மண்ட்டோ – என் நண்பன் என் எதிரி / இஸ்மத் சுக்தாய்

நூறாவது பதிவு.  இதுவரை 15000 ஹிட். அதில் 14999 தடவை நானே ‘க்ளிக்’கியிருக்கிறேன். அந்த ஒரே ஒரு ஆள் யார் என்று தேடிக் கொண்டும் இருக்கிறேன். கண்டிப்பாக என் மகள் அனீகா நிலோஃபராக இருக்காது. சரி,  ‘கடவுளின் மடி’யைக் காட்டிவிட்டு – ஒரேயடியாக வலையுலகிலிருந்து – ஒதுங்கி விடலாம் என்ற நினைப்பு.  நுஸ்ரத் ஃபதே அலி கானின் ‘மன் குன்த்து மௌலா’வின் youtube ஐ தேர்வு செய்தேன் (மேலேயுள்ள,  SamiYusuf பாடிய அற்புதமான ‘சலவாத்’ஐ கூட யாரும் கேட்டதாகத் தெரியவில்லையே… எனவே தேடுங்கள், கண்டடைவீர்கள்). ஆனால் அதுவும் ஆன்மீகம். இந்த அப்துல் கையும் ஏற்கனெவே கிண்டல் செய்து கொண்டிருக்கிறார் என்னை ‘தோழே.. நீங்க பார்ஸி பாவா, ·பக்கீர் பாவான்னு போறதைப் பாத்தா ‘பகீர்’ங்குது, எங்கே ஜிப்லி பாவா கணக்கா போய்விடுவீங்களேன்னு…ஹூம்..அல்லா வச்சு காப்பாத்த’ என்று. மன்னர்களை தலைகுனியவைத்த மௌலானா ரூமியும் நிஜாமியும் வெறும் ·பக்கீர்களா?   நாகூர்க்காரரா இப்படிச் சொல்வது? அல்லா வச்சு காப்பாத்த… (ஷிப்லிபாவா பற்றி விபரம் அறிய விரும்பும் நண்பர்கள் , ஹமீது ஜா·பர் நானா எழுதிய புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.  இங்கே அழுத்தவும்.  இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பஹ்ரைனிலிருந்து கையுமின் ஃபோன்.  யா ஷிப்லி…!

அந்த என் ஒரே ஒரு வாசகருக்காகத்தான் இந்தப் பதிவு. ‘நிழல்’ இதழில் (இதழ் 13, ஆகஸ்ட் 2004) வெளியான கட்டுரையிலிருந்து சில பத்திகளைப் பதிகிறேன். மொழிபெயர்ப்பு : திரு. ராமானுஜம் அவர்கள். படிப்பதற்கு முன் நண்பர் ஜமாலனின் ‘பனிப்போருக்கு பணிய மறுத்த போர் வாள் / மாண்ட்டோவின் கடித இலக்கியம்’ என்ற கட்டுரையை வாசிப்பது நல்லது.  சுக்தாய் மற்றும் மாண்ட்டோவின் கதைகளின் சுட்டிகளை கீழே தந்திருக்கிறேன். முறிந்தால் நான் பொறுப்பல்ல , அவர்களின் எழுத்து அப்படி.

***

மண்ட்டோ – என் நண்பன் என் எதிரி / இஸ்மத் சுக்தாய்
தமிழில் : ராமானுஜம் 

ismat_chughtai_a_fearless_voiceஇஸ்மத் சுக்தாய் ((1915 – 1991) . இந்தியாவில் பி.ஏ பட்டமும், கல்வியியல் பட்டமும் பெற்ற முதல் இஸ்லாமியப் பெண் ஆவார்.  1941-ல் ‘லிகாப்’ என்ற சிறுகதை மூலம் உருது இலக்கியத்தில் அறிமுகமானவர். அலட்சியப்படுத்தப்பட்ட ஒரு நவாபின் மனைவிக்கும் அவளின் பணிப்பெண்ணிற்கும் (வயதானவர்) உள்ள உடல் ரீதியான தொடர்பு பற்றியது கதை. 9 வயது சிறுமி பார்வையில் இந்தக் கதை சித்தரிக்கப்படுகிறது.

