அப்துல் வஹ்ஹாப் பாகவி

 hazrath.jpg

மதிப்பிற்குரிய ஹஜ்ரத் மௌலவி எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி (1933 – 2002) 

பாமரர்கள் அறிவுப் பாதையில் காலடி எடுத்து வைத்ததும் தம் அறியாமையை உணர்ந்து கொள்கிற அதே நேரத்தில் அறிஞர்கள் அறிவுத் துறையில் வெகுதூரம் நடந்து சென்ற பின்னர் தம் பலவீனத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். அதாவது – அறிஞர்கள் இறுதியில் தெரிந்து கொள்ளும் உண்மையைப் பாமரர்கள் ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்கிறார்கள்.
 
 நீங்கள் பாமரர்களில் ஒருவர் என்றால் உங்களுக்கு ஓர் உண்மையைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்; அறிஞர்கள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னர் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு செய்தியை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொள்ளும் பேறு உங்களுக்கு கிடைத்திருக்கிறது!
 
 – ஹஜ்ரத் –
 (‘தர்க்கத்துக்கு அப்பால்’ நூலிருந்து..)

 Visit Hameed Jaffer’s Home for more detail

***

 
கவிஞர் இஸட். ஜபருல்லா முன்னுரை  (‘இறை வணக்கம்’ முதற்பதிப்பு 1983) :

ஒரு வித்தியாசமான அறிமுகம்…!
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..
 

ஒரு பெரிய பொறுப்பு என்னிடத்திலே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது..!
நூலாசிரியரை அறிமுகம் செய்வது –
அறிமுகம்..!
 

பலரால் அறியப்பட்ட ஒருவர் வாசகர்களுக்குப் புதிய ஒருவரை
அடையாளம் காட்டுவது – அதனால்
அறிமுகப்படுத்தப்படுபவர் புகழ் அடைவது – இதைத்தான்
வழக்கமாக அறிமுகம் என்று அழைப்பார்கள்.
 

இங்கு இது இரண்டு வகையிலும் எதிர் முனையில் அமைகிறது. ஏறத்தாழ அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இலட்சோபலட்சம் வாசகர்களைத் தன் எழுத்தால் கவர்ந்த ‘சாபுநாநா’ அவர்களை – ஆம் , அவர்களை நான் அப்படித்தான் அழைப்பது வழக்கம் – இதுவரை ஒரு புத்தகம் கூட எழுதாத நான் அறிமுகப் படுத்துகிறேன். இதனால் அறிமுகப் படுத்தப்படுபவர் அல்ல- அறிமுகப் படுத்தும் நான் பெருமையும் புகழும் அடைகிறேன். வித்தியாசமான கோணந்தான்..! கல்லிலே உரசப்படுகிற தங்கம் அந்தக் கல்லில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அது தங்கத்தின் குறையுமல்ல..! ஆனால்-ஓர் இரும்புத்தூண்டின் மேல் உரசப்படுகிற காந்தம் அந்த இரும்புத்துண்டில் தன் பாதிப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை.
– இங்கே ஒரு உரசலால் தன்னுள் ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்து கொண்ட ஒரு இரும்புதுண்டு காந்தத்தை அறிமுகப் படுத்த எத்தனிக்கிறது..!
 

அப்போது பள்ளி மாணவன் நான். “ஹஜ்ரத். இவன் ஏதேதோ வினாக்களை எல்லாம் கேட்கிறான். மொத்தத்தில் இவன் மனம் ஒரு குப்பை கூடையாக மாறி இருக்கிறது. இவன் சந்தேகங்களை தீர்ப்பது உங்கள் பொறுப்பு..’ – எனப் பொறுப்பு சாட்டி சாபுநாநா அவர்களிடத்தில் என் தந்தையார் என்னைப் பிடித்துக் கொடுத்ததை – அப்போது என்னைச் சிறைப்பிடித்திருந்த- ‘அல்லாஹ் யார்..? அவனைப் பார்க்க முடியுமா..? ரசூலுல்லாஹ் மெஹ்ராஜ் சென்றது உண்மையா..? எப்படி..? குர் ஆன் அருளப் பட்டதுதானா..?’ – இப்படிபட்ட வினா வேலிகளிலிருந்து என்னை விடுபடவைத்து இன்றைக்கு பெருமானார் விழாவில் கலந்து கொண்டு கருத்துக்களைப் பேசக் கூடிய அளவுக்கு என்னைத் தயார் படுத்தியதை நினைத்துப் பார்க்கிறேன்..! இவர்களை நான் அறிமுகப் படுத்துவதா..? விந்தையாகத்தான் இருக்கிறது..!
 

