அலிபாதுஷா கதை

‘பாசவலை’ என்ற படத்தின் மூலக்கதையே ‘அலிபாதுஷா’ நாடகத்தின் கதைதான் என்கிறது அம்ருதா  (ஜூன் 2008 ,பக் 14-15 ) ! எம்.ஜி.ஆரின் குருவான கே.பி கேசவனைப் பற்றிய கட்டுரையில் திரு. சர்வேஸ்வரன் இவ்வாறு குறிப்பிடுகிறார் : ‘1930 களின் இறுதியில் நாடகங்கள் பிரபலமாக விளங்கிய நாட்களில் ‘அலிபாதுஷா’ என்ற நாடகம்  ஜனரஞ்சகமாக விளங்கியது.  இதே ‘அலிபாதுஷா’ 1936ல் திரைப்படமாகவும் வெளிவந்தது. தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர் முதலியோர் என்ற விபரம் தெரியவில்லை. 1957ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘பாசவலை’ படத்தின் மூலக்கதையே ‘அலி பாதுஷா’ நாடகத்தின் கதைதான். அலிபாதுஷா கதையில் வரும் முஸ்லிம் பாத்திரங்களை இந்துக்களாக மாற்றி ‘பாசவலை’ தயாரிக்கப்பட்டது.’

***

‘அலிபாதுஷா நாடகம்’ , வண்ணக்களஞ்சியப் புலவரால் (‘சுலைமான நபி சரித்திரம்’ கூறும் புகழ்பெற்ற ‘இராஜநாயகம்’ காப்பியம் படைத்தவர்) இயற்றப்பட்டது என்ற விபரம் மட்டும் எனக்குத் தெரியும். படித்ததில்லை; பார்த்ததுமில்லை. அது குறித்த சினிமா செய்திகளை இப்போதுதான் அறிகிறேன். வண்ணக்களஞ்சியத்தாரின் பரம்பரையில் வரும் சித்தி ஜூனைதாவின் ‘காதலா கடமையா?’ நாவல் , எப்படி ‘நாடோடி மன்னன்’களால் சுலபமாக மாற்றப்பட்டது என்பதையும் பிறகு பதிய வேண்டும், இன்ஷா அல்லாஹ். கம்பம் சாஹூல் ஹமீது அவர்களின் அந்தக் கட்டுரை என் கணினியில் இன்னும் தூங்குகிறது. பிறகு பதிகிறேன்.

ஒரு ரகஸ்யம், இஸ்லாமிய இலக்கியவாதிகளிடம் சொல்லிவிட வேண்டாம், ‘காதலா கடமையா?’வே ஒரு ஆங்கில நாவலின் தழுவல்தான் என்பார் புதுமைப்பித்தன்! அந்த நாவலின் பெயரைச் சரியாக சொல்பவர்களுக்கு ஒரு நாகூர் எழுத்தாளர் இலவசம் – 🙂

சரி, இப்போது ‘அலிபாதுஷா’ கதைச் சுருக்கம், அம்ருதாவுக்கு நன்றியுடன்…:

அலிபாதுஷா என்ற ஓர் அரசர் தன் தம்பி செய்த குற்றத்திற்கு பிராயச்சித்தமாக தன் பட்டத்தையே துறந்து வேற்று நாட்டுக்குச் சென்று விடுகிறார். செல்லும் வழியில் , காட்டில், மனைவிக்கும் இரு பிள்ளைகளுக்கும் குடிக்கத் தண்ணீர் கொண்டுவரச் செல்கையில் விஷத் தண்ணீரைப் பருகி, தன் சித்தஸ்வாதீனத்தையே இழந்து , கால்போன போக்கில் தன் குடும்பத்தை நிராதரவாக விட்டுச் சென்று விடுகிறார். காட்டில் விடப்பட்ட ராணி தன் கணவரைத் தேடிக் குமாரர்களுடன் செல்லும் வழியில் வெள்ளப்பெருக்கு மிகுந்த ஒரு காட்டாற்றைக் கடக்க நேரிடுகிறது. ஆற்றைக் கடக்க முயற்சிக்கும்போது இரண்டு குமாரர்களும் கூடவே வருவதாக அடம் பிடிக்கவே மூத்தவனை ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு , இளையவனை மட்டும் தூக்கிச் சென்று பத்திரமாக மறுகரையை அடைகிறாள். பின் மூத்தவனை மீட்க ஆற்றில் இறங்குகையில் இளையவனும் ‘கூடவே வருவேன்’ என்று அடம்பிடிக்கவே  இப்போது இளையவனையும் இக்கரையில் உள்ள மரத்தில் கட்டிவைத்து விட்டு மூத்தவனை அழைத்து வர ஆற்றில் இறங்குகிறாள். நடு ஆற்றை கடந்து கொண்டிருக்கும்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடவே, அவ்வேகத்தைத் தாங்கமுடியாத ராணி ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறாள். குமாரர்கள் இருபுறமும் கரைகளில் அனாதைகளாக விடப்படுகின்றனர். கதை இவ்வாறாக நகர்கிறது…

அவ்வளவுதான் கதை சொல்லியிருக்கிறார் சர்வேஸ்வரன்.

