செந்தமிழ்: சிறந்த தாய் – ஏ.ஹெச்.ஹத்தீப்

‘சமநிலைச் சமுதாயம்’ இதழில் (Nov’09) வெளியான கட்டுரை…

***

adhimoolam-a

செந்தமிழ்: சிறந்த தாய்

ஏ.ஹெச்.ஹத்தீப்

தமிழனால் தமிழுக்குப் பிரச்னையா அல்லது தமிழால் தமிழனுக்குப் பிரச்னையா என்பது மோனலிஸாவின் புன்னகை மாதிரி; அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து ஒரு முதுமொழிக்குத் தன் குழந்தைகள் செய்யும் அடாவடித்தனத்தைவிட வேறு சோதனை எதுவும் இருக்க முடியாது.  செம்மொழி என அடையாளமிடுவது, அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தையும் பண்பையையுமே பொறுத்து அமைகிறது. தொன்மை, ஒழுக்கம், நேசபாவம் போன்ற அணிகலங்களுடன் தனது இனத்தையும் அணைத்துச்செல்லும் மனப்பாங்கு ஆகியவைதான் செந்தமிழனின் அடையாளங்கள் என்று வானளாவ யாராவது புகழ்ந்தால் தமிழால் தமிழன் செம்மையாகச் செப்பனிடப்பட்டிருக்கிறான் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஆனால் நிலைமை அப்படியில்லை. ‘என் தமிழ்’ என்று இறுமாப்பும் பெருமிதமும் கொள்வதற்கு எந்தத் தமிழனும் எந்தத் தமிழனையும் விடமாட்டான் போலிருக்கிறது. இது துரதிருஷ்டவசமானது. சரியான இலக்கணமோ நெடிய வரலாறோ இல்லாத மொழி பேசும் மக்கள்கூட தனது தாய்மொழிக்குப் புகழ் சேர்க்கிறார்கள். கிரேக்கம், சீனா, அரபி, ஆங்கிலம், பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய செம்மொழி சார்ந்த மக்கள் அப்படித்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் செந்தமிழ் மட்டுமே தனது மக்களைச் சீராகச் செதுக்கவில்லையோ என்ற ஐயமும் அச்சமும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.

‘தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயார்’ என்று மேடைகளில் வீராவேசம் பொங்க உரையாற்றுகிற சில தீவிரத்தமிழர்கள், “உங்களின் கூற்றுக்கு என்ன ஆதாரம்?”என்று தீப்பந்தம் ஏந்தலாம்-அதுவே ஆதாரம் என்று உணராமல்.தர்க்க சாஸ்திரத்தின் துணையோடு விவாதம் புரிபவர்கள் வேண்டுமென்றே நிஜத்தைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழை வளர்ப்பதற்கும் பரவச்செய்வதற்கும் வாய் வலிக்கக் கத்துவதற்குப் பதிலாக அன்பொழுக அறைகூவல் விடுக்கலாம். அதை விடுத்துவிட்டுப் புறக்கணிப்பதற்கும் பகிஷ்கரிப்பதற்கும் தமிழொன்றும் ‘தவறிப் பிறந்த குழந்தையல்ல’. கிரேக்கம் இந்த உலகத்துக்கு அரிய அறிவாற்றலை வழங்கியதுபோல், சீனா ஒழுக்கத்தின் உன்னதத்தையும் உழைப்பின் மகத்துவத்தையும் உணர்த்தியதுபோல் தமிழ் தனது மக்களைச் சிறப்பாகச் செப்பனிடவில்லை என்று கூறுபவர்கள், நம்மிடையே மலிந்து கிடக்கும் மனக்கசப்பையும் தீவிர விரோதப்போக்கையும் தெளிவாக உணர்ந்திருப்பார்கள் போலும். அவர்களது வாதத்தை மறுப்பதற்குத் தமிழனிடம் வேறென்ன ஆதாரம் இருக்கிறது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பெருமைக்கும் போற்றுதலுக்கும் முற்றிலும் தகுதி படைத்த தமிழனுக்கு இந்த இழிநிலை யாரால் வந்தது என்ற அமிலப்பரிசோதனையில் இறங்கினால், நிச்சயம் அரசியல்வாதிகளின் முகங்கள்தான் நிழலாடுகிறது. ‘அன அரப்’ என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அராபியர்கள் கூறும்போது, ‘நாங்கள் உலகத்தை ஆளப் பிறந்தவர்கள்’என்ற ஆணவம் தொனிக்கும்.’அரபுக்காரன் மடையன்’ என்று அங்கே பிழைப்புத் தேடிச் சென்றவர்கள், ஆற்றாமையில் பிதற்றுவதையெல்லாம் ஆதாரங்களாக ஏற்க முடியாது. ஆங்கிலேயர்கள் உலகத்துக்கே நாகரிகம் போதித்தவர்கள். ஆங்கிலம் இந்தத் தேசத்தை ஆளவில்லையெனில் ரொம்பப்பேர் மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள். ஆங்கிலம் நம்மைச் செம்மைப்படுத்தியதை நினைவு கூர்வதற்காகச் சொல்லப்பட்டதை வைத்துக்கோண்டு வெள்ளையன் நம்மை ஆண்டதை நியாயப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