“இன்றைக்கு இருக்கிற இளைஞர்கள் பழகக் கூடாதவர்களோடு பழகி, படிக்கக் கூடாததைப் படித்து வழி தவறிப் போகிறார்கள். ‘தொழுது வாருங்கள்’ என்று கூறினால் ‘தொழுகை அவசியமா..?’ எனக் கேட்கிறார்கள்..”


-ஒருநாள் சாபுநாநானா இப்படிக் குறைபட்டுக் கொண்டார்கள். நான் கேட்டேன் – யாரிடத்தில் என்ன கேட்பது என்று தெரியாத பருவம்தானே – அதனால் துணிந்து கேட்டேன்..!


“அவர்கள் அப்படிக் கேட்டால் என்ன தப்பு..? நீங்கள்தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்..”
 

“சரி..! நான் ஊசி ஏற்றுவது போலச் சொல்லுகிறேன். நீங்கள் வாழைப் பழமாக இருக்க வேண்டுமே..! இரும்பாக அல்லவா இருக்கிறீர்கள்..!” – இடைவெளியே இல்லாது வந்த விடை என்னை ஸ்தம்பிக்க வைத்தது. அவர்களே தொடர்கிறார்கள்..!

: “ஏன் இப்படிக் கேளுங்கள்..! இரும்பிலே ஊசியை நுழைக்க என்ன வழி என்று. வழி இருக்கிறது. இரும்பை நெருப்பில் இட்டு உருக்க வேண்டும். அது குழம்பாகப் பரிணமிக்கும்போதே ஊசியை அதற்குள் செலுத்த வேண்டும்; வாழைப்பழத்தினுள் எவ்வளவு சுலபமாக ஊசியைச் செருக முடியுமோ அவ்வளவு சுலபமாக உருவி விடவும் முடியும். ஆனால் சூடு ஆறிய பிறகு இரும்பு தன்னுள் நுழைக்கப்பட்ட ஊசியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முடியும்..புரிகிறதா..?”
 

புரியவில்லை என்று சொல்ல நான் வெட்கப்பட்டாலும் என்முகம் காட்டிக் கொடுத்து விடுகிறது. விளக்குகிறார்கள்:
 

‘இரும்பு போன்ற உள்ளங்களை அன்பு எனும் நெருப்பால் கனிய வைக்க முடியும். அந்த வேலையைத்தான் உங்களைப் போன்ற இளைஞர்களைக் கூட்டிவைத்து நான் செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் உள்ளங்கள் கனிந்து வரும்போது என் அறிவுரைகளை அது ஏற்றுக் கொள்வதோடு கெட்டியாகவும் பிடித்துக் கொள்ளும் , இன்ஷா அல்லாஹ்..!’ என்றார்கள்.
 

இப்படி இளைஞர்களை வழி முறைப்படுத்துவதை , அவர்களைக் கொண்டு ஓர் அறிவு வட்டத்தை ஏற்படுத்துவதைத் தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்ட சாபுநாநானா அவர்களை நான் அறிமுகப் படுத்துவதா..? எப்படி அறிமுகப் படுத்த ? எதைச் சொல்லி அறிமுகப் படுத்த.. ?
 

‘விந்தியன்’ என்ற பெயரிலும் இன்னும் பல புனைபெயர்களிலும் – பல முன்னணி வார இதழ்களில் கதைகள் எழுதி வந்தார்களே அந்தக் கதாசிரியரை அறிமுகப்படுத்துவதா..? அல்லது வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தில் ‘மௌலவி’ பட்டப் படிப்பு படித்துக் கோண்டிருக்கும்போதே ‘மணிவிளக்கு’ மாத இதழில் ‘மக்கா யாத்திரை’ என்ற தலைப்பில் அழகான ஒரு ஹஜ் பயணத் தொடர் எழுதி வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றார்களே..அதைச் சொல்லி அறிமுகப் படுத்துவதா..? – அல்லது இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘ இஹ்யாவு உலூமிதீ’னுக்கு அழகிய தமிழுருக் கொடுத்துப் பல நூல்களைப் பல தலைப்புகளில் எழுதி – இதுவரை ‘இஹ்யா’வை இப்படித் தமிழாக்கித் தந்தவர் இன்றளவும் எவருமில்லை எனும் பெயரை, புகழைத் தமக்கென ஆக்கிக் கொண்டுள்ளார்களே..! அதைச் சொல்லி அறிமுகப் படுத்துவதா..? –
அல்லது யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் , மெஜஸ்டிக் பப்ளிஷர்ஸ் , பூஸரி பப்ளிஷர்ஸ், தம்பி புக் செண்டர், எஸ்ஸேவி பதிப்பகம் போன்ற புத்தக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இவர்கள் நூல்களை இன்றளவும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புகளாக வெளியிட்டு வருகிறனவே..! அதைச் சொல்லி அறிமுகப் படுத்துவதா..?
எதைச் சொல்லி அறிமுகப் படுத்துவது ..? எதைச் சொன்னாலும் அது நீங்கள் அறிந்த செய்தியாகத்தானே இருக்கும்..?
 

