‘புறா’ணம் எழுதியது இந்த ஹாஜியார்தான் என்றால் நம்புவீர்களா? அட, நம்ம கய்யும்தாங்க இது! பழைய ஃபோட்டோவாம். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்! புறாக்கறி ஆணம் (குழம்பு) என்றாலே புல்லரிக்கும் இந்தப் புலவரின் ‘புறா’ணத்தைப் பதிகிறேன். கூடவே, நாயகம் (சல்) பற்றி சமீபத்தில் அவர் எழுதிய நல்ல கவிதையையும்.
‘நாகூர் புராணம் யார் எழுதியது?’ என்று யாராவது கேட்டால் குலாம் காதிர் நாவலர் என்று சொல்லி விடுவார்கள். ‘நாகூர் புறாணம் யார் எழுதியது?’ என்று கேட்டால் அவரது பக்கத்து வீட்டுக்காரர் என்று சொல்லி விடுங்கள். அப்புறம்.. புறாவைப் பற்றி பதிவு போடுகையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்படுத்தி என் பிரா ணனை வாங்கி விடாதீர்கள். போட்டோவைப் பற்றிய குறிப்பு : நான் அரபு நாட்டிற்கு வரப் போகிறேன் என்று இரண்டு வயதிலேயே என் ESP பவர் சொல்லியிருக்கும் போல! ‘ – அப்துல் கய்யும்
***
நாகூர் ‘புறா’ணம்
அப்துல் கய்யும்
நாகூர் தர்காவுக்குள் நான் கண்ட காட்சி இது. வெளியூர்க்காரர் ஒருவர் புறாவை விடுதலை(?) செய்வதற்கு நேர்த்திக்கடன் செய்துக் கொண்டார் போலும். காசு கொடுத்து புறாவை வாங்கி, கையை வானுக்குத் தூக்கி பக்தியாக பறக்கவிட்டார். நாலடி கூட பறந்திருக்காது. தரையில் வந்து அமர்ந்துக் கொண்டது.
“சே! இதைக் கூட ஒழுங்காக பறக்கவிட நமக்குத் தெரியவில்லையே!” என்று தன்னைத்தானே அவர் நொந்துக் கொண்டிருக்க வேண்டும். இம்முறை சரியாக பறக்க விடவேண்டும் என்ற வைராக்கியத்தோடு, ‘தம்’ பிடித்துக் கொண்டு, கைகளை கூடிய மட்டும் பின்னுக்கு இழுத்து, பலம் கொண்ட மட்டும் கைகளை மேலாக தூக்கி மீண்டும் பறக்க விட்டார். இம்முறை ஒன்றிரண்டு அடி கூடுதலாக பறந்தது. ஆனால் மறுபடியும் கூண்டின் மேலேயே வந்து ஜாலியாக அமர்ந்துக் கொண்டது.
இவ்வளவு மோசமான ஆட்டக்காரராக இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். காசு கொடுத்தது தண்டமாகி விட்டதே என்று நினத்தாரோ என்னவோ தெரியாது. விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தைப்போல அவர் தன் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல் தென்பட்டார்.
புறாவை பலமாக பிடித்துக் கொண்டார். ஒலிம்பிக் பந்தயத்தில் குண்டு எறியும் போட்டியில் கலந்துக்கொள்ளும் வீரரைப் போல காட்சி தந்தார். கைகளை தாராளமாக அகல விரித்துக் கொண்டார். இன்னும் சற்று முயற்சி செய்தால் அவரேகூட பறந்திருக்கலாம்.
முக்கி, முனகி, மூச்சைப்பிடித்துக் கொண்டு மும்முரமாக இம்முறை பறக்க விட்டார். அது மறுபடியும் பறந்து வந்து பக்கத்தில் இருந்த மினாராவில் கைக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்துக் கொண்டது.
“இந்த மனிதன் உலகம் புரியாத மனுஷனாக இருக்கிறானே!” என்று புறா தன் மனதுக்குள் நினைத்து பரிதாபப்பட்டிருக்கக் கூடும். வீட்டுக்கு நான் வந்ததும் என் மனதில் பட்டதை கிறுக்கி வைத்திருந்தேன், படித்து பார்த்தபோது கவிதை போன்று இருந்தது.
பிரசவ வலியால் முனகும் தாய்க்குலத்தைப்போல கூண்டுக்குள் இருந்த அதன் சக கைதிகளின் முனகல் சப்தம் எனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது. சுலைமான் நபிக்கு தெரிந்திருந்த அந்த பறவை மொழி எனக்கும் தெரிந்திருந்தால் அதனை மொழிபெயர்த்து ஒரு பதிவாகவே போட்டிருப்பேன்.
