கார்ட்டூனிஸ்ட் நஜி-அல்-அலி : கனன்றெரியும் கோடுகள்

பாலஸ்தீனக் கவிஞரான மஹ்மூத் தர்வீஸ் பற்றி அருமையான ஒரு பதிவு எழுதியிருக்கிறார்  நண்பர் ஜமாலன். படிக்கும்போது , எனக்கு பாலஸ்தீனத்தின் இன்னொரு மனசாட்சியாக விளங்கிய கார்ட்டூனிஸ்ட் நஜி-அல்-அலியின் முகம்தான் ஓடிக் கொண்டிருந்தது. மிகவும் பிடித்த இரண்டு கார்ட்டூனிஸ்ட்களில் ஒருவர். ( இன்னொருவர் கோவாக்காரரான , கோவக்காரர் அல்ல , Mario Miranda  . ஏகப்பட்ட நகல்கள் வரைந்திருக்கிறேன். ஆனாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தானே…)  சரி, தர்வீஸை விட நஜியின் மனசாட்சி இன்னும் தீவிரம் மிக்கது. அமெரிக்காவை விமர்சிக்கும் அதே நேரத்தில் அரபு நாட்டு அசட்டு மன்னர்களையும், ஏன், அர·பாத்தையும்  விமர்சித்த கோடுகளைக் கொண்டது. அதனாலேயே குவைத்திலிருந்து விரட்டப்பட்டு லண்டன் அல்கபஸ் பத்திரிக்கையில் பணிபுரிந்து வந்தவர், 22/07/1987 அன்று ,  சுட்டுக் கொல்லப்பட்டார். நாற்பதாயிரம் கார்ட்டூன்களுக்கு மேல் வரைந்த நிஜமான இந்த கலகக்காரனை கொன்றது யார் என்று ‘சரியாக’ இதுவரை தெரியவில்லையாம். தெரிந்தவன் ‘ஹன்ஸாலா’ ஒருவனாகத்தான் இருக்க முடியும். சூரியக் கதிர் போல் தலைமுடியும், கிழிந்த உடையும் கொண்டு வெறுங்காலுடன் அனாதையாக நிற்கும் பத்து வயசுப் பாலஸ்தீனப் பொடியன் ( பாலஸ்தீனத்திலிருந்து துரத்தப்பட்டபோது நஜியின் வயது பத்து). அவலங்களின் இடையில், எப்போதும் நமக்கு தன் பின்பக்கத்தை காட்டிக் கொண்டுதான் நிற்பான் , கார்ட்டூனை மட்டும் ரசித்து விட்டுப் போகும் நம் முகத்தில் அறைவது மாதிரி. இவனை எங்கும் நிறுத்தலாம், ஈராக்கில், இலங்கையில், காஷ்மீரில், குஜராத்தில், விரைவில் நாகூரில் !

‘ஹன்ஸாலா’வைப் படைத்த நஜி இப்படிச் சொன்னார் :

hanthala1

“The child Handala is my signature, everyone asks me about him wherever I go. I gave birth to this child in the Gulf and I presented him to the people. His name is Handala and he has promised the people that he will remain true to himself. I drew him as a child who is not beautiful, his hair is like the hair of a hedgehog who uses his thorns as a weapon. Handala is not a fat, happy, relaxed, or pampered child, he is barefooted like the refugee camp children, and he is an ‘icon’ that protects me from making mistakes. Even though he is rough, he smells of Amber. His hands are clasped behind his back as a sign of rejection at a time when solutions are presented to us the American way. Handala was born ten years old, and he will always be ten years old. At that age I left my homeland, and when he returns, Handala will still be ten, and then he will start growing up. The laws of nature do not apply to him. He is unique. Things will become normal again when the homeland returns. I presented him to the poor and named him Handala as a symbol of bitterness. At first he was a Palestinian child, but his consciousness developed to have a national and then a global and human horizon. He is a simple yet tough child, and this is why people adopted him and felt that he represents their consciousness.”.

‘ஹன்ஸாலா’ எப்போது தன் தலையைத் திருப்புவான் ? பார்க்க :  Naji Al-Ali (1936 – 1987)

நஜி-அல்-அலியின் கார்ட்டூன்களை இங்கே பார்க்கலாம்.  மேலும் பார்க்க வேண்டியது : The Life and Death of Naji Al-Ali  (அப்துல் கையும், இதை மொழிபெயர்த்து அனுப்புங்கள்)

யாராவது நஜியைப் பற்றி இணையத்தில் பதிந்திருக்கிறார்களா என்று தேடியபோது ‘கூகிள் அவுலியா’ கொடுத்தது இலங்கையை சேர்ந்த பத்திரிக்கையாளர்  பாஸிரா மைந்தன். சென்ற வருடமே பதிந்திருக்கிறார். பார்க்க ‘நஜி அல் அலியை நினைத்து..’ . ‘நஜீயின் தாயின் நிலை துயர் நிறைந்தது. அவள் பலஸ்தீனிலுள்ள தனது வீட்டுச்சாவியை அவளது கழுத்திலேயே தொங்கப்போட்டிருந்தாள். என்றாவது ஒரு நாள் தனது நாட்டிற்கு ,தனது வீட்டிற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை அவளிடம் இருந்தது’ என்கிறார்.