வீரியத்திலும் சரி; ஆளுமையிலும் சரி; தமிழ் பிற எம்மொழிக்கும் சளைத்ததோ இளைத்ததோ அல்ல. ஆனால் தமிழர்கள் மற்றவர்களால் அடி படுகிறர்கள். அடிமைப்படுகிறார்கள். அல்லது அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சிதறுகிறார்கள். தமிழனின் இயல்புகளை விளக்குவதற்காக ஒரு பிரசித்தமான தவளைக்கதை சொல்வது நீண்டநாளைய தமிழ் மரபு. ஒரு தமிழன் சொல்வான். ஆயிரம் தமிழன் சற்றும் லஜ்ஜையின்றிச் சிரிப்பான். மேலே ஏற முடியாமல் ஒருவன் காலை இன்னொருவன் கீழே இருந்து இழுப்பது உலகத்துக்கு நாகரீகம் கற்றுத் தந்த தமிழனின் பரம்பரைக்குணம் மாதிரிச் சித்தரிக்கப்படும். எந்த தமிழறிஞனும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டான். ஏனெனில் அதுதான் தமிழ்ப்பற்று.இது உலகலாவிய நித்யக்காட்சி.

மராட்டியர்கள் தனது மொழியால் ஒன்றாக இணைக்கப்பட்டுத் தேசியத்தையே துறக்கத் தயாராக இருப்பதைச் சமீபகாலமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். மளையாளிகள் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்தால், அவர்கள் வேறொரு நாட்டவர்கள்போல் நடந்துகொள்வது தெரியும். “நீங்கள் எந்த நாடு” என்று கேட்கப்பட்டால், பதில்: “ஞானு மலையாளியாக்கும்.” இந்தி பேசுபவர்கள், இந்தி பேசாதவர்களை இந்தியர்கள் என்றே ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் தமிழன் மட்டும்தான் தங்களுக்கிடையில் தமிழல்லாத வேறொரு பொருளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துத் தங்களைப் பல்வேறு கூறுகளாக்கிக் கொள்கிறான். ‘இல்லை’என்று மறுப்பவர்களுக்கு யதார்த்தம் புரியவில்லை என்றே அர்த்தம்.

