இஸ்லாமும் தமிழிலக்கியமும் – முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்

ஆறாம்திணையில் வெளிவந்த அஜ்மல்கான் அவர்களின் கட்டுரைக்கான சுட்டியை மட்டும், பேரா. பர்வீன் சுல்தானாவின் பேட்டியில் முன்பு கொடுத்திருந்தேன். முழுக்கட்டுரையும் இப்போது. இதைப் படிக்கும் முன் ‘பல்சந்த மாலை’ பற்றி நண்பர் நாகார்ஜூனனின் கட்டுரையை வாசிக்கவும். மறக்காமல், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் பற்றிய சுகனின் பின்னூட்டத்தையும்.

- ஆபிதீன் -

***

இஸ்லாமும் தமிழிலக்கியமும்
முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்

இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் என்பன இஸ்லாமிய மார்க்கக் கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டெழுந்த தமிழ்மொழி இலக்கியங்களே. ஒரு மொழியில் ஒரு சமயத்தைச் சார்ந்த இலக்கியங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாக இருப்பது மொழிக்கும் சமயத்திற்குமுள்ள உறவு நிலையே. இவ்வுறவு நிலை பலப்படுத்தப்பட்ட பின்னரே எந்தவொரு மொழியிலும் ஒரு குறிப்பிட்ட சமய இலக்கியங்கள் தோன்றுவதற்கான சூழல் அதிகரிக்கும்.  இவ்வகையில் இன்றைக்குத் தமிழிலக்கிய உலகில் சுட்டிக்காட்டத்தக்க எல்லைப் பரப்பினைப் பெற்றுச் சிறக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்ற வளர்ச்சிக்கு, இஸ்லாம் தமிழகத்துடன் கொண்ட தொன்மை உறவே காரணமாக இருந்திருக்கும். இத்தொன்மை உறவினையும் அதன் பயனாய் மலர்ந்த முதல் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தையும் ஏனைய பிற இஸ்லாமிய இலக்கியங்களையும் சுட்டிக்காட்டுவதே இங்கு நோக்கமாகும்.

தமிழுக்கும் இஸ்லாத்திற்கும் இணைப்பு ஏற்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பினை அரபு நாட்டவர்கள் பெற்றிருந்தனர். எனவே இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கான அடித்தளமாக இருந்தது அரபு நாட்டவர்களின் தமிழக வருகை எனலாம். இவ்வருகைநிலை இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கிறது. பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே அரபு நாட்டிற்கும் தமிழகத்திற்குமிடையே வியாபாரத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. இத்தொடர்பு பெருமானார்(சல்) அவர்கள் காலத்திலும் தொடர்ந்து, நீடித்தது, பின் வலுப்பெற்றது. அரபு, தமிழக மக்களது தொடர்பிற்கான அகச்சான்றுகள் பலவும் வரலாற்றிலும், இலக்கியத்திலும் விரவிக் கிடக்கின்றன.

அரபு மக்கள் கிழக்கு, மேற்கு வணிகத் துறையில் பெரும் முனைப்பாக இருந்ததை வரலாற்றுச் சான்றுகள் நிரூபிக்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரையில் பாண்டிய நாட்டின் துறைமுகப் பட்டினங்களே தூர கிழக்கு நாடுகளுக்கும் மேலை ஆசிய நாடுகளுக்கும் இடையிலான கடல் வணிகத் தொடர்பிற்குக் களனாக விளங்கின. அவற்றுள் முக்கியமானது பவுத்திர மாணிக்கப் பட்டினம். மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள புவுத்திர மாணிக்கம்பட்டினம் ராமேஸ்வரம் அல்லது தனுஷ்கோடியுடன் முடியும், இதற்கு நேர் வடக்கில் அமைந்துள்ள வியாபாரத்தலமாக விளங்கியது தேவிபட்டினம். தென்காயல் என்று அழைக்கப்பட்ட புத்திர மாணிக்கப்பட்டினம் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் வியாபாரத் தொடர்புகளுக்கும் வடகாயல் என்று அழைக்கப்படும் தேவிபட்டினம் தூர கிழக்கு நாடுகளின் வியாபாரத் தொடர்புகளுக்கும் மையமாக விளங்கின. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பவுத்திர மாணிக்கப்பட்டினம், தேவிபட்டினம் ஆகிய இரு துறைமுகங்களும் வெளிநாட்டவரின் வியாபாரத் தொடர்பிற்கு இடமாக விளங்கியதை வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.