எல்லையிலா வானம்
இவைகளுக்கிருந்தும்
இரண்டடி ஆக்கியது
என்ன நியாயம்?
சிறைப்பட்டுப் போகவோ
சிறகுகள்?
இவைகள்
சிறகுகள் இருந்தும்
“கிவி” பறவையான
கிலி பிடித்த புறாக்கள்!
தந்திரமாய்
தானியங்களைத் தந்து – இதன்
சுதந்திரத்தைப் பறித்தது யார்?
உயரே பறப்பதற்கு
உருவெடுத்த இவைகள்
உயிர்வதை படுவதற்கோ?
இந்த சமாதானத் தூதுவன்
ஆயுள் தண்டனை அனுபவிப்பது
எந்த பாதகச் செயலுக்காக?
இவைகள்
பரோலில் வெளிவருவதால்
ஆதாயம் என்னவோ
குத்தகைக்காரருக்குத்தான்.
வாயில்லா ஜீவன்களை
வறுத்தெடுத்தால்தான்
நேர்த்திக் கடன்கள்
நிவர்த்தியாகுமோ?
எந்த
இறைநேசர்கள் சொன்னார்கள்
இவைகளின் சிறகுகளை
இரக்கமின்றி ஒடிப்பதற்கு?
விடுதலையை
எட்டாக் கனியாக்கி
அடிமைத்தளத்தை இவர்களுக்கு
பட்டா போட்டுக் கொடுத்தது யார்?
இவர்களுக்கு
விடுதலை கீதம் பாட
எந்த மீசைக்காரனை
எழுந்து வரச் சொல்வது?
இவர்கள்
ஜீவனை கூண்டிலடைத்து
ஜீவகாருண்யத்தை அல்லவா
பறக்க விடுகிறார்கள்?
***
யார் இவர்?
சுட்டெரிக்கும் சூரியன் – அவர்
பட்டு மேனியைச்
சுட்டுவிடுமோ என்று
நடைபயின்ற நாயகத்தை
குடைபிடித்த மேகத்தை
இடை மறித்து கேளுங்கள்
விடையைக் கூறும் !
யார் இவர்?
வானில் உலாவரும்
வண்ண நிலாவை
வழிமறித்துக் கேளுங்கள்
தன்
தேகத்தையே இருகூறாய்
வகிர்ந்துக் காட்டும் ..
பிளந்துக் காட்டியதே – அந்த
பெருமான்தான் என
பெருமை கொள்ளும் !
யார் இவர்?
எச்சிலை வலையாய்ப் பின்னி
எதிரிகளிடமிருந்து
ஏந்தலைக் காப்பாற்றிய
எட்டுக்கால் பூச்சியை
எதிர்க்கொண்டு கேளுங்கள்
அந்த
ஈருலக அரசர்
யாரென்ற உண்மையை
பாரறிய பறைசாற்றும் !
எந்தத்
திருப்பெயரை செவிமடுக்கையில்
பெருவிரலின் நகக்கண்கள்
இருகண்களில் முத்தம் பதிக்குமோ
அந்தப் பெயருக்குச்
சொந்தக்காரர் இவர்
மதுரமான இப்பெயரை
அதரங்கள் உச்சரிக்க
சதுரமெலாம் பூரிக்கும்
இந்த
வீரிய விதை
பூமியில் விழுந்ததால்
இசுலாமெனும் ஆலமரம்
விசுவரூபமெடுத்து
விருட்சமாகியது
இவர்
கால் பதித்த இடமெல்லாம் – இன்று
கனிம வளம்
பாதம் பட்டதினால்
பாலைவனமெல்லாம்
சோலைவனம்
இரத்தினக் கற்களை
ஆபரணமாக்கி
ஆடம்பரமாய் வாழ்ந்த
அரசர்களுக்கு மத்தியில்
பாடாய்ப்படுத்திய
பசியைப் போக்க – வயிற்றில்
பாரக்கற்களை கட்டிக்கொண்ட
பரந்த தேசத்து பேரரசர் இவர்
இவர்
செங்கோல் செலுத்திய
ஆட்சியின் மாட்சியை
ஏட்டில் வரைத்திட
எழுதுகோல் காணாது
எடுத்துரைக்க
எஞ்சியுள்ள வாழ்நாளும்
எமக்குப் போதாது
சரித்திர நாயகர்களில்
இவருக்குத்தாம்
முதலிடம்
வரலாற்று பக்கங்கள் -
வரிந்து வந்து
திறந்த நெஞ்சில் – இவரது
வாழ்நாட் சாதனையை
பச்சை குத்திக் கொண்டதோ?
ஒரு விடியலைத் தந்த
குளிர் நிலவு இது
இறைவனின் தூது
இவரால்தான் நிறைவு
இவரது
அரியாசனத்திற்கு
சரியாசனம் .. ..?