பதச்சோற்றைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை: தமிழ் செம்மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பின்னர், உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டுமென்று தமிழக அரசு விரும்புகிறது. தமிழ் மாநாட்டை நடத்துவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரமோ தகுதியோ இல்லை என்றுரைப்பது, வானத்தை நோக்கிக் காறித் துப்புவதற்குச் சமம். இ.பி.கோ. 302 பிரிவின்கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல அது. கலைஞரின் அறிவிப்பில் சுயநலம் இருக்கலாம். அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி கலந்திருக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தனது அரசியல் எதிரிகளைப் புறந்தள்ளுகிற ராஜத்தந்திரத்தை முற்றிலுமாகப் புறக்கணிப்பதற்கில்லை.இதே இழிகாரியத்தைத் தமிழகத்தை ஆண்ட எல்லோரும் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஏதோ கடல் கடந்த நாடு ஒன்றில், கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்க்குழு ஒன்றுதான் மாநாட்டை நடத்த வேண்டுமென்று சத்தமிடுவதும் சட்டமிடுவதும் ஏற்புடையதல்ல. தமிழகத்துத் தமிழர்களை அன்னியராக்கும் இத்தகைய எதிர்ப்பும் ஆட்சேபனையும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; கேலிக்குரியதும்கூட.

“இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் சாகக் கிடக்கிறார்கள். மலேசியாவில் தமிழினம் ஒடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகிக் கிடக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் உலகத் தமிழ் மாநாடு ஒரு கேடா?”என்ற பாணியில் விலாசித் தள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் விசனத்திலும் அக்கறையிலும் அரசியல் கலப்பு இல்லையென்றால் ஆட்சேபனை எதுவுமில்லை. மரத்தமிழன் வைகோவும் அதே உச்சஸ்தாயில் “ம.தி.மு.க.வும் புறக்கணிக்கிறது” என்று கத்துகிறார்கள். ஏற்கனவே கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டதால் மருத்துவர் ராமதாஸ் மட்டும் வாயைத் திறக்கவில்லை. இந்த விஷயத்தில் இடதுசாரிகள் தேவலாம்.ஆனால் மாநாட்டை தமிழக அரசியல் கட்சிகள் பகிஷ்கரிப்பதாலும் தடுத்து நிறுத்துவதாலும் அல்லல்படும் உலகத் தமிழர்கள் எப்படி நிம்மதிப் பெருமூச்சு விடப்போகிறார்கள் என்பதை அவர்கள் விளக்கத் தவறிவிட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்குப் புனர்வாழ்வு கிடைப்பதற்கும் சமவாய்ப்பு அளிப்பதற்கும் அந்த அரசைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. ராஜபக்க்ஷேயைக் கொடுங்கோலன் என்றும் இனத்துரோகி என்றும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் காறி உமிழ்ந்துவிட்டு ஈழத்தமிழர்களுக்கு எப்படி நன்மை செய்ய முடிமென்று தோன்றவில்லை. தமிழகம் வருகை புரிகின்ற மலேசிய எழுத்தாளர் குழுவினர், “நாங்கள் சமமரியாதையுடன் நடத்தப்படுகிறோம். மலேசிய அரசு எங்களிடம் எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை” என்று பிரமாண வாக்குமூலம் அளித்த பின்னரும் அதை ஒரு பிரச்னையாக்குவது மலேசியத் தமிழர்களுக்கு நாம் உதவுகிறோம் என்ற போர்வையில் அவர்களது இருண்ட எதிர்காலத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொண்டிருக்கிறோம் எனப் பொருள். அமெரிக்காவிலாகட்டும் அல்லது ஐரோப்பாவிலாகட்டும் தமிழர்கள் நிம்மதியாகவும் செழிப்பாகவும் வாழ்கிறார்கள் என்பது தெள்ளிய புள்ளிவிவரங்கள். தவிர, தமிழினத்தின் செயற்கையான துயரத்திற்காகத் தமிழக இனத்தலைவர்கள் தங்களது கொண்டாட்டங்களை நிறுத்திக்கொண்டதாகவோ அல்லது தத்தமது ஆதரவாளர்களுக்கு அவ்வாறு அறைகூவல் விடுத்ததாகவோ தெரியவில்லை. ஆக, செம்மொழி மாநாட்டை ரத்து செய்யக்கோரும் கோரிக்கைக்குப் பின்னால் புலன்களுக்குப் புலப்படாத வேறு ஏதோ காரணமிருக்கிறது. ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம் மட்டுமே மாநாட்டை நடத்தத் தகுதி படைத்தது’ என்று வேண்டுமென்றே பிடிவாதம் பிடிப்பதிலிருந்து இதை உணர முடிகிறது.

