நான்தான் அந்த ‘நாகூரி’ – அப்துல் கையும்

qaiyum.jpg

‘பஹ்ரைனில் வாழும் சகோதரர் அப்துல் கையும் ‘அந்த நாள் ஞாபகம்’ என்ற நூலையும் ‘போன்சாய் – குட்டிக் கவிதைகள்’ என்ற புதுக்கவிதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். ‘நாகூரி’ என்ற புனைபெயரில் நாகூர் பிஸாது கிளப்-ஐ முன்பு கலக்கியவர் இவர்தான். இவரை வைத்துதான் எனது ‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதை உருவானது.

‘அந்த நாள் ஞாபகம்’ பற்றிய ‘சமரசம்’ மதிப்புரை இங்கே

‘அந்த நாள் ஞாபகம்’ நூலைப் பற்றி ‘இது ஒரு புதுவகை தலபுராணம். ஊரும் மக்களும் வாழ்வும் வரலாறும் பொய்முகம் காட்டாமல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிற விந்தை இதனுள் நிகழ்ந்துள்ளது’ என்கிறார் ஈரோடு தமிழன்பன்.

– ஆபிதீன் –

‘நாகூரி’ அப்துல் கையுமின் வலைப்பக்கம்

***

 

நான்தான் அந்த ‘நாகூரி’ – அப்துல் கையும்

ஆபிதீனின் “நாங்கோரி என்ற உறுப்பினர்” கதையை திண்ணையில் நான் படிக்க நேர்ந்தது. யார் வீட்டுத் திண்ணை? என்று எசகுபிசகாய் கேட்டுத் தொலைக்காதீர்கள். அப்படி கேட்பீர்களானால் நீங்கள் ஹைதர் காலத்து ஆள் என்று முடிவுக் கட்டி விடுவார்கள்.

நம்மையும் பின்லேடன் ரேஞ்சுக்கு ஆளுக்காளு இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று புலன் விசாரணையில் தெரிய வந்தபோது என் ஐம்புலன்களும் சற்று உறைந்துப் போனது. நாகூர் பாஷையில் புலம்புவதென்றால் ஒரே சொளேர்ப்பாக இருந்தது.

எத்தனை வருஷங்கள்தான் இந்த சிதம்பர ரகசியத்தை ரகசியம் பரம ரகசியமாக பொத்தி பொத்தி வைப்பது? முழுக்க முழுக்க நனைந்தப் பின்னே முக்காடு எதற்கு?

‘நான்தான் அந்த நாகூரி’ என்ற உண்மையை இப்பொழுதாவது போட்டு உடைத்து விடலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தே விட்டேன்.

திண்ணையில் எழுதிய எங்க ஊர் பாட்டுக்காரன் ஆபிதீனை என் பள்ளiப் பருவத்தின்போது அறிந்திருக்கிறேன். என்னையும் அவருக்குத் தெரியும் (என் இயற்பெயரில் மட்டும்தான்) வட்டமான முகம். கண்ணதாசன் போன்று ஆஜானுபாகுவான சரீரம். நல்ல சாரீரமும் கூட. சுமார் இரண்டரை மாமாங்கத்திற்கு முன் அவரை என் நண்பன் ரபியின் தோழமையில் கண்டு அளவளாவியிருக்கிறேன்.

கி.ஆ.பெ. வுக்கு ‘முத்தமிழ்க் காவலர்’ என்று பட்டம் சூட்டியதைப் போல் இவரையும் யாராவது ‘முக்கலை காவலர்’ என்று பட்டயம் ஏதாவது கொடுத்து கௌரவித்திருக்கலாம். குறைந்த பட்சம் நாகூர்க்காரர்களுக்கு கைவந்த கலையான பட்டப்பெயரையாவது சூட்டி மகிழ்ந்திருக்கலாம்.

நமக்கு ஒரு கலையே உருப்படியாக வராத போது இவர் ஓவியக்கலை, எழுத்துக்கலை, பாடற்கலை என்று மூன்று கலைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறாரே என்று நினைக்கையில் பொறாமையாக இருக்கும். அடிவயிற்றில் எங்கேயோ பொசுங்குவதுபோல் ஒரு துர்நாற்றம் கிளம்பும். (இணையத்தில் படித்த கடிஜோக் நினைவுக்கு வந்தது. ஷார்ட் சர்க்யூட்டுக்கும், பொறாமைக்கும்  என்ன ஒற்றுமை? இரண்டிலுமே வயர் எரியும்.)

இவர்கள் தேடிக்கொண்டிருக்கும் “நாகூரி” நான்தான் என்று என் நெருங்கிய தோழமை வட்டாரத்துக்கு கூட இதுநாள்வரை என்னை அடையாளம் காட்டிக் கொண்டதில்லை. அதற்கான வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அவ்வளவுதான்.

இவர்களைப் பார்த்து “ஏங்கனி பே துப்பா புனைப்பெயர் வச்சிக்கிறது ஒரு தப்பா?” – என்று புலம்பத் தோன்றியது.

“ஊரில் சர்ச்சில் மாமா, காலரா மாமா, கவர்னர் மாமா என்று எல்லா பெருசுகளுக்கும் பட்டப்பெயர் வைக்கிறீங்களே,… எனக்கு நானே ஒரு புனைப்பெயரை ஜாலியாக வைத்துக் கொள்வது ஒரு கிரிமினல் குற்றமா?” என்றெல்லாம் இவர்கள் மீது கேள்விக்கணைகளை தொடுக்க நினத்தது மனம்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஸ்டைலில் சுருட்டு குடித்துக் கொண்டிருந்ததால் ஒரு பெரியவருக்கு ‘சர்ச்சில் மாமா’ என்று பெயர்.

காலரா மாமா என்று பெயர் வந்த காரணம், மாமா காலரா ஜுரத்தில்  அடிப்பட்டு மீண்டு வந்திருப்பாரோ என்றுதான் நினைத்திருந்தேன். அப்பமுறம்தான் உண்மை தெரிந்தது. அவருடைய காலை கூட்ட நெரிசலில் யாரோ ஒருவர் மிதித்துத் தொலைக்க, “அடேய் கால்ரா.. என் கால்ரா” என்று வீல் வீல் என நரம்பு புடைக்க மாமா கத்த, அவருடைய பெயர் கால்ரா மாமா, காலரா மாமா என்று நிலைத்துப் போய்  விட்டது. இதே போன்று ஒரு ஜோக் சமீபத்தில் தமிழ்ப்படத்தில் வெளிவந்தபோது நாகூர்க்காரர் யாராவது கதைவசனம் எழுதியிருப்பாரோ என்று சந்தேகிக்கத் தோன்றியது.

