கவிஞர் இதயதாசன்

‘மீரா ஒரு கவிஞர். ஆனால் கவிதைகளே எழுதவில்லை’ என்பார் சுப்ரமண்ய ராஜூ (நன்றி : கசடதபற) . என் ஊர்க் கவிஞர்கள் பற்றி அப்படிச் சொல்ல மாட்டேன். ஒரு வரியும் எழுதாவிட்டாலும் கூட அவர்கள் ஒப்பற்ற கவிஞர்கள்தான்! ஏதும் எழுதாத நானே எழுத்தாளனாகி விடவில்லையா,  அப்படி 🙂

ஊர்ப்பற்று வாழ்க!

– ஆபிதீன் –

***

இதயதாசன்

சமூக நல்லிணக்கத்திற்கு  பாடுபடும் கவிஞர் இதயதாசனின் இயற்பெயர் S.M.A. காசிம் மரைக்காயர். பிறந்தநாள் 10.9.1954. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து கிளைத்த தமிழ்ப்பற்று. இதுவரை எழுதிய பாடல்கள் 10000 த்திற்கும் மேல் என்கிறார். அவைகளில் பெரும்பாலானவை சோபனப் பாடல்கள், பைத்து சபா பாடல்கள். E.M, ஹனீ·பாவைத் தவிர எல்லா இஸ்லாமியப் பாடர்களுக்கும் பாடல் எழுதியிருக்கிறார். எழுதிய நூற்கள் : நாகூர் மீரானின் காரண வரலாறு, இசுலாமிய இசையமுதம், அஜ்மீர் ஹாஜா, ஆரிபு நாயக பாமாலை, வசந்த காலம், நோன்பின் மாண்பு, ரமலான் சிறப்பு, அறுவடைக் காலம். ‘பார் போற்றும் ஆலயம் – நாகூர் தர்கா’ என்ற சிறப்புக் கட்டுரை மாலைமலர் நாளிதழில் சுமார் 3 மாதங்கள் வெளியானது. திருச்சி/காரை வானொலியில் சிலமுறை உரையாற்றியிருக்கிறார். பட்டிமன்றம் கவியரங்கம் பல கண்டதுண்டு.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக நூல் திரட்டுக் குழு உறுப்பினராகவும், நாகூர் தர்கா ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், நாகை வட்ட இளம் எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். தற்போது நாகூர் தமிழ்ச்சங்க மக்கள் தொடர்பு செயலாளராகவும், நாகூர் காவல் சரக வி.வி.சி  கமாண்டர் மாவட்ட இலக்கிய அணியின் துணைச் செயலாளராகவும் இருக்கிறார்.

‘பாய்மரக் கப்பல்’ என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுதியிருக்கிறார். (எனவே) படம் வெளிவரவில்லை!. அடைப்புக்குறியை உபயோகிக்க அனுமதி தந்தமை இவரின் ஹாஸ்ய உணர்வுக்குச் சான்று!

குலாம் காதர் நாவலரின் மகனார் வா.கு. ஆரிபு நாவலர் அவர்களிடமும் அவர்களின் மகனார் வா.கு.மு. குலாம் ஹூசைன் நாவலர் அவர்களிடம் பாடம் பயின்றவர். நாகூர் தர்கா பீர்ஜமாவின் ஆஸ்தான கவிஞர் , இன்றளவும். இசை வழியில் , நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்களிடம் வர்ணம் வரை சங்கீதப் பயிற்சி. கூடவே பகுதாது நானா அவர்களிடம் குஸ்தியும் பயின்றிருக்கிறது இந்தக் ‘கவிப்புயல்’. பேரறிஞர் அண்ணாவிடம் 1967ல் வில்லியம் பேனா பரிசு பெற்றதையும், ‘புலவர் கோட்டை’ என்று தன் ஊர்ப் பெயரை குறிப்பிட்டிருந்ததற்காக ஜஸ்டிஸ் இஸ்மாயில் அவர்களிடம் 1979ம் வருடம் பாராட்டு பெற்றதையும் மறக்க இயலாத ‘புயலின்’ ஒரு பாடல் இங்கே :

க(¡)ட்சிகள்
————
நால்வர் சேர்ந்தால் ஒரு கட்சி
நத்தைகள் போல உருவாச்சு
நண்டு சொண்டு இதுகளெல்லாம்
நாலா புறமும் வந்தாச்சு…!

வட்டம் நகரம் ஒன்றியங்கள்
வகையாய் பிரித்து வைத்தாச்சு
மாவட்டம் தோறும் மாநாடு
நடத்திட உண்டியல் எடுத்தாச்சு…!

கொடிகள் தோரணம் கட்டவ்ட்டு
கோஷங்கள் போட்டு வீதியிலே
போக்கு வரத்தைத் தான் தடுத்து
போகுது பாரு ஊர்வலங்கள்..!

எத்தனை நிறங்கள் கொடிகளிலே
எண்ணிப் பார்க்க முடியவில்லை
எத்தனை அணிகள் இவைக்குள்ளே
எல்லாம் பதவியின் தாக்கங்களே…!