தமிழுக்கு மகுடம் சூட்டும் இத்தகைய விழாக்களின்போது குழாயடிச் சண்டையைத் தவிர்ப்பதும், நிகழ்வுகளில் உளச்சுத்தியோடு பங்கேற்பதும் தமிழ் தமது சமுதாயத்தை நன்கு செம்மைப்படுத்தியிருக்கிறது என்பதற்கான சான்றுகள். தங்களது மொழி மாநாடு நடந்தால்-அவர்கள் கன்னடத்துக்காரர்களோ தெலுங்குக்காரர்களோ அல்லது இந்திக்காரர்களோ- அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று திரளும்போது, தமிழனுக்கு மட்டும் அந்தக் கொடுப்பினை ஏன் கிடைக்க மாட்டேனென்கிறது?ஒருவேளை மற்றவர்களைக் காட்டிலும் தமிழன் மட்டும் தமிழின்பால் பற்றற்றவனோ?

தமிழ் ஒரு தாய். அவள் பல குழந்தைகளை ஈன்றெடுத்திருக்கலாம். அவர்களுக்குள் கருத்துமோதல்களும் சச்சரவுகளும் தவிர்க்க முடியாதவை. என்றாலும் அன்னையைக் கொண்டாடுவதிலிருந்து முற்றிலுமாகப் பின்வாங்குவது எப்படிச் சாத்தியம்? குழந்தைகள் புரியும் தவறுகளுக்கு தாயின் வளர்ப்பு சரியில்லை என்று இக்காலமும் எதிர்காலமும் பழிக்காதா?

தமிழ் செம்மொழி என்றால் தனது குழந்தைகளையும் செம்மைப்படுத்தட்டும்.

***

நன்றி : சமநிலைச் சமுதாயம் ,  ஏ.ஹெச்.ஹத்தீப்

ஐயத்திற்கப்பால்… – ஏ.ஹெச்.ஹத்தீப்

dear abedheen,

although actually this article was written 3 months ago, when the
subject was alive and hot, now only published (’samanilai samuthaayam’ October 2009 ). our readers, i hope, will enjoy even now.

anbudan

 hatheeb

***

ஐயத்திற்கப்பால்…

ஏ.ஹெச்.ஹத்தீப்

“தகவலறியும் சட்டத்தின்கீழ் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்” என்று மக்களவை நிலைக்குழு அறிக்கை வெளியிட்டதுமே அலறிப் புடைத்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது வேறு யாருமல்ல; இந்தியாவின் உச்ச நீதிமன்றம்தான். அத்தோடு நிற்காமல், நிலைக்குழுவின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேசத்தின் உச்சநீதிமன்றமே வழக்குத் தொடுத்திருப்பது ஓர் உச்சப்பட்ச யுத்த சாகஸம். சமுதாயத்திலும் அரசியலிலும் படிந்து கிடக்கும் அழுக்குகளைச் சுத்திகரிக்கும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த உச்சநீதிமன்றம் இதுபோன்ற சர்ச்சைகளிலும் ஏன் தன்னை ஏடுபடுத்திக் கொள்கிறது என்பதற்கு விடை தெரியவில்லை. தவிர, நீதிப் பரிபாலன அமைப்பே முற்றிலுமாகச் செயலிழந்து விட்டாற்போல், ‘நீதிமன்றங்களின் நண்பர்’ என்ற முறையில் தங்களுக்கு உதவிட மூத்த அரசியல் சாசன நிபுணர் ஃபாலி எஸ். நாரிமனுக்கு ‘என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றுங்கள்!’ என அபயக்குரல் வேறு கொடுத்திருக்கிறது.

