வரலாறு என்பதே தேதி, மாதங்களின் தொகுப்பு என்று ஆகி வகுப்பறைகளில் ‘இரண்டாவது பானிபட் போர் ஏன் நடந்தது ?’ என்று கேட்டால் ‘முதலாவது பானிபட் போர் ஒழுங்காக நடக்காததால்’ என்று மாணவன் பதில் சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது என்று கிண்டல் செய்கிறார் வலம்புரி ஜான் – இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டுச் சிறப்பிதழில் (1999).
‘விழுதுகளுக்கும் எடுப்போம் விழா’ என்ற தலைப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்கால இஸ்லாமிய இலக்கியத்தை ஆழப்படுத்துகிற மூன்று நட்சத்திர எழுத்தாளர்களைப் பற்றி வலம்புரி எழுதிய கட்டுரையிலிருந்து பேராசிரியர் அப்துல் சமது அவர்களைப் பற்றிய குறிப்பை மட்டும் இப்போது பதிகிறேன் – பதிவுக்கு சம்பந்தமென்பதால் . கவிஞர் தக்கலை ஹலீமா, கதையாசிரியர் மீரான் மைதீன் பற்றி பிறிதொரு சமயம், இன்ஷா அல்லாஹ். – ஆபிதீன்.
***
வலம்புரி ஜான் :
வரலாறு என்பதே தேதி, மாதங்களின் தொகுப்பு என்று ஆகி வகுப்பறைகளில் ‘இரண்டாவது பானிபட் போர் ஏன் நடந்தது ?’ என்று கேட்டால் ‘முதலாவது பானிபட் போர் ஒழுங்காக நடக்காததால்’ என்று மாணவன் பதில் சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது. இரண்டாவதாக வரலாறு என்பது இதுதான் என்று வரையறுத்துவிடுகிற வழக்கம் வரலாற்றுக்குச் சிறை எழுப்பி , கை விலங்குகளும் போட்டு விட்டது. கேம்ப்ரிட்ஜ் வரலாற்றுக் கொள்கை என்பது இப்படி இருக்கலாம்; இப்படிக்கூட இருக்கலாம்; இப்படி இருந்தாலும் தப்பில்லை என்ற மூன்று நிலைகளை முன் வைக்கிறது. இந்த வளர்ச்சி கூட நமது நாட்டு வரலாற்றில் முழுமையாக ஏற்படவில்லை. வரலாறு என்பது மக்களின் வரலாறு என்பதும் முழுக்கச் சொல்லப்படவில்லை.
ரொமிலா தாப்பர், கொசாம்பி, அஸ்கர் அலி என்ஜினியர் போன்றவர்கள் வரலாற்றை வேறுமாதிரி பார்க்கிறார்கள். சில வரலாற்று ஆசிரியர்களின் கண்களில் பூ விழுந்திருக்கிறது. சிலருக்கு விழுந்த பூவே விழியாகி இருக்கிறது. அருண் ஷோரி போன்ற வரலாற்று ஆசிரியர்களும் இருக்கிறார்கள். முடிவுகளை நோக்கிப் போகிற சரித்திர ஆசிரியர்களும் உண்டு. முடிவுகளை வைத்துக்கொண்டு முன்னேறுகிற சரித்திர மாணவர்களும் உண்டு. நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மீண்டும் மனத்திரையில் நிகழ்த்தப்படுவதால் அது சாதி, இனம், மொழி, நாடு, வேண்டியவர், வேண்டாதவர் என்கிற அழுத்தங்களுக்கு ஆளாகி விடுகிறது.
வரலாற்றுப் பெரும் ஆசிரியர்களே இதற்கு விதிவிலக்கு இல்லை. பி.டி. சீனிவாச அய்யங்கார் சாதாரண வரலாற்று ஆசிரியர் அல்ல. ஆனால் அவர் புத்தகத்தில் விஷ்ணு அல்லது சைவம் பற்றி அதிகாரம் வருகிறது. சிவம் அல்லது சைவம் பற்றி வரவில்லை. கிழே காணப்படுகிற குறிப்பில் ஆரியர் என்பவர் மெய்யர் என்று காணப்படுகிறது. அப்படியென்றால் திராவிடர்? என்று நீங்களோ, நானோ கேட்கக் கூடாது. திருமதி சரோஜா சுந்தர்ராஜன் பக்கம் பக்கமாக ஒரு வரலாற்றுப் புத்தகம் எழுதியிருக்கிறார். இதில் தந்த பெரியாரைப் பற்றிய படப்பிடிப்பே தவறாக இருக்கிறது. சிலம்புச் செல்வர் தமிழகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் பற்றி எழுதியிருக்கிறார். அதில் பெருந்தலைவர் காமராசரைப் பற்றி இன்னமும் அதிகமாக எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆக எழுதப்படுகிற எந்த வரலாற்றிலும் எழுதியவர் இருந்தே விடுகிறார். கவிதையில், கதையில் எழுதுகிறவர் இருந்தே ஆக வேண்டும். வரலாற்றில் எழுதியவர் இருக்கலாம், ஆனால் வெற்றிலையில் சுண்ணாம்பு போல; இலையில் உப்புப் போல இருந்தால் நல்லது.
பேராசிரியர் அப்துல் சமது எழுதிய ‘தியாகத்தின் நிறம் பச்சை’ இந்திய சுதந்திரப்போரில் இஸ்லாமியரின் பங்களிப்பை எந்த அளவிற்குச் சொல்ல வேண்டுமோ அந்த அளவிற்குச் சொல்கிறது. பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் என்ன பிழை செய்கிறார்களோ அவைகள் இந்த புத்தகத்தில் காணப்படவில்லை. வீர சவர்க்கரை ஒரு இந்து மதவெறியரைப் போலக் கருதிக்கொண்டு இன்னமும் எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ஹக் சாதாரண எழுத்தாளர் அல்லர். ஆனால் அவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
ஒரு தமிழ்ப் பேராசிரியராக இருக்கிற பேரா. அப்துல் சமது தன் வாதங்களுக்குத் துணையாக வீரசவர்க்கரின் ‘எரிமலை’ என்கிற மாபெரும் புத்தகத்தில் இருந்துதான் வரிக்கு வரி மேற்கோள் காட்டுகிறார். புத்தகம் சிறியதுதான். ஆனால் புத்தகம் இதுபோலத்தான் அமைந்திருக்க வேண்டும் என்பதற்கு இது வெளிவந்த ஆண்டில் இது ஒன்றுதான் எனக்குத் தெரிந்த உதாரண இலக்கியம்.
நகைச்சுவை கலந்த நல்ல தமிழ்ப் பேச்சும் , தனது நண்பர்களை முன்னுக்குக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்கிற எண்ணமும் நிரம்பப் படைத்த பேராசிரியர் அப்துல் சமதுவின் சிவப்பு மை சிந்துகிற சீர்திருத்த எழுதுகோலில் இருந்து இலக்கிய உலகம் இன்னமும் நிரம்ப எதிர்பார்க்கிறது
***
நன்றி : இஸ்லாமிய இலக்கியக் கழகம்
Abu Waseema said,
06/07/2008 இல் 09:40
வரலாறு பற்றிய வலம்புரிஜான் அவர்களின் கருத்துகள் ஆழமான சிந்தனைக்கொண்டவை, என்னை மீண்டும் சிந்திக்க வைத்த் விட்டது.
வலம்புரிஜான், பேராசிரியர் அப்துல் சமது, மற்றும் ஆபிதீன் அவர்களுக்கு என் நன்றிகள்.
அன்புடன்
அபுவஸீமா
குவைத்