நாகூர்க்காரர்கள் சினிமாத்துறையில் கதை வசனகர்த்தாக்களாக வலம் வந்தது ஒன்றும் புதியதல்லவே? ரவீந்தர், தூயவன் என்று பலரை உதாரணம் காட்டலாம். நாடோடி மன்னனில் வரும் “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என்ற புகழ் பெற்ற வசனம் ரவீந்தருடையதுதான். (இந்தப் படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அப்படியே நாகூர் பெண் எழுத்தாளர் சித்தி ஜுனைதா அவர்களது ‘காதலா, கடமையா?’ நாவலில் இருந்து ‘சுட்டது’ என்பது அது ஒரு தனி சர்ச்சை)

சரி. விஷயத்திற்கு வருவோம். ஆபிதீனின் கதையில் “நாகூரி” என்ற  என் புனைப்பெயரையை உருமாற்றி “நாங்கோரி” என்றாக்கி விட்டார். போயும் போயும் நம்மை மீங்கோரியோடு ஒப்பீடு செய்துவிட்டாரே என்று நினைத்த போது ஒரே வருத்தமாக இருந்தது. ஒருவேளை மீங்கோரிக்கு நாங்கோரிதான் ரைமிங் என்று அவர் முடிவு செய்திருக்கலாம். கதைக்கு நடுநடுவே  மம்காசிம் மாமா முதற்கொண்டு கரிப்பொட்டி மாப்புள, குண்டபீங்கான், குண்டாச்சோறு எல்லோரையும் போட்டு வறுவறுவென்று வறுத்து விட்டு மறுபடியும் தலைப்புக்கே வருகிறேன் என்று சொல்லி நம்மையும் வறுத்தெடுத்ததில் வதக்கிய வெங்காயமாய் பொன்முறுவலாகிப் போனேன்.

“நீ எழுத்தாளனாக வேண்டுமானால் நீ என்னென்ன எழுத நினைக்கிறியோ அதையெல்லாம் முதலில் குறிப்பு எடுத்துக்கொள். பிறகு எதையெல்லாம் மிக முக்கியமாக நினைக்கிறாயோ அதனை மட்டும் வடிகட்டி எழுது.” இது என் பள்ளி ஆசிரியர் படைப்பாளி ஆவதற்கு எனக்கு பக்குவமாக அளித்த டிப்ஸ்.

ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு எழுத உட்கார்ந்தப்பின் என்னென்ன சிந்தனைகள் உதிக்கின்றதோ அவை எல்லாவற்றையும் ஒன்று விடாமல், எழுதித் தள்ளி விடுவதுதான் இன்றைய புதிய அலை என்பது இப்போதுதான் இந்த ஓல்டு மாடலுக்குப் புரிந்தது.

அடச்சே……. இன்றைய நவீன எழுத்துப் புரட்சிகளையெல்லாம் புரிந்துக் கொள்ள இயலாத மரமண்டையாய் இருக்கிறோமே? என்று நொந்து நூடுல்ஸ் ஆகிப் போனேன். (ஆ.. ஊ.. என்றால் நொந்துப் போவதற்கு எல்லா நவீன எழுத்தாளர்களும் நூடுல்ஸைத்தான் உதாரணம் காட்டுகிறார்கள்.) சீத்தலை சாத்தனார் ஸ்டைலில் பால்பாயிண்ட் பேனாவால் சிறுமூளை மீது லேசாக ஒருமுறை குட்டிக் கொண்டேன். லெக்ஸஸ், மெர்ஸிடீஸ், பி.எம்.டபிள்யூ கூட்டத்தில் அணிவகுத்து நிற்கின்ற பழைய மாடல் அம்பாஸிடர் கார் போல எனக்கொரு குற்ற உணர்வு.

நாட்டு நடப்புகளை புரிந்துக் கொள்ளாமல் இன்னும் மு.வ.வின் ‘கரித்துண்டு’ நாவலையும் கல்கியின் ‘பொன்னியின் செல்வனை‘ மட்டுமே மேய்ந்துக் கொண்டிருக்கும் என்னை நினைத்து எனக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேமாக இருந்தது.

பட்டதையெல்லாம் பட்டவர்த்தனமாக எழுதுவதுதான் நவீனம் என்று ஆனபோது நாமும் இதே பாணியில் எழுதினால் என்ன?… முயன்று பார்த்தேன். அலைமோதுகின்ற எண்ணங்கள் யாவையும் அப்படியே வடிகட்டாமல் இறக்கி வைப்பது எளிதாகத்தான் இருந்தது. சென்ஸார் செய்து காலம் விரயம் ஆக்குகின்ற பேச்சுக்கே இடமில்லை பாருங்கள்.

ஒளiவு மறைவு இல்லாமல் யதார்த்தமான பாணியில் எழுதும் நாகூர் ரூமி போன்றவர்களுடைய எழுத்துக்கள் வாசகர்களிடையே வரவேற்பு பெற்றிருப்பதைப் பார்த்தால் “Do in Rome as Romans do” – என்பார்களே அது போல நாமும் மாறுவதுதான் புத்திசாலித்தனம் என்று தோன்றியது.

இதே பழமொழியை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எங்க ஊரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீனிடம் கூறியபோது “எனக்கு இந்த பழமொழி மீது உடன்பாடில்லை” என்றார். அதற்கு அவர் தந்த விளக்கம் சற்று வித்தியாசமாகவே இருந்தது.

“நபிகள் நாயகம் அவர்களது காலத்தில் மக்க மாநகரத்து மக்கள் முன்னோர்களை சிலையாக வடித்து வழிப்பட்டார்கள், மழைக்கு வேண்டி மாட்டின் வாலில் தீ வைத்தார்கள், பெண்சிசுவை மண்ணோடு மண்ணாக புதைத்தார்கள். ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்ற கொள்கையில் அவர்கள் அன்று காலத்தை தள்ளiயிருந்தார்களேயானால் இன்றைக்கு இஸ்லாம் என்ற அழகிய மார்க்கம் இந்த சந்ததியினருக்கு எட்டியிருக்காது”  என்றார். உண்மைதானே?

பைபாஸ் ரோட்டிலிருந்து மறுபடியும் NH-45 ரோட்டுக்கு வருவதைப் போல ஆபிதீன் விஷயத்துக்கு மீண்டும் வருவோம். என்னை பெர்னாட் ஷா ரேஞ்சுக்கு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளiவிட்டு “போயும் போயும் இவர் தன் புனைப்பெயரை நாகூர் பிஸாது கிளப்பில் வெளiயிட்டிருக்க வேண்டாம்” என்று என்னை கிண்டலடித்திருந்தார்.

“ஊரோடு ஒரு ஊரியை சேர்த்தால் அந்த ஊர்க்காரர் என்று அர்த்தம். அஜ்மீரைச் சேர்ந்தவர்  அஜ்மீரி, நாகூரைச் சேர்ந்தவர் நாகூரி. அவ்லியாக்களை நேசிப்பவர்கள்தான் அப்படி போட்டுக் கொள்வது வழக்கம்” என்று ஆபிதீன் வாதாடுகிறார்.

“அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்”. எனது பேனா நண்பர் ஒருவர், உன்னி உன்னி வர்கீஸ் என்று பெயர்.  என்ன இது இரட்டைக் கிளவியா? என்று கேட்காதீர்கள். அவர் பெயரே இப்படித்தான். பேனா நண்பர் என்றால் நீங்கள் நினைப்பதைப்போல் இல்லை. ஒருமுறை என் மோன்ட் பிளாங்க் பேனாவை சொல்லாமல் கொள்ளாமல் சுருட்டிக் கொண்டு போய் விட்டார். அன்றிலிருந்து இவரை “பேனா நண்பர்” என்று நான் அழைப்பது வழக்கம். நாகூர்க்காரர் “நாகூரி” ஆனதைப் போல் மலபாரிலிருந்து வந்த இவரை “மலபாரி” என்று எல்லோரும் அழைக்கிறார்கள். ஆபிதீன் கூற்றுப்படி பார்த்தால் இவரும் ஒரு அவுலியா நேசராக அல்லவா இருக்கவேண்டும்? இல்லையே .. அவர் சர்ச்சுக்கு அல்லவா போகிறார்?

