கணையாழியில் வந்த காதல் கதை!

‘நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது’

என்று ‘புத்தரின் படுகொலை’யை 1981-இல் எழுதிய கவிஞர் எம்.ஏ.நுஃமான் ஒரு காதல் கதையும் எழுதியிருக்கிறார், 1970-இல். நூலகம்தான் வேறு! கணையாழி பத்திரிகையின் முதல் 9 ஆண்டுகளில் வெளியான முக்கிய சிறுகதைகளுள் அதுவும் ஒன்று. தொகுப்பாசிரியர் அசோகமித்திரன்.  நம் ஹனீபாக்காவுக்கு அது கிடைக்க,  ’என் அருமை ஆப்தீனுக்கு… இலக்கிய உலகம் நண்பர் நுஹ்மானை கவிஞனாக அறியும் அவர் கதைகளும் எழுதினார் என்பது பலருக்கும் தெரியாத சங்கதி 40 வருடங்களுக்கு முன் கணையாழியில் இந்தக் கதை பிரசுரமான போது நானடைந்த பரவசம் சொல்லி மாளாது இன்றும் அதே பரவசம். நவீன தமிழ் சிறுகதையின் மூலவர்களில் நுஹ்மானும் ஒருவரே. ஆபிதீன் பக்கங்களை அசத்துங்கள்’ என்று சொல்லி அனுப்பியும் வைத்தார். பதிவிடுகிறேன், காதலுடன்.

நுஃமான் அவர்களின் ‘தாத்தாமாரும் பேரர்களும் ‘ , ‘மழை நாட்கள் வரும்’ கவிதைத் தொகுதிகளை வாசித்துவிட்டு , கொஞ்சம் காதலும் செய்துவிட்டு, கீழேயுள்ள கதையை வாசியுங்கள்.

***

 சதுப்பு நிலம்

எம். ஏ. நுஃமான்

அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள்.

அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது. புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே பார்த்துக்… முகத்திற்கு அவளுடைய சிறிது தடித்த சிறிய உதடுகள் கவர்ச்சியாக இருந்தன. அவள் அடிக்கடி கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு எழுதினாள். அதனால் அவள் இதழ்கள் ஈரமாக இருந்தன. அந்த இதழ்களின் ஈரப் பொழுபொழுப்பு அவனைக் கவர்ந்தது. அவளுடைய இரு காதுகளின் மேற்பகுதிகளும் கூந்தலுள் மறைந்திருந்தன. அவள் பின்னல்களில் ஒன்று தோளில் இருந்து வழுவி முன்புறம் விழுந்து கொப்பியின் மீது பட்டும் படாமலும் ஆடியது. அவள் அதை இடது புறங்கையால் ஒதுக்கிவிட நிமிர்ந்தபோது அவளுடைய கண்கள் அவனைச் சந்தித்தன.

அவனுக்குச் ‘சுரீர்’ என்றது. தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்துவிட்டதைக் கண்டதும் அவன் கண்களை உயர்த்தி மேலே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு தனது மணிக்கூட்டையும் அத்னோடு ஒப்பிட்டுப் பார்த்தான். தன்னைப் பற்றி அவள் பிழையாக நினைக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அந்த நினைப்பு அவனைச் சுட்டது. அவள் அவ்வாறு நினையாமலும் இருக்கலாம். அவளுக்கும் என்னைப் பார்ப்பதில் ஒரு கவர்ச்சி உண்டாகி இருக்கலாம். நான் அவளைப் பார்த்ததனால் கவர்ச்சி கொண்டு அவள் மீண்டும் என்னைப் பார்க்கக்கூடும் என்றெல்லாம் அவன் நினைத்தான்.

எனினும் இனி அவளைப் பார்க்ககூடாது என்று அவன் உறுதி கொண்டான். தான் பார்க்காவிட்டாலும் அவன் தன்னைப் பார்ப்பாள் என்ற எண்ணத்தில் அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். கையில் இருந்த தமிழ்ப் பத்திரிக்கையைப் போட்டுவிட்டு ஓர் ஆங்கிலப் பத்திரிகையை எடுத்க் கொண்டான். அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் சாதாரணமாக வாசிக்க முடியும். வாசிப்பது அரைகுறையாக விளங்கும். ஆயினும் அவன் அதை வாசிக்கத் தொடங்கினான். அடிக்கடி வாசித்ததை நிறுத்தி வாசித்ததை ஆழ்ந்து சிந்திப்பதுபோல் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். எதையோ கண்டு மகிழ்ச்சியுற்றவன் போல முகத்தை மலர்ச்சி அடையச் செய்து கொண்டான்.

