கி. ராஜநாராயணன் – மேகங்களும் நதிகளும் உண்டான கதை

தமிழின் பெரும் கதைசொல்லியான , தனது ‘கிடை’ குறுநாவல் மூலம் எழுதும் தைரியத்தை எனக்கு ஊட்டிய ‘கி.ரா’  அவர்கள், ராஜபாளையம் அருகில் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கண்டெடுத்த கதை இது. இந்தியா டுடே – இலக்கிய ஆண்டு மலர் (1993 – 94)ல் வெளியானது.

எங்கே எடுத்தோம் என்று சொல்பவனே அசல் எழுத்தாளன் !

***

kirajanarayanan

மேகங்களும் நதிகளும் உண்டான கதை
கி. ராஜநாராயணன்

ஒரு ஊர்ல ரெண்டு குருவிக – ஒரு பெங்குருவியும், ஆங்குருவியும் – இருந்துச்சி.

அந்தப் பெங்குருவி ஒரு தடவ நெல்லுக்காட்டுக்குள்ள போயி முட்டெ இட்டு, குஞ்சி பொறிச்சது.

குருவிக இரை தேடப் போன சமயம், மாடு பேய்க்கிற பிள்ளைக அந்த குருவிக் குஞ்சிகள – விளயாடுறதுக்குன்னு – எடுத்துட்டுப் போயிட்டாங்க.

குருவிக வந்து பாத்தது. குஞ்சிகளக் காணம். பெங்குருவி அழுவோ அழுன்னு அழுதுச்சி.

ஆங்குருவி அத ஒரு வழியா சமாதானப்படுத்தி, “அடுத்த தடவ நாம இங்க முட்டெ வைக்க வேணாம், யாருமே வர முடியாத மூங்கில்வனக் காட்டுக்குள்ள போயி முட்டெவிட்டுக் குஞ்சி பொறிக்கலாம். அங்க நமக்கு இப்பிடி ஆகாது. வா போகலாம்”னு கூட்டீட்டுப் போனது.

அங்க போயி, யாருமே வரமுடியாத இடமாப் பாத்து, நடூ மூங்கில் வனக் காட்டுக்குள்ள போயி முட்டெ இட்டு குஞ்சி பொறிச்சது.

குருவிக இரை தேடப் போன சமயத்துல, காத்து பலமா அடிச்சி மூங்கில்க ஒண்ணோட ஒண்ணு ரோசி தீப்புடிச்சி எரிஞ்சி குஞ்சுகள்லாம் சாம்பலாப் போயிருச்சி.

வந்து பாத்ததும் குலைபதறிப் போன பெங்குருவி, இனி முட்டெயே இடமாட்டேம்ன்னு அந்த அழுவ அழுதுச்சி.

ஆங்குருவிக்கும் என்ன செய்யிறதுன்னு தெரியல. நம்ம வாரிசுக்கும் ஒரு குஞ்சி வேணும்; பெங்குருவியவும் குத்தம் சொல்ல முடியாது.

எத்தினி நாளைக்குத்தான் அது இப்படி லோல்படும்னு விசாரப்பட்டு பெங்குருவி கிட்ட, “எத்தா, இந்தத் தடவ சமுத்துரத்துக்கு அடீல ஒன்னக் கூட்டிட்டிப் போறேன். அங்க போயி முட்டெ இட்டுக் குஞ்சி பொறிப்போம். நமக்கு சமுத்துர ராசா காவல் இருப்பார்னுச்சி.

அதுக்குப் பெங்குருவி, “ஒருவேள அங்கேயும் காணாமப் போனா என்ன செய்ய?”ன்னு கேக்க, “அப்படிக் காணாமப் போனா நா சமுத்துர ராசாவ சும்மாவுடம்ட்டேம்”னுச்சி. “குஞ்சிக்கு நா பொறுப்புன்னு சத்தியம் செய்யிங்க”ங்க, ஆங்குருவியும் அதேபடிக்கு செஞ்சி கொடுத்து, சமுத்திரக் கரைக்கு கூட்டீட்டுப் போச்சி.

ரெண்டுங் கூடி சமுத்துரத்துக்கு அடியில போயி முட்டெ இட்டுக் குஞ்சி பொறிச்சதுக. சமுத்துர ராசாவுக்கு இவுகளப் பாத்து ஆச்சரியமா இருந்துச்சி. “நா எம்புட்டுப் பெரிய்ய ராசா, என்னெ ஒரு இத்துனிக் குருவி எதுத்து சண்டை போடுவேன்னு சொல்லுதே. இதுக எப்படித்தாம் சண்டை போடுதுன்னு பாப்பம்”னு சொல்லி, அதுகளோட நாலு குஞ்சிகளயும் அதுகளுக்குத் தெரியாம எடுத்து ஒளிச்சி வச்சிக்கிடிச்சு. இரை தேடப்போன குருவிக வந்து வந்து பாத்துட்டு, “சரி, இனி நாம இந்த ஒலகத்துல இருந்து புண்ணியமில்லென்னு சொல்லி, பெங்குருவி சமுத்துரத்துல விழுந்து சாகப் போகும்போது ஆங்குருவி அதக் தாக்காட்டி நிறுத்தி,”நா சொன்ன மாதிரி சமுத்துர ராசனோட சண்டை போட்டு நம்ம குஞ்சிகள நா மீட்டித் தரேன்”ன்னுச்சி.

