தூயவன் (எம்.எஸ்.அக்பர்)

 thooyavan

தூயவன் — ஓர் அறிமுகம் :  நாகூர் ரூமி

***

வரலாற்றுச் சுவடுகள் — திரைப்பட வரலாறு 725 ( தினந்தந்தி 10 & 13 – 08 – 2007)

எழுத்தாளராக இருந்து பட உலகுக்கு வந்த தூயவன்

84 படங்களுக்கு வசனம் எழுதி, பட அதிபராக உயர்ந்தார்

பல வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினிகாந்த் உள்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர்.

திரையுலகில் புகுந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தோல்வியைத்தான் தழுவினர். வெற்றி பெற்ற சில எழுத்தாளர்களில் ஒருவர் தூயவன்.

இவர் நாகூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் எம்.எஸ்.அக்பர். இவருடைய தந்தை ஷாஹ் ஒலியுல்லாஹ். அந்தக் காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. பட்டம் பெற்று, தஞ்சையில் ரெஜிஸ்திராராகப் பணியாற்றியவர். தாயார் பெயர் ஜொஹரான்.

ஒரே மகன்

ஐந்து பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஆண் வாரிசு என்ற முறையில் தூயவன் மீது பெற்றோர் மிகுந்த அன்பு செலுத்தினர்.

தூயவன் பள்ளி இறுதி வகுப்புவரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார் தூயவன். நாகூர் இலக்கியவாதிகள் மிகுந்த ஊர். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் என்ற ஆன்மிக இலக்கியவாதியின் தொடர்பு கிடைத்ததால் தூயவனால் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடிந்தது.

தினத்தந்தி, ராணி, ஆனந்த விகடன், தினமணி கதிர் உள்பட பல பத்திரிக்கைகளில் தூயவனின் கதைகள் பிரசுரமாகி வந்தன.

முத்திரைக்கதை

1967-ம் ண்டில் ஆனந்த விகடன் அதன் முத்திரைக் கதைகளுக்கு வழங்கி வந்த நூறு ரூபாய் பரிசுத்தொகையை 500 ரூபாயாக உயர்த்தியது.

தூயவன் எழுதிய ‘உயர்ந்த பீடம்’ என்ற கதை 500 ரூபாய் பரிசு பெற்ற முதல் முத்திரைக்கதையாகும். இதனால் தமிழ் நாடு முழுவதும் புகழ் பெற்ற எழுத்தாளரானார்.

அது டெலிவிஷன் இல்லாத காலம். மேடை நாடகங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தன. மேஜர் சுந்தரராஜன் மேடையிலும் சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கினார்.

தூயவன் சென்னை சென்று, மேஜர் சுந்தரராஜனை சந்தித்தார். தன்னை ஒரு எழுத்தாளர் என்று மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டு கதை வசனம் எழுதும் வாய்ப்புக் கேட்டார்.

உடனே மேஜர், “நீங்களெல்லாம் என்னப்பா எழுதுகிறீர்கள்? ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத்தாளர் முத்திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை என்றால் அப்படி எழுத வேண்டும்! என்ன நடை ! என்ன எழுத்து!” என்றார்.

அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தூயவன், ‘நீங்கள் பாராட்டுகின்ற அந்தக் கதையை எழுதிய தூயவன் நான்தான்” என்று நிதானமாகக் கூறினார்.

மலைத்துப் போய்விட்டார் மேஜர். பிறகு தூயவனை உள்ளே அழைத்துச் சென்று, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தார். மேடை நாடகங்கள் எழுதும் வாய்ப்பை அளித்தார்.

மேஜருக்காக “தீர்ப்பு” என்ற நாடகத்தை எழுதிக்கொடுத்தார் தூயவன். இதே சமயத்தில் ஏவி.எம்.ராஜனும் தூயவனுடன் தொடர்பு கொண்டு நாடகம் கேட்டார். அவருக்காக தூயவன் எழுதிய நாடகம் “பால்குடம்”. இந்த நாடகம்தான் முதலில் அரங்கேறியது.

எம்.ஜி.ஆர்.