என்றாலும், ‘சே இது பெரிய கேவலம்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். சாதாரணமாக இருக்க முனைந்தான். காற்சட்டைப் பையில் இருந்த கைலேஞ்சியை எடுத்து முகத்தையும் கழுத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டான். பிறகு பத்திரைக்கையை வேகமாகப் புரட்டி அதில் உள்ள படங்களைப் பார்க்க முனைந்தான்.

ஆயினும், மனம் அலைபாய்ந்தது. அவள் இதற்கிடையில் தன்னைப் பார்த்திருக்கலாம் என்று அவன் கற்பனை பண்ணினான். இப்பொழுது அவள் என்ன செய்கிறாள்? உதட்டைக் கடித்துக் கொண்டிருக்கிறாளா இல்லையா? என்று பார்க்க வேண்டும்போல் இருந்தது. என்றாலும் அவன் பார்க்கவில்லை. தான் பார்ப்பதை அவள் பார்த்துவிட்டால் தன்னைப்பற்றி குறைவாக நினைப்பாள் என்று அவன் எண்ணினான். அது தனது ஆண்மைக்குப் பெரிய அவமானம் என்றும் அவன் கருதினான்.

அவள் யாராக இருக்ககூடும் என்றுகூட அவனுக்குத் தெரியாது. பல்ளி மாணவி என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது. பள்ளி விட்டதும் புத்தக் கட்டோடு வந்து ஏதோ குறிப்பு எடுக்கிறாள் என்பதும் தெரிந்தது. ஒருவேளை அவள், ‘அட்வான்ஸ் லெவல்’ படிக்கக்கூடும்; எங்கே படிக்கிறாளோ? வின்சன்தானே பக்கத்தில் இருக்கிறது. அங்கேதான் படிக்கக்கூடும் என்றெல்லாம் யோசித்தவாறே ஜன்னலூடு பார்வையைச் செலுத்தினான்.

பாலத்தின் ஊடாக ஒரு வைக்கோல் லொறி மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. சன்னல் நிலைப்படியில் ஒரு அடைக்கலக் குருவி வந்து நின்று ‘கீச்’ என்று இருமுறை கத்தியது. பிறகு எங்கோ வெளியே பறந்து சென்றது.

பக்கவாட்டில் கதிரைகள் இழுபடும் சத்தம் கேட்டது. அவர்கள் போவதற்காக எழுந்துவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். அவளைப் பார்க்கக்கூடாது என்ற உறுதியுடன் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினான். செருப்புச் சத்தங்கள் மெதுவாக ஒவ்வொரு அடியாகக் கேட்டன. தான் பார்ப்பதனாலோ பார்க்காமல் விடுவதனாலோ தனக்கோ அவளுக்கொ என்ன வந்துவிடப் போகின்றது என்று அவன் நினைத்தான். இது தனது பலஹீனம்தான் என்று யோசித்தபோது அவளைப் பார்க்கவேண்டும் இருந்தது.

அவள் கீழே குனிந்துகொண்டு ஒவ்வொரு அடியாக இறங்கிச் சென்றாள். கீழே செருப்புகளின் ஓசை கேட்டு மறைந்தது. அவனுக்கு நெஞ்சில் சிறிது உறுத்தலாகவும் பாரமாகவும் இருந்தது.  இது வெறும் அர்த்தமில்லாத உணர்ச்சி என்று அவன் நினைத்தாலும், அது அப்படித்தான் இருந்தது. அவள் பின்னலைத் தள்ளிவிடுவதற்காக நிமிர்ந்த அந்தச் சந்தர்ப்பத்தில் தான் பின் வாங்காது அவளுடைய கண்களை உற்றுப் பார்த்திருக்கலாம் என்று அவன் எண்ணினான். தான் பார்த்திருந்தால் அவளும் கண் கொடுத்திருக்கக் கூடும் என்று அவ ன் நினைத்தான். அவளுடைய பொழுப்பான கன்னங்களும் ஈரமான உதடும் எண்ணெய் பூசாத கூந்தலும் அவன் கண்ணுக்குள் நின்றன.

