‘மனுசனுக்கு காய்ச்சல் வரலாம்; ஜலதோஷம் வரலாம்; இந்த நோம்பு மட்டும் வரக்கூடாது!’ என்று கிண்டல் செய்யும் கவிஞர் தாஜ் ஒருபக்கம். கடுமையாக நோன்பு பிடித்தும் கவிதைகளை விடாத ஜபருல்லா நானா இன்னொரு பக்கம். மாட்டிக்கொண்டு விழிக்கிறேன். அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!
***
ஜபருல்லாவின் புதிய ‘கவிதை’
எல்லாமும் இருந்து
உண்ணாமல் பசித்திருந்து
அல்லாவுக்காக நோன்பு நோற்ற
நல்லடியார்களே
இல்லாமல் கிடக்கும்
ஏழைகளின் பட்டினிக்கு
என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்?
அல்லாஹ் நோன்பாளிக்கு மட்டும்
நேரடியாகவே
கூலி கொடுப்பானாம்
ஏன் தெரியுமா?
கூலிக்காரர்கள்தான்
எப்போதும்
பசியோடு இருப்பார்கள்
அதுசரி நேரடியாக எதற்கு?
இடைத்தரகர்கள் பற்றி
அவனுக்குத் தெரியாதா என்ன?
- இஜட். ஜபருல்லாஹ் -