பாரசீக வளைகுடாவில் உள்ள கைஸ் என்னும் தீவு இந்நாளைய ஹாங்காங் துறைமுகம் போலப் பெரும் வணிகத் தலமாக விளங்கியது. அன்றைய வணிகத் தலமான கைஸ் துறைமுகம், புவுத்திர மாணிக்கப்பட்டினம், தேவிபட்டினம் முதலானவைகள் ஐரோப்பியர்களுக்கும் அரபு தேசத்தவர்களுக்கும் பண்டமாறறு வியாபாரத்திற்குரிய மையமாகத் திகழ்ந்தன. அன்றைய பாண்டிய நாட்டில் அரபு தேத்து வணிகர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அதன் பயனாய் அவர்கள் பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்களிலே குடியேறத் தொடங்கினர். அரபு நாட்டு மக்கள் தமிழகத்துடன் சங்க கால இலக்கியங்களிலே நிரம்பக் காணலாம். சங்க இலக்கியங்களில் அரபு தேசத்து வணிகர்கள் ‘யவனர்’ என்னும் சொல்லாட்சியில் குறிக்கப்பட்டுள்ளனர். யவனரின் தமிழக வருகை வியாபார நோக்கமாகவே அமைந்தது. இதனை அகநானூற்றுப் பாடல் இவ்வாறு குறிக்கிறது.

கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினை மாண்கலம்
பொன்னெடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி… (149)

இங்குக் கறி என்னும் சொல் மிளகினையும் முசிறி என்பது முசிறிப்படடினத்தையும் குறிப்பதாகும். எனவே மிளகு போன்ற வாசனைப் பொருட்களால் ஈர்க்கப்பட்டே யவனர்கள் கிழக்கு நாடுகளுக்கும், குறிப்பாகத் தமிழகத்திற்கும் வருகை தந்தனர். அவர்களின் வியாபாரத் தொடர்பே நாளடைவில் தமிழகத்தில் அரபு நாட்டவரின் குடியேற்றமாகத் தொடங்கியது. இந்தக் குடியேற்றம், இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்கு முன்னரே நடைபெற்றிருத்தல் வேண்டும். ‘கிறித்தவ ஆண்டு தொடங்கியதற்கு முன்னரேயே அரபிகள் இலங்கையிலும் தென் இந்தியாவிலும் குடியேறினர்’ என்று பிளனி என்னும் வரலற்றாசிரியர் கூற்றும் மேற்கூரிய கருத்திற்கு அரண் செய்வதாக உள்ளது.

தமிழகத்தில் இஸ்லாத்தைப் பரப்பியவர்களும் இன்றைய முஸ்லீம்களுக்கு முன்னோடியாக விளங்கியவர்களும் மேற்குறித்த வியாபார நிமித்தமாக இங்கு வந்த குடியேறிய அரபியர்களே. அத்தகையவர்களின் குடியேற்றம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களது காலத்திலும் தொடர்ந்து வலுப்பெற்றது. வியாபார நிமித்தமான குடியேற்றம் நபிகள் காலத்தில் சமயச்சார்பாகவும் அமைந்து தொடரலாயிற்று. நபிகள் நாயகம் (சல்) அவர்களின் தோழர்களான தமீமுல் அன்சாரி அவர்களினதும் அபீலக்காங் அவர்களினதும் கல்லறைகள் தமிழகத்தில் இருப்பது இஸ்லாத்துக்கும் தமிழகத்திற்கும் உள்ள அப்போதைய நெருங்கிய உறவை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வுறவு நிலையை எடுத்துக்காட்ட எத்தனையோ அகச் சான்றுகளைத் தமிழகத்தில் காணலாம்.