இந்தக் கதை ஆபாசமானது என்று லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இரண்டாண்டுகள் இழுத்துச் செல்லப்பட்டு பிறகு , ‘நான்கு சொல்’ ஆங்கில வார்த்தை ஏதும் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவர் திரைப்பட இயக்குநர் ஷாகித் லத்தீபை தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி 1942-ல் திருமணம் செய்து கொண்டார். அவரோடு இணைந்து ஆறு திரைப்படங்களையும் அவரின் மறைவிற்குப் பிறகு ஆறு திரைப்படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார். இன்றளவும் இவர் எழுதிய ‘Crooked Line’ என்ற நாவல் இந்திய துணைக் கண்டத்தில் பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நவீன உருது இலக்கியத்தில் மண்ட்டோ, கிஷன் சந்தர் , பேடி, இஸ்மத் சுக்தாய் நால்வரும் பிரதான நூல்களாகக் கருதப்படுகிறார்கள்.

**

saadathasanmanto1

Saadat Hassan Manto (Urdu: ‏‏سعادت حسن منٹو) (May 11, 1912 – January 18, 1955)

மண்ட்டோ – என் நண்பன் என் எதிரி

இஸ்மத் சுக்தாய்

.. நான் ஓரக் கண்ணால் அவரைப் பார்த்தேன். தடித்த கண்ணாடிகளுக்குப் பின்னே பிரகாசித்த அந்தக் கருவிழிகள் திடீரென்று எனக்கு மயிலின் தோகையை நினைவூட்டியது. இந்தக் கண்களுக்கும் மயிற் தோகைக்குக் என்ன சம்மந்தம்? எனக்குத் தெரியவில்லை என்றாலும் நான் எப்போது அந்தக் கண்களைப் பார்த்தாலும் எனக்கு மயிற்தோகைதான் நினைவுக்கு வந்தது. ஒருவேளை அகங்காரமும், அடங்காத தன்மையும் இணைந்து இயல்பாய் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அந்தப் பிரகாசம்தானா அது? அவரின் கண்களை நான் பார்த்தபோது என் இதயம் ஒரு துடிப்பை மறந்தது.

அந்தக் கண்களை இதற்கு முன்னரே பார்த்திருக்கிறேன். மிக நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன். இதயம் நிரம்பிச் சிரிப்பதை, தீவிரமாய்ச் சிரிப்பதை, வடுச்சொல் தாங்கிய அம்பை விட்டெறிவதை, உயிரற்ற கல்லாய் மாறுவதைப் பார்த்திருக்கிறேன்.

……

சாப்பிடும்போதும் அனல் பறக்கும் விவாதம் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் ‘லிகாப்’க்கு (ரஜாய்) திரும்பி – அது அப்போது எனக்கு சங்கடமான விஷயமாக இருந்தது – அதை வைத்துக் குத்தத் தொடங்கினார். நான் அதிலிருந்து நழுவ முயற்சித்தாலும் அவர் தீர்மானமாய் தன் நிலையிலிருந்து  மாறாமல் அந்தக் கதையில் ஒவ்வொரு இழையையும் பிடுங்கிப் போட்டார். நான் அதை எழுதியதற்காக மன்னிப்பு கேட்டவுடன் அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார். என்னைக் கோழை என்றும் வெத்து என்றும் திட்டித் தீர்த்தார். ‘லிகாப்’ சிறுகதையை நான் என் மிகச் சிறந்த படைப்பாகக் கருதவில்லையென்றாலும் மண்ட்டோ அது என் மிகச் சிறந்த படைப்ப்த்தான் என்று அழுத்தமாய்ச் சொன்னார். சுருங்கச் சொன்னால், ‘லிகாப்’-ஐப் பற்றி நாங்கள் அக்குவேறு ஆணிவேறாய் விவாதித்த போது மண்ட்டோவால் ஆபாசமான, அசிங்கமான விஷங்களைக் கொஞ்சமும் தயக்கம் இல்லாமலும் போலி உணர்வு இல்லாமலும் மிக அழகாக வெளிப்படுத்த முடிந்ததைக் கண்ட நான் பிரமித்துப் போனேன். அல்லது அதைக் கவனிக்க எனக்கு வாய்ப்பு கொடுக்க அவர் மறுத்திருக்கலாம். அவரின் விமர்சனங்கள் எனக்குக் கோபத்தையும் எரிச்சலையும் தருவதற்குப் பதில் சிரிப்பையே வரவழைத்தது.

