யுகபாரதி : சமயத்திற்கு அப்பால்…

இரண்டு வருடத்திற்கு முன்பே  ‘தினம் ஒரு பூண்டு’ கதை’யைப் படித்த இந்த யுகபாரதிக்கு சென்ற மாதம் என்னை நேரில் பார்க்கும்போதுதான் சிரிப்பு வந்தது! நாகூர் பற்றிய அவரது பதிவைப் பதிகிறேன் – நக்கீரன் மின்னிதழுக்கு நன்றியுடன். இசைக்கடல் எஸ்எம்ஏ காதர் பற்றியும் கூடவே செந்தமிழ் அவதானி செய்குதம்பி பாவலர் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

‘சதாவதனி’ எங்க ஊர்லெ பொறக்கலையேண்டு  ஏக்கமா இக்கிது யுகா…

 – ஆபிதீன் –

***

தசா/சதா அவதாரங்கள்

யுகபாரதி
நாகூருக்குப் போயிருந்தேன். நாகூர் தர்கா புகழ்பெற்ற இஸ்லாமியத் தலங்களில் ஒன்று என்பதால் வருடந்தோறும் கந்தூரி சமயத்தில் அம்மாவும் அம்மாவுடன் அம்மாவின் துணைக்காகப் பக்கத்து வீட்டு அக்காக்களும் போவதுண்டு. எத்தனையோ முறை வற்புறுத்தியும் கூட எனக்கு போக வேண்டும் என்ற உந்துதல் ஏற்படவில்லை. காரணம் எதுவும் இல்லாமலேயே நாம் சில விஷயங்களை தவிர்த்து விடுகிறோம். காரணத்தோடு தவிர்ப்பது தந்திரம். காரணமில்லாமல் தவிர்ப்பது அலட்சியம்.

எனக்கு அலட்சியம் இம்மாதிரியான நடவடிக்கைகளில் அதிகம். அந்த அலட்சியத்தில் எத்தனை லட்சம் இழந்தாலும் பொருட்படுத்த மாட்டேன். சரி. என் பராக்கிரமப் பசப்பல்களை விட்டுவிட்டு விஷயத்துக்கு வருகிறேன். நாகூருக்கு முதலில் நண்பர்களைச் சந்திக்கும் பொருட்டுதான் போனேன். ஆனால், அங்கே போனதும் நண்பர் குழாம்களின் வற்புறுத்தலால் ஒவ்வொருவர் வீட்டுக்கும் போக வேண்டி வந்தது. நண்பர்கள் அன்போடு கூட்டிப்போய் உபசரித்தார்கள். உபசரிப்புக்கு இடையில் நாகூரின் பெருமைகளை ஒவ்வொன்றாக சொல்லவும் செய்தார்கள். நீங்கள் ஒருவரை அவசியம் சந்திக்க வேண்டும் என்று வம்படியாக என்னை இழுத்துக்கொண்டு போனார் குறும்புச்சித்தர்.ரூமி. உடன் சீர்காழியைச் சேர்ந்த கவிஞர் தாஜூயும் எழுத்தாளர் ஆபிதீனும் வந்தார்கள். பயணத்தில் என்னுடன் பங்கெடுத்த இன்னொரு பிரமுகர் சன் தொலைக்காட்சி திருவீரபாண்டியன்.நேருக்கு நேர் அவரிடம் ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.அவரும் நிகழ்ச்சி நடத்துவது போல பொறுமையோடு பல குறுக்கு விசாரணைகளைத் தொடுத்தார்.

