சகோதரி உமா மகேஸ்வரிக்கு மேலும் பல விருதுகள் குவிய வாழ்த்துகிறேன்.
**
உமா மகேஸ்வரிக்கு நஞ்சன்கூடு திருமலாம்பாள் விருது
பழனி கிருஷ்ணசுவாமி
தமிழ் எழுத்தாளர் உமாமகேஸ்வரிக்கு பெங்களூரைச் சேர்ந்த என். எம். கே. ஆர். வி. பெண்கள் கல்லூரியின் பிரிவாகிய ஷஸ்வதி பெண்ணியல் ஆய்வு மையம் வழங்கும் இந்திய மொழிகளில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான நஞ்சன்கூடு திருமலாம்பாள் விருது வழங்கப்பட்டுள்ளது.
1986ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருது இதுவரை இந்திய மொழிகளில் எழுதும் பல்வேறு பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு தமிழில் இவ்விருதைப் பெற்றவர் ராஜம் கிருஷ்ணன். நாற்பதாயிரம் ரூபாய் ரொக்கமும் காமதேனுச் சிற்பமும் கொண்டது இவ்விருது. வெங்கட் சாமிநாதன், பழனி கிருஷ்ண சுவாமி, கே. வி. ஷைலஜா ஆகியோர் தேர்வுக்குழு நடுவர்களாகப் பணியாற்றினார்கள்.
தமிழ்ச் சமூகம் தனது மத்தியதரக் குடும்பப் பெண்களுக்காக விதித்திருக்கும் வரம்புகளைத் தாண்டாமல் நான்கு சுவர்களுக்குள்ளேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெண்ணின் வாழ்பனுபவங்களைக் கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல வடிவங்களிலும் உமா வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு மகளாக, சகோதரியாக, மனைவியாக, மருமகளாக, தாயாகத் தனக்குத் தெரிந்த, அனுபவப்பட்ட வாழ்வைச் செறிவான மொழிநடையில் இவர் வெளிப்படுத்தும் விதம் நேர்மையானது. அதேசமயம் காத்திரமானது. உமாவின் எழுத்துக்களில் விரியும் பெண்ணுலகம் காலங்காலமாக அடக்குமுறையிலும் தாழ்ந்து பணிதலிலும் வாழப் பழக்கப்படுத்தப்பட்டது. தனக்கென்று எந்த அடையாளமுமில்லாதது. உமாவின் எழுத்துக்களில் வெளிப்படும் உள்ளார்ந்த குரல் பெண்ணுரிமையைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றாலும் அதைத் தம்பட்டமடிப்பதில்லை. சித்தாந்த முகமூடிகள் எதையும் அவர் அணிந்துகொள்வதில்லை.
உமாவின் எழுத்துக்களிலும் இடம்பெறும் கேட்கும் உரையாடல்களின் பின்புலமாக அவர் அமைத்துக்காட்டும் உலகம் ஆணாதிக்கச் சமூகத்தில் வாழ நேர்ந்த பெண்ணின் ஆவேசம், ஆதங்கம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் உலகமாக நம்முன் விரிகிறது. இறப்பு, நோய், நிலையாமை ஆகியவற்றுக்கிடையில் வாழநேரும் மனிதனுக்கு அன்பு என்னும் அச்சாணி இல்லாமல் போய்விட்டால் வாழ்வு எவ்வாறு பொருளற்றுப்போய்விடும் என்பதையும் இவரது எழுத்துக்களில் பார்க்கிறோம்.
‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நலனே’ என்னும் கூற்றின் பொருத்தப்பாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சோதித்துப் பார்ப்பதற்கு உமாவின் எழுத்துக்கள் உதவக்கூடும்.
***
நன்றி : காலச்சுவடு , பழனி கிருஷ்ணசுவாமி