—-
எப்போதும்  நானும் மண்ட்டோவும் ஐந்து நிமிடம் சந்திக்கலாம் என்று நினைத்தால் அது ஐந்து மணி நேரச் சந்திப்பாக மாறியது. அவரோடு விவாதம் செய்வதென்பது ஒருவரின் புத்தியைக் கூர்ப்படுத்துவது போலிருக்கும். விளக்குமாற்றைக் கொண்டு மூளையில் படிந்துள்ள ஒட்டடைகளையெல்லாம் அகற்றி சுத்தம் செய்வது போலிருக்கும். சில சமயங்களில் எங்கள் உரையாடல்கள் தீவிரமடைந்து மிக நீளமான நூல் சிக்குண்டது போலவும், சிந்திப்பதற்கும், புரிந்து கொள்வதற்குமான திறமை முழுக்க அழிக்கப்பட்டது போலவும் அமையும். சில சமயங்களில் எங்களின் விவாதங்கள் சண்டைகளாக உருமாரி, சங்கடமான விளைவை ஏற்படுத்தும் முடிவுக்குக் கொண்டு வரும். தோல்விகளால் ஏற்படும் ஏமாற்றத்தை நான் மூடி மறைக்கும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தேன். ஆனால் மண்ட்டோ அழத் தொடங்குவார். அவரின் கண்கள் மயில் தன் தோகையை விரிப்பது போல் விரிந்து, மூச்சின் சுவாசக் குழாய் பெரிதாகி, வாய் கோணலாகி, அவரின் முகம் சுருங்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். தனக்கு உதவியாய் ஷாகித்துக்கு அழைப்பு விடுவார். அத்தகைய சமயங்களில் எங்களின் விவாதங்க்ள் இலக்கியம் தத்துவம் என்பதிலிருந்து விலகி குடும்ப விஷயங்கள் பக்கம் திரும்பும். மண்ட்டோ அறையை விட்டுச் சீறி வெளியேறி விடுவார்.

…..

ஆனால் நாங்கள் காலையில் சண்டை போட்டுக் கொண்டாலும் மறுபடியும் மாலையில் சந்திக்க்க வேண்டி வந்தால் ஏதும் நடக்காதது போல் அன்போடு வரவேற்பார். நாங்கள் வழக்கம்போல் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டாலும் முதல் சில நிமிடங்களுக்கு நாங்கள் நாங்கள் எங்களை மிக மென்மையாக வெளிப்படுத்திக்கொண்டு , மற்றொருவரின் சிந்தனையை முழுமனதோடு ஏற்றுக் கொள்வதுபோல் பாவனை செய்வோம். ஆனால் இந்த பாவனைகள் எல்லாம் சீக்கிரத்தில் காற்றில் மறைந்து வழக்கம்போல் பட்டாசு வெடிக்கத் தொடங்கும். எங்களின் வார்த்தைகள் ஒரு தோட்டாவுக்கான வேகத்தைக் கொண்டது. பல சமயங்களில் மற்றவர்கள் வேண்டுமென்றே வேடிக்கைக்காக எங்களை முட்டி மோதிக் கொள்ள வைக்க , நாங்கள் எரிச்சலடைந்து எங்களுக்குள்ளான கருத்து வேறுபாட்டை அச்சமயத்திற்கு ஒதுக்கி வைத்துக் கொள்வோம். நாங்கள் எங்களின் சந்தோஷத்திற்காகத்தான் விவாதித்தோமே தவிர கோழிச்சண்டை போட்டு மற்றவர்களை சந்தோஷப்படுத்த அல்ல. நாங்கள் எவ்வளவு விவாதங்களில் ஈடுபட்டாலும் நாங்கள் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பங்களில் பலமான ஒரு ‘அணி’யாய் இருந்து மற்றவர்களை வியர்க்க வைக்க வேண்டும் என்பது மண்ட்டோவின் கருத்து. ஆனால் பல சமயங்களில் நான் அதை மறந்து என் ‘அணி’க்கு உண்மையாக இருக்க வேண்டி இருப்பதால், கலைக்கப்பட்ட சீற்றத்துடன் வெளியேறும் குளவி போல் கொட்டத் துவங்கி விடுவேன்.
—–