இத்தகைய அரிய,அதிசயிக்கத்தக்க நடைமுறைகளால் சமுதாயத்தின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் தேவையற்ற ஐயங்களையும் நாட்டின் உயரமைப்பான உச்ச நீதிமன்றமே கணிசமாக உற்பத்தி செய்திருக்கிறது என்று சொல்வது மிகையல்ல. தேசத்தின் தலைமை நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் ஒருபடிமேலே போய், “நிலைக்குழுவின் ஆணைக்கு நீதிபதிகள் அடிபணிய வேண்டியதில்லை” என்று வேறு மத்திய அரசுக்கெதிராகப் புலன்களுக்குப் புலப்படாத யுத்தமொன்றைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார். தகவல் அறியும் சட்டத்தின்கீழ் எந்த ஓர் இந்திய குடிமகனும் எந்த ஒரு துறையிலிருந்தும் விவரங்கள் பெற முடியுமென்று சட்டம் இயற்றிய பின்னர் “ அந்தச் சட்டம் எனக்கு மட்டும் பொருந்தாது” என்று யார் கூறினாலும் சந்தேகவலையில் சிக்கிக்கொள்ளப் போவது உறுதி. அதிலும் தேசத்தின் ஆத்மாவான நீதிமன்றங்கள் இவ்விஷயத்தில் முரண்டு பிடிப்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது. நீதியரசர்கள்மீது ஐயம் கொள்ளலாகாது என்பது வேறு; சந்தேகத்துக்கு இடந்தராமல் அவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டியதில்லை.

இதெல்லாம் ஆறு மாதங்களுக்குமுன் நிகழ்ந்த பழங்கதை என்றாலும், “லஞ்ச ஊழல் புரியும் நீதிபதிகள் தண்டனை பெறும் சட்டம் வரும்” என்று புதிய மத்திய சட்ட அமைச்சர் எதிர்த்தாக்குதல் தொடுத்தபிறகுதான் விஷயத்தின் ஆழமும் அகலமும் விழிகளை விரிய வைக்கின்றன.

நீதியரசர்கள் அனைவரும் மாசுபடாத ‘நுனிப்புல் பனித்துளி’ என்று போற்றிப் புகழ்ந்த காலம் ஒன்று இருந்தது.அதை மீண்டும் நினைவு கூர்வதோ நினைவு கூறும்படியான சம்பிதாயங்களை வலுக்கட்டாயமாகத் திணிப்பதோ கிராமத்திலுள்ள இரட்டைத் தம்ளர்முறையைப் பாதுகாப்பது போன்றது.  இந்தியாவில் இப்போது நடைமுறையிலுள்ள பெரும்பாலான சட்டங்கள், தங்களுக்குப் பிடிக்காத மக்கள்மீது பாய்வதற்காக வெள்ளையர்களால் தீட்டப்பட்டவை. நீதிபதிகளும் சுதந்திரத்துக்குமுன்பாக எப்படி இருந்தார்களோ, எவ்வாறு இயங்கினார்களோ ஏறத்தாழ அப்படித்தான் இப்போதும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ‘விக்’ மட்டும் அணிவதில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஊரைக் காலி செய்துவிட்டுப் போகும்போது வெள்ளைக்கார விரோதிகள் நம்மிடம் விட்டுச் சென்ற ஷைத்தானியப் பிரச்னைகள்-  ‘வெள்ளையன்’ என்கிற நிறவெறி, ‘ஆண்டான்’ என்கிற அதிகாரத் துவேஷம், ‘படித்தவன்’ என்கிற மமதை போன்ற தீமைகளுடன், நீதியரசர்களைச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் வினோத வழிபாட்டுமுறையும் தனது சீதனமாக விட்டுச் சென்றுள்ளனர்.சொர்க்கத்திலிருந்து பொத்துக்கொண்டு குதித்த ‘தேவப்புத்திரர்கள்’ என்று நீதிபதிகளுக்கு பிரிட்டிஷார் குத்திய ராஜ முத்திரை இன்றுவரை இடிபாடுகளுக்கோ இடர்ப்பாடுகளுக்கோ இரையாகாமல் பொக்கிஷம்போல் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது குறித்து ஆட்சேபணையோ எதிர்ப்போ ஏதுமில்லை என்றாலும் அவர்கள் வேறொரு கோளத்திலிருந்து வந்தவர்கள் என்பதைப்போல் நடந்துகொள்வதோ நடத்தப்படுவதோ இப்போதைக்கு ஏற்புடையதா என்ற கேள்வியில் ஓரளவுக்கு நியாயம் இல்லாமலில்லை. நீதிபதிகள் இந்தியச் சமுதாயத்திலிருந்தும், இந்தியச் சூழலிருந்தும் ‘தனித்தவர்கள்’ என்பதற்கு அடையாளமாக அவர்களது ஜாகைகள்கூட ஒரு தீவு போன்ற பகுதியில் அமைவது வழக்கம். தனது சமுதாயக் கடைநிலை ஊழியன் எத்தனை கொடுங்கோலனாக விளங்கினாலும் சரி; அவன்மீது இந்திய வமிசத்தின் சுட்டுவிரல்கூடப் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அந்தக் காலத்தில் பல அநியாயச் சட்டங்கள் அரங்கேறின.