நானும் தற்செயலாக கேள்விப்பட்டு தாறுமாறாக இந்த இணையவலையில் மாட்டிக்கொண்டவன்தான். மண்வாசனை என்னை வளைத்து இழுத்துக் கொண்டு போய் விட்டது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன். என் பலவீனமே அதுதானே?

ஊர்வம்பு பேசிக்கிட்டு இருக்கிற இவர்கள் மத்தியில் கொஞ்சம் இலக்கியத் தாகத்தை ஏற்படுத்தி நம்மூர் கலாச்சாரப் பெருமையை எடுத்துரைக்கலாமே என்று உணர்ச்சிவசப்பட்டதென்னவோ உண்மைதான். அதன் விளைவாக வீரப்பனைத் தேடி அலைந்த தேவாரம் போல் இவர்கள் என்னை ரவுண்டு கட்டி தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஹக்கா (சத்தியமாக) எனக்கு தெரியாது.

“நாகூரி”யின் இயற்பெயரை கண்டுபிடிப்பதற்கு ஏன்தான் இவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இப்படி அலையோ அலையென்று வலை வலையாக அலைந்தார்களோ எனக்குப் புரியவில்லை. என்றைக்காவது இவர்கள், கரிச்சான் குஞ்சு, சின்னக் குத்தூசி, அந்துமணி, குரங்கு குசலா இவர்களுடைய இயற்பெயர்தான் என்னவென்று சிரத்தை எடுத்து துப்பு துலக்கியிருப்பார்களா? ஊஹும்… ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியாம். ஆண்டிகளுக்கு நாகூரில் பஞ்சமா என்ன? முன்னொரு காலத்தில் ஆண்டிகள் வந்து புழங்கியதால் ஆண்டிகுளம் என்ற பெயரில் ஒரு குளமே இருக்கிறதே..?

“சில வேளையில் நீங்கள் சங்க கால எழுத்தாளர் போல் எழுதுகிறீர்கள். வேறு சில நேரத்தில் குண்டக்கா மண்டக்காவென்று நவீன எழுத்தாளரைப்போல் குசும்பாக எழுதுகிறீர்கள். உங்களை நாங்கள் எந்த லிஸ்டில்தான் சேர்ப்பது?” ஊர் நண்பர் ஒருவர் என்னிடம் இப்படி அலுத்துக் கொண்டார்.

“நீங்கள் என்னை எந்த லிஸ்டிலும் சேர்க்க வேண்டாம். நாகூர் ஜாப்தா லிஸ்டில் என் பெயர் விடுபடாமல் பார்த்துக் கொண்டால் அதுவே போதுமானது” என்று அவர் காதில் போட்டு வைத்தேன். ஊர் விருந்து விடுபட்டு   விடக்கூடாது பாருங்கள்?

சபராளிகள் (புரியும்படி சொன்னால் N.R.I’s) ஊர் மண்ணில் காலடி வைத்ததும் முதல் வேலையாக ஊர் விருந்துக்கு அழைப்புச் சொல்லும் ஆசாமிகளiடம் தங்கள் முகத்தை காண்பித்து ‘உள்ளேன் ஐயா’ என்று  வருகைப்பதிவு செய்து விடுவார்கள்.

விருந்துக்கு பஞ்சமே இல்லாத ஊர் நாகூர் என்றால் மிகையாகாது. கும்முன்னு கொலஸ்ட்ரால் எகிரியிருக்கிற மிஸ்கீனை (பிச்சைக்காரர்)  நீங்கள் இந்த ஊரில் மட்டும்தான் பார்க்க முடியும். வேறென்ன..? ஒரு வேளைக்கு இரண்டு மூன்று இடத்திலிருந்து அவனுக்கு பிரியாணியும், தாளிச்ச  சோறும் (தாளித்த சோறு – அழகான தமிழ் வார்த்தை) கிடைத்தால் அவன் என்ன பண்ணி தொலைப்பான்.

விசேஷங்களுக்கும் வைபவங்களுக்கும் இங்கு குறைச்சலே இல்லை. என் பாட்டி சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். எங்கள் வீட்டு பக்கத்தில்  இரண்டு பணக்கார சாயபுமார்கள் இருந்தார்கள். கிழக்கு வீட்டுக்காரர் ஒருவர். மேற்கு வீட்டுக்காரர் இன்னொருவர். இரண்டு பேரும் குறும்புச் சித்திரத்தில் வரும் டாமும் ஜெர்ரியும் போன்று எதிரும் புதிருமாகவே இருந்தார்கள்.

கிழக்கு வீட்டுக்காரருடைய வீட்டில் காதுக்குத்து, சுன்னத் கல்யாணம், பூப்பெய்திய விழா என்று எல்லா சுபகாரியங்களும் ஏற்கனவே தடபுடலாக செய்து முடித்தாகி விட்டது. சடங்கு சமாச்சாரங்கள் எதுவும் கைவசம் ரெடியாக இல்லை. ஏதாவது ஒரு விசேஷம் செய்தே ஆக வேண்டும். என்ன செய்யலாம்? என்று தலைமுடியை பிய்த்துக் கொண்டிருந்தபோது, நல்லவேளையாக அவர்கள் வீட்டு மாடு கன்று போட்டு விட்டது. இது போதாதா அவர்களுக்கு? பந்தல் போட்டு, வண்ண விளக்குகள் அலங்கரித்து, மைக்செட் வைத்து உறவினர்களை அழைத்து சாப்பாடு போட்டு ஒரேயடியாக ஊர் முழுக்க ரகளை பண்ணி விட்டார்கள்.

இதைப் பார்த்து எதிர் வீட்டுக்காரர்களுக்கு ஏகப்பட்ட டென்ஷன். கௌரவப் பிரச்சினையாக வேறு போய்விட்டது. அவர்களும் எல்லா சடங்கு சமாச்சாரங்களையும் செய்து முடித்து விட்டார்கள். இப்பொழுது என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தபோதுதான் அந்த நல்ல விஷயம் அவர்கள் வீட்டிலும் நடந்தது. ஆம்.. அவர்கள் வீட்டு பின்புறத்துக் கொல்லையில் தென்னைமரத்தில் தென்னம்பாளை துளிர் விட்டிருந்தது. வாவ்..சூப்பர்..  இது ஒன்று போதுமே? உடனே பேண்டு வாத்தியங்கள் முழங்கச்செய்து தென்னை மரத்துக்கு பூச்சூடி, பட்டுப் பாவாடைக் கட்டி, ஊதுவத்தி கொளுத்தி, சாம்பிராணி போட்டு மணவறை வைத்து, குறவன் குறத்தி டான்ஸ் என்று அமர்க்களப்படுத்தி ஊர்வலம் நடத்தி ஊரடங்கலாக எல்லோரையும் அழைத்து விருந்து வைத்து ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள்.

