற்றும் கேரள பல்கலைக்கழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. பதினோரு தலைப்புகளில் வானொலி
உரைகளாக பேசப்பட்டதன் தொகுப்பே இது. அராபியர்கள் இந்தியாவைக் குறிக்க ‘ஹிந்த்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இந்திய நாட்டின் புளி அவர்களுக்கு அவர்களுடைய நாட்டின் பேரீச்சம் பழத்தை நினைவு படுத்தியதால் அதை அவர்கள் ‘தமருல் ஹிந்த்’ என்று குறிப்பிட்டனர். அதுவே ஆங்கிலத்தில் ‘டாமரிண்ட்'(tamarind) என்று ஆனது! இதுபோன்ற பல அரிய, ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

அறவாழ்வு, வாழும் நெறி இஸ்லாம், இஸ்லாமிய இலக்கியம், இனிக்கும் இறைமொழிகள், மிக்க மேலானவன் ஆகியவை இவருடைய மற்ற கட்டுரைத் தொகுப்பு நூல்களாகும்.

‘இஸ்லாமிய இலக்கியம்’ என்ற நூலில் தமிழ் மற்று அரபி மொழிகள் பற்றிய கட்டுரையும் முகலாய ஆட்சியாளர்களின் இலக்கியப் பங்களிப்பு பற்றிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

‘வாழும் நெறி இஸ்லாம்’ என்ற நூல் இவருடைய பல்வேறு சொற்பொழிவுகளின் தொகுப்பு. இதிலும் அரபி மொழி பற்றிய ‘வையகம் போற்றும் வான்மொழி’, ‘அறிவுத் துறையில்
முஸ்லிம்களின் பங்கு’, ‘பாரகம் போற்றும் நூலக முன்னோடிகள்’ ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

திருக்குர்ஆனின் வசனங்களுக்குத் தெளிவுரையாக அமைந்த 21 கட்டுரைகளின் தொகுப்பு ‘இனிக்கும் இறைமொழி’ என்ற் நூல்.

தன் இறுதி நாட்களில் திருக்குர்ஆனுக்கு இவர் எழுதிய விளக்கக் கட்டுரைகள்தான் ‘மிக்க மேலானவன்’ என்ற நூலாக உருப்பெற்றது. இவருடைய விசாலமான அறிவையும் ஆழமான பார்வையையும் உரை நடையையும் கவிதா நடையாக அமைக்கும் திறனையும் இவருடைய எல்லா படைப்புகளிலும் நாம் காணலாம்.

சிறுவர் இலக்கியம்

இவர் நடத்திய ‘மதிநா’ இதழில் ‘சிறுவர் சோலை’ என்ற பகுதியில் அபூஜமால் என்ற பெயரில் இவர் எழுதிய குழந்தைப் பாடல்கள்தான் பின்னர் ‘அரும்பூ’ என்ற பெயரில்
தொகுக்கப்பட்டது. இப்பாடல்கள் குழந்தைக்ள் மனதில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டன. கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ரப்பர் எஸ்டேட்டில் குழந்தைகளின் திற்னைச்
சோதிக்கும் இரண்டு நாள் நிகழ்ச்சியொன்றில் விருந்தினராகக் கலந்து கொள்ள எழுத்தாளர் தோப்பில்முகமது மீரான் சென்றிருந்தபோது, ஒரு குழந்தைப் பாடலைச் சொல்லி இதை எழுதியது யார் என்று கேட்டபோது, ‘இறையருட் கவிமணி கா.அப்தில்கபூர்’ என்று ஒரு தொழிலாளியின் குழந்தை பதில் சொன்னதை தோப்பில் பதிவு செய்திருக்கிறார்!

‘இறைவா உனக்கோர்

இணையே இல்லை

நிறைவே தருவாய்

நேர்வழி காட்டுவாய்

நல்லவை செய்யும்

நாட்டம் நல்குவாய்

அல்லவை தவிர்க்கும்

ஆற்றல் தருவாய்

என்று துவங்கும் ‘இறைவா’ என்ற முதல் பாடல் மழலைகளின் உள்ளத்தில் நல்ல விதைகளை எளிதாக விதைத்து விடுகிறது.

கணிதம் கற்றுக்கொடுக்கும் பாடல்களில்கூட, கணிதத்தோடு கருத்தையும் கற்றுக்கொடுக்கிறார்:

எண்ணத் தொடங்கு ஒன்று

என்றும் இறையை ஒன்று!

ஒன்றும் ஒன்றும் இரண்டு

ஒளிரும் கண்கள் இரண்டு!

