நம்பிக்கை பற்றி நண்பர் தங்கமணி சொன்னது

சகோதரர் மு.மாலிக்-ன் பதிவிலிருந்து…

 பிறரது நம்பிக்கைகளை கண்ணியத்துடன் அணுகுதல்… எப்போதும் நம்பிக்கை பிறரது அங்கீகாரத்தைக் கோருகிறது. ஏனெனில் எல்லா நம்பிக்கையின் பின்னும் சந்தேகமே இருக்கிறது. அது எவ்வளவு ஆழமான நம்பிக்கையான இருந்தாலும் சரி. எனவே நம்பிக்கை மறுப்பாளர்களைப்பற்றிய பயத்தையும், அங்கீகாரம் பற்றிய ஏக்கத்தையும் எப்போதும் சுமந்தே திரிகிறது. நம்பிக்கை அதை நம்புகிறவர்களின் செயலால் பலமடைகிறது; சிறப்படைகிறது; சில சமயம் நலிவடைகிறது; கேலிக்கும் கண்டனத்துக்கும் ஆளாகிறது. ஆனால் உண்மையான அனுபவம் நம்பிக்கை போன்றதல்ல. அதற்கு இன்னொருவர் தேவையற்றவர். ஒருவரது அனுபவத்தை இன்னொருவருக்குத் தரமுடியாது என்ற புரிதலே அது இன்னொருவரது அங்கீகாரத்தைக்கோராது தன்னளவில் முழுமையாக இருக்கச்செய்கிறது. இந்த இடத்தில் அல்ஹிலாஜ் மன்சூரை உங்களுக்கு நினைவுக்குக் கொண்டுவருகிறேன். அது தான் அனுபவம் தருகிற அத்தாரிட்டி. அது சமய நூலகளையோ, சமூகத்தையோ, இன்னொருவரையோ அங்கீகாரத்துக்காக ஏறிட்டு நோக்காது. ‘சாத்தானை வெறுத்து ஒதுக்குங்கள்’ என்ற குரானின் வரிகளை (தனது பிரதியில்) அடித்த ஒரு பெண் சூபியைப் பற்றி நான் படித்திருக்கிறேன். அந்த சூபி சொன்னார், ‘ என்னால் அன்பு செய்யவே முடிகிறது; அது சைத்தானாக இருந்தாலும் என்னில் இருந்து அன்பைத்தவிர வேறொன்றை செய்யமுடியாது; இது என் அனுபவத்துக்கு மாறானது’ இதுதான் அனுபவம். தங்களது நம்பிக்கை காப்பாற்றப்படவேண்டும், கண்ணியப்படுத்தப்படவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்; ஆனால் உண்மை காப்பாற்றுவதற்குரிய ஒன்றல்ல; அது எப்போது இருப்பது; யாருடைய தயவும், எதிர்ப்பும் அதைப்பொருத்த வரையில் சம்பந்தமில்லாதது. அதை அறிந்துகொள்கிறவன் மற்றவர்களின் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.

***

நன்றி : தங்கமணி . மு. மாலிக்

இஜட். ஜஃபருல்லாவின் ஒரு கவிதை

zafarullah.jpg 

ஜஃபருல்லா நானா என்னிடம் கேட்ட கேள்வி ஒன்றை – அது  கவிதையாகப் பட்டதால் –  இங்கே பதிந்திருக்கிறேன். எப்படியிருந்தாலும்,

‘இயைபு தொடையோடு

எழுதினேன் கவிதை

ரம்பாவைப் புகழ்ந்து’

என்ற ஒரு நண்பரின் ‘ஹைக்உ’விற்கு இது எவ்வளவோ தேவலை!

பிரமை

இனிக்கிறது
நேற்றைய நினைவுகளும்
நாளைய கனவுகளும்.

இன்று
எப்போதும்போல
கசப்பாகவே…

ஒருவேளை
நாளை இன்றாகி
கசக்கும்போது
இன்று நேற்றாகி
இனிக்குமோ?