கண் கலங்கவோ கவலைப்படவோ வேண்டாம்,  கரையின் ஒருபுறத்தில் கட்டப்பட்ட மூத்த இளவரன் சாதரணமானவன் இல்லை. பி.யூ. சின்னப்பா (9 வயது) ; மறுகரையில் கட்டப்பட்ட இளவரசனோ எம்.ஜி. ஆர் (8 வயது).

விரிவான கதை பிறகு சொல்லப்படும்.

– ஆபிதீன் –

**

தொடர்புடைய தகவல் (சகோதரர் பத்ரி எழுதியது) :

’(சித்தி ஜூனைதாவின் ‘காதலா கடமையா) நாவல் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. திரைப்படத்துறையில் நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா ரவீந்தர் என்று ஒருவர் இருந்தார். இவரும் தூயவனிடம் இணைந்து பணியாற்றியவர்தான். எம்ஜியாரின் மகாதேவி படத்துக்கு வசனமெழுதியவர் இவர்தான். ’மணந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி’ என்ற புகழ்பெற்ற வசனம் இவருடையதுதான். எம்ஜியாரின் நாடோடி மன்னன் படத்தில் ஒவ்வொரு சீக்வென்சும் அப்படியே காதலா கடமையா நாவலில் உள்ளதுதான் என்று சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரிய நண்பர் என்னிடம் சொன்னார். படத்தை மறுபடி சிடியில் பார்த்ததில் அது உண்மை என்று தெரிந்தது. ரவிந்தர் ஆச்சிமாவின் நாவலிலிருந்து சுட்டுவிட்டார் என அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. படம் அப்படித்தான் உள்ளது. அதுதான் உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும் நாவல் ஏற்படுத்திய தாக்கத்திற்கு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம். ’

***

4 பின்னூட்டங்கள்

 1. 10/01/2009 இல் 09:01

  நண்பருக்கு…

  நான் பிறப்பதற்கு முன்போ அல்லது எனக்க நினைவு தெரிந்தகாலங்களுக்கு முன்போ இந்த நாடகம் எங்கள் ஊரில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வந்துள்ளது. அதன் நாடக வடிவம் பாடல்களுடன் எங்கள் ஊரில் ஒருவரிடம் உள்ளது. அந்த நாடகத்தில் எனது தாத்தாகூட (பாட்டனார்) நடித்துள்ளதாக சொல்லி உள்ளார். அந்த நாடகத்தில் வரும் வில்லன் பாத்திரம் (ஜீல்மான் என்று நினைக்கிறேன் பெயர் நினைவில் இல்லை) அந்நாடகம், அதில் வரும் அலிபாதுஸா மனைவி, வில்லன் அவளை பெண்டாள வரும்போது அவர் சாபமிடுவார் அச்சாபத்தின்படி அவருக்கு தொழுநோய் (குஷ்டம்) வந்துவிடும் நாடகத்தில். அப்படி சாபம் பெற்ற தொடர்ந்து இருவர்கள் குஷ்டம் வந்து இறந்துபோனதால், அந்நாடகத்தை நிறுத்திவி்ட்டதாகவும் சொன்னார்கள். அப்பெண்மணியின் சாப கட்டத்தில் வரும் தீ மூழுட்டும் என்பதான வசனங்களில் ஓரிரமுறை தீ மூண்டு நாடகை கொட்டகையே எரிந்து விட்டது என்பதும் ஒரு காரணம் என்றார்கள்.