ஆனால் ஆரம்பக் காலத்தில் தமிழக முஸ்லிம்கள் வியாபாரக் கண்ணோட்டத்திலேயே அவர்களது கவனத்தைச் செலுத்தினர். பின்னர் நாளடைவில் குடியேற்றம் அதிகரிக்க அதிகரிக்க அது மார்க்கத்திலும் அமையலாயிற்று. இறைநேயச் செல்வர்களும், மார்க்கப் பெரியோர்களும் இஸ்லாமியக் கருத்துகளைப் பரப்புவதை முதற்பணியாகக் கொண்டு செயலாற்றினார்கள். இதற்கு வரலாற்றுப் பின்புலத்தில் தமிழகத்தில் இஸ்லாம் இஇருந்த காலக்கட்டத்தில் தமிழுக்கும் ஏனைய பிற இந்தியச் சமயங்களுக்கும் உள்ள தொடர்பினை இங்குள்ள முஸ்லிம் பெருமக்கள் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினார்கள். இதன் பயனாகவே தமிழை அடிப்படையாகக் கொண்டு தங்களது சமயக் கொள்கைகளை வளர்த்துக் கொள்ளும் உத்தியையும் இங்குள்ள முஸ்லிம் சமயப் பெரியோர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். அதுவே இஸ்லாமும் தமிழும் இணையும் காலக்கட்டமாக உருவானது. இதன் பயனாய் இஸ்லாம் தமிழகமெங்கும் பரவலாயிற்று. இஸ்லாமிய கருத்துக்களைப் பரப்புவதற்கு மொழியின் தேவையை உணரத் தலைப்பட்ட பின்னரே இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்றம் தமிழிலக்கிய வரலாற்றில் உதயமாயிற்று.

இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கு அச்சாரமிட்ட பெருமை பல்சந்தமாலை என்னும் இலக்கியத்தைச் சாரும். பல்சந்தமாலை என்பது இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதைப் பல்வேறு சான்றாதாரங்களின் அடிப்படையில் அறிய முடிகிறதே தவிர நூல் முழுமையும் நமக்குக் கிடைத்தில. இவ்விலக்கியத்துள் இடம்பெற்றுள்ள எட்டுப் பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.

பழங்காலத்தில் தோன்றிய அகப்பொருள் பற்றிய ஒரு நூலுக்கு எழுதப்பட்ட உரையிலேயே மேற்குறித்த எட்டுப் பாடல்களும் சான்றுச் செய்யுட்களாக இடம்பெற்றுள்ளன. இவ்வகப் பொருள் நூல்கூட இன்னும் தமிழிலக்கிய ஆய்வாளர்களால் முழுமையாகக் கண்டுகொள்ள முடியவில்லை. இவ்வகப் பொருள் நூலினை வையாபுரிபிள்ளை ‘களவிற் காரிகை’ என்று பெயரிட்டு 1931இல் பதிப்பித்துள்ளார். இந்நூலின் ஒரே ஒரு கையெழுத்துப் படி சென்னையில் உள்ள அரசாங்கத்தின் தொன்னூல் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த ஆங்கிலக் குறிப்பினால் இ·து ஆழ்வர் திருநகரி மலையப்பிள்ளைக் கவிராயருக்குரிய ஏட்டுப் படிகளுள் ஒன்றாக இஇருந்தது என்பதும் அவ்வேட்டுப் படியின்றும் நாதமுனைப்பிள்ளை என்பவர் 1920ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பன்னிரண்டாம் தேதியில் படி எடுத்தார் என்பதையும் அறியலாம். அதுவே வையாபுரிப்பிள்ளை களவியல் காரிகை என்ற தலைப்பில் அவ்வகப்பொருள் துறைகளைப் பதிப்பித்து வெளியிட மூலமாக அமைந்தது.

இந்நூல் குறித்துப் பதிப்பாசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறும்போது ‘கையெழுத்துப் பிரதியில் இறையனாரகப் பொருட்துறையைச் சங்கச் செய்யுளாக உதாரணம் எழுதியது’ எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ‘இக்குறிப்பு’ இன்னதென உணர்வதற்கு அதன் புறத்தே எழுதி வைக்கும் தலைக்குறிப்பாகவே கொள்ளவேண்டுமேயன்றி நூலில் பெயரல்ல என்பது திண்ணம்’ என்பதையும் குறிப்பிடும் வையாபுரிப்பிள்ளை, இவ்வகப்பொருள் நூலுக்கு இஇப்போது இடப்பட்டுள்ள பெயரான களவியற் காரிகை என்பது தம்மாலே சூட்டப்பட்ட பெயர் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே தற்போது அவ்வகப்பொருள் நூலுக்குரிய பெயராக, வையாபுரிப்பிள்ளை சூட்டிய களவியற் காரிகை என்னும் பெயரே கொள்ளப்படுகிறது.