“தீர்ப்பு” நாடகத்தின் 100-வது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். “நாடகம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்து சமய கோட்பாடுகளில் எவ்வித பிழையும் நேரிடாமல் மிகவும் நுட்பமாக ஆராய்ந்து நாடகத்தை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் என்பது ஆச்சரியமான விஷயம்” என்று எம்.ஜி.ஆர். பாராட்டிப் பேசி, தூயவனுக்கு கெடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

“பால்குடம்” நாடகமும் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. அப்போதுதான் சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் இந்த நாடகத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு தூயவனுக்கு பரிசு வழங்கினார்.

திருமணம்

இந்த சமயத்தில் தூயவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். தனக்கு மனைவியாக வரும் பெண், இலக்கியத் துறையைச் சேர்ந்தவளாக, எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தூயவன் விரும்பினார்.

தினமணி கதிர் வார இதழ் ஆசிரியராக ‘சாவி’ இருந்த நேரம் அது. தூயவன் எழுதிய ‘சிவப்பு ரோஜா’ என்ற கதை பரிசுக்கதையாக அதில் பிரசுரமாகியிருந்தது. அதே இதழில் செல்வி என்ற பெண் எழுத்தாளர் எழுதிய கதையும் பிரசுரமாகியிருந்தது.

செல்வி என்ற புனைபெயரில் அந்தக் கதையை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதும், அவர் பெயர் கே.ஜெய்புன்னிசா என்பதும் தூயவனுக்குத் தெரிய வந்தது. உடனே தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். தூயவனின் தாயார், பெரியம்மா, அக்கா, மாமா ஆகியோர் கோவைக்குச் சென்று பெண்ணைப் பார்த்தார்கள்.

இரு தரப்பினருக்கும் பிடித்துப் போகவே, தூயவன் என்கிற எம்.எஸ்.அக்பருக்கும் ஜெய்புன்னிசாவுக்கும் 27 – 09 – 1968-ல் கோவையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, மேஜர் சுந்தர ராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர். திருமணம் நடந்த வேளை பட வாய்ப்புகள் தூயவனைத் தேடி வந்தன.

கல்யாணப் பேச்சு நடந்துகொண்டிருந்தபோதே இரண்டு பெரிய படக்கம்பனிகள் அவரை அணுகி “பால்குடம்” கதையைப் படமாக்கும் உரிமையைக் கேட்டன. பெரிய தொகை தரவும் முன்வந்தன.

அதேசமயம், “பால்குடம்” கதையைப் படமாக்க வேண்டும் என்ற எண்ணம், அதை நாடகமாக்கி நடத்தி வந்த ஏவி.எம்.ராஜனுக்கும் இருந்தது. எனவே பெரிய தொகைக்கு ஆசைப்படாமல், தன் கதையை நாடகமாக அரங்கேற்றிய நன்றிக்கு அறிகுறியாக, படமாக்கும் உரிமையை ஏவி.எம்.ராஜனுக்கே தூயவன் தந்தார்.

வாய்ப்புகள் குவிந்தன

பால்குடத்தை ஏவி.எம்.ராஜன் படமாகத் தயாரித்தபோது வசனம் எழுதும் வாய்ப்பை தூயவனுக்கே வழங்கினார். படத்தில் ஏவி.எம்.ராஜனும் புஷ்பலதாவும் நடித்தனர். இந்தப் படம் 50 நாட்கள் ஓடியது.

கதை எழுதுவதில் மட்டுமல்ல, வசனம் எழுதுவதிலும் தூயவன் கெட்டிக்காரர் என்பதை பட உலகத்தினர் தெரிந்து கொண்டனர். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஜெய்சங்கர், ஜெயபாரதி நடித்த “புதிய வாழ்க்கை”, சிவாஜி கணேசன் நடித்த “மனிதருள் மாணிக்கம்”, ஜெயலலிதா, முத்துராமன் நடித்த “திக்குத் தெரியாத காட்டில்” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.

அந்தக் காலகட்டத்தில் ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் பலவற்றில் ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படங்கள் வந்துகொண்டிருந்தன. அவர் படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். முடிசூடா மன்னன், கல்யாணமாம் கல்யாணம், எங்களுக்கும் காலம் வரும், கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன ஆகியவை அவற்றில் சில.