  நோன்பு வைத்து சுத்தபத்தமாக அந்த நாடகத்தை நடத்தி வந்ததாகச் சொன்னார்கள். அந்த நாடகத்தை தொடர்ந்து நடத்தி வரும் ஒரு குடும்பத்தினரிடம் அந்த பிரதிகள் உள்ளது. நான் 11 வயதாக உள்ளபோது அந்த நாடகத்தை மீண்டும் நடத்த முயன்று அதில் இரண்டு சகோதரர்களாக மொத்தம் 3 அண்ணன் தம்பிகளை தேர்வு செய்து பயிற்சி கொடுத்தார்கள். 4 நாள் நாடகம் என்பதால் ஸ்டெப்னியாகவும் மாற்றி மாற்றி வயதிற்க ஏற்ப நடிப்பதற்கும். அந்த இணையில் நானும் எனது அண்ணனும் ஒரு இணை. 15 நாட்கள் தொடர்ந்து பாடல்கள் பாடப்பயிற்சி தந்தார்கள். அதன்பின் பொருளியில் சிக்கல் என்று நாடகம் நின்றுபோனது. அப்பொழுதும்கூட வில்லனாக நடிப்பதற்கான ஆள் இல்லை என்பதால் அந்நத நாடகத்தை நடத்தும் குடும்ப்ததை செர்ந்நதவரே வில்லனாக நடிப்பதாக முடிவுசெய்து துவங்கி பின் நின்றுபோனது. அவரிடம்தான் நாடக பாடம் உள்ளது. அதன் பின் யாரும் முன் முயற்சி எடுக்கவில்லை. தற்சமயம் உங்கள் பதிவைப் பார்த்தவுடன்.. எனக்கு நினவுகள் “மலர்ந்து விட்டன“. {:)}

  எங்கள் ஊரில் மற்றொரு நாடகமும் சென்ற 5 ஆண்டுகள்வரை தொடரந்து நடத்தி வந்தார்கள். அது “ஜெம்புமாலி நாடகம்“ என்பார்கள். இந்த இரண்டும் குறித்து பிறகு விரிவாக எனது பதிவில் எழுதுகிறேன். அந்த நாடகம் பற்றிய மேல் விபரங்களுடன்.. அந்த பழைய நாடகப் பிரதியை நானும் எனது ஊரில் உள்ள அந்த குடும்பத்திடம் தேடி பிரதி எடுக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் எண்ணத்தை உங்கள் கருத்து வலிமையாக்கிவிட்டது.

  இப்படி எண்ணற்ற கலைகளை நாம் மற்ந்தும் அழித்தும் கொண்டு இருக்கிறோம். அதில் ஒன்று நூர் மசாலா…

  நன்றி

  அன்புடன்
  ஜமாலன்.

 2. 10/01/2009 இல் 09:20

  ‘மலர்ந்ததை’ மறக்காமல் எழுதுங்கள் ஜமாலன்.
  நன்றி.

 3. 10/01/2009 இல் 09:27

  ‘மலர்ந்ததை“ என்பது நான் சாதரணமாகத்தான் எழுதினேன். நீங்களும் அதையே திரப்பி சொல்வதில் ஏதும் உள்குத்து எதுவும் இல்லையே… )))).

 4. 11/01/2009 இல் 06:12

  உள்குத்தெல்லாம் இல்லை ஜமாலன். மேற்கோளுடன் நீங்கள் எழுதியதால் அர்த்தம் பார்க்கத் தோணிற்று. வேண்டுமானால் ‘மலர வைத்ததை’ எழுதுங்களேன் 🙂

  ‘அலி பாதுஷா கதை’ நாகூரில் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் நிகழ்ந்ததாக ஊரில் சொல்வார்கள். நீங்கள் குறிப்பட்டது போன்ற கதையைத்தான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. நாகூர் தர்ஹா புத்தகக் கடைகளில் பிரதியைத் தேடினேன். வேறுவேறு ‘கிஸ்ஸா’க்கள் இருந்தன, பிரமாதமான அச்சுப்பிழைகளுடன். இது மட்டும் கிடைக்கவில்லை. பல இஸ்லாமிய எழுத்தாளர்களுக்கு தகவல் களஞ்சியமாக இருந்த – நாகூரைச் சேர்ந்த – மறைந்த ஜாஃபர் முஹ்யித்தீன் மாமா (இவர் என் உறவினரும் கூட) அவர்களிடம் கண்டிப்பாக இருந்திருக்கும், குறைந்தது அது பற்றிய விபரம் சொல்லியிருப்பார்கள். கேட்கும் வாய்ப்பு தவறிப் போய்விட்டது. சென்னை சாஹூல் ஹமீது பதிப்பகத்தார் அல்லது செ.மு.மு. அலி, நத்தர்ஷா ஆகியோரிடம் கேட்டால் விபரம் கிடைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது நீங்கள் உங்கள் ஊரில் அந்த நாடகப் பிரதி பாடல்களுடன் இருப்பதாக இப்போது எழுதியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. தயவு செய்து அதை மீட்டு அது சம்பந்தமான பதிவையும் எழுதுங்கள். காத்திருக்கிறேன். அப்படியே , நீங்கள் புதிதாக குறிப்பிட்டிருந்த , “ஜெம்புமாலி நாடகம் பற்றியும்.

  எழுதுவதற்கு முன் , ‘இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்’ என்ற காட்டமான பதிவெழுதிய சகோதரர் ‘வஹாபி’யிடம் எதற்கும் உத்தரவு வாங்கிக் கொள்ளவும்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s