களவியற் காரிகையில் விளக்கப்படும் அகப்பொருட் துறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் பல்வேறு பழைய இலக்கியங்களிலிருந்து தரப்பட்டுள்ளன. இத்தகு எடுத்துக்காட்டுகளில் அடங்கியுள்ள எட்டுச் செய்யுட்கள் மட்டும் பல்சந்தமாலை என்னும் இலக்கியத்தைச் சார்ந்ததாகக் காணப்படுகிறது. நமக்குப் பல்சந்தமாலை என்னும் தனித்ததொரு இஇலக்கியம் கிடைக்காவிடினும் இச்சான்றாதாரச் செய்யுட்களைக் கொண்டு இத்தகு இலக்கியம் இருந்து அழிந்திருக்க வேண்டும் என்பதை நன்கு அறியமுடிகிறது.

இனி, பல்சந்தமாலை, இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதற்குரிய காரணங்கள் சிலவற்றைக் காண்போம். வையாபுரிப்பிள்ளை தம்முடைய பதிப்பின் இறுதியில் மேற்கோள் நூல்கள் பற்றியக் குறிப்பு ஒன்றை இணைத்துள்ளார். அதில் பல்சந்தமாலை குறித்து அவர் கூறும்போது பல்சந்தமாலை என்னும் பெயருடைய நூல் ஒரு சில செய்திகளைப் புலப்படுத்துகின்றது. பன்னிரு பாட்டியலில் பல்சந்தமாலை என்பது ஒரு பிரபந்த வகை எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நூல் அப்பிரபந்த வகையை சார்ந்ததாக இருத்தல்கூடும். இந்நூல் வச்சிர நாட்டு வகுதாபுரியில் அரசு புரிந்த அஞ்சு வண்ணத்தார் மரபினனாகிய ஒரு முகமதிய முஸ்லிம் மன்னனைக் குறித்துப் பாடப்பெற்றதாகும். வகுதாபுரிக்கு இக்காலத்தில் காயற்பட்டினம் என வழங்குவர். வகுதாபுரிக்கு அந்து பார் என ஒரு பெயரும் இருத்தல் வேண்டும் என்பது பல்சந்தமாலையின் ஒரு செய்யுளால் புலப்படுகிறது’ எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்சந்தமாலைச் செய்யுட்களாகக் கிடைத்துள்ளனவற்றின் உள்ளடக்கக் கருத்துக்களை மையமாகக் கொண்டு இச்செய்யுட்கள் அடங்கிய நூல் இஸ்லாமியச் சமயத்தைச் சார்ந்த நூல் என்பதைத் தெளிவாக உணரலாம். இவற்றுள் ஒரு செய்யுளை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறோம்.

இல்லார் நுதலயு நீயுமின் றேசென்று மேவுதிர்கு
தெல்லா முணர்ந்தவ ரேழ் பெருந்த தரங்கத் தியவனர்கள்
அல்லா வெனவந்து சத்திய நந்தாவகை தொழுஞ் சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே

இச்செய்யுளின் மூன்றாவது அடியில் வரும் ‘அல்லாவென வந்து சத்திய நந்தா தொழுஞ்சீர்’ என்பது பல்சந்தமாலை இலக்கியம் இஸ்லாமியச் சார்புள்ளது என்பதற்கோர் காரணமாகக் கொள்ளலாம். இதுபோன்று ஏனைய செய்யுட்களின் உள்ளடக்கக் கருத்துக்களும் பல்சந்தமாலை இஸ்லாமியத் தமிழிலக்கியமே என்பதைப் பறைசாற்றுகின்றன. அவற்றை இங்கு எடுத்துக் கூறின் விரியும் என்ற காரணம் தகுதி விடுக்கின்றோம்.

இனி, பல்சந்தமாலையின் காலக் கணிப்பு தொடர்பாகச் சில கருத்துக்களைக் காண்போம். கால ஆராய்ச்சியைப் பல்சந்த மாலையின் மொழி இயல்பினைக் கொண்டு ஓரளவு கணிக்கலாம். பல்சந்தமாலையின் காலம் தொடர்பாக மு. அருணாசலம் கூறும் போது 14-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்பர். ஆனால் இது பொருந்துவதன்று. பல்சந்தமாலையில் இடம்பெற்றுள்ள செய்யுட்களில் அதன் ஆசிரியர் தொல்காப்பியரின் மொழி மரபினைப் பின்பற்றியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் நன்னூல் கருத்துகளுக்கு ஏற்புடையதாகக் காணப்படவில்லை. இதில் ஆசிரியர் சோனகரைக் (முஸ்லிம்களை) குறிக்க இயவனர் என்ற சொல்லாட்சியை இஇரு இஇடங்களில் பயன்படுத்தியுள்ளார். அத்துடன் ‘இயவனராசன்’ என ஒரு செய்யுளை ஆரம்பிக்கின்றார்.