கல்யாணம் முடிந்து சில மாதத்திற்குப் புது மாப்பிள்ளைக்கு புலால் விடும் சடங்கு நடைபெறும். பெரிய பெரிய மீன்களுடன், வரிசையாக தாரை தப்பட்டை முழங்க சீர்வரிசை ஊரறிய அனுப்பி ஒரு கலக்கு கலக்கிவிடுவார்கள்.

“புலால்” அழகுத் தமிழ் வார்த்தை ஐங்குறு நுaறு என்னும் நூலில் மருதம் பற்றிய பத்தாவது பாடலில் இடம் பெறுகிறது.

பூத்தமாசுத்துப் புலாலஞ் சிறு மீன்
றண்டுமுறை யூரன் (4-5)

இப்பாடலில் புலால் என்னும் சொல்  ஆளப்பட்டுள்ளமை ஈண்டுநோக்கற்பாலது. திருவள்ளுவரும் பல இடங்களில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார்.

நாகூரில், சுபகாரியங்கள் அல்லாது ஏனைய  விருந்துகளும் ஏராளம். இறந்தவர்களுக்காக ஓதப்படும் முறையே 3-ஆம் நாள், 7-ஆம் நாள், 10-ஆம் நாள், 20-ஆம் நாள், 30-ஆம் நாள், 40-ஆம் நாள், வருஷப் பாத்திஹா என்று ஒரு வகை. அப்புறம் பூரியான் பாத்திஹா, கபரடி பாத்திஹா, கொழுக்கட்டை பாத்திஹா, ஹாஜா பாத்திஹா, றாத்தீபு, புர்தா ஷரீப் என்று இன்னொரு வகை.

மவுலூது என்ற பெயரில் தனி டிராக்கில் விருந்துபசாரங்கள் உண்டு. அதிலேயே பல்வேறு தினுசுகள் உண்டு. திண்ணை மவுலுaது வீட்டு மவுலூது, பள்ளி மவுலூது, மார்க்கெட் மவுலூது என்று பலப்பல வகைகள். கொண்ணையில், ஓலைப்பொட்டியில், குண்டாவில் வரும் சோறு கமகமவென நாசியைத் துளைக்கும். வெறுமனே சோற்றையை காலி செய்துவிட முடியும். அவ்வளவு சுவையாக இருக்கும். இப்பொழுது பார்த்தால் பாலித்தீன் பைகளiல் அடைத்து, பஞ்சத்தில் அடிப்பட்டவர்களுக்கு இலவச உணவுப்பொட்டலம் வழங்குவதைப் போல விநியோகம் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மிஸ்கீனிடமிருந்து காசு கொடுத்து குண்டாச்சோறு விலைக்கு வாங்கும் விநோதமும் இந்த ஊரில்தான் உண்டு.

குறைகள் பல இருந்தாலும் இந்த ஊருக்கென்று ஒரு தனிச்சிறப்பு இருக்கின்றது. கலை, கலாச்சாரம், உடை, பாவனை, மொழி, பழக்கவழக்கம் என்று ஒவ்வொன்றிலும் ஒரு தனித்துவம் விளங்கும். நாகூரின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இதனை எடுத்துரைக்க நான் தயங்கியதில்லை.

ஒருமுறை நாகூர் பிஸாது கிளப் என்ற இந்த இணையத்தளத்தில் நான் பிரவேசம் செய்தபோது ஒரு ஞானசூன்யம் இப்படி ஒரு கேள்வியை அந்த தளத்தில் எழுப்பியிருந்தது.

“அல்லா ஒரே ஒரு அல்லாத்தானே இருக்கிறான். வேற ஏன் நாகூர்லே தெற்குத் தெரு பள்ளிக்கு ‘ஏலுல்லா பள்ளி’-ன்னு பேரு வச்சிருக்காஹா?”

இதைப் படித்த எனக்கு கணிப்பொறி நகர்வியை (மவுசு) எடுத்து தலையில் அடித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. இந்த பள்ளியின் நுழைவாயிலிலேயே “ஏழுலெப்பை பள்ளி” என்று பெரிதாக போர்ட் வைத்திருக்கிறார்கள்.  எல்லோருக்கும் தெரிந்த விஷயம் கூட.   ஏழு லெப்பைகள் ஒன்று கூடி நிறுவிய பள்ளி இது. காலப்போக்கில் ஏழுலெப்பை பள்ளி என்பது மருவி ‘ஏலுல்லா பள்ளi’ என்று ஆகி விட்டது’ என்று விளக்கம் கொடுக்க வேண்டியதாகி விட்டது.

அதன்பின், ஊர் சம்பந்தப்பட்ட பல பிரயோஜனம் உள்ள கேள்விகளுக்கும், பிரயோஜனமில்லாத கேள்விகளுக்கும் ‘ஹாய் மதன்’ பாணியில் பதில் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டேன். அவ்வப்போது, பரவசமாக உலவிக்கொண்டிருந்த ஊர்ப்பிஸாதுகளுக்கிடையில் ஊர்பெருமைகளையும் சாக்கோடு சாக்காக எழுதி வைத்தேன்.

பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதியதை ஆபிதீன் சேகரித்து வைத்திருப்பதை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. நமக்கும் ஒரு ரசிகர் இருந்திருக்கிறார்  என்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.

இப்படியாக போய்க் கொண்டிருந்த வேளையில் யாரோ ஒரு நபர் விஷமத்தனமாக “நாகூர் தர்காவை இடிக்க வேண்டும்” என்றெல்லாம் எழுதப் போக, எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. வீட்டில் மூட்டைப்பூச்சி என்பதற்காக வீட்டையே கொளுத்தி விடுவதா? தர்காவில் சில அனாச்சாரங்கள் நடக்கிறதென்பது உண்மைதான். அதற்காக இப்படியா எழுதுவது?

ஆட்டமும் பாட்டமும் மார்க்கத்துக்கு புறம்பான விஷயங்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இறைநேசரின் பெயரைச்சொல்லி வருகின்ற பக்தர்களிடம் பணம் கறக்கின்ற அட்டகாசம் இவ்வூரில் நடக்கத்தான் செய்கிறது.

சிங்கையிலிருந்து வந்த பக்தர் ஒருவர் இறைநேசரின் அடக்கஸ்தலத்தின் மீது போர்த்துவதற்கு ஒரு பச்சைநிற போர்வையை சுமந்து வந்திருக்கிறார். உள்ளே சென்று அதனை போர்த்த ஆசைப்பட்டிருக்கிறார், அதற்கு கட்டணமாக 101 ருபாய் கேட்டு நிர்ப்பந்தம் செய்திருக்கிறார்கள். கடுப்பான பக்தர் ‘போர்வையை போர்த்துவதற்கு நான் எதற்காக உங்களுக்கு காசு தர வேண்டும்’ என்று வாதிட்டிருக்கிறார். அதற்கு அவருக்கு கிடைத்த பதில்தான் வேதனை தருவதாக இருந்திருக்கிறது.

“போங்கனி வேலையை பாத்துக்கிட்டு. எஜமான் என்ன உம்மோட போர்வை இல்லைன்னுதான் கூதல்லே நடுங்கிக்கிட்டு இருக்காஹலோ?”

இதைக் கேட்டு மனுஷன் நொந்துப்போய் போர்வையை போர்த்தாமலேயே வந்த வழியே திரும்பிப் போய் விட்டார்.