***

‘இறந்தவர்கள் கதை சொல்ல மாட்டார்கள்’  

கவிஞர் சேரன் / 10-8-1991 

(காலச்சுவடு வெளியீடான ‘உயிர் கொல்லும் வார்த்தைகள்‘ நூலிலிருந்து) :

portrait42நஜி-அல்-அலி அரபுலகின் மிகப் பிரபலமான, திறன் வாய்ந்த கேலிச்சித்திரக்காரராவார். அவருடைய பிரதானமான கருப் பொருளும் உருப் பொருளும் தவிர்க்க முடியாமல் பாலஸ்தீன மக்களே. பலவகையான தணிக்கைகளுக்கும் தடைகளுக்கும் உள்ளான போதும் கூட அரபுலகம் முழுவதும் ஆங்காங்கே அவரது கேலிச் சித்திரங்கள் இடம் பெற்றே வந்துள்ளன. லெபனானில் வாழ்ந்து வந்த நஜி-அல்-அலி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது குவைத்தில் தஞ்சம் புகுந்திருந்தார். குவைத்திலும் ஆட்சியாளர்களது போக்கிரித் தனங்களையும் இரட்டை வேடங்களையும் கேலிச் சித்திரங்கள் மூலம் அம்பலப் படுத்த முயன்றபோது லண்டனுக்குத் துரத்தப்பட்டார். எண்பத்தேழாம் ஆண்டு ஜுலை மாதம் லண்டனில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பாட்டார். துப்பாக்கிக்கும் பேனாவுக்கும் எதிரான ஒரு யுத்தத்தில் துப்பாக்கிக்கு ஒரு தற்காலிக வெற்றி கிடைத்தது (தற்காலிக வெற்றி என்பதே நிரந்தரமான தோல்வியின் அடிப்படை என்பது சுதந்திரக் கலைக்கும் கட்டித்து இறுகிப்போன அரசமைப்புகளுக்கும் இடையிலான வரலாற்றுப் போரின் வரலாற்றுப் பாடம் ?) நஜி-அல்-அலியைச் சுட்டுக் கொன்றவர்கள் இஸ்ரேலிய உளவுப் படையா? அல்லது சுதந்திரத்தையும் சுய விமர்சனத்தையும் வெறுக்கிற அரபுத் தீவிரவாதிகளா? என்பது இன்றுவரை திட்டவட்டமாகத் தெரியவில்லை.

நஜி-அல்-அலியின் கேலிச் சித்திரங்களில் அதிக அளவில் இடம் பெறுகிற ஒரு பாத்திரம் ஹன்ஸாலா என்கிற சிறுவன். அந்தச் சிறுவனுடைய பாத்திர உருவகிப்புச் சுதந்திரம், துணிவு என்பதன் என்பவற்றினது பாலஸ்தீனத்தின் குறியீட்டாகவும் விளங்குகிறது. ஹன்ஸாலாவின் தலை சூரியக் குஞ்சு போல ஒளி கிரகணங்களை வீசுகிறது. கொலை செய்யப்படுவதற்கு முன்பாக நஜி-அல்-அலி வரைந்த கேலிச் சித்திரம் ஒன்றில் சிறுவன் ஹன்ஸாலா அம்பு பட்டு வீழ்ந்து போகிறான். நமக்கு நன்கு பரிச்சயமான வில்லியம் தெல்லின் கதையை அடியொற்றிய அந்தக் கேலிச் சித்திரத்தில் சிறுவனின் தலையில் இருக்கிற ஆப்பிள் பழத்தை தாக்குவதற்கு பதிலாக அம்பு சிறுவனைத் தாக்குகிறது.

வீழ்ந்து கிடக்கும் சிறுவனின் அருகில் ஆப்பிள் பழம் சாவகாசமாக உட்கார்ந்திருக்கிறது. கொலை செய்யப்பட முன்பாக நஜி-அல்-அலி ஏன் இந்தக் கேலிச் சித்திரத்தை வரைய வேண்டும்? அவரே உருவாக்கிய பலஸ்தீனத்தின் நம்பிக்கை நட்சத்திரமான ஹன்ஸாலாவை ஏன் இப்படி ஒரு முடிவுக்கு அவர் கொண்டு வர வேண்டும்? நமது முன்னோர் கருதியது பொல உன்னதமான கலைஞர்களுக்கு ‘வருமுன் சொல்லும்’ தீர்க்க தரிசனம் உண்டுதானா? அல்லது நன்றும் தீதும் பிறர் தர வாராது. நாமே விளைவித்துக் கொள்வதுதான் என்று தன்னுடைய கடைசிச் செய்தியில் சொல்ல விரும்பினாரா?

இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் உறுதியான பதில் இப்போது இல்லை. எனினும் ‘இறந்தவர்கள் எந்த ஒரு கதையும்  சொல்லமாட்டார்கள்’ என்ற ஆங்கில வாக்கியம் அவ்வளவு உண்மை இல்லையென்று மட்டும் சொல்ல முடிகிறது. அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களும் , தங்களுடைய சுதந்திரமான நம்பிக்கைகளை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்க மறுத்ததால் உலகெங்கும் கொல்லப்பட்டவர்களும்,  எண்ணிறந்த கலைஞர்களும் சொல்வது இதுதான்: கடைசிக் கவிதையில் கவிஞன் சொல்வது குறைவு, சொல்லாதது அதிகம். சொல்லப்படாதவற்றில்தான் எதிர்காலம் பரிணமிக்கிறது. அந்தப் பரிணமிப்பில் இறந்து போனவர்கள் கதை சொல்ல மாட்டார்கள். காவியமும் நாடகமும் வரலாறும் படைப்பார்கள் – நஜி-அல்-அலியைப் போல.

***

நன்றி : சேரன் , காலச்சுவடு

***

ib460

நவீன ஓவியம் : சில விளக்கங்கள் – ஜோசப் ஜேம்ஸ்

chagall_iandthevillageஅந்தகாலத்தில் (இது ஒன்னு போதும், என் வயசைச் சொல்ல!) ’க்ரியா’ பதிப்பகம் சில கல்லூரிகளோடு இணைந்து ஓவியக் கண்காட்சிகள் நடத்திற்று. நவீன ஓவியம் பற்றிய குறிப்புகள் அடங்கிய பிரதிகளையும் வெளியிட்டது. ’க்ரியா’வும் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியும் சேர்ந்து நடத்திய ஓவியக் கண்காட்சியின் போது தரப்பட்ட குறிப்புகளை எழுத்தாள நண்பர் திலீப்குமார் அப்போது எனக்கு கொடுத்தார் (டெல்லியிலிருந்து திரு. வெங்கட்சாமிநாதன் அவர்களும் நவீனஓவியர்கள் பற்றி பல கையேடுகள் அனுப்பியதை நன்றியோடு நினைவு கூர்கிறேன். உதவி ‘ரவிஅண்ணன்’!) . அந்தத் துறையிலாவது உருப்படியாக ஏதேனும் பண்ணித் தொலை என்று அர்த்தம். ‘Promising & Budding Poet’  என்று , தான் சந்திக்க நேர்ந்த எழுத்தாளர்களிடம் அன்போடு சொல்லிச் சொல்லியே நான் கவிதைகள் எழுதுவதை நிறுத்திய புண்ணியத்தைக் கட்டிக்கொண்ட என் பிரிய திலீப், நான் ஏன் அதைச் செய்கிறேன்? வழக்கம்போலவே சேமித்து வைத்தேன். இத்தனை காலத்திற்குப் பிறகும் – ‘பதில்கள்’ புதிதாகவே  தெரிவதால் – டைப் செய்து இங்கே பதிகிறேன். யாருக்காவது புரிந்தால் சரிதான். நவீன ஓவியம் பற்றி  மோனிகா , வெ.சா எழுதிய கட்டுரைகள், மதுபாணி-காளிகாட்-சுவடி ஓவியங்கள் போன்ற மரபுஓவியங்கள் பற்றி – ஆயிரம் வந்தனங்களுடன் - அரவக்கோன் (ஓவியர் நாகராஜன் ) ராயர்கிளப்-ல் எழுதிய பதிவுகள் தமிழ் இணையத்தில் முக்கியமானவை . பார்க்கும் யாவற்றையும் வரையும் ஆர்வமுள்ள , அடிப்படை ஓவிய நுணுக்கங்களை மேலும் அறிய விரும்புகிறவர்களுக்கு இந்தக் கிறுக்கன் சிபாரிசு செய்கிற மிகவும்  எளிய புத்தகங்கள் ஓவியர் ஆழி. ராமசாமி எழுதியவை (சித்ரகலா பதிப்பகம், ஆழியூர்). குறிப்பாக ‘ஒரே மாதத்தில் ஓவியராகலாம்’, ‘உருவப் படங்கள் வரைவது எப்படி?’ போன்றவை. மிஞ்சிப்போனால் , ஒவ்வொன்றும், இப்போது முப்பது ரூபாய்தான் இருக்கும்; மூவாயிரம் ரூபாய் விலையுள்ள ஆங்கிலப்புத்தங்கள் சொல்லாததையெல்லாம் சொல்லும். கண்டிப்பாக ‘தமிழ்வீணன் பிரசுரம்’ வெளியிடும் நூல்கள் மட்டும் வேண்டாம். ’ஆழி’ சாரின் ஒரு புத்தகத்தை அப்படியே காப்பியடித்து ( கூடவே தனது மட்டமான கோட்டாவியங்களையும் இணைத்து) வேறு தலைப்பில் வெளியிட்டு அது பணம் பார்த்ததை ஆழி சார் பதட்டத்தோடு என்னிடம் சொல்லியிருக்கிறார். மறைந்த எழுத்தாளர் சு. சமுத்திரம் இது பற்றி கிழித்ததும் அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்களாம். மன்னிப்பு மட்டும். இது எப்போதும் , எல்லா துறைகளிலும், நடக்கும் சமாச்சாரம்தான். ஏன்,  சில மாதங்களுக்கு முன் , மறைந்த ஓவியர் ஆதிமூலத்தின் ஒரு ஓவியம் கூட சென்னை கேலரி ஒன்றால் அப்படியே நகலெடுத்து விற்கப்பட்டதாமே… [பார்க்க : ‘சித்திர எழுத்து’ அமைப்பு பற்றி அ. மார்க்ஸ்   (நன்றி : நாகார்ஜூனன்)]