மண்ட்டோ தற்புகழ்ச்சிக்குப் பழக்கப்பட்டவர். ஆனாலும் நான் அவருடன் இருக்கும்பொழுது என்னையும் அதனுள் இணைத்துக் கொள்வார். அவரைப் பொறுத்தமட்டில் இரண்டே இரண்டு எழுத்தாளர்கள்தான் உருப்படியானவர்கள். ஒன்று அவர். மற்றொன்று அவர்.

—-

மண்ட்டோவின் அகால மரணத்தில் எனக்கும் பங்கிருக்கிறது என்று என் இதயம் ஏன் இப்படிக் கதறுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. எனது முன் சட்டையில் அவரின் இரத்தம் சிதறிக் கிடக்கிறது. அதை என் இதயம் மட்டுமே பார்க்க முடியும். அவரை மரணம் கொள்ளவைத்த இந்த உலகம்தான் என்னுடைய உலகமும். இன்று அவரை மரணங்கொள்ள வைத்தது – நாளை என்னையும் அதைப்போல மரணம் கொள்ள அனுமதிக்கும். பிறகு மக்கள் துக்கம் கொண்டாடுவார்கள். என் குழந்தைகளின் எதிர்காலம் அவர்களின் நெஞ்சில் பாரமாய்க் கனக்கும். கூட்டங்கள் நடத்தப்பட்டு நிதி திரட்டப்படும். ஆனால் நேரமின்மை காரணமாக ஒருவரால் கூட அந்தக் கூட்டத்திற்கு வர முடியாமல் போகும். காலம் நகர, அவர்கள் நெஞ்சில் உள்ள பாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். பிறகு மக்கள் எல்லாவற்றையும் மறந்து போவார்கள்.

***

நன்றி : ‘நிழல்’

முகவரி :

நிழல்
31/48 இராணி அன்ணா நகர்,
கே.கே.நகர், சென்னை – 78
Ph : 2472 8326
nizhal_2001@yahoo.co.in

***

சில சுட்டிகள் :

ராகவன் தம்பியின் மொழிபெயர்ப்பில் :  இஸ்மத் சுக்தாய் – ‘ரஜாய்‘ சிறுகதை | ஸதத் ஹஸன் மாண்ட்டோ – ‘போர் நாய்‘ சிறுகதை

ஸதத் ஹஸன் மாண்ட்டோ – ‘மூன்று எளிய வாக்கு மூலங்கள் - ‘ சிறுகதை (‘ஸ்நேகா’ பதிப்பக தொகுப்பிலிருந்து)

ஸதத் ஹஸன் மாண்ட்டோ - விக்கிபீடியா

இஸ்மத் சுக்தாய் - விக்கிபீடியா | Ismat Chughtai (1915-1991)

பாரஸீகக் கவிதை – ஒரு அறிமுகம்

khamsa1‘Khusraw and the Lion’ painting : The twelfth-century poet Nizami’s romantic epic describing the love of king Khusraw for the princess Shirin is one of the most popular works in the Persian language. This illustration, from a manuscript of 1632, depicts Khusraw defending Shirin by killing a lion bare-handed. Since this took place at night, the artist – Riza ‘Abbasi, the greatest painter at the court of Shah Abbas I (r. 1587-1629) – has shown Khusraw in his night-clothes. 