என்னை ரூமி இழுத்துக் கொண்டு போய் நிறுத்திய வீடு, தர்காவின் அருகே அமைந்திருந்த இசைக்கடல் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களின் வீடு. 85 வயதாகும் காதர் அய்யா படுக்கையில் இருந்தார். எங்களைப் பார்த்ததும் எழுந்து வணங்கினார். அவர் எழுந்து அமர்ந்த பாவனையே அவரை சிரமப்படுத்துகிறோம் என்பது போலிருந்தது. ரூமி முகத்தை பார்த்து அய்யா ஓய்வெடுக்கும் நேரத்தில் வந்துவிட்டோமே என வருந்தினேன். ஆனால், நான் வருந்திய அளவுக்கு அய்யா வருந்தவில்லை. நிதானத்தோடு எழுந்து கொண்டு ஆடையை சரிசெய்து பேசத் தொடங்கினார். ஒரு மாபெரிய சங்கீத வித்வானின் எதிரே அமர்ந்திருக்கும் பதற்றம் என்னை கவ்விக்கொண்டது. அவர் பேச்சு கலைஞனின் ஆத்மார்த்தமான உணர்வை பகிர்ந்து கொள்வது போல் இருந்தது. இடையிடையே செருமல். நீள மற்றும் அடர்த்தியான செருமலும்.

எனக்கும் கலைஞருக்கும் ஒரே வயது என்று தான் பேச்சை ஆரம்பித்தார். வயது கூடினதால் முன்புபோல் பாட முடிவதில்லை என்றார். பேசவே கிரமப்படுகிற அவர் நிலையில் பாட முடியவில்லை என்ற துக்கம் கலங்கடித்தது. அவர் எங்களோடு பேசுவதை விரும்புபவராகத் தென்பட்டார். வாத நோய் அவரை வதைத்ததுக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அவர் நம்பிக்கையோடு தன் இளமைக் கால அனுபவங்களை குண்டு பல்பின் மங்கலான வெளிச்சத்தில் தொடர்ந்தார்.

அந்த காலத்தில் இசை என்றால் கருநாடக சங்கீதம் மட்டும்தான். அதுவும் ஒரு இஸ்லாமியன் கருநாடக சங்கீதம் பாடுவதா என்று ஏக கெடுபடி. கொலம்பியா இசைத்தட்டு மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் அதில் பாடுவதற்கு அன்றைக்கு இருந்தவர்கள்அனுமதிக்கவில்லை. அதையும் மீறி என் பாட்டில் பேதமோ தவறோ இருந்தால் பரீட்சை வையுங்கள் என்று போராடித்தான் மீண்டு வர முடிந்தது. இசை சாதியிலோ மதத்திலோ இல்லவே இல்லை அது,உள்ளத்தில் இருக்கிறது. என் குருவின் குருவான சோட்டு மியான் சாகிபு காசியிலிருந்து தென்னாடு வந்தவர். உலகமெங்கும் வியாபித்திருக்கும் இசைக்கு மொழியும் இல்லை பிராந்தியமும் இல்லை. கடவுளோடு பேசுவதற்கு ஏற்ற மொழி சமஸ்கிருதமா? தமிழா? என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்க, காதர் அய்யாவின் மொழியில் சொல்வதானால் இசையே இறைவனை அடையும் வழி எனப்படுகிறது.

இறைவனை அடைகிறோமோ இல்லையோ இசையை அடையத்தான் வேண்டும். இசையில்லாத வாழ்வு நிறைவற்றது. இசையை ரசிக்கத் தெரியாவிட்டாலும் கண்மூடி மெய் மறந்து கரைவது மோனம். எழுத்தாளர் எஸ்.பொ. அடிக்கடி சொல்வது போல போனத்துவம். காதர் அய்யாவின் இத்தனை ஆண்டுகால இசைப்பிரியம் அவருக்கு என்ன கொடுத்திருக்கிறது என்று லௌகீகக் கணக்கைப் பார்த்தால் நாகூர் தர்காவின் ஆஸ்தான சங்கீத வித்வான் என்ற புகழைத் தவிர வேறு ஒன்றுமில்ல. அதை விட உயர்ந்த தகுதி என்ன இருக்கமுடியும்.வேறு எதை கருதியும் அவர் இசையை சுவீகரிக்கவில்லை. இசையை ஒருவித காதலோடும் கர்வம் கலந்த நேசத்தோடும் ஆராதனை செய்திருக்கிறார். இன்னும் உள்ள காலங்களிலும் அதையே தொடருவார் எனப்படுகிறது.