ஒன்றுமில்லை, ஓவியத்தைப் பரப்போ பரப்போ என்று பரப்புகிறார்கள்…!

மறைந்த  பேரா. திரு. ஜோஸப் ஜேம்ஸ் இந்திய முன்னனி ஓவிய விமர்சகர்களில் ஒருவர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முக்கியமான ஓவியப் பத்திரிக்கைகளில் இவர் விமர்சனங்களும் கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்றன.

விளக்கங்களில் ’க்ரியா’ சொல்வதாவது :

’நவீன ஓவியம் நம்மிடையே இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பெரும்பாலோர் நவீன ஓவியத்தைப் புதிராகவும், அணுகமுடியாததாகவும் காண்கின்றனர். இங்கு தரப்பட்டிருக்கிற விளக்கங்கள் , அடிக்கடி நவீன ஓவியத்தைப் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கும், எழுப்பப்படும் ஐயங்களுக்கும் பதில் தர முயற்சிப்பவை. இந்தக் குறிப்புகள் மிகச் சிறிய துவக்கம் மட்டுமே என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகிறோம். நவீன ஓவியத்தைப் பற்றிய வித்தியாச உணர்வை நீக்கவும் , அதை தீவிரமான கலைச் சாதனமாகக் கருதவும் இவ்விளக்கங்கள் ஓரளவு பயன்படக்கூடும். இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். விளக்கங்கள் கோரப்பட வேண்டும். ஒரு பொது அக்கறைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகளுக்கு அவை காரணமாகட்டும்.’

’க்ரியா’வுக்கும், அணில்வால் பிரஷ்ஷூக்கும் நன்றிகள்.

’மற்றவர்களின் விளக்கங்கள் இருக்கட்டும், உன் விளக்கம் என்ன?’ என்று நீங்கள் என்னைக் கேட்டால் வரும் பதில் , ‘இம்மாதிரி விளக்கங்களைப் படிக்காதீர்கள்’ என்பதுதான். Take a Brush , ஏன், சின்னஞ்சிறு ரிமோட் கண்ட்ரோல் காரைக் கூட உபயோகிக்கலாம் !

- ஆபிதீன் -

***

நவீன ஓவியம் : சில விளக்கங்கள் – ஜோசப் ஜேம்ஸ்

எங்களுக்கு நவீன ஓவியம் புரியவில்லை.

உங்களுக்கு மரபு ஓவியம் புரிகிறதா என்று ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிலருக்கும் மட்டுமே அதன் தத்துவமும், கோட்பாடும் தெரிந்திருக்கின்றன. நீங்கள் சொல்லக்கூடியதெல்லாம், மரபு ஓவியம் உங்களுக்குப் பரிச்சயமானது என்பதுதான். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதல்ல. நவீன ஓவியத்துடன் நமக்குப் பரிச்சயமில்லை. உண்மையில் அதுதான் பிரச்சனை. மரபு ஓவியத்துடன் எவ்வளவு பரிச்சயப்பட்டிருக்கிறீர்களோ அவ்வளவு பரிச்சயத்தை நவீன ஓவியத்துடன் ஏற்படுத்திக் கொண்டால் இப்பிரச்சினை மறைந்து போகும். அப்படியும், நீங்கள் அதைப் புரிந்து கொண்டவர்களாகிவிட மாட்டீர்கள். அதை நாம் விமர்சகர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் விட்டு விடுவோமே.