***

ஆர்.பி.எம் கனி அவர்கள் எழுதிய ‘பாரஸீகப் பெருங்கவிஞர்கள்’ (1955ல் வெளியானது) என்ற அருமையான புத்தகத்தை E.M. அலி மாமா அவர்களிடம் ஒருநாள் இரவல் (படிப்பதற்குத்தான்!) கேட்டபோது ‘நல்ல புத்தகத்த காசு கொடுத்து வாங்காம ‘ஓசி’ கேட்குறவன்ற ஒரு கையை வெட்டனும்’டு ஒரு பாரசீக பழமொழி இக்கிதுங்குனி,  தெரியுமா ?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வே.. ஆனால் கொடுத்தார்கள். என் வாப்பாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடைய நானா E. M நெய்னா மாமாவும்தான். வாப்பாவின் நண்பர்கள் எல்லாம் இலக்கியம் தெரிந்தவர்கள். மகன்தான் இப்படி ஆகிப்போனேன்!. போகட்டும், அலிமாமா, நெய்னா மாமாவும் , ‘லால்கௌஹர்’ நாடகம் தந்த பெரும்புலவர் நெய்னா முஹம்மது அவர்களின் பேரர்கள் ( உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ நேரடியாக ·பார்ஸியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் நெய்னா மாமா என்று ‘சொல்லரசு’ ஜாபர் மெய்தீன் மாமா சொல்வார்கள்). எத்தனை மாமாக்கள்! பழமொழி தந்த பயத்துடன் ஒரே நாளில் படித்துமுடித்து திருப்பிக் கொடுத்தேன். ஏதோ முட்டாளைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துக் கொண்டு அலிமாமா சொன்னார்கள்:  ‘ஓய்..நான் சொன்ன பழமொழி பாதிதான்’.

‘மீதி என்னா மாமா?’

‘இரவல் வாங்குன புத்தகம் அருமையானதுண்டு தெரிஞ்சும் அத திருப்பிக் கொடுப்பவன்ற ரெண்டு கையையும் வெட்டனும்’

ஒரு பாய் பாய்ந்து ஓடி வந்து விட்டேன்.

‘பாரஸீகக் கவிதை – ஒரு அறிமுகம்’ என்ற இந்த சிறு கட்டுரை ஆர்.பி.எம். கனி பி.ஏ.பி.எல் அவர்களின் புத்தகத்திலிருந்து எழுதப்பட்டதாம்.  ’சுருக்’கித் தொகுத்தது சத்தியமாக நான் அல்ல. திரு. லெனாகுமார்  (யாதுமாகி – மார்ச் 2001 இதழ்)]. நிஜாமியின் ஒரு கவிதையையும் மொழி பெயர்த்திருக்கிறார். அவருக்கு நன்றி. கூகிளுக்கும் விக்கிபீடியாவுக்கும்தான்.

***

பாரஸீகக் கவிதை – ஒரு அறிமுகம்

லெனாகுமார்

அரபிகள் பாரஸீகத்தை வென்றதும் பாரஸீகத்தவரில் மிகவும் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாத்தை தழுவினர். இவர்களுடைய உள்ளங்களில் இஸ்லாமிய வேத நூலான திருக்குர்ஆன் மிகுந்த ஆதிக்கம் பெற்றது. அரபிய மொழியும், பாரஸீக மொழியும் இரட்டைக் குழந்தைகள் போல் ஆகிவிட்டன. பழைய பாரஸீகத்தில் ஜொராஸ்தியர்களின் வேதமான ‘ஜெண்ட் அவஸ்தா’ தவிர குறிப்பிடத்தக்க இலக்கிய சிருஸ்டி எதுவும் வெளியாகவில்லை. கி.பி. 420-436ல் வேட்டை நிபுணனான மன்னன் பஷ்ராம் கோரும் அவனுடைய காதலி கிலாராமுந்தான் முதன்முதலில் சந்தத்தைக் கண்டுபிடித்ததாகவும் , கிபி 590-628ல் வாழ்ந்த ஷிரினின் சுவரில் எழுதப்பட்டிருந்த ஒரு பாட்டுதான் முதன்முதலில் எழுதப்பட்டது என்பாரும் உண்டு. ‘வாமிக் அஸ்ராவின் காதல் கதை’ என்ற நூல்தான் பாரஸீக மொழியின் முதல் நூல் என்றும் அது அழிந்துவிட்டது என்றும் சொல்வார்கள்.