தேவர் அழைப்பு

தன் படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதுமாறு தூயவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவர் அழைப்பு அனுப்பினார். அதைத் தொடர்ந்து “கோமாத என் குலமாதா”, “மாணவன்”, “ஆட்டுக்கார அலமேலு”, “அன்புக்கு நான் அடிமை”, ரஜினி காந்த் நடித்த “தாய் மீது சத்தியம்”, “தாய்வீடு”, “அன்னை ஓர் ஆலயம்” முதலான படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். இந்தப் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின.

முக்தா பிலிம்ஸ், மறைந்த வேணு செட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் கியவற்றுக்காக பல படங்களுக்கு வசனம் எழுதினார். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த “தவப்புதல்வன்” படம் 100 நாள் ஓடி வசனகர்த்தா தூயவனுக்கு புகழ் தேடித்தந்தது. ரஜினிகாந்த் நடித்த “பொல்லாதவன்” படத்துக்கும் தூயவன் வசனம் எழுதினார்.

ஜாவர் சீதாராமன் எழுதிய ‘பணம், பெண், பாசம்’ என்ற கதையை நடிகர் முத்துராமன் படமாகத் தயாரித்தார். அந்தப் படத்துக்கு தூயவன் வசனம் எழுதினார். நடிகர் முத்துராமன் தூயவனின் நெருங்கிய நண்பர். படப்பிடிப்புக்காக அவர் ஊட்டிக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மரணமடைந்தார்.

இதேபோல, தூயவனுக்கு ஆதரவு அளித்து வந்த சின்னப்பா தேவரும் திடீரென்று காலமானார். இந்த இரு மரணங்களும் தூயவனை வெகுவாக பாதித்தன. இதன் பிறகு வசனம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு படத்தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

நண்பர் சக்திவேலுடன் இணைந்து எஸ்.டி.கம்பைன்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி விடியும் வரை காத்திரு என்ற படத்தைத் தயாரித்தார். இதன் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றதுடன் கதாநாயகனாகவும் நடித்தார்.

நகைச்சுவை கலந்த கதாநாயகனாக பாக்கியராஜ் முத்திரை பதித்து வந்த காலகட்டத்தில் ஆன்ட்டி ஹீரோவாக — அதாவது வில்லன் மாதிரியான கதா பாத்திரத்தில் – விடியும் வரை காத்திரு படத்தில் நடித்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால் படம் சுமாராகவே ஓடியது.

கார்த்திக் கதாநாயகனாக நடித்த கேள்வியும் நானே பதிலும் நானே படத்தை தூயவன் தயாரித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை.

அன்புள்ள ரஜினிகாந்த்

எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த காலகட்டத்தில் அவருக்காகவே ஒரு கதையைத் தயாரித்து வைத்திருந்தார் தூயவன். அந்தக் கதை எம்.ஜி.ஆருக்கும் பிடித்திருந்தது. அவர் தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆகிவிட்டதால், அதன் பிறகு நடிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டார்.

அந்தக் கதையை ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்து அவரிடம் சொன்னார் தூயவன். கதை அவருக்குப் பிடித்துப் போயிற்று. படம் எடுங்கள், நான் கால்ஷீட் தருகிறேன் என்றார்.

அந்தப் படம்தான் அன்புள்ள ரஜினிகாந்த். எஸ்.டி.கம்பைன்ஸ் பேனரில் தூயவனும் துர்க்கா தமிழ் மணியும் தயாரித்தனர். தூயவன் வசனம் எழுதினார். நடராஜ் டைரக்ட் செய்தார். 1984-ம் ண்டு ஆகஸ்டு 2-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இது குறித்து தூயவன் மனைவி ஜெய்புன்னிசா கூறியதாவது:

ரஜினி சார் நடித்த தாய்வீடு, அன்னை ஓர் லயம், அன்புக்கு நான் அடிமை, ரங்கா முதலிய படங்களுக்கு என் கணவர் வசனம் எழுதினார். அப்போது இருவரும் நட்புடன் பழகினர். என் கணவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஒரு படம் பண்ணிக் கொடுக்க சூப்பர் ஸ்டார் சம்மதித்தார். அப்போது என் கணவர் சொன்ன கதைதான் அன்புள்ள ரஜினி காந்த்.

