கதீப் சாஹிப்

A.H. கதீப் சாஹிப்

தமிழ் இலக்கியத்துடன் நாற்பதாண்டுக் காதல் | இயற்பெயர் ஏ.ஹெச். ஹத்தீப். ‘வானவன்’ , ‘நாகூர் சாஹிப்’ என்பன புனை பெயர்கள் | இவர் தரித்த கருக்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை தினமணிக்கதிர் , சுதேசமித்திரன் , தினத்தந்தி , மாலைமுரசு, மணிவிளக்கு போன்ற பிரபலப் பத்திரிக்கைகளில் சுகப்பிரசவம் | நாடகங்கள் மற்றும் திரைப்படக்கதைப் பிரிவில் மூக்கை நுழைத்த அபத்தங்களும் வாழ்க்கையில் அரங்கேற்றம் | அப்படிக் ‘காதலி’யுடன் அனுபவித்த ஒவ்வொரு வினாடியும் இன்ப நீரூற்று | இதற்கிடையே அவளுடன் சின்ன மோதல் | நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவளது கண் சிமிட்டல் | பழைய பாதை மறந்து போய் புதிய வழியில் இந்நூல் | எல்லாவற்றையும் விட இவர் மார்க்க மகான் மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி அவர்களின் உயிர்ச் சிற்பம்.

கதீப் சாஹிப் அவர்களின் ‘150 கோடி முஸ்லிம்களின் பார்வையில் இஸ்லாம்’ புத்தகத்திலிருந்து சில பக்கங்கள் :

…திருமறையின் பற்பல இடங்களில் இலக்கியத்தின் வாசனை நம்மை வசீகரித்துள்ளது. அந்த இலக்கியத் தன்மையை நுகராத மார்க்க அறிஞர்கதான் ‘முரண்பாடு’ எனப்படும் மாயையில் சிக்குண்டுத் தவிக்கிறார்கள் எனலாம்.’மனிதன் என்னை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் நான் அவனை நோக்கிப் பத்தடி எடுத்து வைக்கிறேன்’ என்ற வசனத்திற்கு ‘இறைவன் கால்களால் விரைகிறான்’ என்ற விளக்கம் பொருட்செறிவற்றது. ‘கால்கள் இல்லாமல் எப்படி அடி எடுத்து வைப்பது’ என்ற கேள்வி மிகுந்த சிறுபிள்ளைத்தனமானது.

‘எனது இருவிரல்களுக்கிடையே உங்களது உள்ளம் இருக்கிறது. நான் எப்படி விரும்புகிறேனோ அப்படி இயக்குகிறேன்’ என்ற இன்னொரு வசனம் இறைவனது விரல்களைக் குறிக்கிறது. ‘விரல்களின் இயக்கம்’ என்பது இங்கே இறைவனின் விருப்பத்தை மட்டுமே குறிக்கும். வெறுமனே விரல்களைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டியதில்லை. ‘அப்படித் தொங்கித்தான் தீருவேன்’ என்பது வீண் பிடிவாதம். அவர்களைத் திருத்துவதற்குப் பதிலாக அவர்களுக்காகப் பிரார்த்திக்க வேண்டும்.

மற்றுமோர் இறைக்கருத்து இப்படி:’ எங்கு திரும்பினும் என் முகம் இருக்கிறது’ – இது அங்கிங்கெணாதபடி இறைவன் எங்கும் வியாபித்துள்ளான் என்பதற்குச் சான்றாகும். ‘முகம் என்று குறிப்பிடப்படுவதால் முகத்துக்குரிய அடையாளங்களான கண்கள், கன்னங்கள், தலை, மூக்கு, நெற்றி என்றெல்லாம் இருக்கத்தானே வேண்டும்’ என்று அடம் பிடிப்பது அறிவாளிகளின் செயலன்று.