இஸ்லாமிய பாரஸீகத்தில் முதன்முதலில் பாட்டெழுதியவர் அப்பாஸ் என்னும் கவியாவார். மன்னன் கலிபாமானின் வெற்றியைப் போற்றுவதற்காக எழுதியது என்பர். ஆனால் கி.பி 875-876ல் ஸஃபாரி வம்சத்தினரை எதிர்த்து கலகம் செய்யுமாறு தூண்டி எழுதப்பட்ட பாடலே முதன்முதலில் பாடப்பெற்றது. கவிஞர் அஹ்மந் என்பவர்தான் அவர் என்றும் கூறுவர்.

முதன்முதலில் அரபி ‘தோபைத்தி’ பாவினமும் ‘ருபாயத்’ பாவினமும்தான் பாரஸீக மொழியில் பாடல்கள் இயற்ற கையாளப்பட்டது. அடுத்த ‘மஸ்னவி‘ வந்தது. இதில் ஒவ்வொரு அடியிலும் எதுகை மாறும். இப்பாவினம் வரலாறுகளை கூறவோ, கதை சொல்லவோ மிகவும் ஏற்றதாக இருந்தது. இதை இயற்றியவர் தாகீது என்பவராவார். இதன்பின்னர் கஸீதாக்களும் கஜல்களும் கிஸ்ஸாக்களும் உண்டாயின. பாரஸீகக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள் பலர். ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவில் வாழ்ந்த பெண்கவி ‘ராபியா பஸ்ரி’. இவள் பேரழகியாகவும் அறிவுத் திறன் கொண்டவாளகவும் போற்றப்பட்டவள். இவள் தன்னுடைய அடிமையும் துருக்கி இளைஞனுமான யக்தாஷ் என்பவனை காதலித்தார். இவள் சுற்றத்தார் இவளை கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தினர். நிறைவேறாத தன் காதலுக்கு கவிதைகளால் உருக்கொடுக்கலானாள். இவளுடைய பாடல்களில் உணர்ச்சி வேகம் பொங்கி வழிந்தது. இவளுடைய பாடல் சமய நம்பிக்கைக்கு முரணானது என்று கருதியதால் இவளது உறவினர்களே இவளைக் கொலை செய்து விட்டனர். தமிழில் ஆண்டாளுடைய பாசுரங்கள் போலவும், ஹிந்தியில் மீராவுடையது போலவும் இவளுடைய கவிதைகள் பாடல்கள் திருப்தியடையமுடியாத ஆத்மா தெய்வீகத்தை நோக்கி தவித்தது. இவ்விதம் தெய்வீகக் காதலை பெறும் தாகந்தான் சூ·பித் தத்துவத்தின் அடிப்படை. பாரஸீகத்தின் முதல் சூ·பி கவிஞர் ‘ராபியா பஸ்ரி’ ஆவார்.

பாரஸீக இலக்கியத்தில் பெருங்காப்பியங்களை இயற்றியவர் ஃபிர்தௌஸி இவரைத் தொடர்ந்து ஆன்மிக் காப்பியங்களையும் பாடல்களையும் எழுதியவர் அபுல் கைர். இவர்களைத் தொடர்ந்து உமர்கையாம் அன்வாரி போன்ற எண்ணற்ற கவிஞர்கள் தோன்றினர். அபுல்கைர் என்பவரே (ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவில்) பாரஸீக மொழியில் ஒரு கலைகளஞ்சியத்தை உருவாக்கினார். இதன்மூலம் சகல ஞானங்களுக்கும் பாரஸீக இலக்கியத்தை இவர் உறைவிடமாக்கினார்.