‘இயவனராசன் கலுபா தாழுதலெண்ண வந்தோர்’…

என அமைகிறது இச்செய்யுள். இனி பிறிதொரு செய்யுளில் இரண்டாமடி

‘தெல்லா முணர்ந்த ரேழ்பெருந்த தரங்கத் தியவனர்கள்’

என உள்ளது. இவ்விரண்டு செய்யுட்களிலும் இயவனர் எனவே என உள்ளது. முதலாம் செய்யுளில் இயவனர் என்பது பாடலை ஆரம்பிக்கும் சொல்லாக வர மற்ற செய்யுளில் யகரத்தின் முன் வந்த குற்றயலிகரம் முற்றியலிகரமாக மாறி ‘இயவனர்’ என வந்துள்ளது.

யவனர் எனப் பாடலில் பயன்படுத்தி இருந்தால் அம்மரபு தொல்காப்பிய மொழி வழக்காறு நிலைக்கு முரணாக இருந்திருக்கும். சான்றோர் அதனைத் தவறு எனக் கருதுவர். பல்சந்தமாலை ஆசிரியர் வாழ்ந்த காலததில் அகரத்தோடு யகரமெய் மொழிக்கு முதலில் வரும் என்ற நிலை இருந்திருக்காமல் இருக்கலாம். எனவேதான் பல்சந்தமாலை ஆசிரியர் இயவனர் என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் இம்மரபு நன்னூல் கூறும் மொழி இலக்கணத்துக்கு முரணானது. எனவே பல்சந்தமாலை ஆசிரியர் காலத்தை நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர் காலத்துக்கு முற்பட்டதாகக் கொள்ளல் வேண்டும். பவணந்தியாரின் காலம் 13ம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது தெளிவு. அப்படியாயின் அதற்கு முற்பட்ட காலமான 12ஆம் நூற்றாண்டினையே பல்சந்தமாலை சார்ந்ததாக இருத்தல் வேண்டும். இஇக்காலத்தையே இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தொடக்க காலமாகக் கொள்ளலாம்.

பல்சந்தமாலை என்னும் தமிழிலக்கியத்தின் மூலமாக தமிழிலக்கிய உலகில் கால்கோள் கொள்ளத் தொடங்கிய இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவு இன்றளவு ஒன்பது நுற்றாண்டு கால இலக்கியப் பாரம்பரித்தைத் தமக்கெனவுடையதாகக் கொண்டுள்ளது.

இவ்வொன்பது நூற்றாண்டு கால எல்லையில் ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறான வகைப்பட்ட தமிழிலக்கியங்களைப் பெற்றுத் தமக்கெனச் சுட்டிக்காட்டத்தக்க இலக்கிய வரலாற்றுப் பின்னணியை இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவு பெற்றுள்ளது.

பல்சந்தமாலைக்கு அடுத்த நிலையில் யாகோபுச் சித்தர் பாடல்கள் (15 ஆம் நூற்றாண்டு) ஆயிர மசலா (கி.பி. 1572), மிகுராஜ் மாலை (கி.பி.1590), திருநெறி நீதம் (கி.பி. 1613), கனகாபிஷேக மாலை (கி.பி. 1648), சக்கன் படைப்போர் (கி.பி. 1686), முதுமொழி மாலை (17 ஆம் நூற்றாண்டின் இறுதி) சீறாப்புராணம் (கி.பி. 1703), திருமக்காப்பள்ளு (17ஆம் நூற்றாண்டு) முதலான ஒன்பது இலக்கியங்கள் இடம் பெறுவதாக அவற்றின் கால எல்லை அடிப்படையில் வரையறை செய்யலாம் – பல்சந்த மாலையுடன் சேர்த்து இப்பத்து இலக்கியங்களையும் தொடக்க கால இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாகக் கொள்ளலாம்.

தொடக்க காலத்தில் இஸ்லாமும் தமிழும் இணைந்த நிலையிலேயே படைப்போர் இலக்கியம் ஒன்றும் தோன்றி இருப்பது இங்கு குறிப்பிடற்பாலது. தொடக்க காலத்தில் ஒருசில இலக்கியங்களே வரப்பெற்ற போதிலும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் வருகை நிலை காலப்போக்கில் பெருகலாயிற்று. கி.பி. 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் இன்றுள்ள இஇஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் அனைத்தும் அடங்கும். இந்நூற்றாண்டுகளை இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆக்கத்தின் பொற்காலமாகக் கருதலாம்.