மாணவர்க்கென்று ஒரு அணியும்
மகளிர்க்கென்று ஒரு அணியும்
மீனவர்க்கென்று ஒரு அணியும் – விவ
சாயத்திற்கென்று ஒரு அணியும்

இளைஞர்க்கென்று ஒரு அணியும்
இலக்கியம் பேச ஒரு அணியும்
தொழிலா ளர்அணியும் உண்டாமே
தொண்டர் அணியும் உண்டாமே…!

வக்கீல் மருத்துவர் அணிகளுடன்
வகை வகையாக பல முடிச்சு
சட்டை வேட்டையில் கரையிருக்கும்
சமூக அக்கறை இருக்காது…!

***

‘மகசூல் பெருக்கிய மாநபி உம்மத்
மாநிலமெங்கும் மாண்பினைக் கண்டது’ என்று ‘பன்முகப் பெருமான்’ஐப் பாடும் இவருடைய மற்ற பாடல்கள், இன்ஷா அல்லாஹ், விரைவில் !

3 பின்னூட்டங்கள்

 1. nagoreismail said,

  24/06/2008 இல் 09:26

  நாகூரின் எழுத்தாளர்களை வலைதளங்களில் அறிமுகப்படுத்திய பெருமை தங்களுக்கே சேரும். நம்ம ஊர்ல நகைச்சுவை நாடகங்கள் ‘ஆவு கெச்சேனோ’ என்று நினைக்கிறேன், அது பற்றியெல்லாம் எழுதுவீர்களா?

 2. abdulqaiyum said,

  08/12/2008 இல் 22:56

  மாணவப் பருவத்தில், வீடியோ கேமரா வந்த புதிதில் நண்பர்களை வைத்து ஒரு நகைச்சுவை குறும்படம் எடுத்தால் என்ன என்ற ஒரு விபரீத எண்ணம் தோன்றியது.

  நாகூர் கடற்கரைக்கு போகும் வழியில் நண்பர்கள் நாங்கள் உட்கார்ந்து அரட்டை அடிப்பதற்காக ஒரு குடில் ஒன்று எங்களுக்கு வாய்த்தது (உபயம் நண்பர் சின்ன காமில் சாபு).

  அப்பாதையில் செல்லும் பெண்கள் ஆச்சரியத்துடன் இக்குடிலைப் பார்த்து “ஆவுக்கெச்சேனோ’ அன்று ஆச்சரியம் தொனிக்க சொல்லுவதுண்டு. அன்றிலிருந்து இந்த ஓலைக் குடிசைக்கு ‘ஆவுக்கெச்சோனோ’ என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது.

  குறும்படம் எடுக்கும் எண்ணத்தை போட்டோகிராபர் மர்ஹூம் சேத்தான் அவர்களிடம் நான் சொன்னபோது சம்மதம் தெரிவித்தார். இரண்டே நாட்களில் ‘ஆவியுலக ஆராய்ச்சி’ என்ற நகைச்சுவை நாடகத்தை நாகூர் பேச்சிலேயே தயார் செய்தேன்.

  படப்பிடிப்பு ‘ஆவுக்கெச்சேனோ’ விலேயே நடந்ததால் இதற்கு “ஆவுக்கெச்சேனோவில் ஆவியுலக ஆராய்ச்சி’ என்று தலைப்பு கொடுத்திருந்தேன்.

  காந்திஜி, கட்டபொம்மன், கம்பன், திருவள்ளுவர், இவர்கள் யாவரும் திரும்ப பூமிக்கு வந்தால் அதுவும் நாகூருக்கு வந்தால் எப்படி இருக்கும் என்ற ‘பேத்தனமான’ (பேத்தனம் derived from the word பேயன்தனம் which means முட்டாள்தனம்) கற்பனை.

  ஆராய்ச்சியாளராக நகுதா, காந்திஜியாக சின்ன காமில், கட்டமொம்மனாக அடியேன் மற்றும் ஏனைய நண்பர்கள் கலாய்த்திருந்தோம். கதை, வசனம், இயக்கம் அடியேன்தான். கேமரா இயக்கம் சேத்தான் அவர்கள்.

  காந்திஜி நாகூர் பாஷை பேச சிரிப்பை வரவழைத்தது. நண்பர்கள் நாங்கள் பார்த்து மகிழ எடுத்த இந்தப் படம் எப்படியோ நழுவி மரைக்கார் டிரான்ஸ்போர்ட் பஸ்ஸில் எல்லாம் போட ஆரம்பித்து விட்டார்கள். (கஷ்டகாலம்). போதாத குறைக்கு விட்டலாச்சார்யா பணியில் ‘கேமரா ட்ரிக்’ வேறு.

  ஹூ…ம் அது ஒரு நிலாக்காலம். நினைவுகளைக் கிள்ளிய இஸ்மாயீலுக்கு நன்றி.

  அப்துல் கையூம் – பஹ்ரைன்

 3. அனாமதேய said,

  18/07/2016 இல் 04:21

  மறைந்தாலும் மறக்கமுடியுமா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s