இந்த நவீன ஓவியத்தைக் குழந்தைகள் கூட வரையலாம் போலிருக்கிறதே

இது உண்மையில்லை. பிகாசோ மாதிரி வரையக்கூடிய, அல்லது சகால் (Chagall) மாதிரி வண்ணம் இடக்கூடிய ஒரு குழந்தையைக் காட்டுங்கள் பார்ப்போம். ஆனாலும், குழந்தைகள் மாதிரி ஓவியம் வரைய முயலும் ஒவியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஏனென்றால். குழந்தைகள் எப்படி அழகாகப் புன்னகைக்கிறார்களோ, பேசுகிறார்களோ, அம்மாதிரியே அழகாக வரைகிறார்கள்., வண்ணமிடுகிறார்கள். பால்க்ளி (Paul Klee) போன்ற ஓவியர்கள் இதைச் செய்கிறார்கள். ஆனால் இது முனைந்து செய்வது; முன்கூட்டிய யோசனையின் விளைவாகச் செய்வது. இப்படிச் செய்வது குழந்தைகளின் இயல்பல்ல. அவர்களால் அப்படி இருக்கவும் முடியாது. அங்கங்கே வண்ணத் திட்டுகள், இங்கே ஒரு கோடு, அங்கே ஒரு கோடு என்றிருக்கும் ஓவிய்த்தை மனதில் கொண்டு, குழந்தைத் தனமான ஓவியம் என்று சொல்வீர்களேயானால், இது குழந்தைகள் செய்யக்கூடியதுதான். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், குழந்தைகள் இம்மாதிரி வரைய முனைவதில்லை, விரும்பவதில்லை (அவர்கள் தங்கள் கற்பனைக்குகந்த படங்களைத்தான் வரைகிறார்கள்). ஹார்ப்மன் (Hoffman), போல்லக் (Pollook) போன்ற ஓவியர்கள் இம்மாதிரிச் செய்ய விரும்புகிறார்கள் . படங்களை வரையக்கூடிய ஓவியர்கள், ஏன் குழந்தைகள் செய்யக்கூடிய, ஆனால் செய்ய விரும்பாத ஒன்றைச் செய்ய விரும்புகிறார்கள்? . இந்தப் புதிரை விடுவிக்க முயலுங்கள். இது உங்களை நவீன ஓவியத்திற்கு இட்டுச் செல்லும்.

நவீன ஓவியத்தை விளக்க முடியுமா?

முடியாது. கர்நாடக இசையை விளக்க முடியுமா? முடியாது. அதை நீங்கள் ரசிக்கத்தான் முடியும். அதே போலத்தான் நவீன ஓவியமும். ஏன், எல்லாக் கலைகளூம்தான். இவற்றை ரசிக்கக்கூடிய அளவிற்கு, ஒருவருக்கு உதவலாம்; ஒருவரைப் பயிற்றுவிக்கலாம். ஆனல் இதற்கு முயற்சியும் கட்டுப்பாடும் தேவை. அதற்குப் பிறகு நீங்களாகவேதான் இதில் ஈடுபடவேண்டும்.

ஒரு தத்ரூபமான படத்தைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது, புரிகிறது. ஆனால் நவீன ஓவியத்தைப் பார்க்க்ம்போது ஒன்றுமே தோன்றுவதில்லையே, புரிவதும் இல்லை.

ஒரு தத்ரூபமான படம் நாம் ‘படிக்கக்’ கூடியது. இது காது, இது இடதுகை, இது ஒரு கிளை, இது ஒரு பெண், இதுதான் அவர்கள் செய்வது என்பது போல். நம்மால் இப்படி புரிந்து கொள்ள முடிவதற்குக் காரணம், ஒரு படம் நமக்குத் தெரிந்த அல்லது நாம் யூகிக்க்கூடிய ஒரு படிமத்தை அல்லது ஒரு கதையைக் கொண்டிருப்பதும் அல்லது அதைச் சார்ந்திருப்பதும் ஆகும்.நவீன ஓவியம் இப்படி இந்த முறையில் ‘படிக்க’ கூடியது அல்ல. ஏனென்றால் இம்மாதிரிப் படிமங்களையோ அல்லது கதைகளையோ அது ஒத்திருப்பதில்லை. அது சம்பந்தப்படுத்துவது, அடிப்படையாகக் கொண்டிருப்பது, நாம் எதைப் பார்க்கிறோம், கற்பனை செய்கிறோம் என்பதல்ல; மாறாக, நாம் பார்க்ககூடிய விதங்கள் , கற்பனை செய்யக்கூடிய விதங்கள்  ஆகியவற்றைத்தான். அடிப்படையில் இது நம்முள் இருக்கும் உள்ளார்ந்த, ஆழமான ஒழுங்குணர்ச்சியைக் கொண்டது, இதுதான் நம்மால் பார்க்க, கற்பனை செய்ய, உருக்கொடுக்கக் காரணமாக இருக்கிறது. இந்த மாதிரி பார்க்கவும், உணரவும் நமக்கு ஊடுருவிப் பார்க்ககூடிய திறமை, முயற்சி தேவைப்படுகின்றன. ஒரு தத்ரூபமான படம், இதற்கு மாறாக, நமக்கு மிக நெருங்கியது; ஒரு கதை சொல்லும் – கேட்கும் விதத்தில் உடனடியான நேரிடைத் தன்மை கொண்டது.