இஸ்லாம் தமிழுக்காற்றியுள்ள பணிகளுள் குறிப்பிடத்தக்கது, வேறு எந்தவொரு தனிப்பட்ட சமயமும் அளித்திராத எண்ணிக் கையில் காப்பியங்களைப் படைத்தளிருப்பதாகும். கனகவிராஜரின் கனகாபிரேஷக மாலை, உமறுப்புலவரின் சீறாப்புராணம், கேசாதி நயினாரின் திருமணக்காட்சி, பனியகுமது மரைக்காயரின் சின்ன சீறா, வண்ணக் களஞ்சியப் புலவரின் இராஜ நாயகம், சேகனாப் புலவரின் குத்புநாயகம், வண்ணக்களஞ்சியப் புலவரின் குத்பு நாயகம், பதுறுத்தீன் புலவரின் முஹியித்தீன் புராணம், சேகனாப் புலவரின் திருமணி மாலை, புதுகுஷ்ஷாம், திருக்காரணப் புராணம், வண்ணக் களஞ்சியப் புலவரின் தீன்விளக்கம், ஐதுறூசு நயினார் புலவரின் நவமணிமாலை, குலாம் காதிறு நாவலரின் நாகூர் புராணம், ஆரிபு நாயகம் போன்ற பதினைந்து இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களை இயற்றித் தந்த பெருமை முஸ்லிம் தமிழ்ப் புலவர்களைச்சாரும்.

காப்பியங்களுடன் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் நின்றுவிடவில்லை. தமிழிலக்கிய வரலாற்றில் காலத்திற்கேற்ப தோன்றியுள்ள பல்வேறான இலக்கியவகைகளில் தங்களது பங்களிப்பினை நிலைநாட்டியுள்ளார்கள். அத்துடன் தமிழிலக்கிய வரலாற்றிற்குச் சில புதிய இலக்கிய வடிவங்களையும் அறிமுகம் செய்வித்த பெருமை முஸ்லிம் புலவர்களைச் சாரும்.இத்தகு இலக்கிய வடிவங்களே புதுவகை இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாக இடம் பெற்றுள்ளன. இங்ஙனம் இஸ்லாமும் தமிழும் இஇணைந்ததின் பயனாக எண்ணிலடங்காத் தமிழிலக்கியங்கள் தோன்றியுள்ளன. இன்றும் தோன்றிய வண்ணம் உள்ளன. இதன் காரணமாக இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவுத் தமக்கெனத் தனித்ததொரு இலக்கிய வரலாற்றுப் பின்னணியைப் பெற்றுச் சிறக்கிறது. இத்தகு இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு தமிழிலக்கிய உலகிற்கு ஓர் உன்னதமான கொடையாகவே விளங்குகிறது.

**

நன்றி : ஆறாம்திணை, முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்

நாவல் எழுதுகிறார் இஸ்மாயில்

ismail2”இஸ்மாயில்லாம் நாவல் எழுதுறார்’ண்டு போடுங்க நானா’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிடும் தம்பி இஸ்மாயில் நாகூர் நகைச்சுவைக்காகவே ஒரு ஒரு தளம்  இப்போது தொடங்கியிருக்கிறார். அதிலுள்ள சேத்தநானாவின் ‘வெடை’ பிரமாதம். சேத்தநானா நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது இடைவேளையில் ஒருவர் ‘சோடா கலர், சோடா கலர்..” என்று திரும்ப திரும்பக் கூறி விற்றுக் கொண்டு வந்தாராம். சேத்தநானா அவரைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள் : “சோடா கலர் இல்லை தம்பி ; அது வெள்ளை!”

‘தொடரும் முடிவுகள்’ என்ற இஸ்மாயிலின் முதல் நாவலிலிருந்து ஒரு அத்தியாயத்தைப் பதிகிறேன். ‘சுட்டுவிட’ மாட்டேன் என்ற தைரியத்துடன் அனுப்பிய அவர் அன்புக்கு நன்றி.