கொலம்பியா இசைத்தட்டில் பாடுவதற்கு வாய்ப்பு தேடி சென்னை வந்தபோது இஸ்லாமியர் என்பதற்காக அவர் நடத்தப்பட்ட விதத்தையும் அதற்கு அவர் எதிர்வினையாற்றிய முறையையும் சொல்லும் போது அவருடைய கண்களை கவனித்தீர்களா என்றார் வீரபாண்டியன். அந்தக் கண்களில் வெற்றியின் உவகையை விட போராளியின் சாந்தம் மிளிர்ந்தது. 1923ல் பிறந்த காதர் அவர்கள் மரபான செவ்விசையை குருகுல முறையில் பயின்றிருக்கிறார். தாவுது மியான் சாகிபு அவர்களிடம் முறையான பயிற்சி பெற்று 1952ல் தர்கா வித்வான் எனற சிறப்புப் பதவியை பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே செவ்விசையை சிறிதும் மீற விருப்பாத இவர் தம் இசையரங்கை இறையுணர்வுள்ள பத்து பேர் கேட்டால் போதும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். பிடிவாதம், தன் கலை காசுக்கு விலைபோய்விடக்கூடாது என்ற தீர்மானம் கொண்டிருந்ததால் என்பதை அறியும்போது அவர் மீது மேலும் மரியாதை கூடுகிறது.

இப்பவும் டிசம்பர் மாதங்களில் திருவையாறிலும் மயிலாப்பூரிலும் அரங்கேறும் இசைக் கச்சேரிகளில் இந்தத் தீண்டாமை நிலவவே செய்கிறது. இசையைக் காதலிக்கும் வேற்று மதத்தினரை பூநூல் விமர்சகர்கள் புறந்தள்ளிவிடுகிறார்கள். தேசிகர் பாடிய சபையை ஜலம் தெளித்து கழுவிய புறம்போக்கு ஆத்மாக்கள் இன்னமும் வேறு வேறு பெயர்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன். நெற்றியில் பட்டையோ நாமமோ தரிக்காமல் குல்லா வைத்து கொண்டு சாஸ்தீரிய சங்கீதம் பாடும் ஒருவரை சபாவில் நம்மால் தரிசிக்க முடியவதில்லை. அய்யா காதர் அவர்களுக்கு அந்த ஆதங்கம் எதுவும் இல்லை. அவர் தன் இசைப்பணியை இறைபணியோடு இணைத்துப் பார்த்ததால் அவரால் இந்த வயதிலும் உற்சாகம் குன்றாமல் இசையை நேசிக்க முடிகிறது. பேச்சின் இடைய வீரபாண்டியன் தன் கைபேசியில் அவரை புகைப்படம் எடுக்க முயன்றார். ஒரு நிமிடம் என்று காதர் அய்யா மெத்தை மேல் கிடந்த துண்டை எடுத்து மார்பில் அங்கவஸ்திரம் மாதிரி போட்டுக் கொண்டு இப்போது எடுங்கள் என்றாரே பார்க்கலாம் அத்தனை குழந்தைமையை இசைஅவருக்கு வழங்கி இருக்கிறது.

சமய உணர்வைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு சகல துறையிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள எந்த இசுலமியரும் தயங்குவதில்லை. சமயத்திற்கு அப்பால் சம மனிதர்களோடு கலந்து புழுங்குவதில் அவர்களுக்கு மனத்தடை எதுவும் இருப்பதில்லை. அல்லது இருப்பதாக நான் இதுவரை கண்டதில்லை. ஐந்து வேளை தொழுவதிலும் அவர்களுக்கு உரிய கடமைகளை ஆற்றுவதிலும் சரியாக செயல்படுவது போலவே பிற துறையிலும் தங்களை பிணைத்துக் கொண்டு முன்னேறுகிறார்கள்.

நாகூர் மாதிரியான ஊர்களில் இசுலாமியர்களின் வழக்குகளில் பலவும் பிற சமய வழக்குகளின் கலப்பை காணமுடிகிறது. திருமணம், மரணம் போன்றவற்றில் ஊர் வழக்கு என்னும் நடைமுறை கையாளப்படுகிறது. இசுலாமியர் என்னும் பதம் ஒரு அடையாளமாக இருக்கிறதே தவிர அவர்களைப் பிறரோடு எவ்விதத்திலும் பிரித்துக் காட்டுவதில்லை.

