யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’ யிலிருந்து சில வரிகளைப் பதிவிடுகிறேன். பஹ்ரைன் ஓவியர் அப்துல்லா அல்-முஹ்ராக்கியின் ஓவியத்தை (suffocation) பதிவின் அடியில் இணைத்திருக்கிறேன். இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள்தான் விளங்கிக்கொள்ள வேண்டும். – ஆபிதீன்
***
மா, இந்த இலை ஏன் கசப்பாய் இருக்கிறது?
அம்மா தனஞ்சயனைத் தன்னுடன் அணைத்துக்கொண்டாள்.
அதுவா..?
கொஞ்சநேரம் எதுவும் பேசாமல் இருந்தாள். அம்மாவின் வியர்வையில் கடுகெண்ணெயின் மணம் இருந்தது. பருத்த அவளது மார்புகளின் நடுவில் முகத்தைப் புதைத்துக் கொண்டான் தனஞ்சயன்.
சோட்டூ, நான் கல்யாணமாகி இந்த வீட்டுக்கு வந்தேனல்லவா?…
உடனிருந்து பார்த்த பாவத்துடன் ஆமாம் என்று தலையசைத்தான் தனஞ்சயன்.
.. வந்த மறுவாரம் இந்த வேப்பமரத்தை நட்டேன்.
ம்.
அப்போது இது குட்டிச் செடியாக இருந்தது, தனஞ்சய் மாதிரி.
கன்னத்தில் இன்னொரு முத்தம்.
ம்.
அம்மாவுக்கு மனசு சரியில்லாமல் போகும்போது, இந்த மரத்திடம்தான் வந்து சொல்லி ஆற்றிக்கொள்வேன்.
ம்.
நான் கொடுத்த கசப்பையெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டதில்லையா. அதைத்தான் இலைகளில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.
***
***
நன்றி : யுவன் சந்திரசேகர் , உயிர்மை பதிப்பகம், அப்துல்லா அல்-முஹ்ராக்கி , Meem Gallery