மேலே காணப்பட்ட இறைக்கருத்துக்கள் அனைத்தும் அபாரமான இலக்கியத் தன்மையுடையவை. இவற்றை ஆதாரமாகக் கொண்டு, அல்லாஹ்விற்கு ‘உருவம் உண்டு’ என்று வாதிடுவது, இலக்கியத்தில் நிபுணத்துவம் பெறாத மார்க்க அறிஞர்களின் அறியாமை. அவர்களுடைய ‘கண்டுபிடிப்பை’ ஆமோதித்தால், இறைவனின் உருவ அமைப்பு எப்படிப்பட்டது என்ற கேள்வி எழும். மனிதனா அல்லது ‘டைனோஸர்’ போன்ற பிரம்மாண்ட வடிவமா என்று கூறியாக வேண்டும். ஏனெனில் எல்லா மிருகத்திற்கும் கால்களும் கண்களும் செவிகளும் முகமும் உண்டு. அதில் ஏதோ ஒன்று என்று வைத்துக்கொண்டால் அது ஆண்பாலா பெண்பாலா என்று குதர்க்கத்தில் குதிர்ப்பார்கள். இவற்றில் ஏதாவதொன்றை ஏற்றுக்கொள்ளும்போது நபிகள் நாயகமும் அவர்களது பொன்மொழிகளும் முரண்படும் அபாயம் உள்ளது. அப்படியொரு போராட்டத்திற்கு உட்படுகிற சமயத்தில் ‘இந்த இரண்டில் எது தேவை? இறைவனா அல்லது பெருமானார் அவர்களா?’ என்று நமது இளைஞர்களிடம் கேட்கப்படும். ‘நீங்கள் எதை ஏற்றுக் கொள்ளச் செய்கிறீர்களோ அதையே அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில் நீங்களே எங்களது நேரிய வழிகாட்டி’ எனச் சமுதாய இளைஞர்கள் கூறுவார்கள். நமது மதப் பண்டிதர்கள் இப்போதைக்கு இறைவனை இழக்கத தயாரில்லை. ஆதலாம் பெருமானார் அவர்களை இஸ்லாத்திலிருந்து சமூகப் பகிஷ்காரம் செய்துவிடலாம் என்று அக்கூட்டத்தில் ஏகமானதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த இடத்தில் நாம் ஒரு பிரார்த்தனை செய்ய வேண்டியுள்ளது. அரபிக் கல்லூரிகளில் பாடங்கள் துவங்குவதற்கு முன் சொல்லித் தந்தார்களே, அதே இறை வேண்டல்: ‘இறைவா, ஷைத்தான்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பாயாக’

‘கண்கள் குளமாயின’ என்ற சொல் அழுகையைக் குறிக்கும். அழுவோரின் கண்களுக்குள் குளங்களும். அதனுள் இருபதடி ஆழத்தில் தண்ணீரும் இருக்கிறதா எனத் தேடக்கூடாது. ‘தலைக்குனிவு’ என்றால் அவமானத்தை விளக்கும் வார்த்தை. அவமானமடைந்தோரைக் காணும்போதெல்லாம் அவர்களது தலை குனிந்துள்ளதா என ஆராய்வது, ‘இவனுக்கென்ன பைத்தியமா?’ என்று மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்பதற்குத் தூண்டும். ‘அவனுக்குக் கை நீளம்’ என்றால் குறிப்பிடப்பட்டவனுக்கு திருட்டுப் பழக்கமுள்ளது எனப் பொருள் கொள்ள வேண்டும். அதை விடுத்துவிட்டு அவனது கையை அளந்து கொண்டிருப்பவர்கள் அறியாமையில் சிக்குண்டிருப்பவர்கள், ‘பேரீச்சம்பழத்தின் சுவையைப் பற்றிக் கழுதைக்கு ஒன்றும் தெரியாது’ என்ற உருதுப் பழமொழி, இலக்கிய வாசனைய நுகரத் தெரியாத இத்தகையவர்களுக்காகக் கூறப்பட்டதுதான்.

மேலே படித்த இறைவசனங்களும் அப்படிப்பட்டவையே. இவற்றுக்கெல்லாம் நேரடிப்பொருள் கொள்வது, நாம் குதர்க்கமான வழியில் செல்லப்போகிறோம் என்பதற்கான முதல் அறிகுறி

மற்ற பகுதிகள் : விரைவில், இன்ஷா அல்லாஹ்!

நன்றி : ஜனாப் A.H. கதீப் சாஹிப் (பாகவி பதிப்பகம் , 16 மெய்தீன் பள்ளித் தெரு, நாகூர் – 611 002)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s