அதெல்லாம் தொலைந்துபோன கடந்த காலம்.
வெள்ளையர்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு, அவர்களது குணங்களையும் செயற்பாடுகளையும் தத்தெடுத்துக் கொள்வது அவலத்திலும் அவலம். நம்மவர்களுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தபோதே அவசரத்தின் அவசியம் உணர்ந்து ஒப்பனையைச் சரியாக முடிக்காமல் வெள்ளையர்கள் வெளியேறி விட்டனர். ஆண்டதற்கு அடையாளமாக இங்கேயே விட்டுச் சென்ற  அவர்களது ஒப்பனை இன்றைய  சூழலுக்கும், இன்றைய தேசத்துக்கும், இன்றைய சமுதாயத்துக்கும் முற்றிலும் வித்தியாசமானவை; வினோதமானவை; அக்காலத்திய பழக்க வழக்கங்களோ மனோபாவங்களோ செயற்பாடுகளோ இப்போது ஒப்பிடுகையில் நிச்சயம் முரண்படுகின்றன.அதற்கேற்ப எல்லாவற்றையுமே, நீதித்துறை உட்பட அனைத்தையுமே  மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. மாற்றம் என்பதை எண்ணி அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. எந்தப் பொருளுக்கும் காலத்துக்குப் பொருந்துகிறாற்போல் ஒரு புதிய வார்ப்பு அளிக்க வேண்டியிருக்கிறது. ஒரு புதிய வடிவம் வழங்கவேண்டியுள்ளது. ஒரு புதிய பரிணாமத்துக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அதைக் கண்டு ஒளிவதோ மிரள்வதோ நீதிதேவதையுடைய கற்பின்மீது வெகுஜனங்களுக்கு ஐயத்தைத் தோற்றுவிக்கக்கூடும். நீதிப்பரிபாலன அமைப்பின் புனிதத்தின்பால் அது களங்கம் ஏற்படுத்திவிட்டால் அப்புறம் மொத்த தேசமும் நிர்க்கதியாகிப் போகும் என்பதில் சந்தேகமில்லை.