பிறகு அந்த ஆங்குருவி தன்னோட வர்க்கத்த எல்லாம் போயி கூப்பிட்டு இன்னமாதரி ஆயிட்டு, எல்லாம் வாங்க வாங்கன்னு சத்தம் போட்டுது. எல்லாக் குருவிகளும், ஒலகத்துல இருக்க அத்தன குருவிகளும் பறந்தோடி வந்தது.

அந்தக் குருவி சொன்னதக் கேட்டதும் எல்லாக் குருவிகளும் கோவமாயி, இந்த அநியாயத்த விடப்படாது. இப்பிடி இருந்தா பறக்குற வர்க்கமே இல்லாம அழிஞ்சி போயிரும்னு சொல்லி எல்லாமும் எல்லாத்திடமும் முறையிட்டு சொன்னதுக. உடனே மயிலும், சேவலும் முருகன்ட்ட அனுமதி கேக்க, அன்னம் சரஸ்வதி கிட்ட அனுமதி கேக்க, காக்கா சனீஸ்வரங்கிட்ட அனுமதி கேக்க, கிளி மதுரை மீனாச்சித் தாயி கிட்ட அனுமதி கேக்க… எல்லாரும் போகச் சொல்லீட்டாக.

எல்லாஞ்சேந்து ஒரே கூட்டமா வருதுக. பொழுதே (சூரியன்) மங்கும்படியா வானத்துல பறந்து வருதுக!

இதுகள பாத்து மத்த மிருகங்க, புழுப்பூச்சிக அம்புட்டும் எங்க போறீகன்னு கேட்டதுக. விசயத்தச் சொன்னதும், அப்படியா? அப்பொ நாங்களும் வரோம்னு இதுகளோட சேந்துக்கிருச்சி.

எல்லாம் மொதுமொதுன்னு சமுத்துரத்தப் பாத்து வருதுக. பிறவு அம்புட்டும் கூடிக்கிட்டு, வாயி, காது, மூக்கு, செறவுன்னு சமுத்துரத்துத் தண்ணிய எடுத்து எடுத்து பூமாதேவி மேல ஊத்த, ஊத்த, சமுத்திரம் கொஞ்சங்கொஞ்சமா குறஞ்சி மொத்தமும் வத்திட்டது. சமுத்துர ராசா விக்கி வெறச்சிப் போனாரு!

‘என்னடா இது! நாம இதுகள சுண்டைக்காயினு நெனைச்சோம். இங்கே மலையேவில்ல திரண்டுருச்சி’ன்னு அதுக கிட்ட வந்து,

“எதுக்கு இப்பிடிச் செஞ்சீக”னு கேக்க, அதுக எங்க வர்க்கத்தோட குஞ்சிகளுக்கு ஒங்களக் காவல் வச்சோம். அத இப்பொக் காணம். அதுக்கு நீங்கதாம் பொறுப்பு”ங்கவும், சமுத்திர ராசா பத்திரப்படுத்தி வச்சிருந்த குருவிக் குஞ்சிகளக் கொண்டாந்து கொடுத்துட்டாரு.

இதுகளுக்கு சந்தோசம். “நீங்க நல்லா இருப்பீக. அப்ப நாங்க வர்றோம்”னு புறப்பட்டதும் , சமுத்திரராசா “நீங்க எல்லாரும் இப்படி ஒத்தப்பொட்டு தண்ணியில்லாம ஆக்கீட்டுப் போயிட்டா நா என்ன செய்ய? எங்கிட்ட இருந்த சமுத்துரத்துத் தண்ணிய பழையபடிக்கு கொண்டாந்து ரெப்புங்க”ன்னு கேட்டாரு. இதுக எல்லாம் முழிக்கிக!

எல்லாஞ் சேந்து சாமிகிட்ட போயி, “எங்களால சமுத்துரத்த அழிக்கத்தான் முடியும். இன்னொரு சமுத்துரத்தக் கொண்டார முடியாது. அது ஒங்களாலதாம் முடியும். நீங்கதாம் காப்பாத்தணும்”னு விழுந்து கும்பிட்டதுக. சாமிகளும் அதுக பேச்சுக்கிரங்கி, நதிகள உண்டாக்கி, மேகங்கள வரவழச்சி மழை பெய்ய வச்சி சமுத்துரத்த ரொப்புனாக.

அதும் பிறகு குருவிக குஞ்சிகளோட சந்தோசமா இருந்துது.

**

நன்றி : இந்தியா டுடே, கி. ராஜநாராயணன்.

***

ஒரு சுட்டி :

கரிசல் மண் வாசனை வீசும் கி.ராவின் இலக்கியப் படைப்புக்கள் - முருகேசு ரவீந்திரன்.