தசாவதாரம் திரைப்படம் வெளிவந்திருக்கும் இச்சமயத்தில் ஓர் இஸ்லாமிய சதாவதானியைப் பற்றிச் சொல்லத் தோன்றுகிறது. ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்பவரை சதாவதானி என்று நான் சொல்லி தெரிவதற்கு முன்பே உங்களுக்கு தெரிந்திருக்கும். இஸ்லாமிய சதாவதானி என்று சமயக் குறிபோடு அவரை சொல்லக் கூடாது. ஏனெனில், அவர் செந்தமிழ் அவதானி. செய்குதம்பி பாவலர். அளப்பெரிய ஆற்றல் வாய்ந்த மனித மூளையை பயன்படுத்தும் கலையை எல்லோரும் பெறுவதில்லை. அதை கலையாக மட்டுமல்லாமல் அற்புதமான செயல்களாலும் செய்து காட்டியவர். செய்கு தம்பியாரே ஆவார். இதை ஏன் சொல்கிறேன் என உங்களுக்கு தெரியும்.அருட்பாவா? மருட்பாவா ?என தமிழகமே திக்குமுக்காடிய சமயத்தில் அருட்பா அருட்பாவே என ஆதாரங்களை நிறுவியவர் பாவலர். இந்து சமய பிரச்சனைக்கு தீர்வும் தெளிவும் தர இசுலாமிய பெருமகன்கள் உதவி இருக்கிறார்கள்.

செய்கு தம்பியாரைப்பற்றி சொல்லுகையில் என் மூளை நினைவில் வைத்து இருக்கும் இன்னொரு சம்பவம் இது. ஒருமுறை செய்குதம்பி பாவலர் அவர்கள் சென்னையில் இட்டா பாத்தசாரதி நாயுடு என்பவரின் அச்சகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது நவராத்திரி விழாவில் பாடுவதற்கு நாயுடு பாவலரிடம் பாடல் கேட்டிருக்கிறார். நாயுடுவுக்கும் இஸ்லாமியர் என்ற எண்ணம் இல்லை. பாவலருக்கும் நவராத்திரிக்கா என்ற தயக்கமில்லை. கேட்டது நாயுடு என்பதால் உடனே எழுதிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலை நான் மிகவும் ரசித்த மரபுக் கவிதை பட்டியலில் வைத்திருக்கிறேன். ஓசையும் ஒழுங்கும் கருத்தும் செறிவுமாக அக்கவிதை அமைந்திருக்கிறது. படைப்பூக்கத்தின் பிரதிபலிப்பை எந்தக் கோணியாலும் கட்டியள்ள முடியாது. அது,ஆற்றுப் பெருக்கைப்போல அருவி அதிர்வைப் போல ஒவ்வொருவரிடமிருந்தும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

உருமகளை அயல்நாவில் உறைமகளைப்
பொறை மகளை உலகுக் கெல்லாம்
குருமகனை அன்பர் புகழ் குலமகளை
மலர் மகளைக் குறைதீர் செல்வத்
திருமகளின் மருமகளை நிலமகட்கும்
கலைமகளைச் செவ்வி வாய்ந்த
ஒருமகனை எனக்கருள வருமகளைப்
பெருமகளை உன்னல் செய்வாய்

கலைமகளைத் திருமகளின் மருமகள் என்று பாவலர் கூறியிருக்கிறார். திருமகள் திருமாலின் மனைவி. கலைமகள் பிரம்மாவின் துணைவி. பிரம்மா திருமாலின் உந்திக் கமலத்தில் இருந்து உருபெற்றவன். எனவே, திருமாலின் மகன் ஆகிறான். அப்படியானால் திருமாலின் மகனுடைய மனைவியாகிய சரஸ்வதி, திருமகளின் மருமகளாகிறாள. இந்த நுட்பமான உறவு முறையை கூட செய்கு தம்பி பாவலர் எப்படி சூசகமான சொல்லால் வடித்திருக்கிறார் என வியக்கத் தோன்றகிறது. இந்து சாஸ்திர முறைகளை புராணங்களை உள்வாங்கும் ஞானம் அவருக்கு இயல்பிலேயே இருந்திருக்கிறது.