அரசாங்கத்துக்கும் நீதித்துறைக்குமிடையே திடீரென்று சலசலப்பு ஏற்பட்டுவிட்டாற்போல் தோன்றினாலும் ‘யார் பெரியவன்’ என்ற குழாயடிச் சண்டை 1984ஆம் ஆண்டே துவங்கிவிட்டது. என்றைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம், “ இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது. அவர் ஆறாண்டுகாலத்துக்கு மக்களவைக்குள் நுழைவதற்கே தகுதியற்றவர்” என்றதொரு விநோதமான தீர்ப்பை வழங்கிற்றோ அன்றையிலிருந்தே இரு வர்க்கத்தினரும் உச்சிமயிரைப் பிடித்துக்கொண்டு சண்டையிடுகின்ற மனோபாவத்தை தங்களுக்குள்ளே உருவாக்கி வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். இன்றைக்கு நீதிபதி பாலகிருஷ்ணன் பேசும் அதே உச்சஸ்தயில் அன்றைக்கு நீதியரசர் கிருஷ்ணய்யர்,  “ மேல்முறையீட்டு மனுதாரர் திருமதி இந்திரா காந்தி மக்களவை உறுப்பினர் என்பதைவிட ஓர் அரசாங்கத் தலைவர் என்பதாலேயே உச்சநீதிமன்றம் அதிகக் கவலைக்கொள்ள வேண்டியிருக்கிறது ” என்றுரைத்தார். ‘அவர் பிரதமராக இல்லாவிடில் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கியெறியப்படவேண்டிவரே!’ என்பதுபோல் இருந்தது அவரது கருத்து. அந்த வழக்கை உச்சநீதிமன்றம் கையாண்டவிதம், மூத்த வழக்கறிஞர்களும் தீவிர காங்கிரஸ்காரர்களுமான சித்தார்த்த சங்கர் ரே, ஏ.ஆர்.ஆந்துலே, சி.சுப்பிரமணியன், மோகன் குமாரமங்கலம்  போன்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும். அதனாலேயே, இந்திராவுக்குப் பதிலாக வேறொரு பிரதமரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் ‘கருணை’யுடன் வழங்கப்பட்ட வெறும் 20 நாட்கள் தடையுத்தரவு அவகாசத்தைச் செம்மையாகப் பயன்படுத்தி, உடனடியாக நாடாளுமன்றத்தைக்கூட்டி, ‘ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவைத் தலைவர் ஆகியோரது தேர்வு விஷயத்தில் இந்திய நீதிமன்றங்கள் மூக்கை நுழைக்க முடியாது’ என்றதொரு சட்ட உட்பிரிவை உருவாக்கி நீதிமன்றங்களின் கடைவாய்ப் பற்களை வெடுக்கென்று பிடுங்கினார் இந்திரா.அந்த யுத்தியைப் பிரயோகித்திராவிட்டால் அவர் அன்றைக்கே கரைந்து காணாமல் போயிருப்பார். ஆக,ஆதிமோதலுக்கு முக்கியக் காரணம் நீதிமன்றங்களே!

அதைத் தொடர்ந்துதான் ஆட்சியாளர்களும் நீதியரசர்களும் ஒருவரையொருவர் ‘உர்’ரென்று பார்த்துக் கொள்ளத் துவங்கினர். இங்கே இந்திரா காந்தி செய்தது சரியா தவறா என்பதல்ல கேள்வி. தவறே செய்யாத அரசியல்வாதிகளுக்கு மகாத்மா என்று முத்திரையிடுவது இந்தத் தேசத்தின் வழக்கம். ‘மகாத்மா’ என்று அழைக்கப்படாத அரசியல்வாதிகள் அனைவரும் லஞ்சம் வாங்குவதற்கும் ஊழல் புரிவதற்கும் லைசன்ஸ் பெற்றுவிட்டார்கள் எனப்பொருள்.  இயல்பே தவறு புரிவது என்றாகிவிட்டபிறகு அவர்களைப்பற்றி விசனப்படுவதற்கும் வியப்புத் தெரிவிப்பதற்கும் பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை. இந்திய அரசியல்வாதிகளில் யாரேனும் திடீரென்று மனம் திருந்திப் ‘புனிதர்’களாகும்போது ஒட்டுமொத்தச் சமுதாயமும் கையெடுத்துக் கும்பிடும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியொரு பொற்காலம் வருமென்று நம்புவதற்குரிய அறிகுறி எதுவும் தென்படக் காணோம். எனவே அவர்கள் தண்ணீர் தெளித்து விடப்பட்டவர்கள். மனம் புழுங்குவதில் பலனில்லை.

ஆனால் நீதிபதிகள் அப்படியா?