இவர்கள் இயற்பெயர் செய்யது அப்துல் வஹ்ஹாப். இவர்கள் நாகூரில் 8-10-1933இல் பிறந்தார்கள். தந்தையார் பெயர் முஹம்மது கௌஸ் சாகிப். தாயார் பெயர் செல்ல நாச்சியார். 1955இல் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் மௌலவி பட்டம் பெற்றார்கள்.
 

-இப்படி கூறினால் இது இவர்கள் சம்பந்தப் பட்ட புள்ளி விவரமாக அமையுமே தவிர அறிமுகமாக அமையாதே..! பின்னர் எப்படி அறிமுகப் படுத்துவது..? இக்கட்டான நிலைதான்..!
 

எண்ணிப் பார்க்கிறேன்..!
 

ஒருநாள் இப்படித்தான் ஒருவர் வந்தார். வட்டமான முகம். அதற்கு அணி செய்யும் அழகான தாடி – கையிலே ஓர் ஊன்று கோல் – வயது அறுபதுக்கு மேல் இருக்கும். காய்ந்திருந்த நெற்றி அவர் வேளை தவறாத தொழுகையாளி என்று பறைசாற்றியது.
நாங்கள் நாகூர் தர்கா அலங்கார வாசல் திண்ணையில் வட்டமாக அமர்ந்திருந்தோம். சுவரில் சாய்ந்து கொண்டு சாபுநாநா அவர்கள் நல்ல நட்பைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்கள்.
 

“ஒரு பானை குடிநீரில் ஒரு கையளவு உப்பைக் கலந்தால் முதலில் அந்த நீரில் இருக்கிற குடிக்கிற பக்குவத்தையும் அந்த உப்பு எடுத்து விடுகிறது. ஆனால் பாலிலே கலக்கப்படுகிற ஒரு துளி தேன் பாலின் சுவையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. நட்பு தேனைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்கக் கூடாது. தவிர தேனுக்கு இன்னொரு குணமும் உண்டு. எந்தப் பொருளைத் தன்னோடு சேர்த்தாலும் அதைக் கெட வைக்காது..”
 

“அஸ்ஸலாமு அலைக்கும்..” – அந்தப் பெரியவரின் குரல் சாபுநாநாவின் விளக்கத்தைத் தடை செய்தது. பேச்சு தடைப்பட்டு விட்டதே என்ற ஆதங்க உணர்வோடு “வ அலைக்குமுஸ்ஸலாம்” என்று பதில் கூறினோம்.
 

“தம்பிகளா..! நான் சிங்கப்பூரில் இருந்து வருகிறேன். ‘இஹ்யா’வை தமிழிலே எழுதிவரும் மௌலவி அப்துல் வஹ்ஹாப் பாகவியைப் பார்க்க வேண்டும். அவர்களுடைய வாசகன் நான். அவர்கள் எழுதிய எல்லாப் புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன். நாகூரில்தான் அவர்கள் இருக்கிறார்கள் எனச் சென்னையில் சொன்னார்கள். அவர்கள் வீட்டை அடையாளம் காட்ட முடியுமா..?”
 

நாங்கள் யாவரும் ஆவலோடு சாபுநாநா அவர்கள் முகத்தைப் பார்த்தோம்.
“அடடே..! பாகவி சாபுவைக் காண வந்தீர்களா..? அவர்கள் ஊரில் இல்லையே..! கோயம்புத்தூர் போய் இருக்கிறார்கள். வர ஒரு வாரமாவது ஆகும்..” – முகத்தில் எந்த சலனமுமில்லாமல் பதில் கொடுத்தார்கள் சாபுநாநா அவர்கள்.