அங்கே அநியாயங்கள் நடக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக தர்காவை தரைமட்டமாக்க வேண்டும் என்று இவர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது அளவுக்கு மீறிய செயலாகவே போய்க் கொண்டிருக்கிறது. இங்கே அடக்கமாகி இருக்கும் இறைநேசர் எப்பேர்ப்பட்ட மார்க்க ஞானி என்பது இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று இஸ்லாம் மார்க்கத்தை போதித்தவரன்றோ? இவர்களது அற்புத சக்தியால் கவரப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தவர்கள் கணக்கிலடங்கா.  தனது 404 சீடர்களுடன் சீனா, பர்மா, ரங்கூன், ஜாவா, மலேசியா ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்று ஆன்மீகப் பணிகள் புரிந்தவர் இவர்.

இப்பேர்ப்பட்ட ஒரு மகானை கேவலப்படுத்தி எழுத இவர்களுக்கு என்ன துணிச்சல் இருந்திருக்கும்? என்றெல்லாம் கொதித்துப் போனேன்.

துவேஷம் பரப்பிய இந்த நபர் இணையத்தில் இதற்கு முன் எழுதியிருந்த கடிதத்ததை புரட்டிப் பார்த்தபோது மேலும் ஆத்திரமாக இருந்தது.

கண்ணதாசன் எழுதிய ‘எங்கே நிம்மதி’ என்ற பாடலில் வரும் “கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே“ என்ற வரிகளை அற்புதமான வரிகள் என்று மிகவும் சிலாக்கித்து எழுதியிருந்தார்.

அருளாளன், அன்புடையோன், கொடையாளன், நீதிமான் என்று போற்றப்படும் இறையோனை ‘கொடியவன்’ என்று பாடிச் சென்றதை பாராட்டியிருக்கும் உனக்கு நாகூர் தர்காவை இடிக்க வேண்டும் என்று சொல்ல என்ன தகுதியிருக்கிறது? என்று வெகுண்டுப் போய் எழுதியிருந்தேன்.

வெறுத்துப் போய் விட்டேன். இப்படியெல்லாம் எழுதுகிறார்களே என்று வேதனைப்பட்டு மறுபடியும் அந்த இணையத்தளத்தை எட்டிப் பார்க்க மனமே வரவில்லை. ரொம்பக்காலம் எழுதுவதையே அடியோடு நிறுத்தி விட்டேன்.  இதுதான் இந்த “நாகூரி” இணையத்தில் காணாமல் போன கதை.

ஆபிதீன் கூறியதைப்போல் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களை வாசகர்களிடம் நான் பகிர்ந்திருப்பேன். அதற்கான சூழ்நிலை  அமையவில்லை என்பதுதான் உண்மை.

மலையாள மணம் கமழ ‘சேச்சி’ என்று பெண்கள் அழைக்கப்படுவது நாகூரில் அதுவும் குறிப்பாக குஞ்சாலி மரைக்கார் தெருவில் மட்டும் ஏன்? என்பது இவர் தொடுத்துள்ள வினா.

கேரளத்துடன் நாகூருக்குண்டான தொடர்பு இன்று நேற்று உண்டானதல்ல. அந்த தெரு தாங்கியிருக்கும் குஞ்சாலி மரைக்கார் என்ற பெயரே மலையாள தேசத்தின் மாபெரும் போராட்ட வீரரின் பெயரன்றோ? முஸ்லீம்களுக்கு எதிராக அக்கிரமம் செய்த போர்ச்சுக்கீசியரை எதிர்த்து போர் செய்யுமாறு நாகூர் ஆண்டகை அவர்கள் குஞ்சாலி மரைக்காயரைத் தூண்டினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சகோதரனை காக்கா என்று விளிக்கின்ற உறவுமுறை பெயர்கூட அங்கிருந்து நமக்கு  இறக்குமதியானதுதான்.

நாகூரில் ஹுசன் குத்தூஸ் மரைக்கார் என்ற பெயர் ஹுஸ் குஸ் மரைக்கார் ஆன கதையும், முகம்மது அலி காக்கா சிதைந்து மம்லி காக்கா ஆனதும் மலையாள மொழியின் தாக்கத்தினால்தான். காரணம் கேரளத்தில் பெயரை சுருக்குவது மிகுதியாகவே காணப்பட்டது. அபுபக்கர் காக்கா “அவ்கா” ஆகியிருப்பார். முகம்மது குட்டி சுருங்கிப்போய் மம்மூட்டியாக உருமாறி இருப்பார். குஞ்சாலி என்ற பெயரே குஞ்சு + அலி = குஞ்சாலி என்று ஆனதுதானே?

தமிழகத்தை பொறுத்தவரை பிராமணர்கள்தான் இப்படி பெயரை சுருக்கி பெயரின் மகத்துவத்தையே சீரழிப்பார்கள். கிருஷ்ணமுர்த்தி கிச்சா, கிஷ்மு அல்லது ஸ்டைலாக கிரிஷ் என்றாகி இருப்பார். விஸ்வனாதன் விசு அல்லது விச்சு என்று வதங்கிப் போயிருப்பார்.  அதற்கு மாறாக ஆதி திராவிடர்கள் முழுப்பெயரை அழகாக உச்சரிப்பார்கள்.

இந்த சாதியில் எங்காவது வெங்காடாசலம் வெங்கி ஆகவோ குப்பம்மா குப்புஸ் ஆக மாறிய கதையை நாம் கேட்டிருப்போமா? அழகான பெயரின் அர்த்தங்களை கடித்துக் குதற வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில் நானும் அந்த இணையத்தில் நல்லுபதேசம் சில கூறியிருந்தேன்.

கொடிய வார்த்தைகளால் சாடும் கடும் வசைமொழிகளைப் பற்றியும் (உதாரணம் – ஒரு களிச்சல்ல போவா) கடிந்து எழுதியிருந்தேன். சில பெருசுகள் “அட நீ நல்லா இருப்பே” என்று, திட்டுகின்ற அதே தொனியிலேயே பிள்ளைகளைக் கடிந்துக் கொள்வதை நாம் காண முடியும். கடுமையான வசைமொழிகளiன் தாக்கத்தை புரிந்துக் கொண்ட அவர்கள் இப்படி ‘உஜாலா’வுக்கு மாறியிருக்கலாம்.

‘ஆவு கெச்சேனோ’ என்ற பெண்மணிகளiன் சொல்வழக்கு சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் கூறும் “ஆங்.. கெட்டேனோ?” என்ற ஆச்சரியத் தொனிதான் என்ற விஷயத்தையும் எழுதி வைத்தேன்.

இன்னும் சில காலம் இந்த இணையத்தளம் நீடித்திருந்தால் ‘செறாங்கு’ ‘சோனவ மீன்’ இவற்றுக்கெல்லாம் விளக்கம் என்னிடத்திலிருந்து கிடைத்திருக்குமே என்ற ஆபிதீனின் ஆதங்கம்  புரிகிறது.