நவீன ஓவியம் ஏன்?

ஏனென்றால், நம்மைப்பற்றியும், உலகைப் பற்றியும் சொல்ல இருக்கும் எல்லாவற்றையும் சொல்ல கதை-முறை, விவரனை முறை போதாது என்பதைத் தெரிந்து கொண்டதால்.

கதை-முறை, விவரணை-முறை ஏன் போதாது?

முன்பு எப்போதையும் விட, கடந்த நூறாண்டுகளில் அறிவு மிக வேகமாக, பரவலாக வளர்ந்து விட்டது. பல்வேறு துறைகளில் உளவியல், பௌதிக விஞ்ஞானங்கள், இயற்கையியல், சமூகவியல் முதலியவற்றில் உண்டான கருத்தங்கள், கோட்பாடுகள் மனிதனைப்பற்றி, வாழ்க்கையைப் பற்றி புதிதான தெளிவை உண்டாக்கியிருக்கின்றன. இவை நம் வாழ்க்கையை, சிந்தனையை தீவிரமாகப் பாதித்து, நம் அன்றாடச் சிந்தனையிலும் ஊடுருவி, கலந்து விட்டன. இவை கலையிலும் பொதுப்படையான அணுகுமுறையையும், பாத்திரப்படுத்தலையும் தவிர்க்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கி விட்டன. இதனாலேயே கதை முறை, விவரணை முறை சிக்கல் மிகுந்த இன்றைய வாழ்க்கையை எடுத்துச் சொல்லப் போதுமானதாக இல்லை.

நவீன ஓவியம் நம் கலாச்சாரத்தைச் சேர்ந்ததில்லை என்று நினைக்கிறேன். இந்த ஓவியர்களெல்லாரும் மேற்கத்திய கலாசாரத்தைச் சாயல் பிடிக்கத்தானே செய்கிறார்கள்?

தத்ரூப ஓவியத்திற்கும் நவீன ஓவியத்திற்குமுள்ள வேறுபாட்டை நினைவில் கொள்ளுங்கள். தத்ரூப ஓவியம் விவரணை-முறையைச் சார்ந்திருக்கிறது. நவீன ஓவியம் நம்முடைய ஒழுங்குணர்சியைச் சார்ந்திருக்கிறது. நவீன ஓவியம் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது என்று சொல்வது, நம் கலாச்சாரத்திற்கு ஒழுங்குணர்ச்சியைப் பற்றிய அக்கறை இல்லை என்பதாகும். இது தவறு. இந்திய மரபு ஓவியம் விவரணை முறையை, கதை சொல்லும் முறையை மிகக் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த விவரணை முறையைக் கையாண்ட கவிதையிலும், சிற்பங்களிலும், சிற்றோவியங்களிலும் (Miniatures) மிகக் தேர்ந்த, பண்பட்ட ஒழுங்குணர்ச்சி இருந்திருக்கிறது. இதை மிகத் தெளிவாகவே மரபுத் தொழிற்கலைகளில் காணலாம். நகைகள், துணி டிசைன்கள், உலோகப் பண்டங்கள், தமிழ் நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் பெண்கள் நினைவிலிருந்து வரையும் கோலங்கள் ஆகியவற்றில் இவற்றைப் பார்க்கையில், நம்முள் இருக்கும் ஒழுங்குணர்வை நாடும் நவீனத்துவம் நம் கலாச்சாரத்தைச் சார்ந்ததல்ல என்று சொல்ல முடியாது.

நவீன ஓவியம் ஒரு தீவிரமான கலைச்சாதனம் என்றால் அதை உருவாக்குவோரும், ரசிப்பவர்களும் மிகச் சொற்பம்தானே. அதாவது, இது ‘மேட்டுக்குடித்தனமையை’ உடையதுதானே. சாதாரண மக்களுக்கு இதனால் என்ன லாபம்?

