இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா

இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா – முனைவர் அ.அய்யூப்
(நவமணி பதிப்பகம், 44 எல்டாம்ஸ் சாலை, சென்னை – 600 018 பக்கம் 160, ரூ. 90) நூலிலிருந்து…

நன்றி : முனைவர் அ.அய்யூப் , உண்மை

***
அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் பள்ளிக் கூடத்துக்குப் போய்ப் படிப்பதில்லை. அரபிப் பள்ளியில் சேர்ந்து திருக்குரான் ஓத மட்டும் கற்றுக் கொள்ளுவார்கள். பள்ளிக் கூடத்தில் சேர்ந்து, நாலு, ஐந்து வகுப்புப் படித்த முஸ்லிம் பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தாவூத் ஷா தன்னுடைய 4 மகள்களையும், பள்ளிக் கூடத்தில் சேர்த்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை (எஸ்.எஸ்.எல்.சி) படிக்க வைத்தார்.
நான்கு மகள்களுமே நல்ல எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளவர்களாக விளங்கினார்கள். தாவூத் ஷா சில நேரம் அவர்களுடன் அரசியல், சமுதாயப் பிரச்சினைகளை விவாதிப்பது உண்டு.
நான்கு மகள்களையும் நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்தார், தாவூத் ஷா. யாருக்கும் வரதட்சணை கொடுக்கவில்லை. வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ளவில்லை. திருமணம் முடிந்ததும் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று சொன்னார். முதல் மூன்று மகள்களுக்கு உள்நாட்டு மாப்பிள்ளைகள் கிடைத்தார்கள். கடைசி மகள் சிராஜ் பேகத்துக்கு மட்டும் மலேசியா மாப்பிள்ளை. அந்நாளைய வெளிநாட்டு மாப்பிள்ளைகள் திருமணம் முடிந்ததும் பெண்ணை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விடுவார்கள். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வந்து, ஓரிரு மாதம் இருந்து விட்டுப்போவார்கள். ஆனால், பெண்ணை கையோடு அழைத்துப் போய் விடவேண்டும் என்று மலேசியா மாப்பிள்ளைக்கு தாவூத் ஷா நிபந்தனை விதித்தார். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால், திருமணம் முடிந்ததும் அவசரமாக மலேசியாவுக்குப் போக வேண்டியதாகி விட்டது. போனவர் உடனடியாகத் திரும்பி வரவில்லை. இதற்கு இடையே சிராஜ் பேகம் குழந்தை உண்டானார். கைக் குழந்தையை எடுத்துக் கொண்டு, தனியே விமானம் ஏறி, மலேசியாவுக்குப் பறந்து, கணவருடன் சேர்ந்தார்.

பெண்கள் கல்லூரி

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி அரசராக இருந்த பசீர் அகமது, சென்னையில் பெண்களுக்காக ஒரு கல்லூரியை நிறுவினார்.
இதற்கு முஸ்லிம் உலகமாக்களிடம் பலத்த எதிர்ப்பு. பெண்களுக்குக் கல்லூரி அமைக்கக் கூடாது. இது மார்க்கத்துக்கு விரோதமானது என்று கண்டனக் குரல் எழுப்பினார்கள். அப்போது தாவூத் ஷா, நீதியரசர் பசீர் அகமதுக்கு முழு ஆதரவு அளித்தார். பெண்களுக்குக் கல்லூரி அமைப்பதை ஆதரித்துப் பேசினார்; அறிக்கைகள் வெளியிட்டார்; தாருல் இஸ்லாம் இதழிலில் காரசாரமாக எழுதினார். பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்பதற்குத் திருக்குரானில் இருந்தும், நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வார்த்தைகளில் இருந்தும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறி, தாவூத் ஷா ஆதரவு திரட்டினார். கல்லூரி நிறுவப்பட்டு இப்போது சிறப்பாக நடந்து வருகிறது. அந்தக் கல்லூரிதான் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள எஸ்.ஐ.டி.டி. மகளிர் கல்லூரி.

முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்

இன்று எத்தனையோ முஸ்லிம் பெண்கள் எழுத்தாளர்களாக விளங்குகிறார்கள். அந்த நாளில் இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளரையும் தாவூத் ஷாவே உருவாக்கினார்.

நாகூரைச் சேர்ந்த சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணிதான் எழுத்தாளரான முதல் தமிழ் முஸ்லிம் பெண். அவர் எழுதிய முதல் சிறுகதை, 1929ஆம் ஆண்டு தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது!
தாருல் இஸ்லாம் வாசகியான சித்தி ஜுனைதா பேகம தனது முதல் சிறுகதையை முஸ்லிம் பெண்களின் உரிமைக்குப் போராடிய தாவூத் ஷாவுக்கு அனுப்பி வைத்தார். ஒரு பெண் எழுதிய சிறுகதை என்றதும், தாவூத் ஷாவுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! முஸ்லிம் பெண்கள் கூடக் கதை எழுதத் தொடங்கி விட்டார்கள் என்று பெருமிதத்துடன் சிரித்தார். அந்தக் கதையை தாருல் இஸ்லாம் இதழில் உடனே வெளியிட ஏற்பாடு செய்தார்.
சித்தி ஜுனைதா பேகம் படிப்பறிவு இல்லாதவர். தாருல் இஸ்லாம் படித்துத் தான் செந்தமிழைக் கற்றுக் கொண்டார். எழுதவும் தொடங்கினார். பிற்காலத்தில் நிறையச் சிறுகதைகளும், பெருங்கதைகளும் எழுதினார்.
முஸ்லிம் பெண்களைத் தமிழ் படிக்க வைத்தது, தாருல் இஸ்லாம் தான். அதன் இனிய செந்தமிழ் நடை பெண்களைப் படிக்கத் தூண்டியது. தாருல் இஸ்லாம் படித்த பெண்கள் விடுதலை வேட்கை பெற்றார்கள்!

பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள்!

ஏமன் மாநில ஆளுநராக ஜபல் என்பவரை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நியமித்தார்கள். நீர் எந்தச் சட்டப்படி ஆட்சி நடத்துவீர் என்று அவரிடம் நாயகம் (சல்) அவர்கள் கேட்டார்கள்.
திருக்குர்ஆன் சட்டப்படி ஆட்சி நடத்துவேன் என்று ஜபல் சொன்னார்.

குர் ஆனில் விளக்கம் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்?

உங்கள் வாக்குகளைப் பின்பற்றி நடப்பேன்

அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்?

எனது பகுத்தறிவைப் பயன்படுத்துவேன்

அதுதான் சிறந்த வழி என்று நாயகம் (சல்) அவர்கள் கூறினார்கள்.

***

நன்றி : முனைவர் அ.அய்யூப் , உண்மை

***

நூல் விமர்சனம்  பார்க்க இங்கே சொடுக்கவும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s