‘செறாங்கு’ என்றால் கடலோடி என்று பொருள். ஆங்கிலத்தில் Sailor என்று கூறுவார்கள். இவர்கள் கப்பலில் பணிபுரிபவர்களாக இருந்தார்கள். உயரமான கொடிமரத்தில் கொடி ஏற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை. முக்கியமாக, தாங்கிப் பிடிக்கின்ற கயிற்றில் பக்குவமான முறையில்  விதவிதமான முடிச்சுகள் இடுவதற்கு பலத்த பயிற்சி வேண்டும். என்.சி.சி. கடற்படையில் மாணவர்கள் சேர்ந்ததும் முதல் வேலையாக அவர்களுக்கு பல மாதிரியான முடிச்சுகளை எப்படி போடுவது என்று பயிற்சி அளிப்பார்கள்.

நாகூரில் மினாராக்கள் எனப்படும் உயரமான கோபுரங்கள்  உண்டு. எந்தவிதமான கிரேன் இயந்திரங்களுமின்றி பாம்பரம் என்று அழைக்கப்படும் அந்த கொடிமரத்தை எப்படி ஏற்றுகிறார்கள் என்பது வெளியூர்க்காரர்களுக்கு விந்தையாகவே இருக்கும், இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் நாகூரில் வாழும் செறாங்கு குடும்பத்தினர். பரம்பரை பரம்பரையாக பாம்பரம் ஏற்றும் தொழிலை இவர்களே புரிந்து வருகிறார்கள். ஒற்றையாக உயரே அந்த மாடத்தில் நின்று அந்த கனமான பாம்பரத்தை இழுத்தணைத்து அந்த துளையில் பொருத்துவதென்பது சாதாரணமான காரியம் அல்ல. ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பார்களே அதுபோல செய்கின்ற சாகஸம் இது. நாகூர் தர்கா வரலாற்றில் இந்த செறாங்கு குடும்பத்திற்கென ஒரு தனியான மகத்துவம் உண்டு.

அடுத்து ‘சோனவ மீனு‘க்கு வருவோம். அரேபிய நாட்டிலிருந்து வாணிப நிமித்தம் தமிழகம் வந்தவர்களை யவனர் என்று அழைத்தனர்.

‘அடல்வாள் யவனர், கடிமதில் வாயில் காவலிற்
சிறந்த யவனர், மரக்கல யவனர்’

எனவெல்லாம் சங்க இலக்கியங்களiல் குறிப்பிடப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த இடம்

‘பயன்அறவு அறியா யவனர் இருக்கை’ என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, (சிலம்பு 5-10).

இந்த இருக்கை பூம்புகாரில் இருந்தது. பூம்புகாரின் அழிவிற்குப் பிறகு அந்த யவனர்கள் நாகூர், நாகைப் பகுதியில் இடம் பெற்றிருப்பர். பண்டைய காலத்தில் நாகூரில் சொந்தமாக கப்பல் வைத்து வணிகம் செய்த மரக்கலராயர்களும், மாலுமியார்களும், நகுதாக்களும் இருந்தனர். அரேபியாவிலிருந்து பேரீச்சை, பார்லி,  முதலியவை இறக்குமதியாகும். இங்கிருந்து மிளகுப் பொதிகளை அவை ஏற்றிச் சென்றன. இச் செய்தியை அகநானூறு

‘யவனர் தந்த வினைமாணன் கலங்கள்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’

எனக் கூறுகிறது. பொற்காசுகளைக் கொண்டு வந்து கொடுத்து மிளகு ஏற்றிச்சென்றதாக குறிப்பிடுகின்றது. (கறி என்பது மிளகைக் குறிக்கும்)

மிகப் பழமை வாய்ந்த ஒரு அரபிக் கவிதையில் இதுபோன்ற ஒரு வருணனை காணப் படுகின்றது. புறாக்கள் கூட்டமாக வந்து ஒரு கவிஞரின் வீட்டு முற்றத்தில் எச்சம் இட்டுச் செல்கின்றது. அதனை இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருண்டை வடிவமான மிளகுடன் ஒப்பிட்டு பாடுகிறார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரேபியரின் தொடர்புகளால் சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் காண முடிகிறது. தமிழ் மயமாகி இருக்கும் அச்சொற்களை அரபுச் சொற்கள் என அடையாளம் கண்டுக் கொள்ள முடியாத அளவுக்கு நம் சொல்வழக்கில் இரண்டரக் கலந்து விட்டன. அவற்றில் சில சொற்களை மட்டும் காண்போம்.

அக்கப்போர், அனாமத்து, அயன், அமினா, அல்வா, அமல், அண்டா, அத்தர், அசல், ஆசாரி, இலாகா, இனாம், ஊதுவத்தி, கசாப்பு, கச்சா, கஜானா, கம்மி, கிராக்கி, கெடுபிடி, கிஸ்தி, குத்தகை, கைதி, குமாஸ்தா, சர்க்கார், சர்பத், சலாம், சிப்பந்தி, டபேதார், தரகர், தண்டோரா, தராசு, நகல், நமூனா, பட்டுவாடா, பந்தோபஸ்து, பலே, பைசல், பேஷ், பூந்தி, மசோதா, மராமத்து, மாஜி, முகாம், மிட்டாய், ரத்து, ரஸ்தா, ராஜினாமா, வக்கீல், வக்காலத்து, வஜா, வாபஸ், வாய்தா, ஜாமீன், ஜாஸ்தி, ஜோர், ஜில்லா, ஜமீன், மைதானம், தஸ்தாவேஜ் ஆகியன.

அரபு வார்த்தைகள் சில சங்க காலத் தமிழ் இலக்கியங்களiலும் கையாளப் பட்டுள்ளது என்பதை காணும் போது நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கின்றது.

பந்தர் என்றால் அரபியில் துறைமுகம் என்று அர்த்தம். பதிற்றுப் பத்து என்ற சங்ககால நூலில்.

“இன்னிசை புணரி இரங்கும் பௌவத்து
நுங்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டையை மஹுமூது பந்தர் என்று உருது மொழி பேசுபவர்கள் குறிப்பிடுவதை இங்கு நினைவு கூறலாம்.

இப்பொழுது ‘சோனகர்’ என்ற பதத்திற்கு வருவோம். அரேபியர்களை யவனர் என்று அழைத்ததுப் போல் அவர்கள் வழி வந்த தமிழ் முஸ்லீம்களை சோனகர் என்று அழைப்பது வழக்கம். இவர்கள் கடலோரக் கரைகளiல் உள்ள ஊர்களiல் வசித்தார்கள். பெரும்பாலும் வணிகர்களாகவே இருந்தார்கள். அவர்கள் பெயரிலேயே சோனைக் கெழுத்தி, சோனைவாளை, சோனைத்திருக்கை என்ற பெயர் நிலவியது. இவ்வகை மீன்கள் அரேபியாவிலிருந்து அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம். சோனைச் சிடுக்கு என்ற சிடுக்கெடுக்கும் சீப்பும் வந்தது. மாணிக்கக் கல் பதிக்கப்பட்டிருந்தது. சோனகர் சமூகம் நவரத்தின கற்கள் வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஒருவித மரகதக்கல்லிற்கு ‘மரைக்காயர் பச்சை’ என்ற பெயரே இருக்கிறது. கடலூரில் இன்றும் ‘சோனகர் தெரு’ என்ற பெயரில் ஒரு வீதியைக் காணலாம். சோனகர்கள் பெரும்பாலும் கடலோரக்கரை ஊர்களிலேயே வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபிதீனின் சந்தேகங்களுக்கு பதிலளித்ததோடன்றி நாகூரில் புழக்கத்தில் இருக்கும் சில தொன்மை வாய்ந்த சொல்வழக்குகளை இங்கே குறிப்பிடுவதில் பெருமை அடைகின்றேன்.