நினைக்கவும் யோசிக்கவும் நம் சமூகத்தில் பல மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். நேற்று, செய்குதம்பி பாவலர். இன்று, இசைமாமணி எஸ்எம்ஏ காதர். காதர் அய்யா பற்றிய மேலதிக குறிப்புகளுக்கு ஆபிதீன் பக்கங்கள் உதவின. இன்னொரு முறை நாகூருக்குப் போய்வர வேண்டும். இன்ஷா அல்லாஹ்

***

நன்றி : யுகபாரதி , நக்கீரன்

***

தொடர்புடைய சுட்டி :

 “சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!
–  நா.கண்ணன்

2 பின்னூட்டங்கள்

  1. 02/08/2008 இல் 12:56

    சொர்க்கமே என்றாலும் அது நாகூர போல வருமா? … தேசம் முழுதும் பேசும் மொழிகள் நாகூர் தமிழ் போல் இனித்திடுமா..? (எந்த கெட்ட வார்த்தைய விட்டு வச்சாங்க).. நாகூருக்கு வருகை தந்த வீரபாண்டியனுக்கும் யுகபாரதிக்கும் நன்றி.. வருகை தந்ததோடு பதிவையும் போட்ட யுகபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.
    ஆபிதீன் நானா, உங்களுக்கு நம்ம ஊர் மேல ஏன் அவ்வளவு பாசம்? இது எப்படி எதனால் வந்தது? ஒரு பதிவிடுங்களேன்

  2. பெயர் said,

    22/09/2008 இல் 11:27

    ‘இப்பவும் டிசம்பர் மாதங்களில் திருவையாறிலும் மயிலாப்பூரிலும் அரங்கேறும் இசைக் கச்சேரிகளில் இந்தத் தீண்டாமை நிலவவே செய்கிறது. இசையைக் காதலிக்கும் வேற்று மதத்தினரை பூநூல் விமர்சகர்கள் புறந்தள்ளிவிடுகிறார்கள். தேசிகர் பாடிய சபையை ஜலம் தெளித்து கழுவிய புறம்போக்கு ஆத்மாக்கள் இன்னமும் வேறு வேறு பெயர்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன். நெற்றியில் பட்டையோ நாமமோ தரிக்காமல் குல்லா வைத்து கொண்டு சாஸ்தீரிய சங்கீதம் பாடும் ஒருவரை சபாவில் நம்மால் தரிசிக்க முடியவதில்லை.’

    கர்நாடக இசையில் சாதி,மத பேதமில்லை. ஒரு ஜான் ஹிக்கின்ஸ், ஒரு ஷேக் சின்ன மொளலானா மட்டுமே என்று நினைக்காதீர்கள்.
    பல வெளிநாட்டவர் இன்று அதில் ஆர்வம் காட்டிக் கற்கின்றனர்.
    வட இந்தியரும் கற்கின்றனர்.அவர்களில் பலர் டிசம்பர் சீசனில்
    கலைநிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். மதம் தடையில்லை என்பதற்கு
    ஒர் எடுத்துக்காட்டு கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன். ஹிந்துஸ்தானி இசையை ரசிக்கும் போது மதம் குறுக்கே வருவதில்லை என்பதை விமர்சகர்களின் எழுத்துக்களைப்
    படித்தால் தெரிந்து கொள்ளலாம். குல்லா வைத்துக் கொண்டு பாடக்கூடாது என்று யாரும் தடை விதிக்கவில்லை. ஏ.ஆர்.ரகுமான் இசையை அவர் என்ன மதம் என்று பார்த்து ரசிப்பதில்லை, அவரும் கர்நாடக இசையை விலக்கவில்லை.

    மாறாக பரதநாட்டியம் கற்றதற்காக ஒரு சிறுமி,அவர் குடும்பம்
    விலக்கப்பட்டது கேரளாவில் முஸ்லீம்கள் நிறைந்த கிராமத்தில்.
    இசையை,கலையை முதலில் உங்கள் மதத்தில் உள்ள பழமைவாதிகளை ஏற்கச் சொல்லுங்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s