அவள் இருந்த கதிரையை வெறித்துப் பார்த்தான். இப்போது யாரைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. ஏனென்றால், அவன் பார்க்கும் இடத்தில் அந்தப் பெண்கள் இல்லை. கதிரைகள் காலியாகத்தான் இருந்தன. எழுந்து அவள் பின்னாலேயே சென்று பார்ப்போமா என்று யோசித்தான். கூடவே, உடனே சென்றான். நான் அந்தப் பெட்டைகளைப் பார்ப்பதற்காகத்தான் அவர்கள் பின்னால் எழுந்து செல்கிறேன் என்று மற்றவர்கள் நினைக்க்கூடும் என்ற எண்ணம் எழுந்தது.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். நாலரை மணி. ஐந்து மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் நிற்கவேண்டும். அவனுடைய சகோதரிக்கு நேற்று ஒப்பரேஷன் நடந்தது. அவளைப் பார்ப்பதற்காகத்தான் கல்முனையில் இருந்து காலையில் வந்தான். ஆறேகால் கல்லோயா எக்ஸ்பிரசில் திருப்பிப் போகவேண்டும். அவன் எழுந்து கீழே சென்றான். அவளும் தோழிகளும் பள்ளி வாசல் வாகையின்கீழ் நின்று கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நிற்கும்போது அவன் அவர்களைக் கடந்து போக விரும்பவில்லை. இப்போது போனால், ‘தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இவன் வருகிறான்’ என்று ஒருவேளை அந்தப் பெட்டைகள் நினைக்கக்கூடும் என்று அவன் எண்ணினான்.

வாசிகசாலைக்கு வெளியே நாட்டி இருந்த விளம்பரப் பலகையை வாசிக்கத் தொடங்கினான்.

பொது நூல் நிலையம்
மட்டக் களப்பு
திறந்திருக்கும் நேரம்…
மூடும் நேரம்…

என்று ஒவ்வொன்றாக வாசித்தான். அது அலுத்தபின் வெறுமையாகக் கிடந்து கோட்டடியையும் தூரத்தெரிந்த கச்சேரி மதிலையும் நகரசபைக் கட்டிடத்தையும் பார்த்துக்கொண்டு நின்றான். விளையாட்டு மைதானத்தில் ஏழெட்டுப் பெண் பிள்ளைகள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவளும் தோழிகளும் தபால் கந்தோரடியால் நடந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். அவன் சிறிது தூரம் நடந்து பள்ளிவாசலடிக்கு வந்தான். அவர்கள் நெடுக நடந்து கொண்டிருந்தார்கள்.

‘நெடுகப் போனால் அவளுகளைப் பின்தொடர்ந்து போவது போல இருக்கும். நாம் சென்றால் கொலிச்சால போவம்’ என்று அவன் குறுக்கு வீதியால் திரும்பி நடக்கத் தொடங்கினான். நெடுகவும் போய் இருக்கலாம் என்றும் ஒரு மனம் சொல்லியது. அவளுடைய இடை அசைந்து செல்லுவது மிகவும் அழகாக இருப்பதாக அப்போது அவன் நினைத்தன. ஆயினும் அவன் குறுக்கு வீதியால் நடந்து கொண்டிருந்தான். ‘இவளுகளப் பாத்தாத்தான் என்ன? பாக்காட்டித்தான் எனக்கென்ன? என்று நினைத்தவாறே அவன் தன்பாட்டில் நடந்தான்.

‘சே! எப்பவும் இப்படித்தான். நான் ஒரு மடையன்’ என்று அவன் வாய் முணுமுணுத்தது.

*

(கணையாழி / அக்டோபர்-நவம்பர் 1970)

*

நன்றி : எம்.ஏ. நுஃமான் , எஸ்.எல்.எம். ஹனிபா ,  கணையாழி

« பழைய வரவுகள்