“அஹ ரொம்பத்தான் அலட்டிக்கிறாஹா” இது இவ்வூர் பெண்டுகளின் வாயிலிருந்து சகஜமாய் வரும் வார்த்தைகள். அலற்றுதல் என்ற சொற்பதம் மருவி அலட்டலாகிவிட்டது.

“அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே”

என்று நம்மாழ்வாரின் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலே அலற்றுதல் என்ற வார்த்தை கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். அலற்றுதல் என்பது துaயதமிழ் வார்த்தை.

ஒரு காலத்தில் நாகூரில் ஒடுக்கத்து புதன் என்ற நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.
ஏதோ ஒரு மையினால் ஓலைச்சுவடியில் அரபி வாசகங்களை எழுதி கழுவிக் குடிக்கச் செய்வார்கள். இது சுகாதாரமா? வயிற்றில் சென்று தீங்கு விளைவிக்காதா? என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்கின்ற வயதில்லை அன்று. நானும் ஓலைச் சுவடியை கரைத்துக் குடித்திருக்கிறேன். அவன் கரைச்சு குடிச்சவன் என்ற மரபுத்தொடர் இதனால்தான் வந்ததோ என்னவோ?

ஒட்டடை அடித்து வீட்டைச் சுத்தம் செய்வார்கள். காலையில் எழுந்தவுடன் பலவூட்டு மணம் எனப்படும் சிகைக்காய் போன்ற ஒரு வஸ்துவை தலையில் தேய்த்து குளிக்க வைப்பார்கள். ‘உறட்டி’ என்று அழைக்கப்படும் ஒருவகை மொத்த ரொட்டியை சுடுவார்கள். கிழிந்துப்போன குர்ஆன் வாசக நூல்களை பத்திரமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள். அதோடு அந்த உறட்டியையும் கடலில் கரைப்பார்கள். (உணவுப் பொருட்களை வீண்விரயம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தும் ஒரு மார்க்கத்தில் இப்படி ஒரு பழக்கம் எப்படி வந்ததென்று தெரியவில்லை.)

அது ஒரு நிலாக் காலம். பள்ளiப் பருவத்து ஞாபகங்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன. அன்றைய அந்தி மயங்கும் வேளையில் கடற்கரை களைகட்டும். அங்கும் இங்கும் குவிந்திருக்கும் மணற்குன்றுகளில் இளைஞர்கள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. காளையர்கள் ஒரு பக்கம் சடுகுடு ஆடிக்கொண்டிருப்பார்கள். பலூனும் கையுமாய்  ஜவ்வு மிட்டாய் வாட்ச்சை மணிக்கட்டில் கட்டிய வண்ணம் சின்னஞ் சிறார்கள் இங்கும் அங்கும் அலைவார்கள்.  திறந்த மனற்வெளiயில் அடிக்கடைகள் முளைக்கும். சீனிமாங்கா, இலந்தைவத்தல், காண்டா, பறாட்டா உருண்டை, வாடா என்று நாகூருக்கே உரிய பிரத்யேகமான பலகாரங்கள் ஜதப்பாக (விமரிசையாக) விற்பனையாகும்.
இந்த நாளை உருதுமொழி பேசுபவர்கள் “ஆக்ரி சஹுஷம்பா” அதாவது இறுதி புதன்கிழமை என்று குறிப்பிடுவார்கள். இஸ்லாமிய மாதங்களில் ஸபர் மாதம் வரும் கடைசி புதன்கிழமை இது. இத்தகைய புதன்கிழமை ஒன்றில்தான் நபிகள் நாயகம் அவர்கள் நோய்வாய்ப்பட்டார்களாம். இத்தினத்தை கொண்டாடலாமா? வேண்டாமா? என்ற சர்ச்சைக்கு நான் வரவில்லை. இப்பொழுது இந்த கொண்டாட்டம் அறவே குறைந்துவிட்டது.

சரியோ, தவறோ, ஊர்மக்களை ஓரிடத்தில் திரட்டி, ஒரு அந்நியோந்நியம் உண்டாக்கி, அனைவரும் ஒன்று கூடி  கொண்டாடும் ஒரு சமுகத் திருவிழாவாகவே அது எனக்குத் தென்பட்டது.

ஒடுக்கத்து புதன் என்று அழைக்கப்படும் நாளில் ‘ஒடுக்கம்’ என்ற சொற்பதம் முடிவு  இன்னும் பொருளiல் சிலப்பதிகாரத்திலே மங்கல வாழ்த்துப் பாடலிலே நாம் காணலாம்.

ஒடுக்கங்கூறார் உயர்ந்தோர் உண்மையான
முடித்த கேள்வி முழுது ணர்ந்தாரே

என்று கையாளப்பட்டுள்ளது.

இதேபோன்று தைக்கால் எனப்படும் திடலிலும் ஆண்டுக்கு இரண்டொருமுறை ஊர்மக்கள் விசேஷ தினத்தன்று கூடுவார்கள். அந்த கலகலப்பு, மகிழ்ச்சி, கும்மாளம், கலந்துரையாடலுக்கு ஈடு இணையில்லை.  மனசாட்சி இல்லாத சிலர்  குடிசை போட்டு  ஆக்கிரமித்து அந்த திடல் இருந்த இடத்தையே காணமல் செய்து விட்டார்கள்.

“சாபு.. நேத்துலேந்து பச்சத் தண்ணி சொட்டு வவுத்துலே இறங்க மாட்டேங்குது. புள்ளைக்கு கொஞ்சம் நல்லா ஓதிப் பாருங்க” – இப்படி கூறுவார்கள். ஓதுதல் என்பது சமயக்கிரகந்தகளை பாராயணம் செய்து ஒப்பிப்பது என்று பொருள்.

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்”

என்ற ஒருவரி போதனை எல்லோருக்கும் அத்துப்படி.

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப்
பேதையின் பேதையர் இல்    – திருக்குறள்  (84 .4)

படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும் அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை – என்பது இதன் பொருள்.

ஆபிதீனின் கட்டுரையில் ‘துபாய் அரபி மீங்கோரியாய் வறுத்து எடுத்துக்கொண்டு இருக்கிறான்’ என்று சொல்லுகிறார், இதையே நாகூர் பாஷையில் சொல்லப்போனால் ‘போட்டு கடைஞ் எடுத்துட்டாஹா’ என்று சொல்வார்கள். கடைதல் என்னும் வார்த்தை தூய தமிழ்ச்சொல்.

‘பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்’ –

என்ற வரிகளை சிலப்பதிகாரத்தில் நாம் காணலாம்.

‘செம கூதலா இக்கிது’ என்று நாகூர்க்காரர் வாய்மலர்ந்தால், கடும் குளிராக இருக்கிறது என்று பொருள் கொள்க. நாலாயிரத்திவ்விய பிரபந்தத்திலும் கூதல் என்னும் சொல் குளிர் என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளது.