இந்தியாவில் முஸ்லீம் அரசர்களுடைய ஆட்சியில் பாரஸீக மொழி முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்த அழகிய பாஷை அரசாங்க மொழியாகவும் இருந்ததால் இந்திய சுல்தான்களின் அவையிலே பாரஸீக புலவர்கள் பலர் இருந்தனர். இந்தியாவில் உலாவிய உருது மொழிக்கு ‘ரெக்தா’ என்று பெயர். இம்மொழியோடு பாரஸீகத்தை கலந்து கவிதைகள் எழுதியவர் பலருண்டு. பதாயுனி, முல்லா, கைஷீரி, சுர்ஷிஸி, அமிர்குஸ்ரு, ஷைருபைஸி போன்ற இந்திய பாரஸீக கவிஞர்கள் நிறைய உண்டு.

ஆயிரமாண்டுகளாய் இலக்கிய விருதுகளை தந்த பாரஸீக மொழி ஜாமியின் காலத்துக்கு பின்னர் புதுமை இலக்கியம் வெளிப்படாமல் நலிவடைந்தது. கடைசியாக சொல்லும்படியாக இலக்கியம் வளர பாடுபட்டவர் கவிஞர் அல்லாமா இக்பால். இவரைப்போன்று கவிஞர் கடந்த இருநூறு ஆண்டுகளில் பாரஸீகத்தில் தோன்றாமல் போனது வருந்தத்தக்கது.

***

பாரஸீகக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவராக போற்றப்படுபவர் நிஜாமி. இவர் கிபி 1140-41ல் பிறந்தவர். அரசர்களை நாடி வாழும் அக்காலத்தில் எந்த அரச குலத்தின் ஆதரவையும் நாடாமல் அப்பழுக்கற்ற வாழ்க்கையை வாழ்ந்தவர். பாரஸீகத்தில் மிகவும் முக்கிய இலக்கியமாக ‘பஞ்ச காவியம்’ என்று போற்றப்படும் ‘கம்ஸா’வை எழுதியவர் ((1) மக்ஸானுல் அஸ்ரார் (2) குஸ்ரூ வ ஷிரீன் (3) லைலா வ மஜ்னு (4) சிக்கந்தர் நாமா (5) ஹப்தே பைகார். இவைகளை பஞ்ச காவியங்கள் ஆகும்). ‘மக்ஸானுல் அஸ்ரார்’ (இரகசியங்களின் பொக்கிஷம்) அவருடைய முதல் நூல். அதிலிருந்து ஒரு கவிதை :

புல்புலும் ராஜாளியும்

ஒரு பூங்காவிலே ரோஜா பூத்தது
அப்போது ஒரு புல்புல் ராஜாளியிடம் சொல்லிற்று :
‘மௌனமாக இருக்கும் நீ
சகல பறவைகளையும்விட எப்படி உயர்ந்தவன்?
உன் மூடிய உதடுகளாலே மூச்சை யிழுக்கிறாய்;
யாரிடமும் நீ இன்பமொழி பகர்வதுமில்லை;
எனினும், நீ துயில்வதோ மெத்தென்ற இடத்திலே;
உன் உணவோ இன்பமான நாராயின் இளம் நெஞ்சு.
நானோ, கண்மூடி விளிக்கும் நேரத்தில்
கண்கட்டி வித்தையைப் போல்
நூற்றுக் கணக்கான ரத்னங்களை
என் பையிலிருந்து வெளியாக்கிவிடுகிறேன்.
எனினும், நானும் ஏன்
பூச்சி புழுக்களுக்கும் வகையின்றித் தவிக்கிறேன்?
ஏன் முட்களின் முனையில் துயில்கிறேன்?’
ராஜாளி பதிலிறுத்தது:
‘சற்றே கவனமாய்க் கேள்!
என் தனிமையைத் கவனித்து மௌனமாகு!
தொழில் நன்கு தெரிந்த நான்,
நூறு செயல்களை ஆற்றுகிறேன்;
ஆனால், எதையும் வெளியில் சொல்வதில்லை.
நீ அதிர்ஷ்டத்தால் ஏமாற்றப்பட்டவன்;
நீ ஒரு செயலும் ஆற்றவில்லை;
ஆனால், ஆயிரம் செயல்களைப் பற்றிப் பேசுகிறாய்,
வேட்டைக் களத்திலே நான் சாதுரியமாக நடக்கிறேன்,
எனவே எனக்கு நாரையின் நடுத் துண்டமும்,
மெத்தென்ற துயிலணையும் கிடைக்கின்றன.
நீயோ நாவைச் சதா ஆட்டிக் கொண்டிருப்பதால்
புழுக்களை உண்டு முட்களின்மீது தூங்க நேர்கிறது.’