“நாளை நான் போக வேண்டுமே..! அவர்களைப் பார்த்து , அவர்கள் அறிமுகத்தைப் பெற வேண்டும் என்ற ஆவலோடு வந்தேன். அல்லாஹ்வின் நாட்டமில்லை போலும்..! இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை பார்ப்போம்..!” என்ற அந்தப் பெரியவரின் குரலில் ஏமாற்றம் வெளிப் பட்டது. பின் தர்காவினுள் சென்றுவிட்டார்.


“சரி எல்லோரும் எழுந்திருங்கள். நாம் கடற்கரைக்குச் சென்று விடுவோம்; யாராவது என்னை அடையாளம் காட்டிவிடப் போகிறார்கள்” என்றவாறு எழுந்த சாபுநாநா அவர்களைப் பின்பற்றிக் கடற்கரைக்கு நடந்தோம். கடற்கரையில் அமர்ந்த உடனேயே என்னுள் இதுவரை அடக்கி வைத்திருந்த கேள்வியைக் கேட்டேன்…!
“அந்தப் பெரியவர் ஆசையோடுதானே கேட்டார்..! நீங்கள் ஏன் உண்மையைக் கூறவில்லை..?”
 

“காரணமாகத்தான்..’இஹ்யா’வை எழுதிய ஒருவரை அவர் எப்படிக் கற்பனை செய்து வந்திருப்பார்.. உங்களுக்குத் தெரியுமா ? நீண்ட தாடியோடும் – கையிலே ‘தஸ்பீஹ்’ மணியோடும் – விரித்த முஸல்லாவில் அமர்ந்திருக்கும் ஒரு பெரிய மனிதராக என்னைக் கற்பனை செய்து வந்திருக்கும் அவரிடம் – ‘நான்தான் அந்த பாகவி’ – என்று என்னை அடையாளம் காட்டினால் அவர் ஏமாற்றமடைவது ஒரு புறம் இருக்கட்டும். நான்தான் உண்மையிலேயே அந்த நூல்களை எழுதியவன் என்று நம்புவாரா..? அவர் அடையும் அந்த ஏமாற்றத்தை விட – பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்றமே பரவாயில்லை. நான் உண்மையைக் கூறாதது இதற்காகத்தான்..!” என்றார்களே பார்க்கலாம்.!
 

இன்றைக்கும் இப்படித்தான். ‘இவரா இத்தனை நூல்களை எழுதியவர்..!’ என்ற வியப்புணர்வைத் தோற்றுவிக்கும் தன்மை இன்னும் மாறவே இல்லை.
வெள்ளைக் கைலி – வெள்ளை முழுக்கைச் சட்டை – தொப்பி போடாத, குறுகலாக கிராப் செய்யப்பட்டு அழகான மீசையோடு கூடிய முகம் – கையிலே எந்நேரமும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் – பக்கத்திலேயே சிகரெட் பெட்டியும் லைட்டரும் – கூட எப்போதும் சூழ்ந்திருக்கும் இளைஞர் கூட்டம்…
 

சற்று கற்பனை செய்து பாருங்கள். இதுதான் மௌலவி எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி. நம்புவது சற்று கடினமாகத்தான் இருக்கும். என்றாலும் நம்பித்தானே ஆக வேண்டும். உண்மை அதுதானே..!
 

ஒருமுறை நாங்கள் கேட்டோம் : ‘ஓதிப் பார்க்கிறோம்’ என்றும் ‘செய்வினை எடுக்கிறோம்’ என்றும், கூறிப் பலபேர் ஆட்டுத் தலையும் சேவலும் கேட்டு ஒன்றுமறியாத மக்களை அந்த ஒப்பற்ற கலையின் பெயரால் ஏமாற்றுகிறார்களே..! அந்தக் கலையை நீங்கள் அறிய மாட்டீர்களா..? அதில் தாங்கள் ஈடுபட்டுப் பொதுத் தொண்டு புரிந்தால் என்ன..?”
 

“நிச்சயாக அது என்னால் முடியும். ஆனால் யோசித்துச் சொல்லுங்கள். அதில் நான் ஈடுபட்டால் இப்படி அமர்ந்து எப்போதும் பேசிக் கொண்டிருக்க முடியாது. எழுத்தாளன் அப்துல் வஹ்ஹாப் அங்கே இருக்க மாட்டான்..என்ன சொல்கிறீர்கள்..?” என்று அவர்கள் வினவியபோது நாங்கள் சொன்னோம்:


“பொதுப்பணிக்காக நாங்கள் இந்த இழப்புகளை ஏற்கவேண்டும் என்றால் அதற்கு நாங்கள் தயார்..!”