இந்திய நவீன ஓவியம் இன்று படைக்கப்படுவதும், ரசிக்கப்படுவதும் சிறு குழுவினர் மத்தியில் என்பது உண்மை. ஆனால் இந்த மாதிரியான கலை நம் கலாச்சாரத்திற்குப் புதிது. கலையிலும் சரி, விஞ்ஞானத்திலும் சரி, எந்தப் புதுமாற்றமுமே வெகுஜன அளவில் துவங்குவதில்லை. கலாச்சாரத்தின் எந்தப் புதிய அம்சமும் ஒரு சிலர் மத்தியிலே உருவாகிறது. அந்த அர்த்தத்தில் வேண்டுமானால், கலாசாரத்தில் உருவாகும் மாற்றம் மேட்டுக்குடியினரைச் சார்ந்தது என்று சொல்லலாம். இந்த மாற்றம் பரவ, கலாச்சாரத்தை மாற்ற, காலமும், புதிய உணர்வுக்கூறுகளுக்குத் தேவையான உந்துதலும் அவசியமாகின்றன. சாதாரண மனிதன் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஒரு புதிய அம்சத்தைச் சேர்க்கும்போதுதான் கலை அவனைச் சென்றடைகிறது. அவனுடைய துணிமணிகள், வீடுகள், மேஜை நாற்காலிகள், பாத்திரங்கள், இந்தியாவில் நவீன ஓவியம் இவற்றையெல்லாம் பாதித்திருப்பதாகப் பொதுவாகச் சொல்ல முடியாது. இருந்தாலும் இன்றைய துணிகள், கட்டிடடக் கலை, உட்புற அலங்காரம், நகர்புற விளம்பரச் சாதனங்கள் முதலியவற்றைக் கவனியுங்கள். உங்களால் ஏதாவது ஒரு புது ஒழுங்குணர்ச்சியைக் காண முடிகிறது. இப்படித்தான் நவீன ஓவியம் சாதாரண மனிதனைச் சென்றடைகிறது.
நவீன ஓவியத்தை எப்படி ‘அனுபவிப்பது’?

ஒரு விஷயம் உங்களைத் தொட நீங்கள் அனுமதித்தாலன்றி எதையும் உங்களால் அனுபவிக்க முடியாது. நிறைய நவீன ஓவியங்களைப் பாருங்கள், அவற்றில் பல உங்களுடைய ஆர்வத்தைத் தூண்டாமலிருக்கலாம் பல உங்களுக்கு சுவாரஸ்யமின்றி இருக்கலாம். ஆனால் நிச்சயம் சில உங்களுக்குப் பிடிக்கும். இவற்றைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை தெரிந்து கொள்ள முயலுங்கள். யாரையாவது கேளூங்கள், ஒரு புத்தகம் படியுங்கள். அந்த ஓவியரையோ சிற்பியையோ புரிந்து கொள்ள முயலுங்கள். உங்கள் ஆர்வத்தையும் அக்கறையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். விரைவிலேயே நீங்கள் இன்னும் அதிகமாகப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் விரும்புவீர்கள். இசையை, நாட்டியத்தை, நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் இம்மாதிரியான முயற்சியைத்தானே மேற்கொள்வீர்கள்.

நவீன ஓவியம் பார்வையாளர்களிடமிருந்து அதிகமன முயற்சியை வேண்டுகிறதல்லவா?

ரசிப்பதற்கு முயற்சி தேவையில்லை என்பது அடிப்படைத் தவறு. நீங்கள் ஒரு விஷயத்தை ரசிக்கும்போது , சற்று கூர்ந்து பார்த்தால் நீங்கள் அந்த விஷயத்திற்காகத் தயாராக இருப்பதும், ஏன், சில நேரங்களில், அதை உணரவும், அந்த உன்னதத்தை அனுபவிக்கப் பயிற்சி பெற்றிருப்பதும் புலப்படும். எதிலும் உன்னதத்தைக் காண உழைப்பும், தன்னைச் சாதனப்படுத்திக் கொள்வதும் தேவையாகின்றன. நவீன ஓவியமும் இதற்கு விதிவிலக்கல்ல. நவீன ஓவியத்திற்காக நீங்கள் அதிக உழைப்பை, முயற்சியை மேற்கொள்ள வேண்டுமா என்பது, அது உங்களை எவ்வளவு தூரம் தொட்டிருக்கிறது என்பதைப் பொருத்தது. அது உங்களைத் தொடாமல், நீங்கள் நவீனமாகத் தோற்றமளிக்க முற்பட்டால், அந்த பாவனை, நடிப்பு எளிதில் கைக்கூடாததாகவும் மிகக் களைப்பைத் தருவதாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

நவீன ஓவியத்திற்கு, தத்ரூப ஓவியத்தைப் போல, நிச்சயமான, விசாலமான அர்த்தம் உண்டா?