அவர்களை நம்பித்தான் இந்த நாடே இருக்கிறது. அரசியல்வாதிகளாலும் அதிகார வர்க்கத்தினராலும்  பாதிக்கும்போதெல்லாம் வெகுஜனங்களுக்குமுன்னுள்ள இரண்டே வழிகள்: ஒன்று நீதிமன்றத்தை நாடுவது; அல்லது இறைவனிடத்தில் முறையிடுவது. இப்போது நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்கின் எண்ணிக்கையைக் கூர்ந்து கவனிக்கையில் நீதிபதிகளிடம் நியாயம் கிடைக்கும் என்பதைக் காட்டிலும் கடவுளிடம் கருணை பிறக்கும் என்பது மிகவும் மலிவாகிக் கொண்டிருக்கிறது. நீதிபதிகள் சந்தேகத்திற்கும் சலனத்திற்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்மென்று மொத்த மக்களும் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் 3 கோடி வழக்குகளை அவர்களிடம் சமர்ப்பித்துவிட்டு, நீதி கிடைக்கும் என்ற தளராத நம்பிக்கையில் வாழ்க்கையின் இறுதி நாட்களைஎண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குமுன்பே உயர்நீதிமன்ற வளாகம் துரு பிடிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த உச்சநீதிமன்றம் 10 கட்டளைகள் அடங்கியதொரு  வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது. நீதிபதிகள் ‘பசுமை’ குறையாமல் இருந்திருப்பார்களேயானால் உச்சநீதிமன்றம் திடீரென்று நடத்தை விதிமுறைகளை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. அதை நியாயப்படுத்துகிற வகையில் பல சம்பவங்கள்: தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவரே நீதித்துறையின் நிதியைத் தவறாகப் பயன்படுத்திய விவகாரம்; ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த இன்னொரு உச்சநீதிமன்ற நீதிபதி தான் ஃபோனில் மிரட்டப்பட்டதாகக்கூறி அழுத அதிர்ச்சிச் சம்பவம்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர்மீது முறைகேடு புரிந்த, கையூட்டுப் பெற்ற பல கொடுமையான குற்றச்சாட்டுக்கள்; ஒரு நீதிபதி அதையெல்லாம் தாண்டி இந்திய குடியரசுத் தலைவருக்கே சம்மன் அனுப்பிய கோமாளித்தனம்-இப்படி எத்தனையோ! இதெல்லாம் நீதிமன்றங்களுக்குள்ளும் ஊழல் பெருச்சாலிகள் நுழைந்துவிட்டார்கள் என்பதற்கும், நீதிபதிகளுக்குள்ளும் பலவீனர்கள் காணப்படுகிறார்கள் என்பதற்கும் ஆதாரங்கள்!

என்றாலும் அவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது. தவறிழைத்த, குற்றம் புரிந்த நிதியரசர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றாக வேண்டும். இவ்வளவு கடினமான சட்டப் பாதுகாப்பு வளையத்துக்குள் உலாவரும் அவர்கள், தங்களதுமீது தூசு படாமல் பாதுகாத்துக் கொள்வது எத்தனை அவசியம் என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது; நெருக்கடியும் கட்டாயமும் ஏற்பட்டால் அக்னிப் பிரவேசம் செய்வதற்குகூட அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் ‘சீசரின் மனைவி’ என்பதை மறந்துவிடக்கூடாது.

ஏனெனில், காவல்துறையின் கடைநிலை அதிகாரியிலிருந்து அரசியல் மாளிகையின் உச்சித் தளத்தில் வீற்றிருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அமைச்சர்ப் பெருந்தகைகள்வரை அத்தனை பேரும் அலட்சியமாகப் புரிகிற அநியாயங்களையும் அத்துமீறல்களையும் தட்டிக் கேட்பதற்கு 115 கோடி அப்பாவி மக்களுக்கு இருக்கிற ஒரே போக்கிடம்-

நீதிமன்றங்கள்தான்!

எனவே, ‘இவர்கள் யார் நமக்கு உத்தரவு போட?’என்று கேள்வி கேட்கிற சாக்கில் தங்களை அசுத்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.

**

நன்றி : ‘சமநிலைச் சமுதாயம்’, ஏ.ஹெச்.ஹத்தீப் | E- Mail : hatheeb@gmail.com

« பழைய வரவுகள்