இந்தப் பொதுப்பணி ஏறத்தாழ பத்தாண்டுகளாத் தொடர்கிறது. ஆனால் பத்து ஆண்டுகளாக எழுத்துலகத்தோடு தொடர்பே இல்லாமல் இருந்த அவர்களை மீண்டும் எழுதத் தூண்டியது ஒரு மடல். அது எந்த பத்திரிக்கை அவர்களின் முதல் எழுத்தைப் பிரசுரித்ததோ அந்த ‘மணிவிளக்கு’ப் பத்திரிக்கையின் ஆசிரியரும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவருமான அல்ஹாஜ் A.K.A. அப்துல் ஸமது சாஹிப் அவர்களின் மடல். அது ‘உங்கள் அறிவு இந்தச் சமுதாயத்துக்கு முழுதும் பயன்பட வேண்டும் என எண்ணுகிறேன். மணிவிளக்கில் ஒரு தொடரைத் துவக்குங்கள்..!’ என அன்புக் கட்டளையிட்டது.
 

இறைவன் நாட்டத்தை யாரால் மாற்ற முடியும்..? அன்றுவரை அவர்களுக்குள் தூங்கிக் கிடந்த எழுத்தாளன் உயிர்த்துடிப்புடன் எழுந்து விட்டான். ஆம்..! மறுபடி எழுத்துலகம் அவர்களை ஆகர்ஷிக்கத் துவங்கி விட்டது. பயன்..?
 

மணிவிளக்கில் ‘மின்ஹாஜூல் ஆபிதீன்’ – ‘பக்தர்களின் பாதை’ என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் ‘ஞானக் கோட்டையின் தலைவாசல்’ என்ற தலைப்பில் துவங்கி நடைபோடுகிறது. ‘இறை வணக்கம்’ என்ற இந்நூல் உங்கள் கைகளிலே தவழ்கிறது. இன்ஷா அல்லாஹ் அடுத்த வெளியீடான ‘தர்க்கத்துக்கு அப்பால்..’ உங்கள் கரங்களுக்கு வரும் திங்களுக்குள் வரும்.
 

தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் ஒருமுறை என்னிடம் கூறினார்கள் – ‘எளிய நடை – அரிய கருத்தோட்டம் – தெளிவான விளக்கங்கள் – புரிய வைக்கும் உதாரணங்கள் – பன்மொழித் தேர்ச்சி – அழகான தமிழ் வார்த்தைப் பிரயோகம் – எல்லாவற்றுக்கும் மேலாக சுய சிந்தனை – இவைகளே இவரைச் சிறந்த எழுத்தாளராகவும் தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகவும் தமிழறிந்த மக்களிடையே அறிமுகம் செய்தன..’ என்று.
 

இதைவிட ஓர் அழகான அறிமுகத்தை என்னால் செய்துவிட முடியுமா..? என்றாலும் எழுத்தாளர் என்ற சிறிய வட்டத்துக்குள் மட்டும் வைத்து சாபுநாநா அவர்களை எங்களால் பார்க்க முடியவில்லை. எங்கள் உள்ளங்களில் மெய்யறிவைத் தருகின்ற ஞானாசிரியராகவும் அவர்கள் பரிணமித்துக் கொண்டிருப்பதைச் சொல்லத்தான் வேண்டும்.
 

இந்த நூலில் ஒரு இடத்தில் குறிப்பிடப் படுகிறது : ‘தத்துவ வார்த்தைகளைக் காலையில் இருந்து மாலை வரை சொல்லிக் கொண்டிருந்தாலும் பச்சைக் கிளிக்கு தத்துவஞானி என்று யாரும் பெயர் சூட்ட முடியாது..’ என்று.
இங்கு சில அறிவுரைகளைக் கற்ற ஒரு கிளிப்பிள்ளை தன் ஆசானைப்பற்றி உங்களிடம் கூறி முடித்திருக்கிறது. அவ்வளவுதான். இதுதான் உண்மை.
 