***

ஜபருல்லா நானாவின் ‘இறைவா’ கவிதைகள்

செயலா சிந்தனையா?

ismail.jpg

நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்களின் “கவிச்சக்கரவர்த்தியும் கவியரசரும்” என்ற புத்தகத்திலிருந்து :

“ஒரே பெற்றோருக்குப் பிறந்த இரு குழந்தைகள் எப்பொழுதுமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒன்று, உடலில் வலிவுடையதாகவும், துடிப்பு நிறைந்ததாகவும், உணர்ச்சி வயப்படக்கூடியதாகவும், எதிலுமே ஒரு திடீர் முடிவுக்கு வந்து செயலில் குதித்துவிடுவதாகவும் இருக்கும். மற்றொன்று, அவ்வளவு உடல் வலிவு இல்லாததாகவும், கூர்த்த மதியினதாகவும், நுண்ணிய உணர்வுகளை உடையதாகவும்,
எதிலும் சிந்தித்துச் செயல்படுவதாகவும் இருக்கும். இந்த இரண்டு
குழந்தைகளுடைய பொதுத்தன்மையோ, எங்கு அநியாயம் நிகழ்ந்தாலும், அந்த அநியாயத்துக்குப் பரிகாரம் தேடி நியாயத்தையும் நேர்மையையும்
நிலைநாட்டுவதற்கான ஆர்வத்தைக் கொண்ட நற்குணசீலமேயாகும். இந்தத் தன்மை இருவருக்கும் பொதுவாக இருந்தபோதிலும், இருவரும் ஒரேமாதிரியாகச் செயலில் ஈடுபடமாட்டார்கள். முதலாவதாக விவரிக்கப்பட்ட குழந்தை கர்மவீரனாகவும், இரண்டாவதாக விவரிக்கப்பட்ட குழந்தை ஞானாசிரியனாகவுமே விளங்கும் என்பது
தெளிவு.

இந்த வேறுபாட்டினால் உண்டாகும் விளைவுதான் என்ன? இந்த விளைவிலும் ஒரு பொதுத்தன்மை இருப்பதை நோக்கத் தவறக் கூடாது. தங்களுடைய கடமை என்று தங்களுக்குத் தோன்றியதை நிறைவேற்றிவிட்டோம் என்பதனாலான மனஅமைதியும்
மனநிறைவும் இருவருக்கும் பொதுவானது. இன்னொருவருக்கு இழைக்கப்படும் அநீதியினால் தான் நேரிடையாகப் பாதிக்கப்படவில்லை என்று வாளாக இருந்துவிடாமல், அநீதி யாருக்கு இழைக்கப்பட்டாலும் அது அநீதியே; அதைத் தவிர்த்து நீதியை நிலைநாட்ட வேண்டுமென்ற இலட்சியப் பாதையில் இருவருமே இறங்கிவிட்டது மற்றொரு பொதுத்தன்மை.

இந்தப் பொதுத்தன்மைகளுக்கிடையே, விளைவுகளில் வேறுபாடு இருக்கவே செய்கிறது. கர்மவீரன் சம்பந்தப்பட்ட வரையில், தன் வரையில் பிறருக்கு அநீதி இழைக்காமல் இருப்பதோடு இன்னொருவருக்கு அநீதி இழைக்கப்படுவதை எப்பொழுதெல்லாம் காண்கிறானோ, அப்பொழுதெல்லாம், அவன் திரும்பத் திரும்பச்
செயலில் இறங்கி அந்த அநீதியைத் துடைக்க முற்படுகிறான். இதன் காரணமாக, இவன் செயலின் விளைவு ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட மனிதனோடு அல்லது ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் நின்று விடுகிறது. திரும்பத் திரும்ப இவ்வாறு செயலில் இறங்கும்பொழுது பற்பல வேளைகளில் பற்பல மனிதர்கள் பயனடைவார்கள்; பற்பலச் சூழ்நிலைகளில் நீதி நிலைநிறுத்தப்
பெறும்.

ஞானாசிரியனாகச் செயல்படுபவனோ, தான் உணர்ந்த நீதியைத் துடைப்பதற்கு நிரந்தரமான ஒரு வழியை வகுத்து, அந்த வழியின்படி யார் வேண்டுமானாலும் செயற்பட்டு, அநீதியைத் துடைத்து நீதியை நிலைநிறுத்தலாம் என்ற நிலையை உண்டுபண்ணி விடுகிறான். இந்த நிலை உண்டாவதற்குக் காரணமாக அமைந்தவை அவனுடைய நுண்ணிய உணர்வும் சிந்தித்துச் செயற்படும் இயல்புமேயாம்.”

நன்றி : பி.கே. சிவகுமார்   /  ’எழுத்தும் எண்ணமும்’ இணையக் குழுமம்