‘மாலை மாற்று’ என்று கூறப்படும் சொற்களைத் திருப்பிப் படித்தாலும் அதே பொருளைத் தரும் வரிகளை உள்ளடக்கிய பாடல்களையும் எழுதி சோதனை செய்துள்ளார்:

வாத மாதவா

தேனு மீனுதே

மோக ராகவா

மோரு தீருமோ

யானை சேனையா

வாடி ஆடிவா

அலைவதினாலே அலையாகும்

திரள்வதினாலே திரையாகும்

என்று காரண காரியத் தொடர்பை உணர்த்தும் வகையிலான பாடல்களும் எழுதியுள்ளார். இதேபோல, ஆங்கிலத்தில் ‘ஹோமோனிம்ஸ்'(homonyms) என்று சொல்லப்படும் ஒலி வடிவம்
ஒன்றாகவும், வரி வடிவம் வேறாகவும் இருக்கும் சொற்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்களை எழுதியுள்ளார்:

ஆற்றின் ஓரம் கரையாகும்

ஆடையில் படுவது கறையாகும்

காட்டில் கொல்வது புலியாகும்

வீட்டில் கொள்வது புளியாகும்

புதிர்கள்,கதைகள் என பல்வேறுபட்ட வடிவங்களில் இப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் நாட்டின் பள்ளிகள் தோறும் இப்பாடல்களைப் பாடமாக வைத்தால் நம் குழந்தைகள் நிச்சயம் விரைவாகப் பயனடைவர்.

மாலை இலக்கியம்

இறையருள் மாலை, திருமறை மாலை, நபிமொழி மாலை, நாயக மாலை, நபிமணி மாலை, பாத்திமா மாலை, காஜா மாலை, முஹ்யித்தீன் மாலை என ஏராளமான புகழ்ச்சிப் பாக்கள் அடங்கிய தொகுப்பு இது. இவற்றின் பெரும்பகுதி நாகூர் ஈ.எம்.ஹனிபாவால் பாடப்பட்டு புகழடைந்தவை.இசைத்தட்டில் கம்பீரமாக ஒலித்த இப்பாடல்கள் பாமரர்களின் இதயத்தினுள் சென்று இடம் பிடித்தன.

ஆதியருள் கனிந்திறங்கி

அமரர் கோன் வழியாக

நீதிநபி மாமணிக்கு

நிறைவளித்த திருமறையாம்

என்று தொடங்கும் திருமறை மாலையின் பாடலும் நாகூர் ஹனிபா பாடியதுதான். ஹஸ்பீரப்பீ ஜல்லல்லாஹ், அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன், ஆளும் இறைவன் தூதர்
நபி, விண்ணகமும் மண்ணகமும், அருளாளன் அன்புடையோன் ஆகியவை மேலும் சில உதாரணங்கள்.

நல்ல தமிழில், அழகு தமிழில் பிரவாகம் போலப் பேசும் வல்லமை படைத்த இவர் இடுக்கன் வருங்கால் நகுக எனும் வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப, துன்பம் வந்தபோதும்கூட
நகைச்சுவை உணர்வோடு பேசியிருக்கிறார். மூட்டு வலியால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தபோது ஒரு நண்பர் இவரிடம், எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிலேடையாக, ‘உடம்பில் முக்கால் பாகம் நன்றாக இருக்கிறது. கால் பாகம்தான் நன்றாக இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார்!

அற்புதமான படைப்பாற்றல் கொண்டவராகவும், சரியான ஆன்மீக வாதியாகவும், நல்லாசிரியராகவும் செயற்கரிய சேவைகள் பல செய்த இந்த மாமனிதரை, சமுதாயம் அடையாளம் காண வேண்டியது காலத்தின் க்ட்டாயம். இவரைப்போல எத்தனைபேர் அறியவேண்டிய விதத்தில் இன்னும் அறியப்படாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை.

இறையருட் கவிமணியை அடையாளம் காட்டிய பேராசிரியர் நத்தர்சாவும், அடையாள கண்டுகொண்ட சாகித்திய அகாதெமியும் நிச்சயம் நமது பாராட்டுக்கு உரியவர்கள்.

நாகூர் ரூமி

1 பின்னூட்டம்

  1. thaha husain said,

    27/05/2015 இல் 14:21

    கவிதைக்கென் குருவாய் கமழும் இறையருட்
    கவிமணிக்கருள்வாய் காவலன் அல்லாஹ் !

    இறைமறையின் இதயம் ” எனும் நூலில் “தேங்கையார் “


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s