ஊஹும் ..
எதுவும் கிடையாது
அண்டவனின்
அருள் மழையில்
அருட் கொடையாய்
வந்த மழைத்துளி
அகிலமே இதில் நனைந்தது
ஆதாயம் தேடி
இவரது உபதேசம்
சென்றடைந்தது பலதேசம்
இவரது இறைபோதம்
பாவக்கறைகளை
போக்கிவிடும் சவுக்காரம்
பாரசீக சல்மானையும்
ரோம நாட்டு சுஹைலையும்
அபிசீனிய பிலாலையும்
அன்பால் ஈர்த்த
ஐக்கியப் பேரவையின்
அதிபர் இவர்.
சர்வதேச பேரவையின் – இந்த
சர்தாரின் விரலசைப்பிற்கு
சகல உடமைகளையும்
சத்திய வழியில்
தியாகம் செய்தனர்
திண்ணைத் தோழர்கள்.
“இறைவனும்
இறைவனின் தூதரும்
இருப்பது போதும்” என்று
இருந்த செல்வம்
எல்லாவற்றையும்
ஈந்து மகிழ்ந்த அபூபக்கரின்
ஈடற்ற அன்புக்கு
உரித்தானவர் இவர்
எந்தப் பல் வீழ்ந்ததென்று
ஏதும் அறியாது – தன்
சொந்தப் பல் அத்தனையும்
ஒவ்வொன்றாய் தகர்த்துக்கொண்ட
உவைசுல் கர்னியின்
உண்மையான அன்புக்கு
உவப்பான மனிதரிவர்
அழுது அழுது
பழுதான கண்கள்
தொழுது தொழுது
துவண்டுப்போன கால்கள்
படைத்தவனுக்கு முன்
பதைபதைத்த – இந்த
பரிசுத்துவானின்
பயபக்திக்குமுன்
பாவமூட்டைகளைச் சுமக்கும்
நம் இறையச்சம் எம்மாத்திரம்?
“பகலவனை ஒருகையில்
பால்நிலவை மறுகையில்
பகிர்ந்தெமக்குத் தந்தாலும்
பற்றியுள்ள கொள்கையினை
சற்றும் விடமாட்டோம்” என்று
சூளுரைத்த சீலர்
எஃகைக் காட்டிலும்
இறுக்கம் கொண்ட
ஈமான் பலம் கொண்ட
கோமானின் நெஞ்சம்
இலவம் பஞ்சைக் காட்டிலும்
இலகிப்போன உள்ளம்.
ஆருயிர் சிறிய தந்தை
வீரமிகு ஹம்ஸாவின்
மாரைப் பிளந்து
ஈரற்குலையை எடுத்துருவி
ஆரமாக்கி அணிந்து
ஆனந்தக் கூத்தாடிய
அல்லிராணி ஹிந்தாவை
அன்போடு மன்னித்த
அண்ணலாரின் இதயம்
அகிலமே வியக்கும் அதிசயம் !
ஹீரா குகை தவசி
சீறா புகழ் குறைஷி
வாராது வந்த மாமணி – இந்த
பாருலகம் போற்றும் மாமுனி
இறைமறைக்கு
விளக்கவுரை
எழுத நினைத்த இறைவன் – அதை
இரத்தமும் சதையாக்கி
இரசூலை அனுப்பினான் போலும்.
ஆறடி அகலம்
ஏழடி நீளம்
அரபகம் ஆண்ட இந்த
அண்ணலாரின் உறைவிடம்
உடுத்த ஒரு அங்கி
உலர்த்த ஒரு அங்கி
ஒட்டுத்துணி உடுப்பு
ஒன்றோ இரண்டோதான்
இவரது வஸ்திரம்
காலடியில்
பொக்கிஷங்கள் கிடந்தபோதும்
காய்ந்த ரொட்டிதான்
இவரது வஜீபனம்
ஓலைப்பாயே இவரது
சிம்மாசனம்
பள்ளிவாயிலே
தலைமைச் செயலகம்
வீட்டுத் திண்ணையும்
ஈச்ச மரத்தடியும்தான்
நாட்டை ஆண்ட இம்மன்னரின்
கோட்டை கொத்தளம்
தானே துணிதுவைத்து
தானே தையலிட்டு
தானே பால் கறந்த
தானைத் தலைவரை
நானிலமே வியக்கிறது !
பாதுகையை செப்பனிட்ட
பாதுஷாவை
படித்ததுண்டோ வரலாற்றில்?
எளிமையே இனிமையென
இன்பம் கண்டவர்
இவர்போல் எவருளர்?
***
நன்றி : அப்துல் கையூம்