**

நன்றி : லெனாகுமார்  , ‘யாதுமாகி’

***

நாகூர் ரூமியின் ‘சூ·பி வழி – ஒரு எளிய அறிமுகம்’ நூலிலிருந்து… (நண்பன் ரஃபி எனக்கு தனிப்பட அனுப்பிய Text.  நூலிலும் இருக்கும் என்று நம்புகிறேன்).

ராபியா பஸ்ரியா (கி.பி.801) :

மிகவும் புகழ் பெற்ற பெண் சூ·பி. பஸராவில் பிறந்து சூ·பிக் கருத்துக்களை தனது பேச்சின் மூலமும் பாடல்களின் மூலமும் பரப்பியவர். இறைக்காதல் கொண்டவர். ஆரம்பத்தில் ஒரு விபச்சார விடுதியொன்றில் பணியாற்றிக்கொண்டே வருபவர்களையெல்லாம் மனமாற்றம் செய்து அனுப்பிக்கொண்டிருந்தார். இவர் சூ·பியானதும், இவரது அழகைக் கண்டு பலர் இவரை மணமுடிக்க விரும்பினர். ஆனால், நான் இறைவனுக்குச் சொந்தமானவள். எனது திருமணம் பற்றி அவனிடம் தான் அனுமதி கேட்கவேண்டும்” என்று கூறிய இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. இவர் வெளிப்படுத்திய சூ·பிக் கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமானவை. பிரபலமானவை. இந்திய சூ·பி பக்த மீராவோடு இவரை ஒருவகையில் ஒப்பிடலாம்.

“இறைவா, நரகத்துக்கு பயந்து நான் உன்னை வணங்கினால், என்னை நரகத்தில் போட்டுப் பொசுக்கிவிடு. சுவர்க்கத்துக்கு ஆசைப்பட்டு நான் உன்னை வணங்கினால் என்னை சுவர்க்கம் தராமல் வெளியேற்றிவிடு. உனக்காக மட்டுமே நான் உன்னை வணங்கினால், எனக்கு உன் பேரழகைக் காட்டு” என்று சொன்னவர் இவரே.

***

நிஜாமி :

“ஒரு காலம் வரும். அப்போது எங்கள் அச்சு புதிய நாணயத்தில் பதியப்படும். அறியப்பட்ட எந்த மொழியிலும் சூஃபியின் பேச்சு இருப்பதில்லை. பொக்கிஷத்தின் சாவி, சூஃபியின் நாக்கில் இருக்கிறது. இறைத்தூதரும் சூஃபிக் கவிஞனும்தான் உள்ளிருக்கும் பருப்பு. மற்றவரெல்லாம் வெளியிலிருக்கும் ஓடு”  (ரகசியங்களின் பொக்கிஷம்)

***

நன்றி : நாகூர் ருமி

***

சில சுட்டிகள் :

Biograpbhy of Nizami : http://www.ics.uci.edu/~javid/azerbaijan/nizami.html

Nizami the Poet : http://www.bestirantravel.com/culture/poetry/nizami.html

Rabia Basri : http://www.rumi.org.uk/sufism/rabia.htm

Allama Iqbal : http://en.wikipedia.org/wiki/Muhammad_Iqbal

Firdowsi : http://en.wikipedia.org/wiki/Ferdowsi

Omar Khaiyyam : http://en.wikipedia.org/wiki/Omar_Khayyam

Jami : http://en.wikipedia.org/wiki/Jami

Rumi : http://en.wikipedia.org/wiki/Rumi | http://www.khamush.com/

***

nizami1

Nizami’s  Poem:

‘Miserable is a heart that has no beloved.
It is difficult to be without a friend or a beloved.
These few moments which you can never find again,
If you have a heart, do not be without a beloved.’ – Nizami

(translated by Reza Saberi, “A Thousand Years of Persian Rubaiyat”)

« பழைய வரவுகள்