கூர்மழை போல்பனிக் கூதல் எய்திக்
கூசி நடுங்கி யமுனை யாற்றில்

மேற்கண்ட செற்றொடரில் கூதல் என்னும் சொல் இடம் பெற்றுள்ளமையைக் காணலாம்.

‘மரைக்கா ரொம்பத்தான் நொந்துப் போயிட்டாஹா’ என்று சொல்வழக்கு உங்கள் காதில் விழ நேரலாம்.

நற்றிணையில் இடம்பெற்றிருக்கும்

‘யார்க்கு நொந்துரைக்கோயானே‘ (211)

என்ற தொடரில் நொந்துதல் என்ற வார்த்தை வருந்துதல் என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது.

எங்க பக்கத்து விட்டு ஜொஹுராமா லாத்தா அடிக்கடி புலம்புவார்கள். ‘எம் புள்ளே ஹாஜி மரைக்காருக்கு அஜீஸ் சன்ஸ்லே ராஜ உடுப்பு எடுத்து போட்டுப் பார்த்து, குதிரை மேலே ஏத்தி பாக்கணும்ங்கிறது என் ரொம்ப நாளு ஹாஜத்து’ (நாட்டம், எண்ணம், குறிக்கோள்).

உடுப்பு என்னும் சொல் சங்க காலச் சொல். மணிமேகலையில்
“மணிக்கோவையுடுப்பொடு” (3. 140)

என்ற சொற்பதத்தில் காண்க. உடுப்பு  என்னும் சொல்வழக்கு வேறு ஊர்களில் பரவலாக இல்லை.

“தலைச்சன் புள்ளே நீ, ராத்திரியிலே தனியா போவக்கூடாது” என்பார்கள் என் பாட்டி. தலப்புள்ளை என்றும் சொல்வது வழக்கம். முதன் முதலாக வைக்கும் நோன்பை தல நோன்பு என்பார்கள். முதற்பிறையை தலைப்பிறை என்பார்கள்.

தலையே தவமுயன்று வாழ்தல் ஒருவர்க்கு

என்று நாலடியாரில் (37-5)வரும் வரியில் முதன்மை என்ற பொருளiல் வருகிறது.

குசும்பு எனச் சொல்லப்படும் நக்கல் நையாண்டி சிலேடைப் பேச்சுக்கு நாகூரில் சற்று அதிகம்.  ‘இவன் சரியான திருவாளியத்தன்’ என்று சொன்னால் மோசடிப் பேர்வழி என்று பொருள். “திருவாளார் எத்தன்” என்பது திருவாளியத்தன் என்று ஆனது. மிஸ்டர் எக்ஸ், மிஸ்டர் பொதுஜனம் என்று இன்றைய பத்திரிக்கைகளில் குறிப்பிடுவதுபோல் இந்த சொற்பதம் புழக்கத்தில் ஆனது. மோசடிப் பேர்வழிகளையும் எத்தனை நாசுக்காக இங்கே குறிப்பிடுகிறார்கள் பாருங்கள். இப்படிப்பட்டவர்களை எம்டன் என்று சொல்லும் வழக்கமும் இருக்கிறது. எம்டன் என்ற ஜெர்மானிய போர்க்கப்பல் உலகமகா யுத்தத்தின்போது பலத்த பாதுகாப்புக்கு இடையே சென்னை அருகே வந்து தன்னுடைய கைவரிசையை காட்டிவிட்டுப் போனது. இப்படிப்பட்ட ஜகஜ்ஜால கில்லாடியை எம்டன் என்று அழைக்கலாயினர்.

காளமேகப் புலவரையே கலாய்த்தவர்களல்லவா இfந்தப்பகுதி மக்கள். “சோறு எங்கே விக்கும்?” என்று கேட்ட அவரை “தொண்டையிலே விக்கும்” என்று ஜோக்கடித்து கலங்கடித்தவர்கள். அநேகமாக உலகிலேயே முதல் கடிஜோக் இதுவாகத்தான் இருக்கும். (கடிஜோக் பிரியர்கள் தயவுசெய்து இதனை குறித்துக்கொள்ளவும்.)

என் நண்பன் வெளiயூர் போகின்ற சமயத்திலெல்லாம் அவன் தாயார் கால்பெருவிரலில் இருக்கும் தூசுவை தன் கட்டை விரலால் தடவி மேல் நெற்றியில் தடவி வழியனுப்பி வைப்பார்கள். வெற்றித்திலகமிட்டு வழியனுப்பும் தமிழ்த்தாயை புறநானூற்றில்தான் படித்திருக்கிறேன். தமிழர் பண்பாடும் இசுலாமியக் கலாச்சாரமும் ஒன்றிணைந்த ஒரு பண்பாடு இன்றளவிலும் நாகூரில் தழைத்து வருகிறது என்றால் மிகையாகாது.

போர்ச்சுகீசியர் ஆட்சி இப்பகுதியில் கி.பி. 1500 முதல் 1658 வரை நடைபெற்றது. இந்த 158 ஆண்டுகள் இப்பகுதி மக்களுக்கு பெரும் சோதனையாகவே திகழ்ந்தது. வரலாற்றாசிரியர்கள் “போர்த்துகீசியர் கீழைக் கடற்கரையில் பல மீனவர்களைக் கொன்றனர்” என்றும் “நாகூரில் இருந்த அரங்கநாதர் கோயிலை இடித்தனர்” என்றும் எழுதி வைத்துள்ளனர்.

தூயதமிழில் “செல்லத் தங்கம்”, “முத்துத்தங்கம்” “சின்னாச்சி”, “பெத்தம்மா”, “ரோஜாப் பொண்ணு”, என்று பெண்களை செல்லப் பெயரிட்டு அழைக்கும் பழக்கம் இந்தக் காலத்தில்தான் ஏற்பட்டது.

மணிப்பிரளாத் தமிழ் என்ற பேச்சு வழக்கு நடைமுறைக்கு வந்து சமஸ்கிருத வார்த்தைகள் தமிழ் மொழியை ஆக்கிரமித்த காலத்தில் கூட நாகூர் தன் தனித்தன்மையை இழக்காத வண்ணம் சங்ககால சொல் வழக்குகளை புழக்கத்தில் வைத்திருந்தது என்பது பெருமைக்குரிய ஒரு விஷயம்.

நாகூருக்கென்று இன்னும் எத்தனையோ கலாச்சாரப் பெருமைகள் இருக்கின்றன. இவை யாவையும் சேகரித்து ஒரு நூலாக வெளியிட வேண்டுமென்பது என் நெடுநாளைய அவா. இறைவன் நாடினால் அது விரைவில் பூர்த்தியாகும்.

– நாகூரி –
(அப்துல் கையும்)
vapuchi@hotmail.com

1 பின்னூட்டம்

  1. 26/09/2007 இல் 09:25

    இன்றைக்கு பொழுது விடிந்ததற்கு ஒரு நல்ல வேலை நடந்ததது.திருவாழத்தான் என்பதற்கு ரொம்ப நாளாகப் பொருள் விளங்காமல் பயன்படுத்திக்கொன்டிருந்தேன். திருவாளர் எத்தன் எதனை அற்புதமான பொருள்.பலே பலே தொடரட்டும் தமிழ்த் தொன்டு!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s