***

சுபமங்களா நேர்காணலிலிருந்து… ( பி.கே. சிவகுமார் / ராயர் காப்பி கிளப்) :

கேள்வி: மொழியைச் செம்மைப்படுத்துவதும் செழுமைப்படுத்துவதும் ஒரு படைப்பாளியின் கடமை. கரிசல் காட்டு இலக்கியம் என்று சொல்லிக்கொண்டு உங்கள் எழுத்து முழுவதையும் கொச்சை மொழியிலேயே சொல்லிச் செல்கிறீர்கள். இது மொழியை சிதிலப்படுத்துகிற ஒரு முயற்சிதானே? மேலும் வட்டார வழக்கு என்பதே ஒரு பம்மாத்துதானா?

கி.ரா: கொச்சையான மொழி எது தெரியுமா? பண்டிதர்கள் பேசுவது கொச்சையான மொழி. மக்கள் பேசுகிறார்களே அதுதான் இச்சையான மொழி. மக்கள் பேசிக்கொண்டிருப்பதுதான் நல்ல தமிழ். ஏட்டில் இருப்பது தமிழ்மாதிரி உள்ள இமிடேஷன் மொழி. மக்களின் பேசும் மொழியை எழுதினால், அதை கொச்சை என்று சொன்னால், அவனை தமிழ்த் துரோகி என்பேன். நம்முடைய மக்கள் பேசுவது எப்படி கொச்சையாகும்? நீ பேசுவதுதான் கொச்சை என்பேன். மக்கள் பேச்சு மொழியை கொச்சை என்று கூற வெட்கமில்லையா உங்களுக்கு? கொச்சை மொழி என்று
சொல்பவர்களை என்ன வார்த்தையில் திட்டுவது? வட்டார வழக்கல்ல பம்மாத்து; பண்டிதத் தமிழ்தான் பம்மாத்து.

மகனுக்கு ஒரு மாதாகோயில் கதை!

nademm161உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த காலத்தில் ரோம், பாரசீகப் பேரசுகள் எல்லாம் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. ஜெருசலத்திற்கு ஒருமுறை உமர்(ரலி) விஜயம் செய்தார்கள். கிறித்துவப் பாதிரிமார்கள் அவர்களுக்கு வரவேற்பு அளித்து புகழ்மிக்க சர்ச் ஆப் ரிசரக்சன் என்ற மாதாக் கோயிலைச் சுற்றிக் காட்டிக்கொண்டிருக்கும்போது தொழுகைக்கான பாங்கு ஒலி கேட்கிறது. “நீங்கள் உங்கள் தோழர்களுடன் இம்மாதாக் கோயிலுக்குள்ளேயே தொழுதுகொள்ளுங்களேன்’ என்று பாதிரிமார்கள் வேண்டினார்கள்.ஆனால் உமர் (ரலி) மறுத்து விட்டார்கள். தனது தோழர்களுடன் மாதாக் கோயிலின் வெளியே தொழுகையை நிறைவேற்றினார்கள்.

பாதிரிமார்கள் ‘உங்களைத்தான் மாதாக் கோயிலுக்குள்ளேயே தொழச் சொன்னோமே, ஏன் மறுத்தீர்கள்? என்று கேட்டபோது உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் :’பிற்காலத்தில் இஸ்லாமியர் யாராவது இது எங்கள் கலீ·பா தொழுத இடம் என்று உரிமை கொண்டாடினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதனால்தான் பிற்காலத்தில் உங்களுக்கு எந்தப் பிரச்சையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் நான் மாதாக்கோயிலுக்குள் தொழ மறுத்தேன்’ – பேரா. எம். அப்துஸ் ஸமது அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து…

எப்பேர்ப்பட்ட ஜாக்கிரதை உணர்வும் புரிதலும்!

சமய நல்லிணக்கத்துக்கு சான்றான இந்த கதையை செல்லமகன் நதீமுக்கு இன்று இரவு சொல்ல வேண்டும். ‘மன்மதன்’ சிம்புவின் விசிறியான அவர் மல்லிகார்ஜூன் மன்ஸூரின் விசிறியான நான் சொல்வதைக் கேட்பாரா? கேட்கவேண்டும். நாளை அவருக்கு பிறந்த நாள் (20/2/2009) . பதினாறு நிறைகிறது. வழக்கம்போலவே ஏதோ ஒரு ‘தலக்கட்டு’ நாட்டில் இருந்துகொண்டு வாழ்த்த வேண்டியிருக்கிறது. நதீமை வாழ்த்த நினைக்கும் சகோதரர்கள் நன்றாக அவரை படிக்கச் சொல்லுங்கள் (சொல்லாமலேயே நன்றாக படிக்கும் ரகம்தான், தன் ‘லாத்தா’வைப் போல).

நதீம் , கண்டிப்பாக நீ ‘ஸஃபர்’ கதைகள் மட்டும் எழுதக்கூடாது…!

« பழைய வரவுகள்