- ஆபிதீன் -

***

தொடரும் முடிவுகள்

1

சென்னை வரை காரில் சவாரிக்கு போய் விட்டு ராத்திரி 11 30 மணிக்கு வந்து அப்படியே துணி கூட மாத்தாமல் அசந்து தூங்கிய அஸ்லத்தை அவனுடைய ம்மா அவசரமா எழுப்பிய போது 1 30 மணி இருக்கும்

‘என்ன்னம்ம்மாமா..” அசதியில் கண்களை கூட திறக்காமல் வாய்க்குள்ளேயே முனங்கினான்

‘செத்த (சற்று) எந்திரிம்மா புள்ளக்கி வலி வந்துடுச்சு.. ஒடனே ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு போவணும்’ என்று சொன்ன ஐசாம்மாக்கு பதட்டம் முகத்துல அந்த மை இருட்டுலேயும் அப்பட்டமாய் தெரிந்தது.

அஸ்லம் ஒடனே எழுந்து விட்டான். ‘டாக்டர்ட்ட் டெலிபோன் போட்டு சொல்லிடுங்கம்மா நான் போய் கார எடுத்துட்டு வந்துடறேன்..”  – கால் வாசல் பக்கம் ஓடியது – அசதி உடம்பை விட்டு ஓடியது

“நான் சொல்லிக்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டே தொலைபேசி இருந்த கூடத்தறைக்குள் மறைந்தார் ஐசாம்மா, பக்கத்து அறையில் ஜமீலா வலி பாதி பயம் பாதியில் “ம்மா.. ” என்று கத்திக் கொண்டிருந்தாள்.

“இந்தோ இங்க தாம்மா இருக்கேன்.. டாக்டர்ட்ட போன்ல சொல்லிட்டு .. ஹலோ மேரியாம்மா.. நான் தான்ம்மா ஐசா பேசுறேன்..” – ஐசாம்மாவின் குரல் ஜமிலாவுக்கு கேட்டுக் கொண்டிருந்தது.

ஐசாம்மா எப்படி இருப்பார் என்று எழுதி விட்டால் ஜமிலாவை பற்றி தனியாக ஒரு வரி கூட எழுத வேண்டிய தேவை இருக்காது. ரெண்டு பேரும் ஒண்ண பாத்த மாதிரி தான் இருப்பார்கள். குரல் கூட கிட்டதட்ட கிணத்துலேந்து பேசுற மாதிரி ஒரே மாதிரியா தான் இருக்கும்.

அஸ்லம் காரை ஷெட்டிலிருந்து எடுத்து வருவதற்குள் ஐசாம்மா ஜமிலாவை அழைத்து கொண்டு வாசலுக்கே வந்து கொண்டிருந்தார். ‘போற வெட்டியில முத்துகனியை கூப்டுக்கலாம்” என்று சொல்லி மெதுவாக காரில் ஏறி “அல்லா தவக்கல்..” என்றதும் கார் புறப்பட்டது.

தெருமுனையில் முத்துகனி வீட்டில் காரை நிறுத்தி அஸ்லம் மட்டும் இறங்கி ஓடி போய் வாசலில் இருந்த அழைப்பு மணியை அடித்தான். முத்துகனி துப்பட்டியை கையில் எடுத்துக் கொண்டே “புள்ளக்கி நோக்காடு வந்துடுச்சா..” என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

அஸ்லத்தின் ஆச்சர்யத்தை பொருட்படுத்தாது, “எங்க (எங்கே?) புள்ள..” என்று தான் தூக்கி வளர்த்த ஜமிலா எனும் புள்ளையை நோக்கி ஓடி போய் காரில் ஏறிக் கொண்டார். அந்த ஜமிலா எனும் பிள்ளையின் வயிற்றில் இன்னொரு பிள்ளை பிறப்பதற்கு தயாராக இருந்தது.

“அஞ்சாமை முத்துகனியின் உடைமையடா..” என்று பாட்டு கூட படிக்கலாம், அந்த அளவுக்கு தைரியம், எதற்கும் பயப்பட மாட்டார், வீட்டிற்கு வந்த ஒரு மகா திருடனை வெறவு (விறகு) கட்டையால அடிச்சு புத்தூருக்கு கட்டு போட குத்துயிரும் குலையிருமா அனுப்பி வச்ச வீராங்கனை தான் அவர். இதனால் இவருக்கு ஊர்ல “வெறவு கட்டை அவுலியா (இறை நண்பர்)” என்று கூட ஒரு பெயர் உண்டு.