முதலில் கவனிக்கப்பட வேண்டியது, தத்ரூப ஒவியத்திற்கு வரையறுக்கப்பட்ட , ஸ்தூலமான அர்த்தம் இல்லை என்பது. ஒரு தத்ரூபமான படத்தைப் ‘படிக்க’ முடியும். அதில் ஒவ்வொன்றும் இன்னதென்று தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதனாலேயே அந்த ஓவியம் மொத்தத்தில் என்ன சொல்கிறது, எதை வெளிப்படுத்துகிறது என்று சொல்ல முடியுமா? ஒரு கவிதையில் ஒவ்வொரு சொல்லும் எதைக் குறிக்கிறது என்று ஒருவேளை கூற முடியும். அதனாலேயே அந்தக் கவிதை மொத்தமாக என்ன சொல்கிறதென்று புரிந்து கொண்டாற்போல் ஆகுமா? அப்படியே இருந்தாலும் அதுதான் அதனுடைய வரையறுக்கப்பட்ட, ஸ்தூலமான, திட்டவட்டமான அர்த்தம் என்று கூற முடியுமா? முடியாது. ஒரு கவிதை எதைப் பற்றியது, அதன் பொருள் என்ன என்பது பல நேரங்களில் ஒரு உணர்ச்சி, மனதில் ஒரு நிலை என்றாகும்போது இவை ஸ்தூலமானவை அல்ல, நிர்ணயிக்கப்பட்டவையும் அல்ல. ஒரு ஓவியத்தைப் படிக்க முடிந்தாலும், அதன் அர்த்தம் ஸ்தூலமானதல்ல. நவீன ஓவியம், தத்ரூப ஓவியத்தைப் போல படிக்கக்கூடியது அல்ல என்பதாலேயே அதன் அர்த்தம் இன்னும் அதிக அளவில் நிர்ணயிக்க இயலாத தன்மையைக் கொண்டது. இந்தத் தன்மைதான் நவீன ஓவியத்திற்கு அதிக சுதந்திரத்தையும், வீச்சையும் தருகிறது.

நவீன ஓவியத்தைப் பற்றிய ரசனையை எப்படி வளர்த்துக் கொள்வது?

முதலில் நவீன ஓவியத்தை உங்களுக்குள் வாங்கிக்கொள்ள உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம். இதற்கு உதவியாக முதலில் உங்கள் தாய்மொழியில் உள்ள நவீன இலக்கியத்தைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளலாம். இது நவீன உணர்வுக்கூறு அல்லது நவீன மனப்பாங்கு பற்றிய பிரக்ஞையைத் தரும். இரண்டாவதாக , உங்ளுக்குப் பரிச்சயமான மரபு ஓவியத்தில் அதிக கவனம் செலுத்தலாம். இப்படிச் செய்வது அதைப் பற்றிய விமர்சன பூர்வமான பார்வையை வளர்த்துக் கொள்ள உதவும். மூன்றாவதாக, நவீன ஓவிய படைப்பாளர்களைப் பற்றிய நேரடியான பரிச்சயத்தை உண்டாக்கிக் கொள்வது. இர்விங் ஸ்டோனின் (Agony and Ecstacy – மைக்கலாஞ்சலோ பற்றிய புத்தகம்) , Lust for Life ( வான்கோ – Van Gogh பற்றியது), சாமர்செட் மாமின்  Moon and Six Pence ( கொகான் – Gaugin  பற்றியது) முதலிய புத்தகங்கள் நவீன ஓவியத்தைப் பற்றி, ஓவியர்களைப் பற்றி  நேரிடையான மனித பூர்வமாகப் புரிந்து கொள்ள உதவும். இவையனைத்தும் நவீன ஓவியத்திற்கு நம்மைத் தயார் செய்யும். இந்த இடத்திலிருந்து மேலே தொடர்ந்து போவது ஒருவனுடைய ஆர்வத்தையும், புதிய அனுபவங்களுக்கான வேட்கையையும் பொருத்தது.

நிச்சயமான அர்த்தம் ஒன்று சாத்தியமில்லை என்பதால் நவீன ஓவியத்தில் போலிகள் தோன்ற வாய்ப்பு உண்டல்லவா?

நவீன ஓவியம் படிக்கப்படக் கூடியதல்ல என்பதால், அத்தன்மையைப் போர்வையாகக் கொண்டு போலிகள் உருவாக வாய்ப்பு உண்டு. இதற்கெதிராக ஒரே பாதுகாப்பு, நவீன ஓவியத்தைப் பற்றிய பரவலான அறிவும் அக்கறையும், தொடர்ந்து ஓவியங்களைப் பார்ப்பதன் மூலம் பயிற்சி அடைவதும்தான்.

***

நன்றி : ’க்ரியா’, திரு. ஜோஸப் ஜேம்ஸ்

***

தொடர்பில்லாத (!) சுட்டிகள் :

WebMuseum – Artist Index

கோடுகளிலிருந்து வண்ணத்திற்கு – சி. அண்ணாமலை

ட்ராட்ஸ்கி மருது நேர்காணல்  – கீற்று

சித்திரச் சாலைகள் – ஜே.பி. சாணக்யா சிறுகதை

கலைக்கேசரியிலிருந்து…

எம்.எ·ப். ஹூசைன் நேர்காணல் :
தமிழ் (காலச்சுவடு)   | ஆங்கிலம் (தெஹல்கா)

***

எழுத்தாள நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் சொல்வதாவது :

‘வான்கோ, பிகாசோ, டாலி,  பால் காகின், பிரைடா காலோ உள்ளிட்ட பத்து முக்கிய நவீன ஒவியர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் நான் எழுதிய சித்திரங்களின் விசித்திரங்கள் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உயிர்மை ஆன் லைனில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்’

நன்றி எஸ்.ரா !