-கவிஞர் இஸட். ஜபருல்லா- (‘இறை வணக்கம்’ முதற்பதிப்பு 1983)


நாகூரில் ஒரு ஞானி
கவிஞர் மு.மேத்தா

அடக்கத்தின் உருவமாய்த் திகழ்ந்த ஆன்மீகப் பேரொளி! நாடி வந்தவர்க்கெல்லாம் ஞானச்சாறு பிழிந்து தந்த நவீனச் சித்தர்! ‘இறைஞானி’ என்றும் ‘ஞானத் தந்தை’ என்றும் தம் அன்பர்களால் அழைக்கப்பட்டவர். ;’பன்னூலாசிரியர்’ என்று பாராட்டப்பட்டவர்; நாகூர் ஆண்டவரின் நற்குடியைச் சேர்ந்தவர். பாதுஷா அவர்களின் பரம்பரையில் வந்தவர். அன்பர்களையெல்லாம் ஞான மார்க்கத்திற்கு அழைத்துக் கொண்டிருந்த அவரை, அண்மையில் ஆண்டவன் தன்னிடம் அழைத்துக் கொண்டான். அனைத்து மனிதர்களையும் அகிலத்திற்கு அனுப்பி வைப்பவன் அவனே! அழைத்துக் கொள்பவனும் அவனே!
பறவையின் சிறகாகப் பரிணமிக்கும் அவன்தான், வேடனின் கையில் அம்பாகவும் விளங்குகிறான். ஓர் இலையின் அசைவு கூட அவனுடைய நாட்டமில்லாமல் நடைபெறுவதில்லை என்றால் , இறைவனின் தீர்ப்புக்கு மேல் முறையீடு ஏது? இருந்தாலும் இதயம் அவனிடமே முறையிட்டு முணுமுணுக்கிறது. எங்கள் ஆன்மீகச் சுடரொளியை இன்னும் சற்று காலமாவது எங்களோடிருக்க, எங்களுக்காக இருக்க அனுமதித்திருக்கக்கூடாதா ?
 

அவர் எங்கள் தந்தையாய்த் திகழ்ந்தவர். அவர் எங்கள் தைரியமாய் இருந்தார்! எங்கள் குடும்பத்தின் தருவாய் விளங்கினார். எங்கள் குழந்தைகளுக்கும் குருவாய்த் துலங்கினார். சொந்த துயரங்களோடு நாங்கள் சோகம் கொண்டு நிற்கிறோம்! ஆன்மீகச் சுடரொளியை அள்ளி அள்ளித்தரும் அரிய நூல்களை எழுதிய மேதை அவர்! இமாம் கஸ்ஸாலியின் புகழ் பெற்ற நூல்களைத் தக்க விளக்கங்களுடன் தமிழுக்குத் தந்தவர்! சிந்தனைகளின் சிகரமாய்த் திகழ்ந்தவர்.
 

அவருடைய ஞான சபையில்தான் எத்தனை பேராசிரியர்கள்! எத்தனை பெருங் கவிஞர்கள்! எத்தனையெத்தனை பெருந்தகையாளர்கள்….தொழிலதிபர்கள் முதல் தொழிலாளர்கள் வரை சம மரியாதையோடு கூடியிருக்கும் சபை அது! இரவெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்- ஊரே உறங்கும் நள்ளிரவில் எங்கள் உள்ளங்களை விழித்துக் கொள்ள வைத்த உரைகள் அவை. ஒலி நாடாக்களாக இருக்கும் அவையெல்லாம் நூல் வடிவம் பெற வேண்டும்! ஞான மார்க்கத்தில் எங்களை நடத்திச் சென்ற ‘இறை ஞானி இன்று இல்லை! ஆனால் அவர் காட்டிய வழி இதோ எங்கள் விழிகளின் முன் விரிந்து கிடக்கிறது!
 

அவர் இறந்து விட்டாரா?
 

இல்லை…இல்லை…
 

எங்கள் இதயங்களில் உறைந்து விட்டார் !
 

-நன்றி : முஸ்லீம் முரசு ( Oct’2002)

2 பின்னூட்டங்கள்

 1. Shahul Hameed said,

  30/07/2007 இல் 16:35

  The informations about hajrath is good and excellant , His Physical absence is really a very big loss for all the aspirant seekers.

 2. 25/12/2008 இல் 11:55

  first of fall big thanks to honrable writter…and
  this information is very useful for hajirath SABU NANA…….
  Avaragalai Paatri Kaatra Kaiyae Allavum Kooda…..
  Kaadhal Allava Irrukirathu……
  keep Touch wth some way..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s