கதை ரஜினிக்கு பிடித்துவிட்டது. பண விஷயம் பற்றி எந்த ஒரு நிபந்தனையையும் விதிக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்தார். படம் தயாரிக்க பணம் வேண்டுமே என்ற கேள்வி எழுந்தபோது, ஜி.வி.ஆர்.நடராஜன் என்ற பைனான்சியரிடம் என் கணவரை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.

உடனடியாக நடராஜன், பட உரிமையை வாங்கிக்கொண்டு ரூ 25 லட்சம் கொடுத்தார். கணபதி வேல்முருகன் கம்பைன்ஸ் என்ற பேனரில் அன்புள்ள ரஜினிகாந்த் தயாரானது. ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்தார். இப்படம் 100 நாட்கள் ஓடியது. சூப்பர் ஸ்டார் ரஜினி சார் செய்த உதவியை எங்கள் குடும்பம் என்றும் மறக்காது.

வைதேகி காத்திருந்தாள்

ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் தூயவன் தயாரித்த வைதேகி காத்திருந்தாள் அற்புதமான படம். இதில் அடிதடி இல்லாத குணசித்திர வேடத்தில் விஜயகாந்த் வாழ்ந்து காட்டினார். விதவைப் பெண்ணாக நடித்த ரேவதி, “அழகு மலராட” பாடல் நடனக் காட்சியில் மெய் சிலிர்க்கச் செய்தார்.

1984 அக்டோபர் 23-ம் தேதி வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

விஜய்காந்த் ராதிகா நடித்த நானே ராஜா நானே மந்திரி, கவுண்டமணி கதாநாயகனாக நடித்த தலையாடி பொம்மைகள் ஆகிய படங்களும் தூயவன் தயாரித்தவை.

கடைசி படம்

தூயவன் கடைசியாகத் தயாரித்த படம் உள்ளம் கவர் கள்வன். இந்தியில் வெளியான சிச்சோர் படத்தின் உரிமையைப் பெற்று அக்கதையைத் தமிழில் தயாரித்தார். படம் முடிவடையும் தருணத்தில், நாகப்பட்டினத்துக்குச் சென்றிருந்தபோது, 1987 ஜூலை 11-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று காலமானார்.

அப்போது அவருக்கு வயது 41-தான்.

குடும்பம்

தூயவன் ஜெய்புன்னிசா தம்பதிகளுக்கு பாபு (இக்பால்) என்ற மகனும் யாஸ்மின் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாபு பி.காம். படித்துவிட்டு திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர். தொலைக்காட்சி சீரியல்கள் தயாரிப்பதில் புகழ் பெற்றவர். அபர்ணா அவர் உருவாக்கிய தமிழ் சீரியல்களில் ஒன்று. ஜெய்புன்னிசா தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார்.

நன்றி: தினந்தந்தி 10 & 13 – 08 – 2007.

***

தூயவனின் முத்திரைக் கதைகள் விரைவில் , இன்ஷா அல்லாஹ்

3 பின்னூட்டங்கள்

 1. baby said,

  21/10/2009 இல் 13:50

  Dear machan, thank u for collecting this article from Daily thanthi, its very nice to read my father’s early life in his cine field and how he develop his talent from a writer to a producer, many information which i did’nt know u have gather it. u can also make and gather much more information and make a “autobiography of thooyavan” in this website. it gives an encouragement to all the youngster on which “thooyavan” in his short period how he reach the border of the sky. by baby

  • abedheen said,

   24/10/2009 இல் 06:08

   Thanks baby. Infact u should give us more materials. Try to find your dad’s ‘Muthiraik kathikal’ and give to Rafee.

 2. NOOR MOHAMED said,

  27/07/2013 இல் 16:35

  i am surprise to read this article becouse the within a short period had given a excelent tamil films iproud on thooyavan


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s