நாகப்பட்டினம் சுகம் மருத்துவமனையில் ஜமிலாவை கொண்டு வந்து சேர்த்த போது 2 20 மணி இருக்கும். குறிப்பிட்ட நாளைக்கு முன்னதாகவே நோக்காடு வந்து விட்டதால் அப்படியே துப்படியோடு வந்தது தான், அவசரத்தில் தேவையான எந்த ஒரு பொருளும் எடுத்து வரவில்லை.

இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைக்கு எதிரே உள்ள அறையில் விளக்கு போடப்பட்டு கதவு திறக்கப்பட்டது.

வெளியே எட்டிபார்த்த சபுரா என்பவர், “என்னம்மா, புள்ள பேறா..?” என்றார்

முத்துகனி “ஆமாம்மா” என்றார்

“அவசரத்துல சாமான்லாம் சரியா எடுத்துட்டு வந்திருக்க மாட்டீங்க” என்று கூறியதுடன் நில்லாமல் உள்ளே சென்று “பாய், தலையணையிலிருந்து பாத்திரங்கள் முதலான பொருளையும் எடுத்து வந்து கொடுத்தார்.

கொண்டு வந்து கொடுத்த பொருள்களிலிருந்தும் அவர் அணிந்திருந்த ஆடை அணிகலன்களிலிருந்தும் அவர் பெரிய பணக்காரர் என்று விளங்கியது

ஐசாம்மா “ஏன்ம்மா இருக்கட்டுமே.. தம்பி (அஸ்லம்) போய் இப்ப எடுத்துட்டு வந்துடுவாரு..” என்று இழுக்க

“நல்லதும்மா.. இப்ப தானே போ முடியும்.. சும்மா இருக்கட்டும்..”

முத்துகனி கேட்டார், “யாருக்கு.. என்னா செய்தும்மா..?”

“எங்க ம்மாக்கு தான்ம்மா ரொம்ப நாளா உடம்பு சரியில்ல.. ஹார்ட்ல பிராபளம்.. நெஞ்சுல அடிக்கடி வலி வந்துடுது.. அதான்..”
 
ஐசாம்மா, “டாக்டர் என்னா சொல்றாங்க..” என்று அவர் பங்குக்கு ஒரு கேள்வியை கேட்டார்.

சபுரா அலுத்து கொண்டார், “என்னா சொல்றாரு.. அல்லா தான்..” என்று முடிக்காமல் முடித்தார்

முத்துகனி, “உங்க பேருமா..?” என்று பேச்சை மாற்றினார்

பேச்சு குடும்ப உறுப்பினர்கள் பக்கம் தாவியது. அவர் பேர் சபுரா என்றும் கணவர் சவுதியில் தொழில் சொந்தமாக வைத்து நடத்தி வருவதும் நிஷா என்று ஒரு பெண் பிள்ளை இருப்பதையும் கேட்டு தெரிந்து கொண்டார்கள்

இப்பொழுது சபுராவின் டர்ன், “உங்க மாப்ள எங்க பயணத்துலயாம்மா..?” என்றார்

எங்க ஊரை பொறுத்த வரை வெளிநாட்டிற்கு போய் சம்பாதிக்க வில்லை என்றால் அவன் மனுசனே கிடையாது.

சில சாதாரண கேள்விகளும் பதில்களுக்கு பதிலாக ரணங்களை வரவழைக்கும். நாம் தெரிந்தோ தெரியாமலோ அப்படியாபட்ட சில கேள்விகளை சில சம்யங்களில் கேட்டு தொலைத்து கேட்கப்பட்டவரை காயப்படுத்தி விடுவோம்.

அப்படி தான் ஐசாம்மாக்கு சபுராவின் அந்த கேள்வி மிகுந்த சங்கடமாக இருந்தது ஐசாம்மாவுக்கு, அந்த ஒரு கேள்வியில் மனதில் உறைந்து போன பழைய நினைவுகள் சட்டென்று வந்து விட்டு மறைந்து போனது.

“இல்லம்மா எஹ மௌத்தா போயிட்டாஹா..” என்று அவர் சொல்லி விடுவதற்குள் முத்துகனி மட்டும் அறிந்திருந்த அவரின் மனதில் தோன்றி மறைந்த வேதனைகளை மனதில் உறைய வைக்க தொடர்ந்து வருகிறது அடுத்த ஒரு அத்தியாயம்

முடிவுகள் தொடரும்..

***

« பழைய வரவுகள்